பணம் என்னடா… பணம்! பணம்!

‘என்ன செய்யலாம்?! இப்படி ஆயிரங்காய்ச்சி வாழைத்தாரைத்தான் கட்டணும்!னு சம்பந்தி சொன்னதுனால இரண்டு வாழை மரங்களைக் கல்யாண மண்டபத்து வாசலில் நிறுத்தி, ‘ஜாம்ஜாம்னு’ கல்யாணத்தை முடித்தார் கல்யாண சுந்தரம்!. இப்போ.. இரண்டாயிரம் நல்ல கோழிக்கோடு பழம்மாதிரி முதிர்ந்து பழுக்கக் காத்திருக்கும் ரஸ்தாளிப் பழங்களை என்ன செய்வதாம்?! விட்டா எல்லாம் வீணாப்போயிடுமே?!
சம்பந்தீட்ட கொடுத்தா.. ‘இதுக்கா அலையறோம்னு பிரஸ்டீஜ் பேசினா?’என்ன பண்றது? யோசித்தார்.
எவனாவது, பழ வியாபாரிட்ட தள்ளீடலமான்னு நினைத்தார். போட்ட பணத்துல பாதியாவது வருமே?! விற்கும் முடிவுக்கு வந்தார் கல்யாண சுந்தரத்தின் தம்பி… நெல்லையப்பன்!.
பழக்காரன்ட்ட கேட்டுட்டு வந்துதான் தாரை அறுத்து எடுத்துட்டுப் போகணும்! சும்மா இல்லே.. ரெண்டும் அத்தனை வெயிட்..! ஒத்த ஆளால தூக்க முடியாது! நினைத்தார்..! ‘சரி, ‘பூ மார்க்கெட்’ பழவியாபாரி பூபாலன்ட்டதான் எப்பவும் பதிவாப் பழம் அவர் வாங்குவார்..! கல்யாணம்கறதுனால விவசாயக்கல்லூரியில் சொல்லி வாங்கினது இந்த இரு குலைகள்!
பூபாலனை நெருங்கினார்.
‘வாங்கண்ணே! என்ன பழம் வேணுமா?’ என்றான்.
‘உன்னைத்தான் பார்க்கலாம்னு வந்தேன்! பழம் வாங்க வந்தாத்தான் நீ வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பயே!’ விலை கொறைச்சா கொடுப்பே?! குதர்க்கமாய்க் குத்தினார் அவனை.
அவன் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல்,.. ‘ ‘வெலைக்குத்தகுந்த பழம்தான் தரேனே?!’ என்றான்.
வலையில் விழுந்து விட்டான் என்பது அவன் வார்த்தைகளில் உறுதியாச்சு!
‘சரி இப்ப, நான் உங்கிட்ட பழம் வாங்க வரலை.,! மாறாக, உன் கிட்ட பழம் விக்க வந்திருக்கேன்! நல்ல விலை சொல்லி எடுத்துக்கோ..! சரியா?! அக்ரீல வாங்கினது! ரெண்டு ஆயிரங்காய்ச்சித் தார்கள்..! கேட்டு மடக்க வழி தேடினார்.
‘நீங்க கொடுக்கப் போறீங்களா? என்ன தோட்டம் காடு கீடு வாங்கீருக்கீங்களா?’ என்றான் ஆச்சரியமாக நெல்லையப்பனைப் பார்த்தபடி.
அதான் அக்ரீல வாங்க்கினதுன்னு சொன்னனே?! அண்ணன் வாங்கினார். உனக்கு கொடுத்தா அதுக்கு நல்ல விலை கொடுப்பே நீ, னு ன்னு நம்பி வந்திருக்கேன்.
என்ன விசேஷத்துக்கு வாங்கினீங்களா?
அட.. ஆமாம்ப்பா.. கரெக்டா கண்டுபிடிச்சுட்டயே? கல்யாணத்துக்கு வாசலில் தோராணங்கட்ட வாங்கினது.. நல்ல தார். பழுக்கற மாதிரி தயாரா இருக்கு கொண்டாரட்டா..?! தூக்க முடியலை! வெயிட் ஜாஸ்தி. கேட்டுட்டு நீ சரீன்னு சொன்னதுக்கப்புறம் கொண்டாரலாம்னு நெனைச்சு முதல்ல கேட்டுப் போக வந்தேன்.’ என்றார் நெல்லையப்பன்.
‘அண்ணே! சொன்னாத் தப்பா நெனைச்சுக்காதீங்க…!’ அது வேண்டாங்க! என்றான்.
ஏம்ப்பா.. நீ போய் வாங்கினீனா, அந்த மாதிரி தாருக்கு அதிக வெலை சொல்லுவானுக .. வாங்கிக்கோ..!
‘இல்லீங்க! கல்யாணத்துக்கு தோரண வாசலில் கட்டினதுன்னா வேண்டாம்!’ என்றான் உறுதியாக.
‘எப்பா.., கல்யாண காரியத்துல கட்டினதுதானே? நல்ல விசேஷத்துக்குப் பயன் படுத்தினதுதானே?!’ கேட்டார் நெல்லையப்பன்.
‘இல்லேண்ணே! அது வேண்டாம்!’ என்றான் பூபாலன் உறுதியாக.
நெல்லையப்பனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நல்ல விலை தருவேனு சொன்னதுனால விலையைப் படிய வைக்க மறுக்கிறானோ? இவன் வேண்டானுட்டா, வேற யார்ட்ட தள்றது?!’ சிக்கலாச்ச்சே!’ குழம்பினார். சரிப்பா… நீ கொடுக்கற விலையைக் கொடு! பழகினவன். என்ன பண்றது ?!’ என்றார்.
‘அண்ணே…! நீங்க சும்மா கொடுத்தாலும் அது வேண்டாம்..! வேற யார்ட்டயும் கூட விக்காதீங்க! என்றான்.
நெல்லையப்பனுக்கு நெஞ்சில் ‘பகீர்!’ என்றது. என்னடா இவன்.. தனக்கு வேண்டாம்னா விட்டுட்டுப் போக வேண்டியதுதானே?! எதுக்கு வேற யார்ட்டயும் கொடுக்காதீங்கன்னு சொல்றான்?’ குழப்பம் அதிகமாச்சு!
‘ஏம்ப்பா.. எனக்கு நாலு காசு கிடைக்கறதுல்ல உனக்கு விருப்பமில்லையா? ஏன் யார்ட்டயும் விக்காதீங்கன்னு சொல்றே?’ கேட்டார்.
கல்யாணத்துக்கு வாங்கினதுங்கறீங்க!
அட, ஆமாப்பா.. நல்ல காரியத்துக்கு வாங்கினது!
வாசல்ல நிறுத்துனதுங்கறீங்க?
ஆட ஆமாம்ப்பா!.. ஆமாம்!
ஆயிரக்கணக்கானவங்க கல்யாணத்துக்கு வந்து போயிருப்பாங்க!
அட, கல்யாணம்னா ஆயிரம் பேர் வரத்தானே செய்வாங்க?!
அதான் சொல்றேன்! வேண்டாம்னு!’ என்றான் பூபாலன்.
புரியலையே?
இல்லண்ணே..! கல்யாணத்துக்கு வந்தவங்கல்ல நாலுபேரு நாலுவிதமான ஆளுங்களும் இருப்பாங்க.
நீ என்ன சொல்றே????
புரியலையா உங்களுக்கு?
நாலுபேரு.. நாலுவிதமானவங்கன்னா?
அதுல நல்லவனும் இருப்பான்.. பொறாமைக்காரனும் இருப்பான். ‘கண்ணு’ போட்டிருப்பானுக..! பொறமைக் கண் திருஷ்ட்டி பழத்துல பதிஞ்சிருக்கும்! அதை விலைக்கு வித்தா… வாங்குறவனுக்கு வாங்கிச் சப்பிடறவனுக்கு எதாவது ஆச்சுன்னா… அந்தப் பாவம் நம்மைச் சும்மா விடாது!’ என்றான்.
‘ஆச்சரியமாய் அவனைப் பார்த்தபடி ‘அப்ப என்ன பண்ணறதாம்?’
‘எதாவது ஏழை பாழைகளுக்கு இனமா தர்மமாக கொடுத்துடுங்க..! என்றான்.
‘ஏன்?’
தர்மத்துக்குப் பாவ புண்ணியமெல்லாம் கிடையாது.
காசுக்கு வித்தாத்தான் கஷ்டம் பாவமெல்லாம் ஒரு வியாபாரியாச் சொல்லலை உங்க விசுவாசியாச் சொல்றேன்!’ என்றான் உறுதியாக
பணம் என்னடா பணம் பணம்… குணம் தானடா நிரந்தரம்னு அவன் விலை குறைசு பழத்தை வாங்கிப் பாவம் சேர்க்காம பார்த்துட்டா மாதிரி, நம்மையும் பாவத்திலிருந்து காப்பாத்தினாமாதிரிப் பட்டது! நாம, பணத்தைச் சேர்க்க வேண்டாம்.. தர்மம் பண்ணிப் புண்ணியத்தையாவது சேர்ப்போம்!னு அவனுக்கொரு நன்றி சொல்லி, வீடு திரும்பினார் நெல்லையப்பன்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |