நெருக்கம்!
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 13,235
இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’ வாங்க படாத பாடு படுவார்கள்.
காரணம் பிரியாணி கொடுத்து, காசு கொடுத்து, லாரி வாடகை கொடுத்து கூட்டத்திற்கு ஆட்கள் தேட வேண்டியதில்லை. இன்ப சாகரன் படத்தைப் போட்டு பத்து சுவரொட்டிகளை குப்பைத் தொட்டிகளில் ஒட்டினால் போதும்!
அவர் பேசும் ஒவ்வொரு நகரத்திலும் அந்தக்கட்சி பிரமுகர்கள் அவரை நன்கு கவனித்து சிநேகிதம் பிடித்துக் கொள்வார்கள்.
இன்பசாகரன் ஒரு விளம்பரப் பிரியர். அவரைப் பற்றிய செய்திகளும் போட்டோக்களும் தினசரி பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும், ‘பேஸ் புக்’கிலும் வந்து கொண்டே இருக்க வேண்டும்.
அதற்காக யார் கேட்டாலும் வித விதமான போஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார். லாட்ஜ்களில் அவர் தங்கியிருக்கும் பொழுது கட்சித் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு, தோளில் கைகள் போட்டபடி, கட்டிப் பிடித்துக் கொண்டு, முத்தம் கொடுத்தபடி செல்ஃபி எடுக்க தொண்டர்கள் முயற்சி செய்வார்கள். இன்ப சாகரன் அனைத்துக்கும் ஒத்துழைப்பு தருவார்.
அன்று காலை வெளியூர் கூட்டத்திற்கு இன்பசாகரன் கிளம்பிக் கொண்டிருந்தார். தடதட வென்று நிறைய போலிஸ்கார்கள் உள்ளே நுழைந்தார்கள்.
முன்னால் வந்து கம்பீரமாக நின்ற இன்ஸ்பெக்டர் “ சார்!…உளுந்தூர்பேட்டை பாங்கு கொள்ளை தொடர்பாக உங்களை விசாரிக்க வேண்டியிருக்கு!…நீங்க ஸ்டேஷன்க்கு வர வேண்டும்!..” என்றார்.
“ என்ன சார்!….பாங்கு கொள்ளைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?..” என்றார் இன்ப சாகரன் சிரித்துக் கொண்டே!
“ சார்! முக்கிய குற்றவாளி சேலம் ரங்காவை அரஸ்ட் செய்திட்டோம்… அவனை விசாரிக்கும் பொழுது நீங்கள் தான் அவனுடைய குரு என்று சொல்கிறான்… அவன் தங்கியிருந்த ரூம் முழுவதும் இருக்கும் அனைத்துப் போட்டோக்களிலும் நீங்க…ரங்காவின் தோள் மேல் கை போட்ட படி ஒரு போட்டோ, ரங்காவை கட்டிப் பிடித்தபடி ஒரு போட்டோ என்று அவருடைய எல்லா போட்டோக்களிலும் நீங்க தான் உடன் இருக்கிறீங்க!…”
“ சேலம் ரங்கா யார் என்றே எனக்குத் தெரியாது!..”
“ எதை சொல்வதாக இருந்தாலும் நீங்க ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க!…”
முன்பின் தெரியாவர்களோடு எல்லாம் செல்ஃபி எடுத்துக் கொண்டால் இப்படி எல்லாம் கூட வருமா?
– 20-6-2016