கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 139 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டு முற்றத்திலே படர்ந்து வளர்ந்து நிழலைப் பரப்பிக் கொண்டிருந்த வேப்பமரத்துக்குக் கீழே சாய் மனை நாற்காலியில் சாய்ந்து பத்திரிதை வாசித்துக் கொண்டிருந்தேன். “அத்தான்! உங்களையெல்லே, நான் இன்றைக்குக் கூட்டத்துக்குப் போக வேணும்” என்று சொல்லிக்கொண்டு ‘மணிப்பர்ஸ்’ ஒரு கையிலே தொங்க, மறுகையிலே ‘கூலிங்கிளாஸ்’ சுழல, அன்ன நடை நடந்துவந்து என்முன்னே நின்றாள் கயல்விழி.

நான் பத்திரிகையில் பிரசுரமான “பொல்லாத மனை வியால் தற்கொலை செய்துகொண்ட கணவன்” என்ற தலையங்கமுள்ள செய்தியை ஒரு எழுத்தையும் தவற விடாது, ஊன்றி அவதானித்து வாசித்துக் கொண்டிருந்தேன். நான் வாசித்துக்கொண்டிருப்பதைக் கண்ட என் மனைவி திரும்பவும் என்னைப் பார்த்து “அத்தான்! உங்களையெல்லே, நான் இன்றைக்குக் கூட் டத்துக்குப் போக வேணும்” என்றாள்.

“என்ன! கூட்டத்துக்கா?” என்றேன் நான்.

“ஆம்” என்றாள்.

“கயல்விழி! இன்றைக்குச் சபாவினுடைய கலியாண வீட்டுக்குப் போகவேணுமென்று தெரியாதா? போன கிழமை வந்த திருமண அழைப்பிதழைப் பார்த்தனி தானே” என்றேன்.

“ஆமா, அதுக்கு இப்பென்ன செய்கிறது அதுக்கு நாளைக்குப் போகலாம். இன்றைக்குக் கட்டாயமாகக் கூட்டத்துக்குப் போகவேணும்” என்றாள்.

“என்ன! கூட்டம்?”

“பழைய மாணவரெல்லாம் சேர்ந்து கொலிச்சிலை கூட்டம் வைக்கிறம்”

“அதுக்கு நாளைக்குப் போகலாம்”.

“இன்றைக்குத்தான் ‘ கூட்டம். கூட்டத்துக்குப் போகாவிட்டால் என்ரை ‘பிரெண்’டெல்லாம் கேலி செய்வினம்”.

“அப்ப பின்னை என்ரை ‘பிரெண்’டிந்தை கலியாண வீட்டுக்கு மாத்திரம் போகாவிட்டால் என்னைக் கேலி. செய்ய மாட்டார்களோ? நீ இன்றைக்குக் கூட்டத்துக்குப் போக வேண்டாம் “.

“இல்லை நான் போகத்தான் வேணும்”.

“போனியள் எண்டா இண்டைக்குத் துலைச்சுப்போடுவன்”.

”வயித்திலீங்கற்றை மேன் என்னைப் படிப் பிச்சு உத்தியோகமாக்கி, இருபத்தையாயிரம் சீதனத் தோடை உங்களிட்டைத் தந்தது அடிமையாக இருக்கச் சொல்லியே?”

“என்ன? எனக்குப் பொம்பிளையில்லாமை உன் னைத் தேடி வந்தனானே? என்ரை கெட்டகாலம் உன் னைச் சேர்த்துவிட்டது” என்று சொல்லி இருவரும் வாக்குவாதப் பட்டுக் கொண்டு இருக்கும்போது எங் கள் வீட்டுப்படலையில் ‘கிறீச்’ என்ற ‘பிறேக்’ சத்தத் துடன் கார் ஒன்று வந்து நின்றது.

படலையடியில் கார் வந்து நிற்பதைக் கண்டதும் என் மனைவிக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அவர்கள் உள்ளுக்கு வந்துவிட்டால் விஷயம் அவர்களுக்கும் தெரிந்துவிடும் என்ற பயத்தினால் என் மனைவியின், முகம் சுருங்கிக் கறுத்து விட்டது.

“அத்தான்! நான் போறதா? போகவேண்டாமா?”

“போகவேண்டாம்”.

“இல்லை நான் போகத்தான் வேண்டும்”.

“போனால் திரும்பி வராதே கொப்பர் வீட்டுக்கே போய்விடு” என்று நான் சொன்னதும் முகத்தைச் சுழித்துவிட்டு, என்னை எரித்துச் சாம்பலாக்குவதுபோல் பார்த்துவிட்டு அங்கங்களையெல்லாம் அழகாகக் காட் டும் ‘நைலோன்’ சேலை காற்றிலே பறக்க, கருவண்டை ஒத்த இரண்டு பின்னல்களும் குத்திட்டு நிற்கும் தனங்களுக்கிடையே விளையாடுவதுபோல் ஆடி அசைய, விறு விறென்று படலையில் நிற்கும் காரை நோக்கி நடந்தாள் என் மனைவி கயல்விழி.

‘என் மனத்துக்குள்ளே விருப்பமில்லாமல் இருந்தா லும் என் மனைவியின் மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்ற காரணத்துக்காகக் கார் நின்ற இடத்துக்குச்சென்று வழியனுப்பி வைத்தேன்.

என் மனைவி காரிலே ஏறியதும் காருக்குள்ளே இருந்த கன்னிப்பெண்களும் கட்டிளங்காளைகளும் ‘கல கல’ வென்று சிரித்தனர். கார் காற்றாகப் பறந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள்…

நண்பன் சபாவின் திருமணத்துக்குப் போவதற் காக ஆயத்தம் செய்துகொண்டு மனைவியிடம் போனேன்.

என் மனைவி கயல்விழி கண்ணாடிக்கு முன்னே நின்று பவுடரை எடுத்து ‘ஒயிலாக’ உடலை வளைத்துக் கன் னத்தில் பூசிக்கொண்டாள். பவுடரைப் பூசியதும் அவ ளது மாம்பழக் கன்னங்கள் பளபளவென்று சிவந்தன. உதட்டுச் சாயத்தை எடுத்து உதட்டுக்குப் பூசினாள். உதடும் எழிலாகப் பிரகாசித்தது. பின்னலை முன்னுக் ‘குத் தூக்கி மார்புக்கு மேல் போட்டாள். அந்தப் பின் னல் மார்போடு விளையாடிக்கொண்டிருந்தது. வெள்ளை வோயில் பாவாடையும் அதே நிறச் சாறியும் அவற்றின் அழகைப் பளிச்சென எடுத்துக்காட்டும் இரத்தச் சிவப் புப் பிளவுசும் அணிந்து கொடிபோன்ற தன் உடலை வளைத்து நெளித்து அழகை இரசித்துக் கொண்டு நின்ற என் மனைவியைப் பார்த்ததும் எனக்கு அவளைக் கடித் துத் தின்ன வேண்டும் போல் இருந்தது.

“கயல்விழி! நேரமாச்சு. ‘இன்றைக்கும் போறதில்லையா?”

“அத்தான்! கொஞ்சம் பொறுங்கோ. இதோ வந்துவிடுகிறேன்.”

“என்ன, நாலு பிள்ளைக்குத் தாயான பின்பும் அழகு படுத்திக் கொண்டு நிற்கிறாயே? பார்ப்பவர்களுக்கு அசல் எது? போலி எது? என்பது தெரியாதென்றா? உன்ரை அழகுக்கு உதெல்லாம் என்னத்துக்கு.”

“உம்…..உம்-உங்கண்டை கேலிக்கதையை விட்டு. விட்டு சும்மா இருங்கத்தான். அது சரி நான் இன் றைக்கு ஆசுப்பத்திரிக்கு போகவேணும். நீங்களும் வாறியளே?”

“ஏன் ஆஸ்பத்திரிக்கு? ஆரைப் பார்க்க?”

“என்னோடை வேலை செய்கிற ‘ரைப்பிஸ்ற்’ ஓராளுக்குச் சுகமில்லை. அவரைத்தான் பாக்கப் போக வேணும்”.

“நீ பின்னை அவரைப் பார்க்கப்போ. நான் சபா விந்தை கலியாண வீட்டுக்குப் போவிட்டுவாறன்” என்று சொல்லி நானாகவே அவளை அனுப்பி வைத்தேன். நானா கவே அவளை அனுப்பி வைக்காவிட்டால் அவளுக்கும் எனக்கும் சச்சரவு உண்டாகும் என்பது எனக்குத் தெரி யும்! அதனாலே அவள் விருப்பத்துக்கே அவளை அனுப்பி விட்டு நண்பனின் கலியாண வீட்டுக்குப் போனேன்.

***

“கலோ! மிஸ்ர நாகராசன், வாப்பா வா. ஏன் ராப்பா நேற்று வரயில்லை?”

“…..”

“ஏனப்பா கதைக்காமல் இருக்கிறாய்? எங்கையப்பா மனைவியார்? ஏன் கூட்டி வரவில்லை?”

“அவ ஆஸ்பத்திரிக்குப் போவிட்டா”.

“ஆரைப் பார்க்க?”

“கந்தோரிலை வேலை செய்கிற ரைப்பிஸ்ரையாம். அது சரி, உன்ரை பெண்சாதியை ஒருக்காக் கூப்பிடு பாப்பம்”

“ஏனப்பா கதைக்காமல் இருக்கிறாய்? பெண்சாதி அழகில்லையா?”

“உன்னைத்தான்ராப்பா கேக்கிறன். நீ என்னடா வெண்டால் கதைக்காமை ஊமைபோலை இருக்கிறாய்? ஓகோ! அந்தப் பழைய போட்டியை நினைச்சுப் போட்டியோ?”

“எந்தப் போட்டி?”

“செய்தா உத்தியோககாரப் பொம்பிளையைச் செய் பிறது. அல்லது பிரமச்சாரியாக இருக்கிறதென்று சொன்னாய் அதைத்தானே நினைச்சனி”.

“ஓமடாப்பா, நான் நினைச்சது தவறிப்போச்சு என்ன செய்யிறது. எப்படியாவது ஒரு ஒத்தியோக காரப் பொம்பிளையைச் செய்யலாமெண்டு பார்த்தன், அது முடியாமைப் போச்சு”

“எடே மச்சான், நீ தப்பிவிட்டாயடா, உன்ரை நல்ல காலம் உன்னைத் தப்பவைச்சுவிட்டுது. இஞ்சை பார் நானொரு உத்தியோக காரப் பொம்பிளையைக் கலி யாணங் கட்டிப்போட்டுப் படுகிற பாட்டை”.

“என்ன பாடுபடுகிறாய்?”

“உத்தியோககாரி என்றபடியால் உன்ரை கலியாண வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வர முடியா மற்போச்சு”.

“உதுக்குத்தானோ சொலுறியள்?”

“இது மாத்திரமில்லை. ஒரு பெண்ணுக்குப் பணம்— படிப்பு இருந்துவிட்டால் போதும் அவுளை அடக்கவே முடியாது.”

“ஏன் பெண்களை அடக்க வேண்டும்? அவர்க ளுக்கும் சுதந்திரம் இருக்குது தானே? படித்த பெண் ஒருகாலமும் பிழைவிட மாட்டாள். அவள்…:

“என்ன பெண்களைப்பற்றி ஒரே கண்ட நீதிக்குப் புளுகிறாய்? உன்ரை பொம்பிளையை உனக்குப் பிடிக்கவில்லையே? கலியாணம் செய்து இரண்டு நாட் களுக்குள்ளேயே இப்படியென்றால் பின்னுக்கு என்ன செய்யப் போறியள்” என்றேன் நான்.

நானும் என் நண்பன் சபாவும் ஒருவரை ஒருவர் கதைத்துச் சிரித்துக்கொண்டு இருக்கும்போது முத்துப் பற்கள் தெரிய முல்லைச்சிரிப்புடன் அன்னநடை நடந்து வந்து ‘பலகாரத்தை என்முன்னே வைத்துவிட்டுச் ‘சாப்பிடுங்கள்’ என்று தேன்சொட்டும் இனிய குரலில் கூறிவிட்டு எனது நண்பனின் மனைவி நகர்ந்தாள்.

நண்பனின் மனைவியைப் பார்த்தேன். களங்கமில் லாத அவளது முகம் கவர்ச்சியாகவும் பருவத்தின் வளர்ச்சியால் பதமாகவும் காணப்பட்டாள். அவளின் ஒவ்வொரு அங்கங்களும் கடித்துத் தின்னக்கூடிய அள வுக்குப் பூரணமாக வளர்ந்து பதமாக இருந்தன.

தமிழரின் பண்பாட்டுக்கேற்ப அவளின் கழுத்திலே புதிதாகக் கட்டப்பட்ட புதிய தாலிக்கொடி “நான் தான் இந்தப் பெண்ணுக்கு வேலியாக இருக்கிறேன். நான் இவளின் கழுத்திலே இருக்கும்போது இவளை மாத்திரம் ‘கரவு’ உள்ளத்துடன் பார்க்காதீர்கள். என்னுடைய சொல்லைக் கேளாமல் இவளின் கற்பைச் சூறையாட முற்படுவீர்களாயின், என்னுடைய தாலியிலே இருக்கும் திரிசூலத்தினால் குத்திக் கொன்றுவிடுவேன்” என்று சொல்வதுபோல் பளிச்சுப் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்ததோடு, அவள் இன்னொருவன் மனைவி என்பதையும் அது எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தது.

“என்னப்பா! ஒரேயடியாக மனைவியையே பார்த் தாய் என்ன அழகில்லாதவள்-பணமில்லாதவள் என்றா?”

“ஒன்றுமில்லை. நீ அதிஷ்டசாலியப்பா.”

“ஏன்?”

“இப்படியான ஒரு பெண்ணைத் தேடி எடுத்துப் போட்டாயே?”

“நீ உத்தியோககரீரப் பெண்ணைக் கலியாணம் கட்டினாப்போலை கேலி செய்கிறாயா?”

“நண்பா! நான் கேலி செய்யவில்லை. என் வாழ்க் கையிலே ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கூறுகிறேன் கேள்” என்று சொல்லி என் வாழ்க்கை வரலாறுகளைக் கூறி ஆரம்பித்தேன்.

***

எனது ஊரிலே எத்தனையோ அழகிய பெண்களெல்லாம் இருந்தனர். அவர்களுக்குள்ளே பணத்திலும் படிப்பிலும் கூடியவளான கயல்விழியைத் தேடி எடுத்து என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்.

கயல்விழிக்கு மஞ்சள் கயிறு கட்டியதும், “உனக் கென்ன இரண்டு பேற்ரை சம்பளம். நல்லாக மிச்சம் பிடிக்கலாம். கெதியிலை குட்டிப் பணக்காரனாக வந்து விடுவாய்” என்று என் உறவினர்கள் எல்லோரும் என்னைக் கேலி செய்தனர்.

நானும் அவர்கள் சொல்வதுபோல் பணக்காரனாக வும் மரியாதையான குடும்பமாகவும் வாழலாம் என்று நினைத்துப் பெருமிதப்பட்டேன். ஆனால், நான் நினைத் ததுபோல் ஒன்றுமே நடக்கவில்லை.

உத்தியோககாரப் பெண்ணைத் தேடி எடுத்த நான் படும்பாட்டைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

என் மனைவி நித்திரைக்குப் பிறப்பிடமானவள். அவள் ஒவ்வொரு நாளும் காலையில் ஏழு மணிக்குப் பின்னே நித்திரைவிட்டு எழும்புவாள். அவள் எழும்பு வதற்கு முன்னே நான் எழும்பிவிடுவேன். நான் எழும்பியதும் தேநீர் வைத்துவிட்டு என் மனைவியை எழுப்புவேன். அவள் “கொஞ்சம் பொறுங்கோ, பஞ்சி யாக்கிடக்கு” என்பாள். “நேரம் ஏழுமணியாச்சு. இண்டைக்குக் கந்தோருக்குப் போறதில்லையே? எழும் புங்கோ” என்று சொல்லி விடாப்பிடியாக எழுப்பினால் தான் எழும்புவாள்.

அவள் எழும்பி முகம் கழுவுவதற்கு முன்பே நானும் வேலைகாரப் பெட்டையும் சேர்ந்து சாப்பாடு எல்லாம் சமைத்துவிடுவோம். காலைச் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு அவள் தன்னுடைய கந்தோருக்குப் போவாள். நான் என்னுடைய கந்தோருக்குப் போவேன்.

திரும்பவும் மாலை நாலுமணிக்குத்தான் இருவரும் வீடு வந்து சேருவோம். வீட்டுக்கு வந்ததும் அந்துக் கூட்டத்துக்குப் போகவேணும் இந்தக் கூட்டத்துக்குப் போகவேணும் என்று சொல்லிவிட்டுத் தன் விருப்பப் படி போவாள்.

இன்று நீ கூட்டத்துக்குப் போகவேண்டாம் என்று தடுத்தால் போதும். உடனே என்மேல் சீறிவிழுவாள். “வீட்டுக்குள்ளே என்னைப் பூட்டிவைக்கப் பார்க்கிறீர் களா? இதுக்குத்தானா என்னைக் கலியாணம் செய்து கொண்டீர்கள்?” என்றெல்லாம் வாயில் வந்தமாதிரி மரியாதை இல்லாமல் ஏசுவாள். சிலவேளைகளில் சாப் பிடாமலும் இருந்துவிடுவாள்.

ஒருநாள்,

“இன்று எங்கள் சங்கத்தினர் ‘பிக்னிக்’ போக உத்தேசித்திருக்கிறார்கள். நானும் அவர்களுடன் போகிறேன். மத்தியான உணவை நீங்களே ஆக்கிக் கொள்ளுங்கள்'” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

“என்ன கயல்விழி! ஒவ்வொரு நாளும் இப்படியே போனால் ஊரவர்கள் என்ன நினைப்பார்கள்?”

”ஊரவர்களுக்குப் பயந்து நாங்கள் நடக்க முடியுமா?” என்றாள். அவளோடு கதைத்தால் சண்டை தான் பிடிக்கவேண்டும் என நினைத்து, அவளின் விருப் பப்படி நடக்க விட்டுவிட்டேன். இன்றும் அவள் அந்த நிலையிலேயே இருக்கிறாள். இப்படியே படித்த பெண்ணைக் கலியாணம் செய்து நான் படுகிறபாடு ஒன்றா, இரண்டா…….

“பணம், படிப்பு இருக்கிற பெண்களைக் கலியாணம் கட்டக் கூடாது. இனிமேல் என் நண்பர்களைக் கலி யாணம் கட்டவும் விடமாட்டேன்” என்றேன் நான்.

“என்ன! பணம், படிப்பு இருக்கிற பெண்களைக் கலியாணம் செய்யக்கூடாதா….. ?” என்று குறுக்கிட்டான் என் நண்பன் சபா.

“ஆமாம் சபா. பணம் – படிப்பு இருந்தால் மட்டும் போதாது. அத்தோடு ‘பண்பும்’ இருக்கவேண்டும். ஒரு பெண்ணுக்குப் பண்புதான் மிக முக்கியம். அந்தப் பண்பு இல்லையென்றால் அவளைப் பேயென்று தான் சொல்ல வேண்டும்” என்றேன் நான்.

படித்த பெண்ணைக் கலியாணம் செய்யவில்லையே என்று வருந்திக்கொண்டிருந்த என் நண்பன் சபாவின் புன்னகை பூத்துக் குலுங்கியது.

– வைகாசி, 1965, கலைவாணி.

– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.

நா.க.தங்கரத்தினம் சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *