பணக்காரி




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டு குடும்பங்களும் ஒரே ஊர் தான். என்றாலும், குழந்தையும் தாயும் ஒரு பக்கம்; புருஷன் ஒரு பக்கம். இமயமலைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தூரத்தில் இருந்தால் எப்படியோ அப்படித்தான் அந்தத் தம்பதிகள் வாழ்ந்தார்கள். வாழ்ந்தார்கள் என்று சொன்னால், என்ன அர்த்தம்? பிறந்து தொலைந்த கடனைத் தீர்த்துத்தானே ஆக வேண்டும்? அப்படிச் செய்தார்கள் என்று அர்த்தம் செய்துகொள்ளலாம்.

பெண்களுக்குச் சொத்து வேறு உண்டா? இருக்கத்தான் இருக்கலாமா? என்றாலும், குஞ்சிதம் பணக்காரி; பாலு ஏழை. பணக்காரக் குஞ்சிதம் உண்மையில் பணக்கார வீட்டுப் பெண்; அவ்வளவு தான். பாலுவுக்கும் குஞ்சிதத்துக்கும் கல்யாணம் நடந்து ஏழு வருஷமும், குழந்தை பிறந்து ஐந்து வருஷமும், சண்டை நடந்து மூன்று வருஷமும் ஆயின. சண்டை நிஜமாகவே புருஷனுக்கும் மனைவிக் கும் நடந்த சண்டை அல்ல; அவ்விதம் நடந்திருந்தால் தான், சமரசம் ஏற்பட்டு இரண்டு வருஷம் பதினொரு மாதம் இருபத்தொன்பது நாட்கள் ஆகியிருக்குமே.
அவர்கள் அப்படிப்பட்ட தம்பதிகளே என்பது இப்போது நன்றாகத் தெரிகிறது. புருஷன் வீட்டாருக்கும் மனைவி குடும்பத்தினருக்கும் நிகழ்ந்த சண்டை முற்றித் தம்பதிகளின் பிரிவில் முடிந்தது; சமாசாரம் இதுதான்.
குஞ்சிதம் தன் சண்டையைப்பற்றி, தோழி எவளிடமும் பேசியதில்லை; பாலு இந்த விஷயத்தில் இடித்து வைத்த புளி; பாக்கி விஷயத்தி லெல்லாம் மகா வாயாடி. ஆனால், குஞ்சிதத்தின் தாய் தந்தையும் சரி, பாலுவின் பெற்றோரும் சரி, இதைப் பற்றி எல்லோரிடமும் வெகு விஸ்தாரமாக வாதப் பிரதிவாதங்கள் செய்வார்கள். புது மாடு, பொழித் தகரார், காந்தி இயக்கம், மிளகாய்ப் பொடி என்ற சங்கதிகளைப்பற்றி அவர்கள் எவ்வளவு அநாயாச மாகவும் வேகமாகவும் பேசுவார்களோ அதே மாதிரிதான் செல்லும், இது சம்பந்தமான அவர்கள் பேச்சும். அந்தப் பேச்சை யெல்லாம் அப்படியே இங்கே ‘ரிக்கார்டு’ செய்ய வேண்டியதில்லை; ‘ஸாம்பிள்’ மாத்திரம் பார்க்கலாமே.
பாலுவின் அப்பா ஒரு தடவை சொன்னார்: ”அவன் நூறு வேலிக் குடித்தனக்காரனாக இருந்தால், அவன் வீட்டோடே. அந்தச் சிறுக்கி இனிமேல், என் வீட்டில் காலடி எடுத்து வைக்கக் கூடாது. எங்கேயோ ஒரு பிச்சைக்காரி எனக்கு அகப்பட மாட்டாளா? இந்த வருஷம் வேண்டாமே; அடுத்த வருஷம் ஒரு கால்கட்டுக் கட்டி விட்டால் போகிறது.
குஞ்சிதத்தின் தந்தை பேச்சின் போக்குக்கு ஒரு சின்ன உதாரணத்தைப் பாருங்கள்: “அவன் ஒரு குட்டிச் சுவர், அவனோடு வாழ நான் என் பெண்ணை விடமாட்டேன். படித்தானாம்! என்ன படிப்பு வேண்டியிருக்கிறது! அந்தக் கழுதை என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால், என் வீட்டில் வந்து வாழலாம். அதற்கு வேண்டுமானால் இடம் கொடுப்பேனே தவிர, அந்தக் கிராதகன் வீட்டுக்கு என் பெண்ணை அனுப்புகிற பேச்சு இனிமேல் கிடையாது…”
ஊரார் பேச்சின் தோரணை வேறு: “குஞ்சிதம் பணக்காரி. அந்த ‘ராங்கி’ இல்லாமல் போகுமா? பணக்காரப் பெண்ணைப் பாக்கிப் பெண் மாதிரி நடத்தப் போகுமா?”-“தகப்பனார் பணம் அவளுக்குத் தான் கிடைக்கப் போகிறது. இந்தப் புருஷன் இல்லாத போனால், என்ன? அவளுக்கு வேண்டிய தெல்லாம் தானே நடக்கிறது.”-“என்ன பணம் இருந்தென்ன? கண் நிறைந்த கணவன் இல்லாத வாழாவெட்டி வாழ்க்கை என்ன வாழ்க்கை?’-இப்படி யெல்லாம் ஊரில் உள்ளவர்கள் இரண்டு தரப்பும் பேசினார்கள். ஆனாலும், எல்லாரும் குஞ்சிதத்தின் பணத்தைச் சுற்றிச் சுற்றி மாத்திரம் கும்மியடிக்கத் தவறியதில்லை, தங்கள் பேச்சுக்களில் இந்தப் பணக்காரக் குஞ்சிதம் தனியே பிரிந்ததற்குக் காரணம் ‘ஒரு மூட்டை புளி’ விவகாரம்; அது எல்லாருக்குந் தெரிந்ததுதான்; என்றாலும் குஞ்சிதம் பணக்காரி என்பது ஊர் வம்பு.
இப்படியாக பாலுவும் குஞ்சிதமும் பிறந்து வளர்ந்து வாழும் கதை, ஊரிலுள்ளவருக்குச் சந்திக்கரை வம்பு; பெற்றோருக்குப் பிரமாதமான விவகாரம். ஆனால், அந்தத் தம்பதிகளுக்கு அது என்ன? அது யாருக்கும் தெரியாது: அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.
இந்தப் பூலோகத்தில் இருக்கும் கஷ்ட நஷ்டங் களோ, சுக துக்கங்களோ, அந்தச் சந்திரனுக்குத் தெரிகிறதா? பகலெல்லாம் கொளுத்து கொளுத் தென்று கொளுத்திற்று வெயில். அதே வெயிலை அந்த மந்திரவாதிச் சந்திரன் விழுங்கி, தன் எச்சிலைப் பூமிமீது உமிழலானான். மனிதர்கள் அதைக் குளிர் நிலவு என்று கொண்டாடலானார்கள்.
பெட்டிக்குள் வைத்திருந்த பட்டுப் புடைவைகள் வெளியே கிளம்பின; மெருகழியாது இருளில் ஒளித்துக் கிடந்த ஒட்டியாணமும், வைர ஒளியும், காசுமாலையும் சில வீடுகளில் மின்னலாயின. சக்தி யாநுசாரம் அவரவருக்கு இயன்ற அலங்காரங்களை அந்த அந்த வீட்டுப் பெண்கள் செய்துகொண்டார்கள். குஞ்சிதத்துக்கு மாத்திரம் சேலை இல்லையா, நகை இல்லையா, மலரும் சீப்பும் வாங்கக் காசுதான் இல்லையா? ஆனால், அவள் மாத்திரம் வழக்கம் போலவே இருந்தாள்.
ஊரெல்லாம், ஸ்திரீ புருஷர், குஞ்சு குழந்தைகள் எல்லாருமாகச் சேர்ந்து ஆற்றங்கரைக்குப் போனார்கள். வருஷத்துக்கு ஒரு நாள் அல்லவா? இருப்பது பத்து வீடு. ஆகையால் எல்லாரும் ஜண்டை யாக, நிலாச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டார்கள்; வேறொன்றுக்கும் அல்ல.
பத்து வீடும் ஒன்றுக்கொன்று ஏதோ தொட்டும் நெருங்கியும் சொந்தம் உடையவை. அந்த ஊரே எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று’ என்று அடுத்த ஊர்க் காரர் சொல்லுவதுண்டு; அது நிஜந்தான்.
ஆற்றங்கரை என்று சொல்லுவது உள்ளூர்ச் சம்பிரதாயம். உண்மையில் அது ஒரு சின்னஞ் சிறு வாய்க்கால்தான். ஆனால், ஓர் ஆள் ‘புருஷம்’ ஆழம் உடையது; படித்துறை ஒன்றும் இல்லை. எல்லா ஊர் ஆற்றங்கரையையும்போல அல்ல; இரு கரையும் கற்பாறை போன்ற சுக்காங் தரை. ஜலத்தின் வேகம் கரைத்து வடிகட்டிய பொடிமணல் இரு பக்கத்திலும் தண்ணீரடியிலும் இல்லாமல் போகுமா? அது உண்டு.
வழக்கமான துறையில், மேட்டிலிருந்து வெகு வேகமாகத் தண்ணீர் பாய்ந்து விழுந்து சலசல வென்று சப்தித்துக்கொண்டிருக்கிறது. அந்த, ஊருக்கு அதுதான் பெரிய நீர்வீழ்ச்சி. அந்த இடம் அதிக இழுப்புடையது. ஸ்திரீகளும், குழந்தைகளும் முழங்காலுக்குமேல் இறங்க மாட்டார்கள்.
பத்து வீட்டுக்காரர்களும் கரைமீது உட்கார்ந்து கொண்டும் தண்ணீரில் நின்றுகொண்டும் நாநாவித உண்டிவகைகளை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இடையிடையே கலகலப்பான பேச்சு. ஜலம். கரை, ஈ, எறும்பு, மனிதர், குழந்தைகள் எல்லார்மீதும் ஒரே தினுசாகத் தனது நிஷ்களங்க மான நிலாவைச் சந்திரன் வீசிக்கொண்டிருந்தான்.
கரையில், ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தாள் குஞ்சிதம். அவள் குழந்தை மங்களம் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண் டிருந்தாள். பாலு வேறோர் L பக்கமாகத் தண்ணீரில் நின்றுகொண் டிருந்தான். பாலுவின் அருமையான நாய்க்குட்டி ஒவ்வொரு குழந்தையிடமும் ஓடி ஓடிக் கொஞ்சி விளையாடிற்று.
அந்த நாய்க்குட்டிக்கு இந்த நிலாவில் யாருடனாவது கொஞ்சம் அதிக சிநேகம் செய்து கொள்ள வேண்டுமென்று ஆசையுண்டாயிற்றோ என்னவோ தெரியவில்லை. குழந்தை மங்களத்தைச் சுற்றிச் சுற்றி அதிகமாகத் துள்ளிக் குதிக்கலாயிற்று. அவள் பாவாடையைப் பிடித்துக் கடிக்கும். வாலை வாலை ஆட்டும். மென்று விழுங்கிய மெதுவான உறுமலும் கனைப்பும் உண்டு. இத்தனையும் அந்த மங்களத்துக்கு வேண்டியிருந்தது. அந்த நாய்க் குட்டியுடன் அவள் ஓடியாடித் துள்ளிக் குதித்துச் சிரித்து விளையாடலானாள்.
“ஏ, நாயே! இங்கே வா” என்று திரும்பத் திரும்பத் தன் குழந்தையைக் குஞ்சிதம் கூப்பிட்டாள்.
“ராஜீ! ராஜீ! வாம்மா’ என்று பாலு தன் நாய்க்குட்டியைப் பல தடவை கூப்பிட்டான்.
நாய்க் குட்டியோ மங்களமோ,குஞ்சிதத்தையோ பாலுவையோ லட்சியம் செய்யாமல் விளையாடிக் கொண்டிருந்தன.
சுற்று நேரத்துக்கெல்லாம், அது போய்த் தொலைகிறது என்று இருவரும் – குஞ்சிதமும் பாலுவும் – சேர்ந்தாற்போல அலுத்துக் கொண்டு பேசாமல் இருந்தார்கள்.
அரை நாழிகை கழித்து, எல்லாரும் சந்தனம் பூசித் தாம்பூலம் தரித்துக்கொண்டபோது, வள் வள் என்று ராஜி என்ற அந்த நாய்க்குட்டி குலைக்கலாயிற்று. “சனியன்! குழந்தையை எங்கேயாவது கடித்துவிடப்போகிறதே’ என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள் குஞ்சிதம். மங்களத்தைக் காணவில்லை. “ஐயோ! குழந்தையைக் காணோமே?” என்று உரத்த குரலில் ஏங்கிக் கொண்டே நாலு திசையும் பார்த்தாள்.
இதனிடையில் தன்னைப் பார்த்துக் குலைத்துத் தன் துணியைப் பிடித்து நாய் இழுப்பதைக் கண்ட பாலுவுக்குத் திடீரென்று என்னவோ ஓர் எண்ணம் உண்டாயிற்று. அவன் தண்ணீரில் குதித்து முழுகினான். நாயும் அவனுடன் குதித்து நீஞ்சியது.
“ஐயோ, மங்களம்! மங்களம்! அடியம்மா, எனக்கு என்ன கதியடி அம்மா!-நான் வாழ்ந்த வாழ்வில் நீயுமா மண்ணைப் போட வேண்டும்?” என்று குஞ்சிதம் என்ன என்னவோ கதறத்தொடங்கினாள்.
இடையில் நாய்க்குட்டி ஒரு துணியைக் கெளவிக் கொண்டு, தண்ணீரில் தத்தளித்தது. அதுதான் மங்களத்தின் பாவாடை. பாலு வெகு வேகமாகக் கைம்மாறு போட்டு நாயின் அருகே சென்றான். மங்களம் அகப்பட்டு விட்டாள்.
அவன் கரைக்கு வந்து சேர்ந்ததும், அவனைச் சூழ எல்லாரும் காக்காய்க் கூட்டம் மாதிரி கத்திக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
உடம்பு துவண்டு, கண் பிதுங்கி, பாலுவின் கை களில் வளைந்து கிடந்த மங்களத்தைப் பார்த்த குஞ்சிதம், “மங்களம்! மங்களம்!” என்று மறுபடியும் கத்தினாள். அந்தத் தாயை அப்போது உற்றுப் பார்த்தான் பாலு. அவன் உடம்பு வெலவெலத்துப் போயிற்று.
மங்களத்துக்கு அப்படி ஒன்றும் ஆபத்தில்லை. ஒரு பெரியவர் கையில் வைத்துக்கொண்டு சிறிது சக்கரமாகச் சுற்றினார். கையைக் காலை ஏதோ சிறிது அசைத்தார். பிறகு உடம்பில் சூடு உண்டாகத் தேய்த்தார். எப்படியோ ஏதேதோ சிகிச்சை செய்த பிறகு, மங்களத்துக்கு ஸ்மரணை வந்தது; ”அம்மா, நாய்க்குட்டி” என்று கத்தினாள் மங்களம்.
சற்று நேரம் வரையில் எல்லாம் அல்லோலகல் லோலப்பட் டிருந்தது. இப்போது எல்லாரும் முகம் மலர்ந்தார்கள். வீட்டுக்கும் புறப்பட்டார்கள்.
பாலு சற்று எல்லாருக்கும் பிந்தி நடந்தான். அவனுக்குப் பின்னே நாய்க்குட்டி, மங்களத்தை மார்பில் அணைத்துக் கொண்டு, நாய்க்குட்டியின் பக்கத்திலே நடந்தாள் குஞ்சிதம். ஏனென்றால் மங்களம் இன்னும் நாய்க்குட்டி ஜபத்தை விடவில்லை.
பாலுவின் வீடு வந்து சேர்ந்தது. பாலுவின் பெற்றோரும் அந்த வீட்டைச் சேர்ந்த மற்றவரும் உள்ளே நுழைந்தார்கள். பாலு தயங்கித் தயங்கி வெளியே நின்றான்.
குஞ்சிதம் அங்கே வந்தாள். அவள் கால்கள் தள்ளாடின. இரண்டொரு கேவலுக்கு இடையே, “அம்மா, நாய்க்குட்டி” என்றாள் மங்களம்.
நாய்க்குட்டி வாலை ஆட்டிக்கொண்டு, குஞ்சிதத் தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
மங்களம் கீழே இறங்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள்.
கீழிறங்கிய மங்களம், நாய்க்குட்டி ராஜியின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டாள்.
இரண்டொரு நிமிஷ நேரம் குஞ்சிதமும் பாலுவும் அந்த இரண்டு குழந்தைகளை யும் இமை கொட்டாமல் பார்த்தார்கள். பிறகு ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நேருக்கு நேரே நோக்கி நின்றார்கள்.
குஞ்சிதத்தின் கண்களில் கண்ணீரும், தீப் பொறியும் சேர்ந்தாற்போல் குடியேறி விட்டனபோல் தோன்றிற்று.
‘இந்த-இந்த – நாய்க்குட்டியின்” என்று ஆரம்பித்தவள் தலையை மறுபுறும் திருப்பி, “இதன் இருதயம்கூட மனிதர்களுக்கு இருக்கவில்லை” என்று முடித்தாள்.
”குஞ்சிதம்!” என்று திடமான, ஆனால் மிக மெல்லிய, குரலில் அழைத்த பாலு, “நீ பணக்காரி; உனக்குப் பணம் வேண்டும். நான் ஏழை. என்றான்; முடிக்கவில்லை.
“மனிதர்களுக்குக் கண்ணுமா இல்லாது போக வேண்டும்? என்னைப் பார்த்தால் பணக்காரியாகவா தோன்றுகிறது?” என்று இரைந்த குரலில் சொன்னாள் குஞ்சிதம். அவள்
ஆடையாபரண பூஷிதையாக இருக்கவில்லை என்பது யாருக்கும் தெரியும்.
பாலு பேசாமல் நின்றான்.
குஞ்சிதம் குனிந்து மங்களத்தை நோக்கி, “வா, மங்களம் – இல்லை. இங்கேயே நீ இரு. நான் தான் பணக்காரி; நீயுமா பணக்காரி? – நீ ஏழை; ஏழையாக வாழவேண்டும். எனக்குப் பணம் இருக்கிறது; காசு-இருக்கிறது. அப்புறம் வாழ்வு எதற்கு?” என்று சொல்லி, “வாழ்வே வேண்டியதில்லை” என்று கம்பீரமாகத் திரும்பினாள்.
பாலு தன்னை அறியாமலே குஞ்சிதத்தின் கையைப் பற்றினான்.
“ஐயோ! இந்த மனிதர்களுக்கு…” என்றான் பாலு. அதற்குமேல் ஒன்றும் சொல்லத் தெரியாமல் பெருமூச்சு விட்டான்.
குஞ்சிதம் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டாள்.
ராஜியும் மங்களமும் மாத்திரம், – அந்த இரண்டு குழந்தைகளும் – ஆற்றங்கரையில் செய்தது போலவே, இங்கேயும் குதித்து மகிழ்ந்து விளையாடத் தொடங்கி விட்டன.
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க... |