நிலாவே! நீ சாட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 161 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ரெண்டு பேரு நீராணிக்கனா இருந்தாங்க. கொளத்துப் பரவ, ரெண்டு பேரும், சரியா பகுந்துகிட்டு, தண்ணி பாச்சுர வேலயப் பாத்துக்கிட்டு வந்தாங்க. 

பாத்து வரயில, ஒருநா! தண்ணி கெட்டுறதுல ரெண்டு பேருக்குஞ் சண்ட வந்திருச்சு. ரெண்டு பேருமே விக்கந் தக்கமா இருந்து வந்தாங்க. ஒருத்தன – ஒருத்தன் கொல செய்யுற நோக்கத்துல, ரெண்டு பேரும் இருந்து வாராங்க. 

ராத்திரிக்குத் தண்ணி கெட்ட வரும்போது, எப்டிண்டாலும், ஒருத்தன ஒருத்தன் கொல்லணும்ண்டு நெனச்சுக்கிட்டாங்க. இவன, அவ், கொல செய்யணும்ண்டு நெனக்கிறா. அவன, இவ், கொல செய்யணும்ண்டு நெனக்கிறர். நெனச்சுக்கிட்டிருக்கயில, அண்ணக்கி ராத்திரி கோழி கூப்ட, ரெண்டு பேரும் மட தொறக்கப் போறாங்க. மடயத் தொறந்து விட்டுட்டு, ஒருத்த மடையடியில் படுத்துக்கிட்டர். இன்னொருத்த, தண்ணி பாச்ச, வயலப் பாக்கப் போயிட்டா. 

வயலச் சுத்திப் பாத்திட்டு வந்தவ், படுத்துக் கெடந்தவன, கையில வச்சிருந்த கம்பக் கொண்டு, ஒரே அடியா அடிச்சுப் போட்டுட்டா. அடி பலமா விழுகவும், அவனால எந்திரிக்க முடியல. சாகப் போற நேரத்ல, லேசா கண்ணத் தொறந்து பாத்தா. மேல வானத்ல நெலா தெரிஞ்சிச்சு. தெரியவும், நெலாவே, நீ சாட்சிண்டு, சொல்லிட்டு, செத்துப் போயிட்டா. 

வயக்காட்டு வரப்ப, அட்டத்துல தோண்டி, அவனத் தூக்கி, அதுக்குள்ள வச்சு, சேத்தப் போட்டுப் பூசிப்பிட்டா. பூசுனதக் காங்க முடியல. அப்டிப் பூசிப்பிட்டா. 

நல்லா விடிஞ்சு போச்சு. தண்ணி கட்டப் போன ஆம்பளைய, இன்னுங் காணமண்ட்டு, வாசப்படில நிண்டு, புருசன, பொண்டாட்டி எதுரு பாத்துக் காத்துக்கிட்டிருந்தா. ஆரு? செத்தவ் பொண்டாட்டி. ஒரு நா! ரெண்டு நா! மூணு நா ஆச்சு. புருச் வரல. வெளியெல்லாந் தேடிப் பாத்தா. ரெம்ப வருத்தத்தோட அழுது பொலம்பிக்கிட்டிருக்கா. அவந்தர் செத்து, வயக்காட்டு, வரப்புக்குள்ள கெடக்குறானே. எப்டி வரப் போறர். வரல. துப்புங் கெடைக்கல்லே. பாத்தவங்கிட்டயெல்லாம் எம்புருசனப் பாத்தீங்களா? எம்புருசனப் பாத்தீங்களாண்டு கேட்டுக்கிட்டிருக்கா. 

வெளியெல்லாந் தேடிப் பாத்திட்டு விட்டுட்டா. அப்டியே எடுத்தாட்ட ஆளிருந்தாத்தான, பொம்பள என்னா செய்வா. விட்டுடா. 

அவன, அடுச்சுச் கொண்ட அண்ணக்கி, வீட்டுக்கு வந்து, பொண்டாட்டிகிட்ட மாத்திரம், நீராணிக்கன அடுச்சு, வரப்புக்கடில பெதச்சு வச்சிட்டேண்டு சொல்லிப்பிட்டா. அவ, அதக் காதுல வாங்கி, மனசுல வச்சுக்கிட்டா. 

ஒரு நா! புருசனும் – பொண்டாட்டியும் வீட்டுக்கு வெளிய நெலா வெளிச்சத்துல, கட்டுலப் போட்டு, படுத்துக் கெடந்தாங்க. 

அப்ப, நெலாவப் பாத்து சிரிச்சா. என்னா, நெலாவப் பாத்து சிரிக்கிறேண்டு, பொண்டாட்டி கேட்டா. கேக்கவும் சொல்லா மாட்டேண்ட்டா. வற்புறுத்தலா கேக்குறா. கேக்கவும், 

அந்த நீராணிக்கன, அடிச்சு சாகவச்சு, வரப்புக்கடியில பெதச்சுப்பிட்டே. அவ் சாகும் போது, ‘நெலாவ நீ சாட்சிண்டு’ சொல்லிட்டுச் செத்தர். அதர், அந்த நெலா வந்து, எப்ப சாச்சி சொல்லப் போகுதோண்டு சிரிக்கிறேண்டு, சொல்லிப்பிட்டா. 

ஒருநா! புருசம் பொண்டாட்டிக்குள்ள சண்ட வந்திருச்சு. கம்ப எடுத்துக்கிட்டு அவள அடிக்கப் போனீர். அவ தெருவுக்கு ஓடியாந்துட்டா. அப்பவும் – இவ் விடல, வெரட்டிக்கிட்டு ஓடியாறா. 

ஐயையோ! என்னக் காப்பாத்துங்க. நீராணிக்கன அடுச்சுக் சாகவச்சு, வரப்புக்கடியில பெதச்சாப்ல, என்னயும் சாக வைக்கப் போறாண்டு, வீதில நிண்டுகிட்டுச் சத்தம் போடுறா. போடவும். 

ஊரு ஆளுங்கெல்லாம் கூடிட்டாங்க. அவன, அடி – அடிண்டு அடிச்சு, மடைக்கு இழுத்துட்டுப் போனாங்க. போயி, எங்கடா பெதச்சண்டு கேக்கவும், அவனும் எடத்த சொல்லிட்டர். சொன்ன எடத்த, தோண்டிப் பாத்தாங்க. பாக்கயில, அழுகின நெலயில, பொணம் வெளிய வந்திச்சு. அவனப் புடுச்சு, ஊருப் பொது எடத்ல கட்டி வச்சிட்டு, பஞ்சாயத்துக்கு, ஊரக் கூட்டுனாங்க. 

ஊர்ப் பஞ்சாயத்துக்கு, அவனக் கூட்டிக்கிட்டு வர்ரபோது, அதே நெலா மேல இருந்திச்சு. கொல, செஞ்ச குத்தத்துக்கு, அவனச் சுண்ணாம்புக் காளவாசல்ல வச்சு, நீத்துப்பிட்டாங்களாம்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *