நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…!






அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சொன்னதைக் கேட்ட மைக்கேல் ஒரு கணம் அதிர்ந்து போயச் செயல் இழந்து நின்றான். பின் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு திரும்பவும் கேட்டான்.

‘என்ன சார் சொல்றீங்க?’
‘ஆமாம், கதவைத் திறக்க வேண்டாம். கதவைத் திறந்தால் பல ரகசியங்கள் வெளியே வந்து விடும் என்று அரசு அஞ்சுகிறது. எனவே மக்களை நம்ப வைப்பதற்காக மட்டும் நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதாகக் காட்டிக் கொண்டால் போதும்.’
மைக்கேலுக்கு இப்போ எல்லாமே குழப்பமாகத் இருந்தது.
‘கதவைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வருவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?’
‘இருக்கு… நிறைய இருக்கு! உள்ளே வெடித்த பாம் என்ன வென்று யாருக்கும் இதுவரை தெரியாது. வெடித்தது சிறிய அணு ஆயுதமாக இருந்தால் கூட கதவைத் திறக்கும் போது அதன் கதிர் வீச்சு வெளியே பரவக் கூடிய சாத்தியக் கூறு இருக்கிறது.’
‘அதனாலே…?’
‘அப்படிப் பரவினால் அதனால் ஏற்படும் பாதிப்பு எப்படி பட்டதாய் இருக்கும் என்பது உனக்குப் புரியாதா?
‘அதற்காக… அதற்குள் அகப்பட்டவர்களை அப்படியே விட்டு விடுவதா?’
‘வேறு என்ன செய்ய முடியும்? நம்மேல் எப்போது கரி பூசலாம் என்று உலக நாடுகள் சில காத்திருக்கின்றன. அது மட்டுமல்ல உள்நாட்டிலும் இதனால் அரசியல் குழப்பங்கள் ஏற்படலாம்.”
‘அவங்களை எப்படியாவது காப்பாற்றுங்க என்று தானே மக்கள் கேட்கிறாங்க, அதனாலே என்ன பிரச்சனை?’
‘பிரச்சனையே அங்கேதானே இருக்கு, அணுக்கதிர் வீச்சில் அவங்க பாதிக்கப் பட்டிருந்தால் அவங்களை வெளியே கொண்டு வருவது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?’
‘ஏன்? பாதிக்கப்பட்டவங்களுக்கு உடனே ஏதாவது ரீட்மென்ட் கொடுக்கலாமே?’
‘கொடுக்கலாம், கொடுத்தாலும் பாதிக்கப் பட்டவங்க அதிக நாட்கள் உயிரோடு இருக்கப் போவதில்லை! தினமும் ஒவ்வொருவராய் தங்கள் கண்முன்னால் துடித்துத் துடித்து மரணத்தைத் தழுவுவதை அந்தக் குடும்பத்தினரால் தாங்க முடியும் என்று நினைக்கிறாயா?’
‘அப்போ.. என்னதான் செய்யச் சொல்லுறீங்க?’
‘ஒரு சில உயிர்களைக் காப்பாற்றுவதால் நாங்கள் எதையும் பெரிதாய்ச் சாதித்து விடப் போவதில்லை! அதேசமயம் உள்நாட்டில் கலவரம் ஏற்பட்டால் பல உயிர்கள் பலியிடப் படலாம். இது இந்த அரசிற்கு நல்லதல்ல. எனவேதான் சொல்கிறேன் மீட்பு முயற்சியைத் தாமதப் படுத்துங்கள்.’
‘அப்போ எங்க பயணத்தைக் கைவிடச் சொல்லுறீங்களா?’
‘இல்லை அப்படிச் செய்யாதே! நாட்டிற்கும் வெளியுலகிற்கும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் அதை நம்பக் கூடியதாக நடக்க வேண்டும். அதே நேரத்தில் மீட்பு முயற்சியைத் தாமதப் படுத்த வேண்டும்.’
‘தாமதிப்பதால் என்ன லாபம்? நாங்கள் வேண்டும் என்றே தாமதப் படுத்துவதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?’
‘அதற்காகத்தான் காலநிலை மீது பழியைப் போடச் சொல்லுறேன்!’
‘அவர்களுக்கு இன்னும் சில மணிநேரங்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் தானே இருக்கு!’
‘அதனாலே தான் சொல்லுறேன், சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆக்ஸிஜன் தீர்ந்து போனதும் அவர்களுக்கு வரப்போவது இயற்கை மரணம்!’
‘நீங்க என்ன சொல்லுறீங்க….. அவங்க மூச்சுத் திணறி…..பரிதாபமாய்…?’
‘ஆமாம்! நாங்க எங்களாலே முடிந்த அளவு முயற்சி செய்தோம், ஆனால் அவர்களை உயிரோடு காப்பாற்ற முடியவில்லை என்று மக்களை நம்ப வைத்து விடலாம்!’
‘என்ன சொல்றீங்க.. இது மகாபாவம் இல்லையா.’
‘தினமும் நாட்டில் எத்தனை விபத்துகள் எத்தனை இடங்களில் நடக்கின்றன. அதற்கெல்லாம் கவலைப் படுகிறோமா? அதிலே இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டால் போச்சு.’
இதைக் கேட்டதும் மைக்கேல் பேச்சிழந்து மௌனமானான்.
எங்கள் நாடு, எங்கள் தோழர்கள், எங்கள் உடன் பிறப்புக்கள், என்றெல்லாம் அரசியல் மேடைகளில் கூக்குரலிட்டவர்களா இன்று இப்படிச் சொல்கிறார்கள்? இவர்கள் என்னமாய்த் திட்டம் போடுகிறார்கள். எப்படி இவர்களால் இதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது? மனிதாபிமானமே இல்லாதவர்களா? ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்காக இவர்கள் எதையும் செய்வார்களோ? அரசியல் என்றால் சேறும் சகதியும் தானோ?
‘மைக்கேல்.. என்ன பேச்சைக் காணோம்?’
‘இல்லை ஒன்றுமில்லை!’
தன்னை ஒரு இக்கட்டான நிலையில் அரசு தள்ளி விட்டிருப்பதை மைக்கேல் உணர்ந்தான்.
‘நான் சொன்னது போல பயணத்தைத் தொடருங்கள். கதவைத் திறப்பதில் தாமதம் காட்டுங்கள் ஆனால் எக்காரணம் கொண்டும் கதவைத் திறக்க வேண்டாம்!’
‘……’
‘நான் சொன்னது புரிஞ்சுதா? இது மேலிடத்து உத்தரவு. உன்னை நம்பித்தான் அனுப்புகின்றேன். குட்லக்! நான் சொன்னபடி எல்லாம் நடந்தால் திரும்பி வந்ததும் உனக்குப் பதவி உயர்வும் வீரப்பதக்கமும் காத்திருக்கிறது.’
மைக்கேல் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் ரிசீவரை அடித்து வைத்தான். அந்த வேகத்தில் அவனது இயலாமை தெரிந்தது. கையாலாகாதவனாய்ப் போணோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.
யாருக்கு வேண்டுமாம் இந்தப் பதவி உயர்வும் வீரப்பதக்கமும்?
– தொடரும்…
– நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…! (குறுநாவல்), முதற் பதிப்பு: 2020, ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை.