பசித்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 5,526 
 
 

என் பேரு ராஜா.

ஜட்ஜ் பரமேஸ்வரனை இந்த ஊருக்கே தெரியும். அவர் வீட்டில் தான் நான் தங்கியிருக்கிறேன். பக்கத்து பங்களாவில் டாக்டர் நாகராஜன் இருக்கிறார். அவர்கள் குடிவந்து சில நாட்களே தான் ஆகிறது. குடிவந்த முதல்நாள் குடும்ப சகிதம் அனைவரும் எனது வீட்டிற்கு வந்து மதிய உணவை சாப்பிட்டு விட்டு சென்றார்கள். அப்பொழுது தான் கோமதிக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. எனக்கும் அவளுக்குமான வயது வித்தியாசம் இரண்டு வருடங்களுக்குள் தானிருக்கும். நட்பின் நீண்ட பயணத்தில் உடன் வர காத்திருந்த அவள் , நான் பார்க்கும் போதெல்லாம் வீட்டு வாசலிலேயே தான் இருப்பாள். நானும் இதற்காகவே அடிக்கடி வாசலுக்கு வந்து எட்டிப் பார்ப்பேன்.

ஒரு நாள் அவள்”என்ன அய்யா அடிக்கடி வாசல்ல நின்னு லுக் விடறாரு.சைட் அடிக்கறாப்ளயா” என்றாள். நட்பிலிருந்து காதலுக்கு மடை திறக்க விழையும் முயற்சியாய் அதை நான் கொண்டேன். இருப்பினும்

“ஐய்யய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா அப்படியே வெளியே வரேன். நீ மட்டும். எப்ப நான் பார்த்தாலும் வாசல்லேயெ தவங் கெடக்கிறியே. அது எதுக்காம்” கேட்டேன்.

அமைதியானாள். அவள் கண்களில் கண்ணீர் பதறிப் போனேன்.

“ஐயோ… எதாவது தப்பா கேட்டுட்டேனா? அப்படியிருந்தா என்னை மன்னிச்சிடு” என்றேன்.

“நோ..நோ… அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.

அவள் சென்ற பாதையிலேயே பார்வையை பதிய வைத்திருந்தேன். வண்ணமயமாய் மனசுக்குள் ஏதோ குறுகுறுத்தது. மத்தாப்பூ பூத்து ஒளிரத்துவாங்கியது. நாளை கூறிவிட வேண்டும். என்னுள் எழும்பி நிற்கும் அதே உணர்வு அவளுள்ளும் உருப்பெற்றிருக்கிறதா என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். அடுத்த நாளுக்காய் காத்திருந்தேன். பொழுது புலர்ந்தது. காலை பத்து மணி. இரவெல்லாம் உறங்காததனால் கண்களில் எரிச்சல் படர்ந்திருந்தது. அவளுக்காய் காத்திருந்தேன். உறக்க கணங்கள் என்னை ஆட்கொள்ளும் வேளையில் டாக்டரும் அவரது மனைவியும் வந்தனர். உறக்கத்தை விரட்டிவிட்டு ஆவலோடு வாசலை பார்த்தேன். கோமதியைக் காணவில்லை. கோமதி வரவில்லையாவென்று கேட்க வாய் திறக்கும் முன்பே வாசற்கதவு திறக்கும் ஓசை கேட்டது. அவள் தான். ஷாம்பூ குளியலின் வாசம் அறைக்குள் நுழைந்தது. என்னுடல் சிலிர்த்தது. மாடியிலிருந்து கீழே ஓடி வந்தேன். படிகளில் கால் இடறி. குட்டிக் கரணமிட்டு , அவளது காலடியில் வந்து வீழ்ந்து கிடந்தேன்.திகைத்துப் போனாள் அவள்.

அவளது பார்வையில் துல்லியமாக கலவரம் தெரிந்தது. என் காலில் காயமேற்பட்டு இரத்தம் வழியத்துவங்கியது.டாக்டரும் அவரது மனைவியும் உள்ளே சென்று விட்டிருந்தனர். கோமதி மட்டுமே தனித்திருந்தாள். என் காலில் வழியும் இரத்தத்தை கண்ணுற்ற அவள் செய்வதறியாது திகைப்பதை கண்டேன் , அடிபட்ட காயத்திற்கு மருந்திட வேண்டும். வேலைக்காரி ரத்னா தன் மகளுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டு விட்டு அதை பக்கத்து அறையில் வைத்திருந்தது நினைவுக்கு வர கோமதியிடம் கூறினேன். சென்றவள் வெறுங்கையோடு திரும்பினாள். ஒரு வேளை மருந்து இடம் பெயர்ந்து போயிருக்கலாம். நான் மெதுவாக எழுந்து காலை சுத்தம் செய்தேன். கோமதியும் எனக்கு உதவி புரிந்தாள். அவள் கண்கள் ‘ வலிக்கிறதா” என்று என்னைக் கேட்டது. அமைதியாக கண்களால் ஆமோதித்தேன். ஆச்சரியமாய் எங்களிருவரையும் தவிர அந்த அறையில் யாருமே இல்லாதது. இதமாய் இருந்தது. இரண்டு நாட்களில் ரணம் ஆறிவிட்டிருந்தது. வெளியே புல்வெளியில் உலவிக் கொண்டிருந்தேன். ராமர் கோடுகளை முதுகில் சுமந்தபடி ஒரு அணில் ஓடியது. அதன் பின்னாலேயே நானும் வேகமாக ஓடினேன். அணில் மரத்தின் மீது ஏறிக்கொண்டது. என்னை யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். நானும் மரத்தில் ஏற முயற்சித்தேன். சமயத்தில் இது போன்ற சிறு பிள்ளைத்தனமான செயல்களை செய்து விடுவதுண்டு. பிறகு அதை நான் உடற்பயிற்சியாய் செய்தேன் என்று ஒப்பேத்துவதும் உண்டு. அணில் கண்களில் மிரட்சியோடு மரக்கிளையில் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தது. நான் கண்களால் அதை பின் தொடர்ந்தேன். உச்சாணிக் கிளைக்கு சென்று விட்ட அணில் திரும்பி என்னைப் பார்த்தது. பார்த்ததோடல்லாமல் பெப்பே என்று பழிப்பு காட்டுவதாய் இருந்தது அதன் பார்வை. அன்றொரு நாள் ராகவன் என்ற பன்னிரண்டு வயது பொடியன் ஒரு அணிலை உண்டி வில்லால் அடித்து கீழே கிடத்தினான். அப்பொழுது என் மனம் மிகவும் அனுதாபப்பட்டது அந்த அணிலுக்காய். ஆனால் இப்போதோ எனக்கு பழிப்பு காட்டும் இதன் பார்வை என்னை கறுவலுறச் செய்தது. கற்களை தேடினேன். பிரயோசனமில்லை. புல் தரை பளிச்சென்றிருந்தது. மெதுவாக திரும்பி புல் தரைக்கு வந்தேன். கோமதியின் நினைவு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றவள். திரும்பி வரவில்லை. ஜட்ஜீம் அவரது மனைவியும் வெளியே கிளம்பினர். போகும் போது நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன்.

“பாவம்… டாக்டர் மனைவியை நேத்து யாரோ கொலை பண்ணிட்டாங்க.டாக்டரும் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில இருக்காரு” மனைவியிடம் கூறிக் கொண்டு வந்தார் ஜட்ஜ். ஜட்ஜின் மனைவி. “ கோமதி ” என்றார்.” அத ஏன் கேட்கிற மொதல்ல கோமதியை மண்டைல கொடூரமா அடிச்சு கொன்னுட்டு தானே கொலைகாரன் உள்ளே நுழைஞ்சிருக்கான்”

“ஐயோ என் கோமதி” நான் இடிந்துப் போய் அமர்ந்து விட்டேன். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மண்டையில் கொடூரமாக அடித்து கொன்று விட்டார்களாம்.என் காலில் காயமேற்பட்டதற்கே பதறிப்போன அவள் மரண வலியை எப்படி தாங்கிக் கொண்டிருப்பாள்.

ஜட்ஜீம் அவர் மனைவியும் எனக்காக காத்திருக்காமல் தூரத்தில் சென்று கொண்டிருந்தனர். கோமதிக்கு ஏற்பட்ட வலியின் உணர்வை நான் என் பின் மண்டையில் உணர ஆரம்பித்தேன். மெதுவாக”ஊ.. ‘ வென ஊளையிட ஆரம்பித்தேன். தெருவில் யாரோ ஒருவன் “ இப்பத்தான் ஒரு சாவு விழுந்திருக்கு. மறுபடியும் ஊளையா இடறே” என்றவாறு கல்லால் என்னை அடித்துவிட்டு சென்றான். நான் வாலை பின்னங்கால்களின் இடையில் சுருட்டிக் கொண்டு பங்களாவை நோக்கி ஓடினேன். மரத்தின் மீதிருந்த அந்த அணில் என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு தெரியுமா என் சோகப்பசி.

– 1985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *