பட்டினித் தினங்கள்!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 9
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நவராத்திரி நோன்பின் எட்டாம் நாள். பகல் 10மணி கூட ஆகவில்லை. செஞ்சொலியின் வயிற்றைப் பசி பிடுங்கி எடுத்துப் பிய்த்துத் தின்ன, உடலெல்லாம் அசதியுடன் பதற, கால்கள் சோர்ந்து மடிய, மூளைகனன்று தலை சுற்ற, மாடிப்படிகளில் தள்ளாடி இறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
உலக சமாதானத்துக்காக பொருளாதார விடிவுக்காக, செளக்கியத்திற்காக மொத்தத்தில் மனித இனத்தின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றும் ஐ. நா. சபை பற்றிய புத்தகமொன்று அவள் கையில் இருந்தது.
பசித்தீ இத்தனை கொடியதாக எவருமே தாங்க ஆற்றாத இத்தனை கொடூரமானதாக இருக்குமென்று இது நாள் வரை அவளுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் வாய்ப்பை, நிர்ப்பந்தத்தை குடும்பத்தின் செழித்த செல்வ நிலை அவளுக்கு வைக்கவில்லை.
‘பசிக் கொடுமையை அனுபவித்தறியாத என் போன்றவர்களே மலிந்த உலகத்தில் பச்சிளங் குழந்தைகள், பிணியாளர்கள், முதியவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பட்டினியால் துடிதுடித்துச் செத்து மடிவதில் வியப்பே இல்லை. ஐயோ! பசி எத்தனை கொடூரமானது. இந்த உண்மையை அனுபவ பூர் வமாக உலகில் ஒவ்வொருவரும் அறிந்தால் பசித்தவர்க்கு உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் பணியை ஒரு முகமாகப் புரியத்தவறாது உலகம்.
எனவே உலகில் சகலரும் பசியின் கொடுமையை அநுபவ பூர்வமாக அறியவேண்டும். மனித இனத்தின் நலனுக்காக மனிதாபிமானத்தோடு உழைக்கும் ஐ. நா. சபை ஆண்டு தோறும் ஓரிரு தினங்களைப் பட்டினித் தினங்களாக உலக முழுமையும் அனுட்டிக்கும் வண்ணம், உலக நாடுகளைச் சட்டமியற்றும்படி கோரவேண்டும்.
இம்முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டுழைத்து வெற்றி பெற வைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை’ என்று எண்ணிக்கொண்டு. கருணைக் கடலான அன்னை பராசக்தி பேரிலான நோன்பின் மகத்துவத்தை வியந்தபடி நிதானமாகத் திரும்பி தன் படிப்பறை நோக்கி மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள் செஞ்சொலி.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
நிலவு பேசியது…!
எஸ்.சசிகலா
October 18, 2026
நிஜ மரமும் பண மரமும்
இளையவேணி கிருஷ்ணா
October 18, 2026
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026