பச்சோந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 55 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீ வேலைக்குப் போகக்கூடாது”. 

அதட்டிக் கூறுகின்றார் 

தொழிறசங்கத் தலைவர் சோம்பால். 

“ஏன்?”. 

நிதானமாகக் கேட்கின்றேன் தலைவரை. 

“நாங்கள் வேலை நிறுத்தம் செய்யிறம். ஒருத்தரும் வேலைக்குப் போகக் கூடாது”. 

கண்டிப்புடன் கூறுகின்றார் தலைவர். 

“போனால் என்ன செய்வாய்?”. 

“என்ன நடக்குமென்று இருந்து பார்”. தலைவர் மிரட்டுகின்றார். 

“எதுக்காக வேலைநிறுத்தம் செய்யிறியள்? உங்கடை கோரிக்கைகள் என்ன? அந்தக் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் சமர்ப்பித்தீர்களா? நிர்வாகம் உங்களுக்கு என்ன பதில் கூறியது? பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் வேலைநிறுத்தம் செய்யப்போகின்றோம் என்று நீங்கள் நிர்வாகத்திற்கு அறிவித்தல் கொடுத்தீர்களா?” 

“எங்கட தொழிற்சங்கம் அப்பிடி ஒண்டும் செய்யேல்லை. அது தேவையு மில்லை” 

“அப்போ நீங்கள் எதற்காக இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திறியள்?”. 

“எங்கடை தாய்ச் சங்கம் எங்களை வேலைநிறுத்தம் செய்யச் சொல்லியிருக்கு. அதுதான் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்திறம்”. 

“தாய்ச் சங்கம் வேலை நிறுத்தம் செய்யும்படி உங்களுக்கு ஏன் சொன்னது? ஊங்கடை தாய்ச் சங்கம் ஆருடைய கட்டுப்பாட்டிலை இருக்கு?’.

“அரசாங்கத்தின்ரை கட்டுப்பாட்டிலை இருக்கு”. 

“அரசாங்கம் ஏன் இந்தப் போராட்டத்தை நடத்துது?”. 

“தனக்கு பக்கபலமாய்த் தொழிலாளர் இருக்கிறார்கள் எண்டதை இந்த நாட்டிலையுள்ள பிற்போக்கு முதலாளித்துவத்திற்கு காட்டிறதுக்குத்தான் இந்தப் போராட்டத்தை எங்கடை அரசாங்கம் நடத்துது”. 

“அப்போ தொழிலாளி வர்க்கத்தின்ர நலனுக்காக இந்தப் போராட்டம் நடக்கேல்ல. அரசாங்கத்தைப் பாதுகாக்கத்தான் நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்திறியள்?.” தொழிற்சங்கத் தலைவரை நான் கேட்கின்றேன். 

“ஆமா, அரசாங்கத்தைப் பாதுகாக்கத்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்திறம்”. 

அடித்துக் கூறுகின்றார் தலைவர். 

“தொழிலாளர்களின் நலனுக்காக நீங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தேல்லை. அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கத்தான் இந்தப் போராட்டத்தை நீங்கள் நடத்திறதாலை, நாங்கள் இதிலை நிச்சயமாய்ப் பங்குபற்றமாட்டம்.” 

நான் உறுதியாய்க் கூறிவிட்டு அலுவலகத்திற்குள் செல்கின்றேன். 

“கருங்காலிகள் ஒழிக” 

“காட்டிக் கொடுப்பவர்கள் ஒழிக” 

“தொழிலாளர்களின் எதிரிகள் ஒழிக” 

தலைவர்களும், சில தொழிலாளர்களும் கோஷம் போடுகின்றனர். அலுவலக வளவிற்குள் தங்கள் ஆர்ப்பாட்டப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். 

அரைவாசிக்கும் மேலான ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றோம். 

மதிய போசன வேளை. போராட்டம் தொடர்கிறது. தலைவரும் போராட்டத் தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களும் அலுவலக வளவிற்கு வெளியே வீதிக்கு வருகின்றனர். 

தலைவரின் தலைமையில் கூட்டம் ஆரம்பிக்கின்றது. தலைவரின் பக்கத்தில் தொழிற்சங்க செயலாளரும் நிற்கின்றார். 

ஒரு ஊழியர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கின்றார். 

என்ன நடக்கின்றது என்று அறிய நாங்கள் சிலர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்திற்கு செல்கின்றோம். 

எங்களைக் கண்டதும் கருங்காலிகள் ஒழிக என்று தலைவர் கோஷமிடுகின்றார். செயலாளரும் கூட்டத்திலே பங்குபற்றிக் கொண்டிருக் கின்ற சிலரும் கோஷம் போட்டுக்கொண்டு நிற்கின்றனர். பேச்சாளர் ஆவேசமாகத் தனது உரையைத் தொடர்கின்றார். 

வீதியிலே கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தமையால் வாகனப் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது. 

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து வருகின்றனர் பொலிஸார். 

கூட்டத்தினர் மத்தியில் பதட்டம். ஆவேசமாய்ப் பேசிக்கொண்டு நிற்கின்ற ஊழியர் திகைக்கின்றார். 

பொலிஸார் அவரைக் கைது செய்ய முனைகின்றனர். 

நான் தலையிடுகின்றேன். 

“எதற்காக இவரை நீங்கள் கைது செய்கிறீர்கள்?” பொலிஸாரை நான் கேட்கின்றேன். 

“சாலையில் கூட்டம் நடத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர்”. பொலிஸார் கூறுகின்றார்கள். 

“இங்கு கூட்டம் நடைபெறவில்லை. மதிய போசன இடைவேளை. அதுதான் நாங்கள் கூடி நிற்கின்றோம்’ 

“இவர் பேசிக்கொண்டிருந்தாரே?”. 

“இந்த ஊழியர் பேசிக்கொண்டிருக்கவில்லை. எங்கள் வேலையிலுள்ள பிரச்சனைகள்பற்றி தனது நண்பர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்”.

“இல்லை இவர் பேசிக்கொண்டிருந்தார்”. 

“இங்கு கூட்டம் நடக்கவில்லை. கூட்டம் நடந்தால் யாராவது ஒருவர் தலைமை தாங்க வேண்டுமே?”. 

பொலிஸாருக்கு யார் தலைவரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடிய வில்லை. 

“இவரை நாங்கள் விசாரிக்க வேண்டும்” 

“நீங்கள் தாராளமாக விசாரிக்கலாம். இங்கு போக்குவரத்து நெருசலாக் கிடக்கு. அலுவலகத்திற்குள்ளே போய் விசாரிக்கலாமே?” 

எல்லோரும் உள்ளே செல்கின்றோம். பொலிஸாரும் எம்முடன் வருகின்றனர். “இப்போ நீங்கள் தாரளமாக விசாரிக்கலாம்”. 

நான் கூறுகின்றேன். 

“இங்கு வைத்து விசாரிக்கமுடியாது. போலிஸ் நிலையத்துக்கு கொண்டு போய்த்தான் விசாரணை நடத்தவேண்டும்”. 

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முனைகின்றனர் பொலிஸார். “இந்த நிறுவனத் தலைவருடைய அனுமதியின்றி ஒரு ஊழியரையும் நீங்கள் இந்த அலுவலக வளவிற்குள் இருந்து கைதுசெய்யமுடியாது”. நான் பொலிசாருக்கு எடுத்துக்கூறுகின்றேன். 

பொலிஸாருக்கு இக்கட்டானநிலை. 

“வாருங்கள் பொதுமுகாமையாளரைச் சந்திப்போம்” 

பொலிஸார் பொதுமுகாமையாளரைப் பார்ப்பதற்கு வருகின்றனர். 

“இங்கு வேலைநிறுத்தம் செய்து குழப்பம் விழைவிக்கின்றனர் என்று எங்களுக்கு முறைப்பாடு வந்திருக்கு”. பொலிஸ் அதிகாரி. 

“ஆர் உங்களுக்கு முறைப்பாடு செய்தது? 

“நான் அப்படி ஒரு முறைப்பாடும் செய்யேல்லையே?”. பொது முகாமையாளர் கூறுகின்றார். 

பொலிஸார் விழிக்கின்றனர். 

“நான்தான் இந்த நிறுவனப் பொதுமுகாமையாளர். வேலைநிறுத்தம் செய்து குழப்பம் ஏற்படுத்துகின்றனர் என்று நான் எதுவித முறைப்பாடும் உங்களுக்குச் செய்யவில்லை”. திட்டவட்டமாகக் கூறுகின்றார் பொதுமுகாமையாளர். 

“உங்கள் நிர்வாக முகாமையாளர்தான் எங்களுக்கு தொலைபேசிமூலம் அறிவித்தார்” 

“நீங்கள் போய் அவரிடம் கேளுங்கோ’. 

வெட்டிக் கூறுகின்றார் பொது முகாமயைாளர். 

பொலிஸார் வேறுவழியின்றி வெளியேறுகின்றனர். 

இத்தனை நடந்தும் தொழிற்சங்கத் தலைவரக் காணவில்லை.

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *