கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 144 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சொற் செயல்களில் பிறரிடம் பணிவு காட்டி நடந்து கொள்ளுதல் வேண்டும்; அது நமக்கு மரியாதை கொடுக்கும். நமது எண்ணங்களையும் செவ்வனே நிறைவேற்றப் பண்ணும். இதனை விட்டுப் பிறரிடம் நாம் கடுமையும், செருக்கும், அச்சமூட்டலும் கூடாது. அது நமக்கு அவ மானத்தை உண்டாக்குவதுந் தவிர, நம் நோக்கங்களை யும் பாழ்படுத்தும். ஏனெனில், எதற்கும் பிறரை வற் புறுத்துதல் நம்மிடம் அவர்களுக்கு எதிர்ப்பை உண்டாக் கும். வற்புறுத்துதல் பிறர் மரியாதைக்குக் குறைவுண்டாக் குவதால், அவர்கள் நாம் சொல்லுவதை மறுத்துவிடுவார். களே தவிர நிறைவேற்றமாட்டார்கள். அவர்கள் நமது பயமுறுத்துதலுக்கு அஞ்சி ஒருவேளை நாம் சொல்லு வதைச் செய்ய முயல்வார்களானாலும், அதனை அரைமன தோடு செய்து அவ்வேலைக்குக் குறைவுண்டாக்கிவிடுவார்கள்.. இதனை விட்டு நாம் எதினும் பிறரிடம் பணிவு காட்டுவோமானால், அஃது அவர்களுடைய தன்மரியாதைத் தன்மைக்குக் குறைவுண்டாக்காது; அவர்களிடம் எதிர்ப் பையுமுண்டாக்காது; மேலும் நாம் சொல்லுவதை அவர் கள் நல்லெண்ணத்தோடு நிறைவேற்றி நமக்கு றை வையும் உண்டாக்குவார்கள். 

1. யோசேப்பு ஆல்த்தர் 

பெருங் குற்றவாளிகளை ஆஸ்திரேலியா நாட்டுக்கனுப்பி, குற் றேவல் செய்ய விட்டுவைப்பது ஆங்கில நாட்டாரின் பழையகால வழக்கமாக இருந்தது. அங்கே அவர்கள் வயிற்றுச் சோற்றுக்கு வேலை செய்யவேண்டும். அங்கு அவர்கள் வேலையில் தவறு செய் தாலும், சோம்பேறித்தனம் காட்டினாலும், அல்லது ஒழுங்குதவறி நடந்துகொண்டாலும் அவர்களுக்கு முதுகின்மேல் சவுக்கடி கொடுப்பதுதவிர, வேறு தண்டனை கிடையாது. 

அத்தகைய குற்றவாளிகள் ஆஸ்திரேலியாவில் ஒரு நிலச் செல்வரிடம் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர் ஒரு தடவை யோசேப்பு ஆல்த்தர் என்னும் ஒருவரைக் குற்றவாளி களுக்குத் தலைவராக ஏற்பாடு செய்துவைத்தார். ஆல்த்தர் பேரறிவாளர் ; ஈவிரக்கமுள்ளவர்; அவர் குற்றவாளிகளின் தவறுகளுக்குச் சவுக்கடி கொடுப்பதைவிட்டு, வேறு நல்லவழியில் அவர் களிடம் வேலைவாங்க முயன்றார். அவர் அவ்வலுவலை ஏற்றுக் கொண்ட பிறகு அக்குற்றவாளிகளுக்கு முன்பைவிட நல்லுணவு கொடுக்கலாயினர்; இடும் வேலைக்கு மேல் அவர்கள் மிகுதியாக வேலை செய்வார்களானால், அவர் அதற்கென்று அவர்கட்குக் சிறிது பணமுங் கொடுத்துவந்தார். அவர்களில் எவனோ ஒருவன் ஒருநாள் கண்டுபிடிக்கக்கூடாத திருட்டுவேலை ஒன்று செய்து விட்டான். அவர் அப்போது அவர்களையெல்லாம் ஒன்றுகூட்டி வைத்துக்கொண்டு, “உங்களில் ஒரு திருடன் இருக்கின்றான். நீ ங்கள் அவனைக் கண்டுபிடித்தாலன்றி, யான் உங்கட்கு மிகுதி வேலைக்கென்று கொடுக்கும் பணத்தை நிறுத்திவிடுவேன். ஆகையால் அவனைக் கண்டுபிடிப்பது உங்கள் பொறுப்பு; கண்டு பிடித்து அவனுக்குத் தக்க தண்டனை கொடுப்பதும் உங்கள் வேலையாகவே இருக்கவேண்டும்; எவனுக்கும் சவுக்கடி கொடுப்பது எனக்கு விருப்பமில்லை,’ என்றார். அதனைக் கேட்டு அக் குற்றேவற்காரர்கள், அவர் சொல்வது சரியென்றும், அவர் தங்களை நன்றாகவே நடத்துகிறாரென்றும் உணர்ந் து கொண் டார்கள். பிறகு அவர்களே முயன்று, அத்திருடனைக் கண்டு பிடித்து, அவர்களே அவனுக்குத் தக்க தண்டனையுங் கொடுத்தார்கள். 

வரவர இத்தகைய வழிகளால் அக்குற்றவாளிக் கூட்டத்தாரி டத்தில் திருட்டுத்தனமும், இன்னும் ஒழுங்கற்ற நடவடிக்கை களும் சிலநாட்களில் இல்லாமலே போய்விட்டன. ஆகவே அவர் கட்குச் சவுக்கடி கொடுக்கும் வழக்கமும் நீங்கிப் போயிற்று. இவ்வாறு அக்குற்றேவற்காரர்களின் வாழ்க்கை நலத்துடனும் நேர்மையுடனும், மனமகிழ்ச்சியுடனும் நடந்துவந்தது. 

2. அரசன் ஆலப்பன் 

இத்தாலிப் பெருநாட்டில் ஆலப்பன் என்னும் ஓர் அரசன் இருந்தான். அவன் மென்மைத் தன்மையும் ஈவிரக்கமுமுள் ளவன. முதன்முதல் அவன் அரோகனாட்டுச் சிற்றரசனாக அரசு செலுத்தி வந்தான். தன் குடிகளின் அன்புக்குணத்தில் அவனுக்கு நம்பிக்கையுண்டு. அவன் மெய்க்காப்பாளர் இன்றியே வெளியில் போய்வருவான். அவன் குடிகளின் உயிரைத் தன் னுயிர்போற் கருதி வந்தான். தான் தந்தை, குடிகள் தனையர்கள் என்னுங் கொள்கையைக் கடைப்பிடித்தவன். 

ஒருநாள் அவன் கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந் தான். அப்போது கடலில் மக்களுடன் ஒரு படகு அல்லாடி முழு கிப்போகுந் தறுவாயிலிருந்தது. அதனைக் கண்டு அவன் உடனே சில ஆட்களுடன் ஒரு கட்டுமரத்தின்மேல் ஆங்குச் சென்று அம்மக்களைக் காப்பாற்றிக் கொண்டுவந்து கரைசேர்த்தான். குற்றவாளிகட்கு மன்னிப்புக் கொடுப்பதற்கே அவன் பெரும் பாலும் முயல்வான். நல்லவர்கள் நீதியினால் நட்பாகின்றனர், அவர்கள் தயையினால் கவரப்படுகின்றனர் என்பது அவன் வழக்க மொழி தான். 

நாளாவட்டத்தில் நெபில் மாகாணமும் சிசிலித் தீவும் ஆலப் பன் கையிற் சிக்கின. ஆங்கு கெயிட நகரத்தலைவன் எக்காரணத் தினாலேயோ இவன்மேற் பகைகொள்ள இவன் அந்நகரை முற்றுகை யிட்டான். கோட்டைப் படையில் உணவுப்பொருள் குறைந்துபோக, அத்தலைவன் சில மக்களை வெளியேறச்செய் அவர்களை ஆலப்பன் என்னவேண்டுமானாலும் செய்து விடலாம்; வெளியேக வொட்டாமல் வந்த வழியே துரத்தியும் விடலாம். ஆனால் மக்கள் பட்டினிகிடந்து சாவதற்கு ஆலப்பன் மனம் ஒப்பவில்லை. ஆகையால் அவர்கள் வெளியேறிப்போய் விடத் தன் பட்டாளத்தின் மூலம் வழிவீட்டுவிட்டான் ஆலப்பன் தண்ணளிகண்டு அந்நகரத்தார் மனமுருகினர். இரண்டொரு. நாட்களில் ஆலப்பன் முற்றுகையில் வெற்றிபெறக் கெயிடத் தலைவன் அவனுக்குப் பணிந்துவிட்டான். ஆலப்பன் வெற்றி கொண்டதைப்பற்றி அந்நகரத்தாரும் மனமுவந்தனர். 

ஆலப்பன் நெபில நாட்டை ஆயுள்வரையில் அரசியலில் அரை குறையின்றி ஆண்டுவந்தான். அந்நாட்களிலெல்லாம் அவன் வல் லமையும் செல்வாக்குமுடைய அரசனாகவே வாழ்ந்தான். எப்போ தும் அவன் எண்ணத்தில் தண்ணளியே தலைகாட்டிக்கொண்டிருந்தது. அவனைக் கண்ணிய ஆலப்பன் என்று மண்ணுலகு வழங்கிற்று. 

3. ஆசிரியன்மார் இருவர் 

தென் தமிழ்நாட்டில் தண்டலம் என்னும் பேரூர் ஒன்றுண்டு. அது கீழப்பாதி மேலப்பாதி யென்று இருபிரிவாக இருந்தது கீழப்பாதியில் ஒரு தெருப் பள்ளிக்கூடம். அதனைத் தண்டபாணி வாத்தியார் என்பவர் நடத்திக்கொண்டுவந்தார். அதனில் நாற்ப தைம்பது பிள்ளைகள் படித்துக்கொண்டுவந்தனர். ஆசிரியர் அவர்கட்கு எழுதப்படிக்கக் ற்றுக்கொடுத்து வந்தார். அவர் நாட்டுக் கணக்கு நன்கறிந்தவர். அதனையும் அவர் பிள்ளைகட்குச் சொல்லிக்கொடுப்பார். பள்ளிக்கூடம் அவர்தம் தெருத்திண்ணை யிலேயே நடைபெற்று வந்தது. 

பிள்ளைகள் விடியற்காலை 4 மணி முதல் ஒவ்வொருவராகப் பள்ளிக்கூடம் வந்துசேருவார்கள். தண்டபாணி வாத்தியார் காலை 6 மணிக்கெல்லாம் தெருத் திண்ணைக்கு வந்து பிள்ளைகளிடம் ஒரு பக்கத்தில் பிரம்புங் கையுமாக உட்கார்ந்து கொள்வார். 

அரிச்சுவடிப் பிள்ளைகள், பேர்ச்சுவடிப் பிள்ளைகள், ஆத்தி சூடிப் பிள்ளைகள் என்பது போன்ற வகுப்புக்கள் அங்குண்டு அரு ணாசலபுராணம், நைடதம், பெரியபுராணம் ஆகிய பெருநூல்களை யும் பார்த்துப் படிக்கும் பெரிய பிள்ளைகளும் அங்குண்டு 

பிள்ளைகள் நூல்களைப் பிழையில்லாமல் வாத்தியாருக்குப்படித் தூக்காட்ட வேண்டும். ஒரு பிழைக்கு ஒரு பிரம்படி, அவ்வடி ஆசிரியர் மனம்போனபடி எளிதாகவும் உறைப்பாகவுமிருக்கும். அடிபடும் பிள்ளைகள் அழுதுகொண்டே படிப்பார்கள். படிக்கும் நூல்களில் ஒரு வரிக்காவது பிள்ளைகட்குப் பொருள் தெரியாது. ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதுமில்லை. 

ஆசிரியர் ஒரு பிள்ளையிடம் பாடம் படிக்கக்கேட்டுக்கொண்டி இருக்கும்போது, மற்றப் பிள்ளைகள் அவரவர் பாடங்களை உரக்கப் படித்துக்கொண்டிருக்கவேண்டும். சட்டாண்பிள்ளை யென்னும் முதன்மை மாணவன் அங்கொருவனுண்டு. அவன் படிக்கும் பிள்ளை களை மேற்பார்வை பார்க்கவேண்டும். அவன் உரக்கப் படிக்காத வர்களை ஆசிரியரிடம் கூட்டிக்கொண்டுவந்து சொல்லுவான். மனம் போனபடி அவர்கட்குப் பிரம்படிகள் கொடுப்பார். அகப்பட்ட பையன்அழுதுகொண்டேபோய்த் தன்னிடஞ் சேர்ந்து உரக்க உரக்கக்குரல் தூக்கிப் படிப்பான். இவ்வாறு அப்பள்ளிக்கூடத்தில் எப்போதும் பேரொலியும் அழுகுரலும் முழங்கிக்கொண்டே யிருக்கும். 

அங்குத் தண்டனை பிரம்படியேயன்றி, தலையிற் குட்டுவதும், காதுநிமிண்டுதலும்,தசையைக் கிள்ளுதலுமுதலிய தண்டனைகளு முண்டு. அடாத குற்றங்களுக்குக் கோதண்டம் போடுதல், நாற் காலியில் நிற்கவைத்தல், படுக்கப்போட்டுப் பிட்டங்களின் மேல் பிரம்படி கொடுத்தல் முதலிய கடுந்தண்டனைகளும் உண்டு. 

அங்குப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்வர், அடித்துக்கொள்வர், கிள்ளிக்கொள்வர்; இவைகட்கெல்லாம் தண் டனை பிரம்படியே. 

பிள்ளைகள் உணவுக்கு வீடுசெல்லும் நேரந்தவிர நாளெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே இருக்க வேண்டும். விளக்கு வைக்கத்தான் பிள்ளைகளை வீட்டுக்கு விடுவார். 

அப் பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் நேரமே கிடை யாது. நிலவு நாட்களில் அப்பிள்ளைகள் சிலர் சிலராக அவ்வத் தெருக்களில் ஒன்றுகூடி அடிபிடிசண்டையோடு விளையாடுவர். 

அப் பிள்ளைகளிடம் நல்ல படிப்பில்லை; நல்ல பேச்சில்லை: நல்ல நடையொழுக்கங்களில்லை; நன்னெறி இன்னதென்பதில் ஆசிரியர் பிள்ளைகளைப் பயிற்சி செய்வதே இல்லை. 

சினத்திலும், உருட்டுதலிலும், மிரட்டுதலிலும், அடியிலும் அழுகையிலும் வளர்ந்த பிள்ளைகள் உலக வாழ்க்கையில் எப்படி யிருப்பார்கள்! அவர்கள் குருடர்களாகவும் திருடர்களாகவும் மூடர்களாகவும், சண்டைக்காரர்களாகவும் இருப்பதைத்தவிர, நல் வழியில் நடக்க அறிவார்களோ ! 

மேலப்பாதியில் அன்பகத்தர் என்னும் ஓராசிரியர் இருந்தார். அவர் இலக்கண விலக்கியங்களில் நிபுணர். அவர் மாணவர்கட்கு முறையாக நூல்களைக் கற்பித்துவந்தார். வாக்கியங்களின் பொருள் தெள்ளத்தெளிய விளங்க எல்லோருக்கும் சொல்லிக்கொடுத்து வந்தார். அவர் இன்முகங்காட்டி இன்சொற் பேசுவர். அவர் கையிற்பிரம்பு காண்பதருமை. அவர் பன்னிரண்டு பிள்ளைகளுக்கு மேல் தமது பள்ளிக்கூடத்திற் சேர்த்துக் கொள்வதில்லை. அங்கு தொடக்கப் படிப்பு, நடுத்தரப் படிப்பு, உயர்தரப் படிப்பு என் மூவகைப் பிரிவுகளாக மாணவர்கள்கல்விகற்பர் ஒளவையார் சிறு நூ ல்கள் போன்றவை தொடக்கப் படிப்பு, கீழ்க்கணக்கு நூல்கள் நடுத்தரப்படிப்பு, மேற்கணக்கு நூல்களும் மற்றும் புராண இதி சங்களும் உயர்தரப் படிப்பு, வகுப்புக்குத் தக்கவாறு இலக்கண நூல்கள். 

காலை 10 மணிமுதல் 12 வரை ஒரு வேளை. 2 மணி முதல், 4 வரை ஒருவேளை, ஆக நான்கு மணி நேரமே பள்ளிக்கூடம். பிள் ளைகள் படிப்பதும் பாடங்கேட்பதுந்தவிரவேறொன்றும் அவர்கள் அங்குச் செய்வதில்லை; பள்ளிக்கூடம் நடப்பது பக்கத்து வீட்டா ருக்கும் தெரியாது. ஆசையும், அன்பும், கருத்தும், கவனிப்பும் அங் குக் குடிகொண்டிருக்கும். ஒரு நேரத்தில் ஆசிரியரிடம் கற்கும். மாணவர்போக ஏனையோர் தங்களுக்குத் தாங்களே படித்துக் கொண்டிருத்தலிலும் ஒருவருக்கொருவர் வினாவிடுத்து விடை பெறுதலிலும் சொல்லுவதிலும் பழகிக்கொண்டிருப்பர். அவர்கள் தமக்குத் தெரியாத பொருள்களை ஆசிரியரைக் கேட்டறிந்து கொள்வர். 

ஒவ்வொரு நாட்களில் ஒவ்வொரு பிரிவுப்பிள்ளைகளுடன் வெளி யில் உலாவிவரப் போவார் அன்பகத்தர். வெளிக் காட்சிகளிற் பிள்ளைகளுக்குத் தக்கபடி அறிவிக்க வேண்டிய செய்திகளையெடுத் துச் சொல்லி அறிவூட்டுவார் அவர்; இயற்கைப் பொருள்களுக்கும் செய்திகளுக்கும், உலகப்பொருள்களுக்கும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பிள்ளைகளுக்கெடுத்துக் காட்டுவார். 

பாடநூற்பொருள்களையும் இயற்கைக் கண்காட்சிகளில் விளக்கிக் காட்டுவார். உலாவிவரும்போது பழந்தமிழ்நாட்டுக் கதைகளையும், அயல் நாட்டுக் கதைகளையும் பிள்ளைகள் காதுக்கினிமைபடச் சொல்லி, அவற்றின் மூலம் நீதிமுறைகளையும் அவர் அவர்கட்கு உணர்த்துவார். நன்னெறி நன்னடக்கைகளைச் செவ்விநேரும் போதெல்லாம் அவர் அவர்கட்கெடுத்துச் சொல்லி, அவைகள் அவர்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியச் செய்வார். 

பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கும்போதெல்லாம் – கசடறக் கற் றல், கற்றபடி நிற்றல், உலகவொழுக்கம்,நீதிமுறை-ஆகிய இவை களைத் தம் மனத்தின்கண் நோக்கமாக வைத்துக்கொள்வார் அன் பகத்தர். 

இத்தகைய ஆசிரியரிடம் பழகும் பிள்ளைகள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? அன்பகத்தர்தம் மாணாக்கர் என்றால் அவ்வூரும் மற்றெவ்வூரும், அரசியலும், அலுவலகமும், தொழிற்சாலையும் மதித்து மரியாதை கொடுக்கும், அம்மாணாக்கர்களெல்லோரும் நன்னிலைபெற்று, நல்வாழ்வு வாழ்ந்து, நல்லவர்களெனப் பெய ரெடுத்து, உலகத்துக் கோரழகு கொடுத்து வந்தனர். 

க.குளிர்காற்று உடையை உடுக்கும், கொடுவெயில் உடையை எடுக்கும். 

௨. நீர்வீழ்ச்சி மலைக்கற்களை உடைத்துக் கொண்டு வந்து, பேரொலிசெய்து பள்ளத்தில் வீழ்ந்து, மக்களைக் கிட்ட அணுகவொட்டாமற் செய்யும். அருவியோ மெல் லென வோடி, மரஞ்செடி கொடிகளை வளர்த்து, வயல் களிடம் அமைதியுடன் பாய்ந்து மக்கட்கு மகிழ்ச்சி யுண் டாக்கும். – ஒரு பெரியார். 

௩. பையச் சென்றால் வையந் தாங்கும். – ஒளவையார். 

ச. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி. – திருவள்ளுவர்.

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *