பதவிப் பரிதாபங்கள்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 28, 2026
பார்வையிட்டோர்: 72 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7

“மாப்ளெ! இப்போ மணி என்ன?” தன்ராஜ் கேட்டார்.

“ஏன் மாமா..?” விகாஷ் இருக்கும் இடத்தை விட்டு அகல மனமில்லாமல் கேட்டான்.

“சொல்லு..?”

“பன்னிரண்டு..”

“அத்தை சாப்பிடணுமில்லையா..? அதான் கேட்டேன்.”

“:சரி மாமா..!”

தன்ராஜ் கை பேசியை எடுத்துத் தொடர்பு கொண்டார்.

“கோமதி!”

“என்ன..?”

“தனியா இருக்க போரடிக்குதா…?”

“இல்லையே..? புத்தகம் படிக்கிறேன்!”

கோமதி புத்தகப் பிரியை. வீட்டில் வேலையை முடித்துவிட்டால் புத்தகமும் கையுமாக இருப்பாள்.

தன்ராஜ் வேலையில் இருக்கும்போதும் சரி. இப்போதும் சரி. செய்திகள் கேட்பதற்கு மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டி திறப்பார். அதுவும் எந்த நேரமும் கிடையாது. காலை மணி 7.00. மதியம் 1.00. இரவு 8.00. இதைத் தவிர தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இவருக்கும் வெகுதூரம்.

“கோமதி…!”

“சொல்லுங்க…?”

“சாப்பாடு சொல்றேன். அறைக்கு வந்துடும்”

“சரிங்க..”

“என்ன சொல்லட்டும்..?”

“புரியல..?! “

“சைவம், அசைவம்..?”

“சைவம்!”

“சரி. இன்னும் பத்து நிமிசத்துல அறைக்கு வந்துடும். நானும் உன் மருமகப் மாப்பிள்ளையும் வெளியில சாப்பிட்டு வர்றோம். அசைவம். வலிய அழைத்து வந்து ஆளைக் கவனிக்காமல் இருக்கக் கூடாதில்லையா…?”

“ஆமாங்க…” அணைத்தாள்.

தன்ராஜும் கைபேசியை அணைத்துவிட்டு….

“என்ன மாப்ளெ ! சாப்பிடப் போகலாமா…?”

“ஒரு மணிக்கு மேல போகலாம் மாமா” – விகாசைப் பார்த்துக் கேட்டார்.

“ஏன்?”

“சரியான பசி இல்லே..”

“அப்போ மீதிக் கதையைக் கேட்க ஆசை..?”

“ஆமாம் மாமா…”

“சொல்றேன். நான் எங்கே விட்டேன்…?”

“ஐயப்பன் இறப்பு ! ” ஞாபகப் படுத்தினான்

“ஆமாம். இந்த நேரத்துலதான் ஆனந்தவள்ளி அப்பா இறப்பு அவள் அரசியலுக்கு வந்தாள். ஐயப்பனுக்கு சர்க்கரை வியாதி அதிகமாகி ரெண்டு கிட்னியும் செயலிழப்பு. மரணத்தை மடியில் கட்டிக்கிட்டு தினம் தானே ரத்த சுத்தகரிப்பு வேலை மூன்று முறை முடித்து வேலையைப் பார்த்தார். இந்த செயற்கை சுத்தகரிப்பு ஆயுள் காலம்வரை நீடிக்காது. ஒரு சில வருடங்களிலேயே நம் உடலில் உள்ள இயற்கை உயிரணுக்களைச் செயலிழக்கச் செய்து,. உடல் கருப்பாகி, விரைவில் உயிர் போகும். அப்படித்தான் இந்த ஐயப்பனும் இறந்தார். .

அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல். !

ஆனந்தவள்ளி தான் உண்டு, தன் வேலை, குடும்பம் உண்டு என்றுதான் இருந்தாள். ஆனா.. அதிர்ஷ்டம் அவளை விட்டு வைக்கலை. அப்பா கட்சியின் தலைவர் அரசியல்வாதி கண் அவள் மேல் பட்டது. அவருக்குக் கட்சி கட்டுப்பாடாய் இருக்கனும். தான் மீண்டும் முதலமைச்சர் ஆகி நாட்டை ஆளனும் என்கிற ஆசை. இப்போது ஐயப்பன் தொகுதி வெற்றிடம்.. மகள் ஆனந்தவள்ளியை தொகுதியில் நிறுத்தினால்… அப்பா இறப்பு, ஐயப்பன் நல்ல பெயர் எல்லாம் சேர்ந்து இவளுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும். மற்றவர்கள் நின்றால்… எதிர் கட்சி தொகுதியைக் கை பற்றும் கணக்குப் போட்டார்.

அதற்குத் தகுந்தமாதிரி காய்களை நகர்த்தினார். ஆனந்தவள்ளியை அழைத்து தேர்தலில் நிற்க வைத்தார்.

அவர் நினைத்தது நடந்தது. கட்சி தனித்துவமாய் அமோக வெற்றி. ஆனந்தவள்ளி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி.

இந்த வெற்றிகள் எதுவும் எவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை..

ஆனால் ஆனந்தவள்ளிக்கு அமைச்சர் பதவி அளித்ததுதான் எல்லோரையும் அதிர்ச்சி, ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அமைச்சர் பதவிக்கு இவளுக்கு முன்னுள்ள மூத்த அரசியால்வாதிகள் எல்லாம் போட்டிப் போடும்போது இன்றைக்கு வந்த இவளுக்கு மட்டும் எப்படி கிடைத்தது..? என்று எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள்.. அதுக்கும் காரணம் இருக்கு. “

“என்ன மாமா…?”

“மேலிடம் தந்திரம், மந்திரம்!”

“புரியல மாமா…?!”

“ஆனந்தவள்ளி வெற்றி பெற்றதும் தன்னை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்த முதலமைச்சராய் ஆகப் போகிற கட்சித் தலைவரிடம் மரியாதை நிமித்தம் சால்வை போர்த்தி ஆசி வாங்க வந்தவளுக்குத்தான் அடித்தது அதிர்ஷ்டம்.”

“எப்படி மாமா..?”

“உனக்கு மந்திரி பதவி கொடுக்க எனக்கு விருப்பம். ஆனால் ஒரு நிபந்தனை…!” கட்சித் தலைவர் தாண்டவராயன் சொன்னார்.

“என்ன ஐயா..?” இவள் பயம் பக்தியாய்ப் பார்த்தாள்.

“நீ…. என் ஆசைக்கு அப்பப்போ இருந்தால் சாத்தியம்!” மனுசன் நேரடியாகவே விசயத்துக்கு வந்துவிட்டார்.

“ஐயா…!” இவள் அலறினாள்.

“இதோ பார். நான் பத்து வருசத்துக்கு முன் மனைவியைப் பறி கொடுத்ததிலிருந்து கண்ட கண்ட நடிகைகளுக்கெல்லாம் லட்சம் லட்சமா கொடுத்து அழறேன். நீ சம்மதித்தால் அவர்கள் தேவை இல்லே அமைச்சர் பதவி. “

ஆசை ஒரு பக்கம். பயம் மறுபக்கம். ஆனந்தவள்ளிக்குக் கை கால்களெல்லாம் நடுக்கம். என்ன பதில் சொல்றதுன்னு தெரியல..

தாண்டவராயன் விடவில்லை.

“அமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர்கள், முக்கியப்புள்ளிகள் பொம்பளைங்களெல்லாம் போட்டிப் போடுறாங்க. நீ ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு. நான் கம்முன்னு காரியத்தை முடிக்கிறேன். எவன் முண்டி மோதினாலும் உன் பெயர் சத்தம்போடாமல் அமைச்சர்கள் பட்டியலில் கவர்னர் கையெழுத்துக்குப் போகும் இது சத்தியம்!” அடித்து சொல்லி இருக்கார்.

ஆனந்தவள்ளியிடம் இருந்து மறுபடியும் பதில் வரவில்லை.

“நம்ம இருப்பு, உறவு அரசல் புறச்சலாய் வெளியே தெரிந்தாலும் இது அப்பன் பெண் சந்திப்பு. அமைச்சர்கள் சந்திப்பு என்று எவனும் சந்தேகப்படமாட்டான். அப்படியே சந்தேகப்பட்டாலும் நீ மனசு மாறாமல் வருத்தப்படாமல் என்னோடு இருந்தால் கடைசிவரை அமைச்சர் பதவி” என்றார் தாண்டவராயன்.

ஆனந்தவள்ளிக்கு இப்போதுதான் சுதாரிப்பு வந்தது.

‘பதவிக்கு ஆசைப்பட்டு தலையாட்டி விட்டால் வாழ்க்கை சிக்கல்! கணவன் விவாகரத்து செய்து விடுவான்! அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி பதவிகள் என்பது ஐந்தாண்டு கால வாழ்க்கை! தோல்வி என்றால்..இந்த கெட்ட பெயரினாலேயே திரும்பி பார்க்கமாட்டார்கள். வாழ்க்கை நாசம். அரசனை நம்பி புருசனைக் கைவிடுவது சரி இல்லை!’ நினைத்தாள்.

தாண்டவராயன் 70 வயது பழுத்த அரசியால்வாதி. தோல் சுருக்கம். தலை வழுக்கை உள்ள அதி புத்திசாலி. எதிரிகள் மனங்களை ஊடுருவிப் பார்ப்பவர்.

“வாழ்க்கையில் சிக்கல் வரும்ன்னு யோசிக்கிறே..? நியாயம். உன் கணவனை சம்மதிக்க வைத்தால் சிக்கல் முடிந்தது” என்றார்

அதிர்ச்சியாய்ப் பார்த்தாள்.

“அவனை என்னிடம் அனுப்பு நான் பேசி சரி பண்றேன். முடியாதுன்னு சொன்னா… நான் உன்னை மணந்து கட்சித் தலைவி ஆக்கி நிரந்தர முதலமைச்சர் ஆக்குறேன்.” சொன்னார்.

ஆனந்தவள்ளி விழுந்து விட்டாள்.

“சரி ஐயா. நான் கணவரிடம் கலந்து வந்து சேதி சொல்றேன்”. வந்து விட்டாள்.

கணவனிடமும் தயங்கித் தயங்கி விசயத்தைச் சொன்னாள்.

“உடனே சரின்னு பதில் சொல்லு. அமைச்சர் பதவி என்பது யாருக்கும் எளிதில் கிடைக்காத அதிர்ஷ்டப் புதையல். அது நமக்குக் கிடைச்சிருக்கு. ஆயுசுக்கும் சம்பாதிக்க முடியாததை அஞ்சு வருசத்துல சம்பாதிக்கலாம். கோடி கோடியாய் அள்ளலாம்.. எனக்கு சம்மதம் உடனே சரி சொல்லு.” சொல்லிட்டான்.

ஆனந்தவள்ளி அமைச்சராகி விட்டாள்.

எண்ணி ஆறு மாசத்துல கொலை! அல்ப ஆயுசில் சாவு!

இதுதான் மாப்ளெ எல்லோருக்கும் அதிர்ச்சி.

எனக்கும் அதிர்ச்சி.

“அப்புறம் மாமா..?”

“நாளைக்குச் சொல்றேன் மாப்ளெ. இப்போ சாப்பிடப் போகலாம்”. தன்ராஜ் எழுந்தார்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *