நெஞ்சத்திலே….
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 32,718
அந்தி மாலை நேரம் ஹோட்டல் லாபியில் நின்றபடி கைகடிகாரத்தையும் வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரலேகா.
“ஹாய் சித்து…” என்றபடி வந்தான் மிதுன்.
“ஹாய்…” என்று பதிலுக்கு உரைத்தவளின் பதிலில் கொஞ்சம் கூட சுரத்தே இல்லை.
“என்ன டியர்? ரெண்டு வருஷம் கழித்து பார்த்துக்கொள்ளும் லவர்ஸ் மாதிரி பேசமாட்டேன்ற?” என புன்னகைத்தான்.
“சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்….” என்றவள் உள்ளே திரும்பி நடக்க மிதுன் யோசனையுடன் அவளை பின் தொடர்ந்தான்.
சித்ரலேகா ஒரு டேபிள் அருகில் சென்று நின்றாள். “மிதுன் மீட் மிஸ்டர். ஹரிபிரசாத்” என்றதும் கைகுலுக்கிகொண்டவன் யாரிது என்பது போல பார்த்தான்.
“எம்என்சி யில் ப்ராஜெக்ட் லீடரா இருக்கார். என் வருங்கால கணவர்” என்றவள் ஹரியின் அருகில் சென்று நின்றாள். மிதுன் அதிர்ந்து போனான்.
“ஆர் யூ மேட்? விளையாடுகிறாயா? என ஆத்திரத்துடன் கத்தினான். அங்காங்கே அமர்ந்திருந்த சிலர் திரும்பி பார்த்தனர்.
“எதுக்கு மிதுன் இப்படி சீன் க்ரியேட் பண்ற? நியாயமா உன்னை பார்த்து நான் தான் கோபப்படணும். ஆனால் எனக்கு கோபம் வரலை ஏன்னா நான் உன்னை காதலிக்கவே இல்லை.”
“இதெல்லாம் அநியாயம் சித்ரா” என்றவன் ஹரிப்ரசாத்திடம் திரும்பி, “சார் நானும், இவளும் காலேஜில் படிக்கும் போதே காதலர்கள். இரண்டு வருஷம் அவளுக்கு நான் எனக்கு அவள் என்று இருந்தோம். ரெண்டு வருஷத்துக்கு முன் வேலைக்கு என்று போன இடத்தில் ஏதேதோ காரணங்களால் இவளை தொடர்புகொள்ள முடியாமல் போச்சு. இப்போ இவளே கதி என்று வந்திருக்கும் எனக்கு என்ன பதில் சொல்ல போகிறாள்?” என்றவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
ஹரி வாயை திறக்காமல் சித்ரலேகாவை பார்த்தான். படிப்பை முடித்து வேலைக்கு செல்வதாக வெளியூர் சென்றவன் அதோடு தொடர்பை முறித்துக்கொண்ட நிலையில் யாரை விசாரிப்பது என புரியாமல் தவித்த நேரத்தில் ஆறு மாதத்திற்கு முன்பு ஹரி அவளை பெண்பார்க்க வந்த போதே ஒன்றுவிடாமல் அவனிடம் சொல்லி திருமணத்தை நிறுத்தும்படி சொன்னவள். ஆனால் சித்ர லேகாவின் குணங்களால் கவரப்பட்டு, நண்பர்களாக இருப்போம் என மாலையிட வந்தவன் நட்புக்கரம் நீட்டினான். நீட்டிய கரத்தை பற்றிக்கொண்டாள். பற்றிய பின் சில நாட்களிலேயே புரிந்தது அவனே தன் வாழ்க்கை என்று.
பதின்ம வயதில் ஏற்படும் பருவவயதின் கோளாறில் தன்னை புகழ்ந்தவன் தன்னை பாராட்டி முகமன் கூறியவனின் சொல்லையும் செயலையும் எண்ணி எண்ணி பூரித்தது காதல் இல்லை என புரிந்தது.
இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி தவித்த காலம் சென்று, ஆராய்ந்து, அறிவுபூர்வமாக சிந்திக்க முடிந்தது. கடந்த ஆறுமாதத்தில் ஹரி தனிமையில் கூட தன்னிடம் பேசிய பேச்சில் விடலைத்தனமோ, கள்ளச்சிரிப்போ, சீண்டலோ இல்லை. சிந்திக்கும் திறன் தெரிந்தது. அவன் புத்திசாலித்தனம் புரிந்தது. அதன் மூலம் அவளின் வாழ்க்கை தெளிந்தது.
தன் மனதை ஹரியிடம் வெளியிடும் நேரத்தில் மிதுன் மீண்டும் அவள் வாழ்வில் வந்தான். ஆனால் அவனை கண்டவளுக்கு ஆச்சர்யமோ, சந்தோஷமோ, கோபமோ ஏற்படவில்லை. மாறாக அனுதினமும் நாம் சந்திக்கும் யாரையோ பார்ப்பது போல தென்பட்டது.
கோபத்துடன் தன்னை பார்த்தவனை பரிதாபமாக பார்த்தாள். “நீ ஒரு இர்ரெஸ்பான்சிபிலிட்டி பெர்சன். எடுத்த வேலையை கடைசிவரை முடிக்க தெரியாத முட்டாள். உன்னை நம்பி என் வாழ்கையை எப்படி உன்னிடம் ஒப்படைக்க முடியும்? ரெண்டு வருஷம் என்னை மறந்து இருந்த போது, இப்போது மட்டும் எப்படி நினைவுக்கு வந்தேன்? இதை கூட புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு நான் அறிவிழந்து விடவில்லை. நீயும் நானும் சேர்ந்திருந்தால் அது உடலோடு உடல் சேரும் காமமாக இருந்திருக்கும். இப்போது தான் நான் உண்மையாக காதலிக்கிறேன். ஹரியோடு காலம் பூராகவும் சேர்ந்து வாழனும் என்று ஆசைப்படுகிறேன்.”
“இது தான் உன் முடிவா?” என்றவனின் குரல் அவள் தன்னை கண்டுக்கொண்டாளே என்ற குன்றலுடன் வந்தது.
“இப்போது தான் என் வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன்” என்றவளின் குரல் உறுதியாக ஒலித்தது.
பணத்திற்காக இரண்டு வருடம் சித்ரலேகாவை மறந்து வேறொருத்தி பின்னால் அலைந்ததற்கு தனக்கு இது தேவை தான் என எண்ணிக்கொண்டே விடு விடு வென அங்கிருந்து அகன்றான்.
மிதுன் அங்கிருந்து அகன்றதும் சித்ரலேகா ஹரி பிரசாத்தை பார்த்தாள். “சாரி ஹரி உங்க அனுமதி இல்லாமல் நான் பேசிவிட்டேன். உங்க முன்னால் பேசக்கூடாததையும் பேசிட்டேன். என் மனதை நேரடியாக உங்களிடம் சொல்லும் தைரியமும் எனக்கு இல்லை. இந்த சந்தர்பத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டேன். உங்களுக்கு ஆட்சேபனை ஏதும்…” என்றதும் ஹரி ஏதும் சொல்லாமல் காரை நோக்கி சென்றவனை பார்த்தவள் உள்ளுக்குள் பொங்கிய தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு காரில் அமர்ந்தாள்.
உணர்ச்சியை தொலைத்தவளாக அமர்ந்திருந்தவள் புறம் திரும்பி, “லேகா..” என அழைத்தான். நிமிர்ந்து அவனை பார்த்தாள். “ஹனி மூன் எந்த ஊருக்கு போகலாம் சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என சொல்லி புன்னகைக்க தொலைந்திருந்த புன்னகை அவளின் இதழ்களில் எதிரொலித்தது.
வலது கையை அவள் புறம் நீட்ட தன் கரத்தை அவன் கையில் கொடுத்தவள் சந்தோஷத்தில் கண்கள் ஈரமாக அவன் தோளில் சாய்ந்தவளை இடது கையால் சேர்த்தணைத்தான். இருவரின் நேசமும் அவர்களின் நெஞ்சத்திலே… நிறைந்திருந்தது.
– 2012