நிழல் உறவுகள்!




மனதில் ஆசைகள் தோன்றாதவரை, நாம் எதையும் பிறரிடம் கேட்காதவரை, நாம் எதையும் போட்டியிட்டு எடுத்துக்கொள்ளாதவரை நம்முடன் வாழும் அனைவரும் நல்லவர்களாகவே நமக்குத்தோன்றுவர். பிரியனும் முப்பது வயது வரை மனதில் ஆசைகளற்றவனாகவே பால் மனதுடன் பவனி வந்தான்.

‘இவனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், வரும் மனைவி இவனது ஆசைகளைத்தூண்டுவாள். அதன் பின் இவனுக்கென்று வேண்டியதைக்கேட்பான். அப்போது, தற்போது நாம் வாழும் சுக வாழ்வு போய்விடும். இருக்கும் சொத்துக்களை சமமாகப்பங்கு போட நேரும். வருமானம் வரும் கம்பெனியை பிரிக்க வேண்டிய நிலை வரும்’ எனும் சூழ்ச்சியால் பெரிய இடங்களிலிருந்து பெண் சம்மந்தம் அவனுக்கு வந்ததைக்கூட அண்ணன் சுகந்தன் தட்டி விடுவதிலேயே குறியாக இருக்கிறான் என்பதைக்கூட அறியாமல் இருந்தான் பிரியன்.
அண்ணனின் மனைவியான அண்ணி செகந்தியை தனது இறந்து போன தாயாகவே பார்த்தான். அண்ணியோ மகனைப்போல் பார்க்காமல் அந்நியனாகவே பார்த்தாள். அதே சமயம் அவனிடம் தாயை விட மேலானவளாக நடித்து, தான் சொல்லும் வேலைகளை மறுக்காமல் செய்ய வைத்தாள்.
“பிரியனோட உசுரக்கேட்டாலுங்கூட எனக்காக உடனே கொடுப்பான். அவனோட அண்ணன விட என்ற மேல அத்தன பாசம் வெச்சிருக்கான். பலகாரம் செஞ்சாலும், சாப்பாடு செஞ்சாலும் அவன் சாப்பிட்டப்புறம் தான் ஊட்ல எல்லாரும் சாப்பிடறோம். என்ற பையன பாத்துக்கிறத விட அவனத்தான் பையனாட்ட பாத்துக்கிறேன். அவனுக்கு வேலக்காரங்க மாதர நாங்களும் நடந்துக்கறோம். இந்த சொத்தெல்லாம் அவனோடது தான். இந்தக்கம்பெனிக்கே அவன் தான் முதலாளி மாதர…” என வேலையாட்களிடம் நடித்துப்பேசும் அண்ணியின் பேச்சைப்பிடித்துப்போன பிரியன் தெய்வத்துக்கு சமமாகவே பார்ப்பான்.
ஒரு முறை குடும்பத்தினர் ஆன்மீக சுற்றுலா சென்ற போது பிரியனையும் அழைத்துச்சென்றால் வீட்டை, கம்பெனியைப்பார்த்துக்கொள்ள நம்பிக்கையானஆள் இல்லையென அண்ணி நினைத்த போது அவனாகவே முன் வந்து” நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க. நாம்பார்த்துக்கறேன். என்ற கண்ணு முன்னால பார்க்கிற சாமியே நீங்க தான். நீங்க வாழற ஊடுதான் எனக்கு கோயில். வேற கோயில் எனக்கெதுக்கு?” என பிரியன் சொன்னதைக்கேட்டு உண்மையிலேயே செகந்தி கண்கலங்கினாலும் உள் மனம்’ அப்பாடா, நிம்மதி. நாம சொல்லாமையே வீட்லயே இருந்துக்கிறதா சொல்லிட்டான்” என மகிழ்ச்சிப்பட்டாள்.
“பிரியன் ரொம்ப நல்ல பையன். அவன மாதர ஒழுக்கமானவனைப்பார்க்கவே முடியாது. அவனைக்கட்டிக்கப்போற பொண்ணு கொடுத்து வெச்சவ ” என ஊறவினர் ஒருவர் கூற, உடனே மறுத்த பிரியனின் அண்ணன் சுகந்தன், “நீங்க வெளில பார்த்துட்டு அவனை நல்லவனா நெனைக்கறீங்க. கம்பெனிக்கு வேலைக்கு வார பொண்ணுங்களோட அவனுக்கு சகவாசம் செரியில்லை. இவன கட்டீட்டு, வர்ற பொண்ணு கண்கலங்கும்னு தான் நாங்க பொண்ணு பார்க்கலே” என கூறியதை நம்பி அந்த உறவினரும் பலரிடமும் அவனை தவறானவனாக கூற, உறவுகள் பிரியனை விசேச நிகழ்வுகளுக்கு கூட அழைக்காமல் ஒதுக்கினர். பெண் கொடுக்கத்தயங்கினர்.
இந்த நிலையில் கம்பெனிக்கு வேலைக்கு வரும் பெண் ரதிக்கு பிரியனின் வெகுளி மனமும், ஒழுக்க குணமும், கடின உழைப்பும் பிடித்துப்போக அவனை காதலிக்க ஆரம்பித்தாள். அவள் பிரியனுக்கு ஒரு வகையில் ஒன்று விட்ட முறைப்பெண் தான். அவன் என்ன வேலை சொன்னாலும் செய்து முடித்தாள். அவனுக்கு பிடித்த உணவை தன் வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்து கொடுத்தாள். இதனால் பிரியனுக்கும் அவள் மீது பிரியம் வந்தது.
பிரியனின் அண்ணனின், அண்ணியின் சூழ்ச்சியை ரதி அறிந்திருந்தாள். கம்பெனிக்குள் செகந்தி தொடர்ந்து தினமும் வந்தால் தம்மை வேலையை விட்டு நிறுத்தி விடுவாள் என்பதால் செகந்தியின் வேலையையும் ரதியே முடித்து விட்டு, செகந்தியை கம்பெனிக்கு வந்தாலும் உடனே போகும் நிலையை உருவாக்கி , பிரியனோடு இணைந்து, பாக்கி இருக்கும் வேலைகளை முடிப்பாள்.
‘எத்தனை கடினமான வேலைகளாக இருந்தாலும் மனதுக்கு பிடித்தவர்கள் உடனிருந்தால் சிரமமென்பதே சிறிதும் தெரியாது. மனதுக்கு பிடித்த பிரியனோடு வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வரம் வேண்டும்’ என இஷ்ட தெய்வத்தை மனதில் அனுதினமும் வேண்டிக்கொள்வாள்.
“இத பாரு ரதி உன்னக்கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எனக்கு இஷ்டம் தான். உன்ன மாதிரி ஒரு பொண்ணு கெடைக்கிறது ரொம்ப கஷ்டம் தான். ஆனா,
அண்ணியோட சம்மதம் இல்லாம நடக்காது. அதனால…”
“இந்த ஜென்மத்துல அவங்க சம்மதிச்சு நடக்காது…”
“அண்ணிய நீ சந்தேகப்பட்டீன்னா எனக்கு உன்னப்புடிக்காமப்போயிடும்…”
“உங்களுக்கு புரியவைக்கிறது எப்படின்னு தெரியல. வேணுன்னா ஒன்னு பண்ணுங்க. காலைல கம்பெனிக்கு வந்தா நைட்டு தானே வீட்டுக்கு போறீங்க. இன்னைக்கு மத்தியானம் வீட்டுக்கு போங்க. நீங்க இல்லாதப்ப அவங்க உங்களப்பத்தி எப்படி பேசறாங்கன்னு புரியும்….”
“அப்படியா? நான் இல்லாதப்ப என்னப்பத்தி தப்பா பேசுவாங்களா…?”
“தப்பா பேச மாட்டாங்க. அவங்க மனசுல உள்ளபடி உண்மையா பேசுவாங்க… உங்க முன்னால பொய்யா பேசுவாங்க….”
“நீ சொல்லற மாதர நடந்துச்சுன்னா நீ சொல்லறத கேட்கறேன்….” என வெகுளியாகக்கூறியவன், உடனே புறப்பட்டு வீட்டிற்குச்சென்றான். அப்போது வீட்டிற்குள் சத்தமிட்டு அண்ணனுடன் அண்ணி சண்டை போடுவதைக்கேட்டு அதிர்ந்தவன், காலிங்பெல்லைத்தொடாமல் வாசற்படியிலேயே அமர்ந்து கொண்டான்.
“சொத்து எல்லாத்தையும் என்னோட பேருக்கு மாத்தனம்…” சத்தமிட்டுக்கேட்டாள் செகந்தி.
“அதெப்படி. பிரியனுக்கும் பங்கு கொடுக்கனுமே….?”
“அவன் செரியான மக்கு. ருசியா சாப்பாடு போட்டு, சிநேகமா நாலு வார்த்தை பேசுனா சொல்லற எடத்துல கையெழுத்துப்போடுவான். நீங்கதான் என்னை நம்ப மாட்டீங்கறீங்க…. இப்படியே பண்ணுனீங்கன்னா என்னோட பொணத்தைத்தான் கண்ணுல பார்ப்பீங்க….” கத்திப்பேசி, சண்டையிட்டு பிடிவாதம் பிடித்தாள்.
“உனக்கு மட்டும் கொடுத்தா ஊரும், உறவும் என்னைக்காரித்துப்பாதா…?”
“அதுக்கு ஒரு யோசனை வெச்சிருக்கேன். கம்பெனி தொழில் நஷ்டமாயிடுச்சுன்னு சொல்லி கடன் கட்டோணும்னு இந்தக்கம்பெனிய வித்திடுவோம். விக்கிற பணத்துல எங்கம்மா வீட்ல இருக்கிற கம்பெனி கடன அடைச்சுட்டு அவங்க கம்பெனிய வேற ஒருத்தருக்கு விக்கப்போறத நாம வாங்கிடுவோம். அத எம்பேருக்கு எழுதீட்டு அவங்க எனக்கு தானக்கிரையமா, சீதனமா கொடுத்ததா ஊரு, உலகத்துக்கு சொல்லிப்போடுவோம். நமக்கு சொத்துக்கு சொத்தாச்சு. அந்த கம்பெனில உங்க தம்பிய வேணும்னா பாவம் புடிக்காம இருக்கறதுக்கு வேண்டி வேலைக்கு வெச்சுக்குவோம். விசுவாசமான அவன மாதர வேலைக்காரங்க கெடைக்கோணுமில்ல. எப்படி என்னோட ஐடியா…?”
“சூப்பர்டி… அப்படியே பண்ணிப்போடுவோம்” என சிரிப்பு சத்தத்துடன் மகிழ்ச்சியாக அண்ணன் வீட்டின் கதவைத்திறந்து வெளியே வந்த போது, வாசற்படியில் அமர்ந்திருந்ததம்பி பிரியனின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுவதைக்கண்டு அதிர்ந்தான்.
“டேய் தம்பி… பிரியா… இங்க என்னடா பண்ணறே…? ஏண்டா அழுகறே…? இந்த நேரத்துக்கு கம்பெனிய உட்டுப்போட்டு இங்க எதுக்குடா வந்தே...? இப்பத்தா உன்ற அண்ணி, என்ற கிட்ட உனக்கு ரொம்ப புடிக்கும்னு அல்வா செய்யப்போறதா சொன்னா. உன்ற மேல உசுரையே வெச்சிருக்கறா போ. நாங்க இருக்கற போது நீ எதுக்கு கவலைப்படறே…? செத்துப்போன அம்மா, அப்பாவ நெனைச்சு கவலப்படறியா? நாங்க உனக்கு அப்பா, மாதிரி இருக்கற போது கவலைப்படாதே…” என கூறி கட்டியணைக்க வந்தவனை தட்டி விட்டான் பிரியன். கோபத்தில் கீழே தள்ளியும் விட்டான்.
இதைக்கண்டு வெளியே ஓடி வந்த செகந்தி, “அடப்பாவி. ஒரு அப்பனாட்ட உன்ன வளர்த்துனவரப்போயி தள்ளி உட்டுட்டியே…? நீ நல்லா இருப்பியா…? நாசமா போமாட்டியா…? ஆரோ உனக்கு சொல்லிக்கொடுத்து ஆட்டம்பழக்கறாங்கன்னு மட்டும் தெரியுது. அந்த வேலைக்காரச்சிறுக்கி ரதியோட சதிதான்னு நெனைக்கறேன். முதல்ல அவள வேலைய உட்டு போகச்சொல்லுங்க” என கூறிய அண்ணியை உக்கிரமாகப்பார்த்தான் பிரியன்.
“நீங்க இப்படி எனக்கு சதி பண்ணிப்போடுவீங்கன்னு தெரிஞ்சுதான் அப்பா சாகறதுக்கு முன்னாடி எல்லாச்சொத்துக்களையும் என்னை நம்பி என்னோட பேர்ல உயில் எழுதி வெச்சிருக்காருன்னு என்னோட பீரோவுல இருந்த ஒரு பத்திரத்தை நேத்து படிச்ச போது தெரிஞ்சிட்டேன். அப்பா, அண்ணனை நம்பாம நம்ம பேர்ல எழுதினா பரவாயில்லை. நம்பிக்கையான அண்ணி பேருக்கு நாம மாத்திக்கொடுத்துப்போடலாம்னு நானும் நெனைச்சேன். தாயாட்ட நான் நெனைச்ச அண்ணி இப்படி பேயாட்ட நடந்துக்குவாங்கன்னு இப்பதான் தெரிஞ்சிட்டேன். நீங்க நடிப்புக்காக இதெல்லாம் உன்னோடது தான்னு பொய்யா சொன்னது கூட உண்மையா ஆயிடுச்சு பாத்தீங்களா? என்னை கடைசி வரைக்கும் வேலைக்காரனாக்க பார்த்த உங்களை நான் எனக்கு வேலைக்காரங்களா கூட வெச்சுக்க மாட்டேன். அதே சமயம் உங்களைப்போல மொத்த சொத்தையும் நானே வெச்சுக்க ஆசைப்படவும் மாட்டேன். ஆனா, உங்களுக்கு சேர வேண்டிய சொத்த உங்களுக்கு கொடுக்க மாட்டேன். உங்க பையனுக்கு அவன் பெரியவன் ஆன பின்னாடி கொடுக்கப்போறேன். அதோட என்ற புத்திக்கண்ணத்திறந்து விட்ட, என்னை உயிருக்குயிரா நேசிக்கிற ரதியும் நானும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்” என பிரியன் உறுதியாக கூறியதும், தங்களுடைய நிலை இப்படி அஸ்தமனமாகுமென கனவிலும் நினைக்காத தம்பதியினர் இருவரும் திக்பிரமை பிடித்தது போல் உறைந்து நின்றனர்!