பணத்தைப் புதைத்த பாவையர்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 5
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இங்குக் கூறப்பெறுகிற நிகழ்ச்சி சிலஆண்டுகளுக்கு முன்புதான் நடந்தது. ஓர் ஊரிலே தாயும் மகளும் ஆன இரண்டு பெண்கள் பொருள் தேடிப் பாதுகாக்க. வேண்டும் என்று முடிவு செய்தார்கள். நிலத்தில் விளைந்த விளை பொருள்கள் ஆடு மாடுகள் வீட்டில் இருந்த தட்டுமுட்டுப் பொருள்கள் முதலிய கையில் கிடைத்தவற்றை யெல்லாம் விற்றுப் பணநோட்டாகச் செய்தார்கள். பத்துரூபா நோட்டுகளாக மூவாயிரம் ரூபா சேர்த்தார்கள்.
இப் பொருளை யாரிடத்திலும் கொடுத்து வைப்ப தற்கோ அல்லது பொருட்காப்பு நிலையத்தில் (பாங்கி) கொடுத்து வைப்பதற்கோ அவர்களுடைய உள்ளங் துணியவில்லை. வாங்குபவர்கள் எடுத்துக்கொண்டு ஏய்த்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி னார்கள். நோட்டுகளை ஒரு கள்ளிப் பெட்டியில் வைத்து வீட்டுக்குள் ஓரிடத்தில் புதைத்து வைத்து விட்டனர்.
ஐந்தாறு, திங்கள் சென்றன. புதைத்துள்ள நோட்டுகளை எடுத்து வெய்யிலில் காய வைத்துப் பிறகு புதைக்கலாம் என்று எண்ணினர். நிலத்தைத் தோண்டிப் பெட்டியைப் பார்த்தார்கள். பெட்டி நோட்டு முதலிய எல்லாவற்றையுங் கரையான் தின்று ஏப்பமிட்டு விட்டது.
தங்கள் பொருளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துத் தாயும் மகளும் கோவென்று கதறிப் புலம்பினர். அழுதாற் பயனென்ன? எவ்வளவோ தொல்லைப் பட்டுப் பட்டினியும் பசியுமாகக் கிடந்து தொகுத்த அப் பொருள் போனது போனதுதான்.
“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் -கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.”
(உரை.) பணத்தைப் பாடுபட்டுத் தேடி- பொருளை வருந்தி யுழைத்துச்சேர்த்து, புதைத்து வைத்து – உண்ணாமலும், தேடு அறஞ் செய்யாமலும் நிலத்திலே புதைத்து வைத்து, கெட்டமானி-ரே-நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர் களே, கேளுங்கள் – நான் கூறுவதைக் கேட்பீர்களாக, கூடு விட்டு – உடம்பினை விட்டு, ஆவிதான் போயின பின்பு – உயிர் நீங்கிய பிறகு, பாவிகாள்- தீவினையாளர்களே, அந்தப் பணம் – அந்தப் பொருளை, இங்கு ஆர் அனுபவிப்பார் – இவ்வுலகில் யார் அதனை நுகர்வார்கள்?
(கருத்து ) பொருளைத் தாமும் நுகர்ந்து அறவழிகளிலுஞ் செலவிட வேண்டும். புதைத்துவைக்கும் பொருள் வீணாப் போகும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026