கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 3,046 
 
 

(1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம் – 10

“‘ராதா’ என்று சொல்லிப்பாரு; அதை திரும்பிப் படித்துப்பாரு ‘தாரா’ என்று வரும்” என்றேன்.

சொல்விளையாட்டா வேண்டிக் கிடக்குது என்று கூறித் தன் விளையாட்டைத் தொடங்கினாள்.

வாழ்க்கைச் சுவையில் ஒரு சுழிப்பு நிலை ஏற்பட்டு விடுகிறது.சந்தோஷத்தை உண்டாக்க முடியாத அலுப்பு சில சமயம் மனை வாழ்க்கையில் ஏற்பட்டு விடுகிறது. மாற்றம் இல்லாத வாழ்க்கை; கடமைகளைத் தவிர வேறு உடைமைகளைக் காண முடியாத கட்டம்.

அவள் எனக்கு மணற்கேணியாக இருந்தாள். இப்பொழுது வறட்சிநிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் பையன். அவனுக்குக் கலியாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை: வீடு என்றால் ஏதாவது புது நிகழ்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். காலா காலத்திலே அவனுக்கு ஒரு கலியாணம் பண்ணி வைக்க வேண்டும் என்ற ஆசை; அது நிறைவேறாத நிராசை; அதைவிட என்னிடம் எது பேசுவது என்று தெரியாத ஒரு சூழ்நிலை; எப்பொழுதும் ‘கடுகடுப்பு’. அன்பை மறந்து பல ஆண்டும் ஆகிவிட்டது போன்ற ஒரு வெறுப்பு. ஆசை முகம் மறந்து விட்ட துவேஷ நிலை.

மனைவி என்றால் ஏதாவது இதமாகப் பேசலாம் என்று போவேன்; மிகவும் பதமாகத்தான் பேசவேண்டி இருந்தது; அவள் கதமாகவே இருந்தாள். இது நிதமான நிகழ்ச்சியாக இருக்கும். அதனால் வீட்டில் எனக்கு இருப்புக் கொள்வது இல்லை.

எனக்கு எப்பொழுதும் ஏதாவது பேச வேண்டும்; வெறும் வாய் எனக்கும் பிடிக்காது; அவலை மென்று கொண்டே இருக்கவேண்டும்; அதனைக் கிண்டல் என்று சொன்னாலும் சரி; கிசுகிசுப்பு என்று முசுப்பினாலும் சரி; அளப்பு என்று நிறுவினாலும் சரி; என் நா அசைந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் விரைவில் தாயுமானவர் ஆகிவிடுகின்றனர்; உண்பது உடுத்துவது அல்லாமல் வேறு ஒன்றும் அறியாத நிலை. அந்த நிலைக்கு நான் செல்ல விரும்பவில்லை.

பண்ணையார் இல்லம் மணி அடித்தால் பள்ளிப் பிள்ளைகள் துள்ளி வருவது போல் ஏதோ இரைச்சலைப் பெற்றிருக்கும். பிறை வயசு பெண்; அவளிடம் வாய்தா வாங்கிக் கொண்டு தான் பேச முடியும்; தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்க முடியாது. அவளை ஏதாவது தூண்டி விட வேண்டும். தொடு மணற் கேணிபோல அவள் புதுமைக் கருத்துக்கள் என்னைச் சிந்திக்க வைக்கும். அவளை அதிகம் பார்ப்பது இல்லை; ஸ்கூட்டர் அவளை அலைக்கழிக்கும்.

பண்ணையாரைப் பற்றிப் புதிய வதந்தி பரவி ஒலித்தது. இன்றைய திரைப்பட மையப் பாத்திரமாக இயங்குகிறார் என்று கேள்விப்பட்டேன். கடத்தலில் தடம் புரண்டு அடிக்கடி இவர் வெளிநாடு சுற்றி வருவதாகக் கேள்வி. போதைப் பொருளில் அவர் ஏதோ அவர் ஏதோ சம்பாதிப்பதாகக் கேள்வி. அதை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவர் அடிக்கடி சைனா சென்று வருவது மட்டும் உறுதி. கேட்டால் அங்கே ஒரு நூல் நிலையம் இருக்கிறதாம். இங்கே கிடைக்காத அதியற்புதமான வானசாத்திர நூல்களும் கணித நூல்களும் உள்ளனவாம்; அது கூட ஒரு காலத்தில் இங்கு வந்த சீன யாத்திரிகர் இவான் சுவாங்க் என்பவர் எடுத்துச் சென்றாராம். அவற்றை வைத்துக் கொண்டு ஜோசியத்தில் அவர்கள் மிகவும் முன்னேறி இருக்கிறார்களாம். இதுவரை அவர்கள் வரவழைத்து இவர் தேவையைக் கேட்டு அறிந்து ஒரு புதுக் கருவி படைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இது அவர் சொன்ன தகவல்.

அதைக் கொண்டு ஒருவரின் ஆயுளைக் கணித்து அவர் என்று எப்பொழுது மரணம் அடைவார் என்று சரியாகச் சொல்லமுடியும் என்று கூறுகிறார்.

“அது எப்படி முடியும்?” என்று கேட்டேன்.

“ஒருவன் பொய் சொல்வதும் கதை அளப்பதும் கண்டு பிடிக்கும் கருவி இப்பொழுது இல்லையா! அது போன்றது” என்று கூறுகிறார்.

“கெட்டிக்காரனாக இருந்தால் அந்தக் கருவியையும் ஏமாற்ற முடியும். சொன்னதை விடாமல் சாதித்தால் அது மெய் ஆகிவிடுகிறது” என்றேன்.

“கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்கும் திரைக் கருவி வந்து இருக்கிறதே” என்றார்.

“எக்ஸ்ரே எடுப்பது போன்ற எளிய கருவி அது; இது எப்படி முடியும்?” என்று கேட்டேன்.

இது கம்ப்யூட்டர் யுகம்; அதற்கு வேண்டிய செய்திகளைத் தந்தால் அது உடனே முடிவு கூறிவிடுமாம். Calculator போன்ற கருவிஅது.

ஒரு மனிதரின் மருத்துவ அறிக்கை, பழக்க வழக்கங்கள், வயது; தரும சிந்தனை; பிக்கல் பிடுங்கல்; மனைவிகள்; துணைவிகள்; பாலியல் இவற்றைக் குறித்துக் கொடுத்தால் அது கூட்டிக் கழித்து வாழ் நாள் இது என்று காட்டிவிடும். விஞ்ஞான வளர்ச்சி இது” என்றார்.

“இதன் விலை?”

“இருபது லட்சம்”

“இவ்வளவு பணம் கொடுத்து வாங்கி என்ன பயன்?”

“என் கடைசி மூச்சு எப்பொழுது நிற்கும் என்று கண்டுபிடித்து விடலாம்.”

“ஒரு கயிறு கட்டிச் சுருக்குப் போட்டால் உடனே நின்றுவிடுகிறது” என்று கூறினேன்.

“என் சாதகம்’ அப்படி; என் மகனுக்கு மணமாகிக் குழந்தை பிறந்த இரண்டாம் ஆண்டு நான் இறுதிப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அது உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.

“இதற்கு இருபது லட்சமா?”

“அது இங்கே வரட்டும்; ஓகோ என்று உயர்ந்து விடலாம்; சதாகூட்டம்தான். கிழம் கட்டைகள் எல்லாம் இங்கு வந்து கூடாரம் அடிக்கும். நீ டிக்கட்டு போட்டு பிளாக்கில் விற்கலாம். உனக்கும் காசு சேர்க்க வழி பிறக்கும்” என்று கூறினார்.

“முக்கியமாக ஆயுள் இன்சூரன்சு கம்பெனியில் இருந்து வருவார்கள்; நல்ல கிராக்கி. நீ போகப் போகப் பார்; என்னைப் பிடிக்க முடியாது” என்று கூறுகிறார்.

எனக்கும் அவர் வியாதி ஒட்டிக் கொண்டது. என் மனைவியிடம் பேச்சு வார்த்தை இல்லை. இனிமேல் நான் இருந்து என்ன வாரிக்கொள்ளப் போகிறேன். தெரிந்து கொண்டால் சட்டுபுட்டுன்னு வேலுவுக்கு ஒரு கலியாணம் பண்ணிட்டு சங்கரா என்று சொல்லி எங்காவது விழுந்து கிடக்கலாம்.

“நல்ல கருவிதான்” என்றேன்.

“ஆயுள் நீட்டிப்புக்கு வழி உண்டா” என்றேன்.

“உண்டு. சுடச்சுட அவரவர் மூத்திரம் காலையில் எழுந்ததும் குடிக்கவேண்டும்” என்றார்.

“இது எங்கே சொல்லி இருக்கிறது?”

“சித்தர்கள் அப்படிக் கூறி இருக்கிறார்கள்.”

“வைத்தியர்கள் என்ன சொல்கிறார்கள்?”

“அவர்கள் வாய் திறப்பதில்லை” என்றார்.

“ஏன்?”

“பெரிய மனிதர்கள் பலர் மனம் புண்படும் என்பதால்” என்றார்.

“யோகிகள் எப்படிச் சாகிறார்கள் தெரியுமா?” என்று கேட்டேன்.

“மண்டை வெடித்து” என்றார்.

“அதாவது உள்ளே இருக்கும் குண்டலினி. அதை எழுப்பி மேலே நெற்றி நடுவே கொண்டு செல்வார்கள். பின் அவர்கள் கபாலம் வெடித்து உயிர் வெளியேறுகிறது.”

“அது எங்கே போகிறது?”

“இறைவனோடு இரண்டறக் கலக்கிறது” என்றார்.

“இராம கிருஷ்ண பரமஹம்சர் எப்படி மரணம் அடைந்தார் தெரியுமா?”

“நெஞ்சில் புண்.”

“ரமண மகரிஷி”

“கான்சர்.”

“விவேகானந்தர்?”

“அவரும் அப்படித்தான் என்று கூறுகிறார்கள்.”

“சிந்திக்கவேண்டியது” என்றேன்.

“சித்தர்கள் சிலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்கள்” என்றார்.

“கி.பி. இரண்டாயிரம் வருகிறது; இரண்டாயிரம் ஆண்டுகள் மனிதன் சாதித்தவை பல; தனி மனிதன் அல்ல; மனிதன் அவர்கள் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்து சாதித்தது என்ன?”

“மரணத்தை வென்று இருக்கிறார்கள்.”

“வெல்லவில்லை; தள்ளிப் போட்டு வந்திருக்கிறார்கள்.”

“அதுவும் ஒரு சாதனை தானே.”

“அவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது சாதனை அல்ல; அவர் எவற்றைச் செய்தார்; செய்தவை யாவை? அதுதான் கணக்கு வரும்” என்றேன்.

“உங்களுக்கு இந்தக் குறள் தெரியுமா?”

“தோன்றில் புகழொடு தோன்றுக; அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

“நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்தியுங்கள், செயல்படுங்கள்; எத்தனை நாள் வாழப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தேன்.

அவர் கேட்பதாக இல்லை.

அத்தியாயம் – 11

வெளியூர் மாற்றப்பட்ட என் மகன் அடிக்கடி பணம் அனுப்பி வருகிறான். அதனால் வீட்டில் உபரிப் பணம் அபரிமிதமாகச் சேர்கிறது. காசும் பணமும் சேர்கின்றன. ஆசை மகன் அவன் ஒருவன்தான்; அதனால் அவனுக்கு ஒரு கால் கட்டுப் போடவேண்டும் என்று மருத்துவர்கள் நாங்கள் முடிவு செய்கிறோம்; அவன் உள்கட்டு உள்கட்டு என்ன என்ன என்று எங்களுக்கு எதுவும் பட்டென்று சொல்வது இல்லை. எந்தப் பெண் சொன்னாலும் அது ஏற்ற பெண் அல்ல என்று மறுத்துக்கொண்டே வருகிறான்.

எனக்கு ஒரு புதிய ஆசை; பிறை ஏன் என் வீட்டு மகா லட்சுமியாக வரக்கூடாது: மருமகள் என்று சொல்லத் தக்க அரிய குணங்கள் அவளிடம் வேண்டிய அளவு இருக்கின்றன என்பதில் தெளிவான எண்ண ஓட்டம் என்னுள் ஓடிக் கொண்டிருக்கிறது.

என்னுடைய வீட்டுக்காரிக்கு அலையோசை வேறு எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிறது! அவள் படித்த பெண்; குடித்தனத்துக்கு ஆகாள்; தடித்தனம் இருக்கும் என்று மடத்தனமாக எண்ணுகிறாள். நிறம் இல்லை; அதனால் நம் தரத்துக்கு ஆகாள்; நிறம் மா; அது போதுமா என்று கேட்பாள்.

நிறத்தில் அவளுக்கு ஒரு வெறி இருந்தது. அது இந்த நாட்டின் வெறி; அதில் அவள் விதி விலக்கு அல்ல.

உன்னுடைய மகன் என்ன மன்மதனா? என்று கேட்டேன்.

“கருப்பு நிறம் தான்; ஆனால் விருப்பு விருப்பு அழகு அவனிடம் உள்ளது; உயரம்; அவனுக்குக் கியூவில் நிற்க அவன் வியூவில் பல பேர் இருக்கிறார்கள். பிறை படித்தவள்; அவளோடு பழகியவர் பலர் இருப்பார்கள்; அது மட்டும் அல்ல. முத்து என்பவன் யாரோ அவளுக்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான்” என்றாள்.

“தொலைபேசி வசதி இல்லை; அதனால் எழுதிக் கொண்டிருப்பார்கள்” என்றேன்.

“அலை பாயும் வயசு. அடுக்கடுக்காக எழுதுகிறார்கள்” என்றாள்.

“அவர்கள் நட்பு மலையினும் மாணப் பெரிது ஆகி விட வாய்ப்பு உள்ளது” என்றேன்.

“எழுதுவது பெரிது அல்ல. பிறகு அவன் அச்சிட்டு அவளை நச்சரிப்பான்” என்றாள்.

“இது கதை; அதைக் கேட்க நமக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்றேன்.

“அவள் வாழ்க்கையை மாசாக்குவானே” என்றாள்.

வேலுவுக்குப் பெண் கொடுப்பதில் சிலர் தயங்கி வருவதைச் சுட்டிக் காட்டினேன். ஊர் ஊராக மாற்றிக் கொண்டு வரும் அவன் பணி நிலை அவனுக்கு இடையூறாக இருப்பதைச் சுட்டிக் காட்டினேன்.

“இன்று டெல்லி பம்பாய் என்று போகத் தயாராக இருக்கிறார்கள். அவன் இருப்பது தர்மபுரிதானே?”

“தருமனுக்கு உரிய புரிதான்; எந்தத் திரௌபதியும் துணியமாட்டேன் என்கிறார்களே.”

“காரணம்?” என்று கேட்டாள்.

“இது மெட்ரோ சேனல்; ஸ்டார் டி.வி. அவை அங்குப் பரவவில்லையே; மாமியார் இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை; மெட்ரோ இல்லாத வீட்டில் அடி எடுத்து வைக்க அவர்கள் வலது கால் இடம் அளிக்க வில்லையே” என்று சுட்டிக்காட்டினேன்.

இப்படி அவனுக்கு உரிய தர்ம சங்கடங்களை எடுத்துப் பேசி அதைப் பொருட்படுத்தாதவள் பிறை தான் என்று எடுத்துச் சொன்னேன்.

பிறை என்றுமே பிறையாக இருப்பது இல்லை; அது முழுமதியாக வளரும் என்றேன். அவள் படித்தவள்; பணம் படைப்பாள் என்று சுட்டிக் காட்டினேன்.

எங்கள் பேச்சுக்கு இடைவெளி ஏற்படுத்த என் பழைய நண்பன் இளையராஜா வந்து சேர்ந்தான்.

“ஹல்லோ ராஜா” என்று வரவேற்றேன்.

“பையனுக்குக் கலியாணம்” என்று சொல்லிப் பையில் நிறைய வைத்திருந்த அழைப்பிதழ்களில் ஒன்றை எடுத்து என் கையில் வைத்தான்.

“எப்படிக் கலியாணம் ஏற்பாடு ஆயிற்று? முன்பின் உறவா?”

“காதல் கலியாணம்” என்றான்.

அதைத் தெரிந்துகொள்ள ஆவேசம் ஏற்பட்டது.

“எப்படி?” என்றேன்.

“என் பையன் தவறாமல் எந்தப் படம் வந்தாலும் முதல் காட்சிக்குப் போவான்; முட்டி முரண்டி எப்படியாவது போய்ப்பார்த்து விட்டு வருவான்; அன்று டிக்கட்டு கிடைக்கவில்லை. தன் ஆர்வமும் முனைப்பும் களத்தில் போட்டுவிட்டு வெறுங்கையானாக வீடு திரும்புகிறான்; அப்பொழுது இந்தப் பெண் தான் வாங்கி வைத்த டிக்கட்டை அவனுக்குத் தந்து ‘போய் வா வீரனே’ என்று அனுப்பி வைத்தாள். காலத்தால் செய்த உதவி என்பதால் அவளை மறக்கவில்லை. அவளையே அவன் தேர்ந்து எடுத்து விட்டான்” என்று சுருக்கமாகக் கூறினான்.

“அப்படித்தான் கூடும் கலியாணம் எல்லாம்; நாம்: எதிர்பார்ப்பது போல் நடப்பதில்லை” என்று வேற்றுப் பொருள் வைப்பு வைத்துப் பேசினேன்.

“கலியாணத்துக்குக் கட்டாயம் வரவேண்டும்” என்றார்.

அந்த அனுபவம் எங்களைத் தீவிரப்படுத்தியது; அப்படியே விட்டு வைத்தால் இவன் யாராவது ஒருத்திக்கு டிக்கட்டு வாங்கிக்கொடுத்து உதவி செய்வான் என்று என் மகனைப்பற்றி அறிவிப்புத் தந்தாள் அவனைப் பெற்ற தாய்.

அவர் சென்றதும் எதிர்பாராதபடி என் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது.

பிரித்துப் பார்க்கிறேன்; அதில் பத்துக் கட்டளைகள் இருக்கின்றன.

“இந்தக் கடிதம் வந்த பத்தாம் நாள் உமக்கு அதிருஷ்ட தேவதை வந்து சேர்வாள் தபால் கடிதம் போல; ஆனால் ஒன்று நீ இதைப் பத்து நகல்கள் உன் கைப்பட எடுத்துப் பத்துப் பேருக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாவிட்டால் அஷ்டமத்துச் சரியன் உன்னை வந்து அடைக்கலம் புகும்.”

என்ன செய்வது? இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றாலும் ‘ரிஸ்க்’ எடுத்துக் கொள்ள என் மனைவி விரும்பவில்லை. பத்துக் கடிதங்கள் தானே! எழுதிவிடலாம். அதிருஷ்டம் வராவிட்டாலும் ஆபத்துக்கள் வராமல் தடுக்கலாம் என்று அறிவுரை கூறுகிறாள்.

அந்தப் பணியை அவளுக்கே விட்டு விட்டு அவளிடம் இருந்து தப்பித்து வெறியேறினேன்.

அத்தியாயம் – 12

பண்ணையார் இல்லம் எனக்குப் பொழுது போக்கு இடம்; அவரிடம் ஏதாவது பேசுவேன்; இல்லாவிட்டாலும் சும்மா இருப்பேன். ஜோசியம் பார்க்கிறவர்கள் வருவதும் அவர்களுக்கு இவர் ஆறுதல் கூறுவதும் மாறுதலாக இருந்தன.

அவர் மேசைமேல் வார இதழ் ஒரு ஓரத்தில் இருந்தது; அட்டைப் படத்தில் ‘தாடிக்காரரின் ‘காதல்’ என்று போட்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை, என் நண்பன் எனக்கு அளித்த அழைப்பிதழ், இந்தத் திருமணம்தான்.

அதில் கவர் ஸ்டோரி உள்ளே தரப்பட்டிருந்தது. அவன் சொன்னது.

“நான் வழக்கமாக அந்தத் தியேட்டருக்குச் செல்வேன்; புதுப்படம் முதல் காட்சிக்கு முந்திக் கொள்வேன்; பெண்கள் வரிசையில் அவள் நின்று கொண்டு கைநீட்டுவாள்; வழக்கமாகப் பார்த்ததால் எங்களுக்குள் எங்களை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அது ஒரு புதிய வார்ப்பாக அமைந்து விட்டது. அவள் தான் வைத்திருந்த டிக்கட்டை எனக்குத் தந்தாள். எனக்கு அது மகத்தான தியாகம் என்று கொண்டேன். பணம்கொடுத்து விடலாம்; தான் பிடித்துக் கொள்ளும் குடையைத் தந்து விடலாம். தனக்கு என்று வாங்கி வைத்த டிக்கட்டைத் தருகிறாள் என்றால் அவள் தயாளகுணம் என்னைக் கவர்ந்து விட்டது. அவளுக்கும் என்னைப் பிடித்துவிட்டது” என்று கூறி இருந்தாள்.

“அவர் என்னைப் பார்த்தது முதல் என் மனம் என்னிடம் இல்லை; அவர் முகவரி தேடிக் கண்டு பிடித்துச் சொத்து சுகம் இவற்றை எல்லாம் தெளிவுபடுத்திக் கொண்டு அந்தக் குடிக்கு அவர் ஒரே மகன் ஒரே வாரிசு என்பதை உறுதி செய்து கொண்டு என் மனச் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

அவரை ஞானியாக ஆக்கிவிடாமல் போணியாக ஆக்குவேன் என்பதில் எனக்கு உறுதி இருக்கிறது” என்று அவள் அந்த இதழில் சொல்லி இருந்தாள்.

இது படிப்பதற்குச் சுவையாக இருந்தது. அதற்குள் பழைய பல்லவி அங்குப் பல்லிளித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.அவர்கள் பிணக்கு நீடித்தது.

“என்ன புதுப்பிரச்சனை?” என்று விசாரித்தோம்.

“அந்த ஏழு நாட்கள்” என்றாள்.

“அது பாக்கியராஜாவின் படமாயிற்றே” என்றேன்.

“அதுதான் எங்கள்புதுப் பிரச்சனை. அந்த ஏழு நாட்கள் நீ எப்படி எப்படி இருந்தாயோ யார் கண்டது; இராவணனை நம்ப முடியும்; உன்னை நம்ப முடியாது என்கிறார் அவர்.”

“நீ என்ன சொன்னாய்?”

“தீக்குளிப்பேன் என்றேன்.”

“எதற்கு?”

“உண்மையை நிலைநிறுத்த.”

உடனே அந்தச் செய்தி எங்கும் பரவியது.

‘மீண்டும் ஒரு சீதை’ என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன.

பி.பி.சி ஒளிப்பதிவாளர்கள் அவள் படத்தை எடுத்துப் போட்டு ‘பாரத தேசத்தில் பதிவிரதை’ என்று காட்டி விளம்பரப்படுத்தி விட்டார்கள்.

விளம்பரம் முற்றியது; அவள் தன் முடிவை மாற்றி கொள்வதாக இல்லை என்று அடம் பிடிக்தாள்.

அவன் வேறு வழி இல்லாமல் அவளை வழிக்குக் கொண்டுவரத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கே பிரிந்தவர்கள் கூடினார்கள். அவர்கள் சும்மா இருக்க முடியுமா! தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள் என்று கேள்வி. இந்தச் செய்தி அங்குப் பேசப்பட்டது.

பிறை எனக்கு நல்ல செய்தி சொல்கிறாள் வேலை கிடைத்து விட்டது என்று.

“எதுவும் உடனே கிடைக்காது. இப்படித்தான் இதுவும்” என்று என் வாழ்த்தைக் கூறினேன்.

தரகர்கள் அவர் வீட்டு காஃபிக்கு வந்து கொண்டிருந்தனர். மீனாட்சிக்கு எப்பொழுது திருமணம் என்று பாண்டி நாட்டார் கேட்டுக்கொண்டிருந்தனர் படித்தவள்; சம்பாதிக்கிறாள்’ என்று அவளைப் பற்றிப் பேச்சுப் பரவியது.

அவள் அடுத்த கட்டம் மணம்; என் பையன் அவளோடு பழகியவன்; அதனால் அவள் மீது நேசம் வைத்திருந்தான்; பாசம் வைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான்; அம்மாவுக்கு எழுதி இருந்தான்.

“எதிர் வீட்டுக் கதிர் ஒளியை எனக்குப் பேசி முடி என்று எழுதி இருந்தான். ராதாவின் போக்கில் ஒரு தெளிவு ஏற்பட்டது; பாதை புலப்பட்டது.

“படிக்கிறாள் சம்பாதிக்கிறாள்” என்று என்னிடம் படித்துப் படித்துச் சொல்கிறாள்.

என் மனம் ஊசல் ஆடியது. அவள் முத்துவுக்குத்தான் என்று உள்மனம் அறிவுறுத்தியது. அவன் செல்ல மகன்; அண்மையில் பழகியவன்; இளகியவன்; தோற்றமும் ஏற்றமும் உடையவன்; என் மகன் நல்லவன்; சராசரி; ஏதோ தேர் ஓடும்;கார் ஓடாது.

முத்துவின் மன நிலையை அறிய விரும்பினேன். அதற்குள். அவர்களுக்கு ஒருபெரிய சரிவு ஏற்பட்டுவிட்டது. இருபது லட்சம் நாசமாகி விட்டது. வாங்கி வந்த இயந்திரம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு விட்டது.

“சாவைப்பற்றி முன் கூட்டி அறிந்தவர்கள் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சலனம் அற்றுச் செயல்பட்டனர். எதற்காக உழைப்பது என்று சோர்ந்து விட்டனர். இது சமூக எதிரி; வாழ்க்கைக்கு முரண் என்பதால் தடை செய்யப்பட்டு விட்டது.

இயந்திரம் துப்புத் துலக்க வந்தது. அது துப்புப் பிடித்துவிட்டது அவர் மனம் உடைந்துவிட்டார் “ஆயுள் நீட்டிப்புக்குத் தரும சிந்தனை செயல் இருந்தால் போதும்’ என்றேன்.

“யார் சொன்னது” என்றார்.

“நம் அற நூல்கள்” என்றேன்.

“இது தெரிந்திருந்தால் இந்தக் கருவிக்கு நான் கருவியாகி இருக்கமாட்டேன்” என்று வருந்திக் கூறினார்.

அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தை அவர்: அறையில் புதிதாக அவர் மாட்டிய பெரியார் படம் காட்டியது.

“நெறி முறை பிழைத்த யானோ அரசன் யானோ கள்வன்” என்று சிலப்பதிகாரம் படிக்க ஆரம்பித்தார். “பையன் மணம்” என்றேன்.

“என் செல்வம் என்னை விட்டு நீங்கி விட்டது.என் செல்வன் அவனும் என்னை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது?” என்றார்.

“ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?”

“படித்த பெண் முதலில் இடித்துத் தள்ளுவது குடியிருந்த கோயில் தானே? பிறகு யார் எங்களுக்கு ஆதரவு.” “ஜோசியம் என்ன சொல்கிறது?” என்று கேட்டேன்.

“அதைத் தூக்கி எறிந்து விட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை” என்றார்.

“பேரன் பிறந்தால் உமக்கு மரணம்” என்று சுட்டிக் காட்டினேன்.

“அதை வரவேற்கிறேன்” என்றார்.

“என் மகனுக்குக் கலியாணம் ஆகி அவனுக்கு அழகிய மகன் அவதரிக்கிறான் என்றால் அவனைப் பார்த்து விட்டு அகமகிழ்வோடு இந்த அகன்ற மாநிலத்தை விட்டுச் செல்லத் தயார்” என்றார்.

காலம் கடந்து விட்டது. இந்தச் சிந்தனை ஆரம்பத்தில் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அங்கு ஜோசியம் கேட்க ஹாஸ்யர்கள் யாரும் வருவது இல்லை; தேர்வில் தோற்று விட்ட கட்சியின் வாக்குச் சாவடிப் பந்தல் போல் அவர் இல்லம் வெறிச்சோடியது.

– தொடரும்…

– படித்தவள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1993, அணியகம் பதிப்பகம், சென்னை.

ரா.சீனிவாசன் டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *