நிலாக்காலம்





(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்களூர் பள்ளிக்கூடத்தில் அப்போ நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். மேற் பிரிவு படிப்பிற்கு பிரபல கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்காக விண்ணப்பிக்கும் வகுப்பு. ஏழாம் வகுப்பு வரையில்தான் அங்கு இரண்டு பிரிவுகள் இருந்தன. எட்டாம், ஒன்பதாம் தரங்களில் ஒரே பிரிவு தான். அதிலும் ஒவ்வொரு வகுப்பிலும் பத்து அல்லது பதினைந்து பேர் வரையில் தான் வந்து சென்றார்கள். ஆனால், பள்ளிக்கூடத்திலிருந்து இரண்டு சோதனைகள் எடுக்கலாம் என்ற சலுகை தீவிரமாக அமுலில் இருந்ததில் பத்தாம் தரத்தில் மட்டும் இரட்டிப்பான எண்ணிக்கையில், முப்பது, முப்பத்தைந்து பேரளவில் இருந்தார்கள்.
பத்தாம் தரத்திற்கு வந்ததன் பின்பு, வகுப்புகளுக்கு வகுப்பு இடாப்பு காவுதல், வாத்திமார் ‘வெத்திலை வாய்’ கொப்பளிக்க தண்ணீர்ச் செம்பு எடுத்துச் செல்லல், அவ்வப் போது அண்டையிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்திலோ அல்லது வயலிலோ சிரமதானப் பணிபுரிதல் போன்ற வேலைகளும் செய்யவேண்டும் என ராசேந்தி சொன்னதை பல காலங்களாக ‘சீரியசாகவே’ நம்பிக் கொண்டிருக்கும் அளவிற்கு நான் அப்போது வலு அப்பாவியாக இருந்தேன்.
ஏழாம் வகுப்பில் நான் ‘ஏ’ பிரிவில் படித்தேன். எங்கள் வகுப்பிற்கு விஞ்ஞான பாட ஆசிரியையாகவும், வகுப்பு ஆசிரியையாகவும் புதிய ‘ரீச்சர்’ ஒருவர் அடுத்த கிழமை வர இருப்பதாக முதலாந் தவணை ஆரம்பித்த முதல் நாளன்று கையில் உள்ள பிரம்பால் தனது பாதத்தில் பறையடித்தவாறே தலைமை வாத்தியார் கூறினார். பிரம்படி பட்டுப்பட்டு அவரது வலது பாத நடுப்பகுதி கண்டிப் போய் நாவல் பழ நிறத்தில் இருந்தது. ராமச்சந்திரன் தான் அந்த ரகசியத்தை எனக்குக் கூறி உயிரியல் சித்தாந்தம் ஒன்றைக் கண்டுபிடித்தவனைப் போல பெருமை கொண்டான்.
புதிய ‘ரீச்சர்’ வந்ததன் பின்பு தான் வகுப்பு ‘மொனிட்டர்’ தெரிவு செய்யப்படுவாராம். அது வரை பத்தாம் வகுப்பில் இரண்டாவது தடவையாக ‘சிரமதானப் பணிகளில்’ ஈடுபட்டுவரும் ஆதவன் அண்ணா தான் ‘சைலன்ஸ் பிறியேட்டில்’ எங்களது வகுப்பறையில் கதைப்பவர்களை வாங்கில் மேல் ஏற வைப்பாராம்.
தலைமை வாத்தியாரின் மகன் ஈசனும் எங்களது வகுப்பாதலால், அவ்வப்போது ஓடைக்கரை தோசை போல சுடச்சுட எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டிருந்தன. அதனால், ஈசன் அவன் இல்லாத நேரங்களில் ‘றேடியோ சிலோன்’ என்றே அழைக்கப்பட்டான்.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ‘நமசிவாய வாழ்க’, என ஆரம்பித்த கூட்டுப் பிரார்த்தனை ‘பல்லோரும் ஏற்றப் பணிந்து’ என மங்களமாக முடிவடைந்து அமர்ந்த கையோடு மெல்லிய குரலில் ஈசன் சொன்னான். “புது ‘ரீச்சர்’ வரணியிலை இருந்து வாறா. அவவின்ரை பெயர் நாகபூசணி.”
‘நாகபூசணி ‘ரீச்சர்’ எப்படி இருப்பா?” என ராமச்சந்திரன் ஐம்பது சதம் வைத்து கட்டை ரவியுடன் பந்தயம் பிடித்தான்.
“பெயரில் ஒட்டியிருக்கும் பூசணி போலவே ‘ரீச்சரும்’ பருமனாக இருப்பா” என்பது ராமச்சந்திரனின் வாதம். அவன் பிற்காலங்களில் ‘லொஜிக்’கைத் தேர்ந்து படித்தானா என்பது பற்றி எனக்கு இப்போது ‘ஐடியா’ ஏதுமில்லை.
ரீச்சர்’ ஒல்லியா, மஞ்சள் நிறமாக ‘கூப்பன்’ கடை ‘மனேஜர்’ மாதிரி இருப்பா!” என்றான் கட்டை ரவி.
பந்தயத்தை அன்று வெட்டிவிட்டவன் நசுங்கிக் கொண்டு நடுவில் அகப்பட்டிருந்த ராசேந்திரன்.
பாடசாலை தொடங்கி பத்து நாட்கள் ஓடி மறைந்தன. அதற்குள் ‘ப’ வகுப்பார் விஞ்ஞான பாடத்தில் மூன்று பாடங்கள் முடித்துவிட்டார்களாம். ஒரு நாள் இடைவேளையின் போது பரமேஸ் முன்னாலிருந்த சாவித்திரிக்கு அழாக் குறையாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
வகுப்பில் எல்லோரது உடுப்புக்களும் சலவை செய்யப்பட்டதாக இருந்தது அன்றைய தினம் ஒரு திங்கட்கிழமை என்பதை நினைவூட்டிக் கொண்டிருந்தது. தேவாரம் முடிந்து நாம் கதிரையில் அமர்ந்த போது ஆதவன் அண்ணா சொன்னார். “இண்டைக்கு உங்கடை ‘ரீச்சர்’ வந்திட்டா. இனி நான் வரமாட்டன்.”
சற்று நேரத்தில் தையல் பெட்டி ‘கடகட’ ஒலி எழுப்ப, மூச்சு வாங்கியபடியே ஓடிவந்து முன் வரிசைக் கதிரையில் அமர்ந்தாள் சாவித்திரி.
“டியேய் பரமேஸ், புது ‘ரீச்சர்’ வந்திட்டாடீ! மெல்லிசா, சிகப்பா, நல்ல வடிவா இருக்கிறாடீ!” புத்தகப் பையைத் தனது கதிரையில் கொழுவிவிட்டு, தகரப் பெட்டியை மேசையில் வைத்தவாறே பின் வரிசையில் இருந்த பரமேசுக்கு இளைக்க, இளைக்க சாவித்திரி சொன்னது, அவளுக்கு அடுத்த வரிசையில் ஒரு மேசை இடைவெளியில் இருந்த எனக்கும் தெளிவாகக் கேட்டது.
“உனக்கு எப்பிடிடீ தெரியும்?” இது பரமேஸின் கீச்சுக் குரல்.
“இண்டைக்கு பக்கத்து வீட்டு மூத்ததம்பி வாத்தியார் லீவு எண்டு சொல்லி லீவுக் கடிதத்தை தலம் வாத்தியாரட்டைக் குடுக்கச் சொல்லித் தந்தவர். கடிதம் குடுக்கவெண்டு தலம் வாத்தியாற்றை அறைக்கை போனனான். அப்பதான் புது ‘ரீச்சரைக்’ கண்டனான்.”
சாவித்திரி வாயை மூடும் போது, வகுப்பு வாசலில் கடப்பு போலிருந்த கட்டைக் கதவைத் திறந்தவாறே ‘தலம் வாத்தியார்’ என்றழைக்கப்படும் தலைமை வாத்தியார் வகுப்பிற்குள் நுழைந்தார். கூப்பன் கடை ‘மனேஜரையே’ ‘கிளீன் போல்ட்’ ஆக்கிவிட்ட குதூகலத்துடன், தலைமை வாத்தியாரின் பின்னால் புது ‘ரீச்சர்’!
அவர்களைக் கண்டு எழும்பியபடியே கட்டை ரவி ராமச்சந்திரனை திரும்பிப் பார்த்தான். ‘எடுத்து வை ஐம்பது சதத்தை. ஆறுமுகப்பாவின் கடையில் பாக்கு முட்டாசு வேண்ட’ என்பது போலிருந்தது அவனது பார்வை.
தமிழ் படிப்பிக்கும் போது ஒரு நாள் பெரியதம்பி வாத்தியார் ‘தீர்க்கதரிசி’ என்ற பதத்தை விளக்கி, அதற்கு ஒருவரை உதாரணம் கூறும்படி கேட்டார். எல்லோரும் ஆளை ஆள் பார்த்து முழுசிக் கொண்டிருக்கும் போது அவரே சொன்னார். ‘பாரதியைச் சொல்லலாம்’. இச் சம்பவத்தின் பின்பு எனக்கோ பாரதியை விட கட்டை ரவியே அதற்குப் பொருத்தமானவன் போல் தோன்றியது.
“வணக்கம் தலம் வாத்தியார்.” நாற்பது பேரின் குரல்களிலும் கட்டை ரவியின் குரலே பலமாக ஒலித்தது.
“வணக்கம் பிள்ளைகளே! அமருங்கள். இவ தான் இனி உங்களுக்கு வகுப்பு ‘ரீச்சர்’.” தலைமை வாத்தியார் சத்தமாகச் சொன்னது பின்னால் இருந்த ‘ப’ வகுப்பாருக்கும் கேட்டிருக்கும் என்பதை எங்கள் வகுப்பை எட்டிப்பார்த்த சில தலைகள் உறுதிப்படுத்தின.
பெரியதம்பி வாத்தியார் ‘பென்சனில்’ போகும் போது நடந்த பிரியாவிடைக் கூட்டத்தின் பின்பு, நாகபூசணி ‘ரீச்சரை’ எங்கள் வகுப்பிற்கு கூட்டிவந்த அன்றைய தினம் தான் பிரம்பு இல்லாது தலைமை வாத்தியார் நின்றதை நான் கண்டேன். நிராயுதபாணியாக நின்றதலோ என்னவோ அதிக நேரம் நிற்காது அவர் சென்றுவிட்டார்.
புதிய ‘ரீச்சர்’ வகுப்பறையை ஓர் தடவை நோட்டம் விட்டா.
எங்கள் வகுப்பை ‘ப’ வகுப்பிலிருந்து காக எச்சத்தினால் வெள்ளையடிக்கப்பட்ட ‘ஸ்கிறீன்’ ஒன்று அரையுங்குறையுமாகப் பிரித்து வைத்துக்கொண்டிருந்தது.
இருபத்திரண்டு ‘பொடியங்களும்’, பதினெட்டுப் பெட்டையளும்’, ஆக சரியாக நாற்பது பேர் இரு பிரிவுகளாக ஆறு வரிசையில் வகுப்பில் அமர்ந்திருந்தோம். அதிசயமாக அன்று எவருக்குமே தலையிடியோ, காய்ச்சலோ அல்லது வயிற்றோட்டமோ வரவில்லை.
“என்னுடைய பெயர் ‘மிஸ்’ நாகபூசணி நாகநாதன். சரி இப்ப நீங்கள் ஒவ்வொருத்தரா எழும்பி உங்கடை பெயரைச் சொல்ல வேணும். முதல் வரிசையிலிருந்து சொல்லத் தொடங்குங்கள் பிள்ளையள்.”
“ராமச்சந்திரன் ‘ரீச்சர்’.”
“ராசேந்திரன் ‘ரீச்சர்’.”
“ரவிச்சந்திரன் ‘ரீச்சர்’.”
“சிவகுமார் ‘ரீச்சர்’.”
ஆரோகரணத்திலிருந்து அவரோகணத்திற்கு குரல்கள் மாறுகின்றன.
“சாவித்திரி ‘ரீச்சர்’.’
“விஜயகுமாரி ‘ரீச்சர்’.”
“காஞ்சனா ‘ரீச்சர்’.”
“பாரதி ‘ரீச்சர்’.”
அடுத்தது இரண்டாவது வரிசை. குணட்டியின் முறை. எழும்பினான் என்றால் சூரன் மாதிரி நெஞ்சை நிமிர்த்தியவாறு தான் நிற்பான். பவ்வியமாக குணரத்தினம் என்ற தனது பெயரைச் சொன்னான்.
“அப்பாடா…. நல்ல வேளை உமக்கும் சிவாஜி கணேசன் அப்பிடி எண்டு ஒரு பெயரும் இல்லாது போனது” என்றா ‘ரீச்சர்’ முகத்தில் செட்டான சிரிப்புடன்.
அதன் பிறகு, நடிப்பு என்றால் அகராதியில் அர்த்தம் தேடும் குணட்டி கூடச் சில காலங்கள் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டதாக ஞாபகம்.
பெயர் கேட்டு அறிந்த பிறகு ‘மொனிட்டர்’ தேர்வு ஆரம்பமானது.
“போன தவணை முதலாம், இரண்டாம் பிள்ளையளாக வந்தாக்கள் கையை உயர்த்துங்கோ பார்ப்பம்.” இடக் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு, வலது கையால் ‘டஸ்டரை’ எடுத்துக் கரும்பலகையை அழித்தவாறே ‘ரீச்சர்’ சொன்னா.
பரமேஸ்வரி என்னைப் பார்த்தாள். இருவருமே கைகளை உயர்த்தினோம்.
“சரி, உங்கள் இரண்டு பேரிலும் ஆர் ‘மொனிட்டரா’ வாறதை வகுப்புப் பிள்ளையள் விரும்பியினம் எண்டு இப்ப நான் ஒரு தேர்வு வைக்கப்போறன். எல்லாரும் குனிஞ்சு முகத்தை மேசையிலை வைச்சுக் கொள்ளுங்கோ. இப்ப நான் இவையள் இரண்டு பேரின்ரை பெயரையும் சொல்லுவன். உங்களுக்கு விருப்பமானவற்றை பெயரை சொல்லேக்கை நீங்கள் கையை உயர்த்த வேணும். சரி தானே?”
நாற்பது பேரும் முகத்தினை மேசையில் புதைத்துக் கொண்டோம்.
தேர்வு முடிந்து முடிவினை கரும்பலகையில் எழுதினா ‘ரீச்சர்’. எனக்கு இருபத்தியொரு வாக்குகள். பரமேஸ்வரிக்கு பத்தொன்பது வாக்குகள்.
“பொடியங்களிலை இருந்து ஆரோ ஒரு செம்மறி பரமேசுக்கு கை கை உயர்த்தி இருக்கு. அநேகமாக அது பெட்டை ரவியாகத் தான் இருக்கும்” என்றான் தங்கராசன்.
“ஹூ இஸ் த பிளக் ஷீப்” என்ற பாடல் அந்த நாட்களில் எழுதப்படாத அளவில் பெட்டை ரவி தப்பினான். அல்லாவிடின் அப்பாடலை பாடிப் பாடியே தங்கராசன் பெட்டை ரவியைச் சாகடித்திருப்பான்.
நாகபூசணி ‘ரீச்சர்’ வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்களூர் பள்ளிக்கூடம் பல மாறுதல்களைக் கண்டது.
எங்கள் வகுப்பறையில் இருந்து பார்த்தால், முன்னால் வாசிகசாலையில் இருந்து சனங்கள் பத்திரிகை பார்ப்பதும், மழைக்காலங்களில் ஊரா வீட்டு ஆடுகளெல்லாம் வாசிகசாலை வாங்கிலில் ஏறிநின்று பிழுக்கை போடுவதும்… அருகே அரச மரத்திற்குப் பின்னால் ஆறுமுகப்பாவின் கடை வாசலில் அடிப்பக்கம் அழுகிய வாழைக்குலை சுழன்று கொண்டிருப்பதும் தெரியும். ‘ரீச்சரின்’ வருகையின் பின்னர் முன்பக்க எல்லையில் இருந்த கம்பி வேலி முழுவதும் ஆளளவு உயரத்திற்கு கிடுகுகள் வரியப்பட்டன.
பள்ளிக்கூடத்தின் பின்புறத்தினை பாவட்டையும், கற்றாளையும் கூடவே சிறுநீர் நெடியும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருந்தன. ஒண்டுக்குப் போறதென்றால் மூக்கைப் பொத்திக் கொண்டு தான் போக வேண்டியிருந்தது. மூத்ததம்பி வாத்தியாரையும், கந்தப்பு வாத்தியாரையும் அடிக்கடி அங்கு நாம் காண்போம். அந்தப் பற்றைகள் அழிக்கப்பட்டு, அங்கு இரண்டு தகர மலசலகூடம் அமைக்கப்பட்டு, மறைவுக்கு காவோலையால் வேலியும் அடைக்கப்பட்டது. மலசலகூடம் அமைக்கப்பட்ட பின்னரும் கூட வேலியோரத்திலேயே கந்தப்பு வாத்தியார் குந்தியிருந்ததாக குகதாசன் கூறியது எனக்கு இப்பொழுதும் ஞாபகத்தில் உள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் உடுப்பில் கூட மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்பதாம், பத்தாம் வகுப்புக்களில் படித்த சில அக்காமார்கள் உடுத்து வந்த ‘ஹாவ் சாறி’ மற்றும் ‘கலர்’ சட்டைகள், ‘கலர் ஸ்கேட்டுக்கள் யாவற்றுக்கும் பிரியாவிடை கொடுக்கப்பட்டு, சீருடை அறிமுகமானது. வேட்டியுடனும், வெறும் மேலுடனும் வந்த மூத்ததம்பி வாத்தியார் உட்பட்ட நாலைந்து வாத்தியார்களும் நாசனலுடன் வர ஆரம்பித்தனர். தூய வெள்ளை நிறத்தில் ஒன்று, பளுப்பு நிறத்தில் ஒன்றுமாக இரண்டு ‘நாசனலுடனேயே’ காலத்தைக் கழித்த மூத்தம்பி வாத்தியார், ‘பென்சன் எடுக்கிற காலமாகப் பார்த்து இப்பிடியாய் போச்சு’ எனக் குறைப்பட்டவாறே மேலும் இரண்டு ‘நாசனல்’ தைக்க ஆலடிச் சந்தை குறுப்பனிடம் அளவுகொடுத்ததாக ஆதவன் அண்ணா ஆக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
கட்டை ரவி, பெட்டை ரவி, வடலித் திடல் விமலா, ஐயர் வீட்டு விமலா என்று அழைக்கப்படுவது அருகிப் போக ஆர்.ரவிச்சந்திரன், கே.ஆர்.ரவிச்சந்திரன், கே.விமலா, எஸ். விமலா என அவர்கள் அழைக்கப்படலாயினர்.
வாத்தியார் என்றோ, தலம் வாத்தியார் என்றோ சொல்ல வேண்டாம் என்றும், எல்லா வாத்தியார்களையும் ‘சேர்’ என்றும்,தலம் வாத்தியாரை ‘பிறின்சிப்பல்’ என்றும் அழைக்கும்படியும் ‘ரீச்சர்’ கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தா.
“உலகத்தை மாத்த வெளிக்கிட்டுட்டா சிங்காரி. அவ சொன்னதுக்கெல்லாம் ஓணான் மாதிரி இந்தாளும் தலையாட்டுது” என மூத்ததம்பி ‘சேர்’ பங்குனி மாதக் கள்ளைக் குடித்துவிட்டு இரவில் வீட்டில் சத்தம் போட்டதாக ‘சைலன்ஸ் பிறீட்’ முடிந்த கையோடு சாவித்திரி ஒரு நாள் பரமேசுக்கு கீச்சுக் குரலில் சொல்லிக் கொண்டிருந்தது ஈசனுக்கும் கேட்டிருக்கும்.
முதலாம் தவணை முடியும் தறுவாயில் நாகபூசணி ‘ரீச்சருக்குத்’ துணையாக தோற்றத்திலும், நடத்தையிலும் அவவுக்கு எதிர்மாறான அம்சங்களுடன் ஒரு சங்கீத ‘ரீச்சரும்’ வந்து சேர்ந்தா. பத்துப் பாடங்களுடன் எங்களுக்கு பதினோராவது பாடமாகச் சங்கீதமும் சேர்க்கப்பட்டது.
ஸரிகமபதநிஸ பாடும் போது ஒரு நாள் ராமச்சந்திரன் ஆரோகணத்தில் ‘நீ சா’ எனப் பாடிவிட்டான். “ஆரையடா சாகச் சொல்லுறாய் மொக்கு” என்று கேட்டவாறே அன்று சங்கீத ‘ரீச்சரிடம்’ அவன் வாங்கின அடி போல வண்டில்கார வடிவேலண்ணனின் நாம்பன் மாடு கூட சீவியத்தில் வாங்கியிருக்காது.
பள்ளிக்கூடத்திற்கு வடக்கே சலவைத் தொழிவாளர் களின் துறை ஒன்று இருந்தது. அதன் எல்லையோடு உடைந்த கரும் பலகைகள், கால்கள் இழந்த கதிரை, மேசைகள் குவிக்கப்பட்டும், சிலந்திகளால் வலை பின்னப்பட்டும் கவனிப்பாரற்று ஒரு அறை கிடந்தது. அதற்குள் ஒரு சாரைப் பாம்பு செல்வதை தான் கண்டதாக கே.விமலா ஒரு நாள் சொன்னதிலிருந்து அதனை ‘பாம்பு அறை’ என்றே நாம் அழைத்து வந்தோம். பத்தாம் வகுப்பு அண்ணாமாரால் சிரமதானத்திற்கு உட்பட்டதில் பாம்பு அறை ஆசிரியர்களின் ஓய்வு நேர அறையாக உருமாற்றமடைந்தது. சங்கீத ‘ரீச்சரை’ அநேகமான நேரங்களில் அங்கு காணக்கூடியதாக இருந்தது.
முதலாவது தவணைப் பரீட்சை நடைபெற்றது. பரமேஸ் முதலாம் பிள்ளையாகவும், நான் இரண்டாவதாகவும், மகேஸ்வரன் மூன்றாவதாகவும் வந்திருந்தோம். மூவருக்குமே விஞ்ஞான பாடத்திற்கு நூறு புள்ளிகள் கிடைத்திருந்தன.
இரண்டாவது தவணை ஆரம்பமாகியது.
புலமைப் பரிசில் சோதனைக்காக தயார்படுத்தும் காலம். “போன வருசம் எங்கடை பள்ளிக்கூடத்திலை இருந்து ஒருவர்தன்னும் ‘ஸ்கொலசிப்பில’ தேர்ச்சியடையவில்லை. இம்முறை எனது வகுப்பிலிருந்தே குறைந்தது நாலு பேரையாவது ‘பாஸ்’ பண்ண வைப்பன்” என்று நாகபூசணி ‘ரீச்சர்’ ஒரு செவ்வாய்க்கிழமை ‘அசெம்பிளி’யில் சொன்னது ‘பீ’ வகுப்பு ஆசிரியர் வீரகத்தி ‘சேருக்கு’ வயிற்றில் புளியைக் கரைத்தது.
மூன்று பேர் சரி நாலாவதாக ‘ரீச்சர்’ யாரைச் சொல்லியிருப்பா என்பதை அறிவதில் சில காலங்கள் ராமச்சந்திரன் மிகவும் ஆர்வமாக இருந்தான்.
“சோதினை மட்டும் சனிக்கிழமைகளிலும் ஒரு இரண்டு மணித்தியாலம் வகுப்பு வைப்பன். எல்லோரும் வரவேணும்.” ‘ரீச்சர்’ சொன்ன போது முதலில் ராமச்சந்திரன் தான் தலையாட்டினான்.
சனிக்கிழமை வகுப்புகளில் பீ பிரிவையும் சேர்க்க வேணும் எண்டு பிறின்சிபல் பிரியப்பட்டதாகவும், அதற்கு ரீச்சர் ஓம்பட்டதாகவும், வீரகத்தி சேர் நெருப்பெடுத்ததாகவும் ஈசன் எவருமில்லாத சமயத்தில் ஒரு நாள் எனக்குச் சொன்னான்.
புலமைப் பரிசில் பரீட்சை முடிவு வெளியானது.
பள்ளிக்கூடத்தில் மூவர் சித்தியடைந்திருந்தோம். மூவரும் எங்கள் வகுப்பைச் சேர்ந்தவர்களே. பரமேசும், நானும், தங்கராசனும். பீ பிரிவில் எவருமே இல்லை.
“சனிக்கிழமைகளிலையும் வகுப்பு வைச்சு பெரிசா அவ என்னத்தைக் கிழிச்சா?” என்று மூத்ததம்பி சேர் வீட்டிற்கு ஒரு நாள் போன இடத்தில் வீரகத்தி சேர் சத்தம் போட்டிருக்கிறார். வழமை போல பரமேசுக்கு சாவித்திரி சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்த நாட்களில் தான் கந்தசாமி என்றொரு ஆசிரியர் எங்களூர் பள்ளிக்கு மாற்றலாகி வந்தார். அசப்பில் பார்த்தால் எம்.ஜி.ஆரைப் போல் இருப்பார். எங்களுக்கு உடற்பயிற்சி என்றொரு பாடத்திற்காக அவரைப் போட்டிருந்தார்கள். முன்னால் சிகப்பு பாஸ்கட் பூட்டிய புத்தம் புதிய றலி சைக்கிளில் அயற் கிராமத்திலிருந்து வந்து சென்றார்.
வரணிக்கு தினமும் வந்து செல்வது கடினம் எனக் கூறி மூன்றாம் தவணை தொடக்கத்தில் நாகபூசணி ரீச்சரும் எங்களூரிலேயே, எங்கள் வீட்டுக்கு மூன்று, நான்கு வீடு தள்ளி வாடகைக்கு ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தா.
பின்னேரங்களில் நான் பிள்ளையார் கோவிலடியில் பொடியளுடன் ‘றவுன்றேஸ்’ விளையாடி விட்டுத் திரும்பும் சந்தர்ப்பங்களில் பல தடவைகள் ‘ட்ரெசிங் கவுனுடன்’ ரீச்சரை வீட்டு வாசலில் கண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் மிக அழகாக ரீச்சர் இருப்பா. அவவின் மஞ்சள் நிறத்திற்கு ‘எடுப்பை’ கொடுக்கும் கலரிலேயே ‘கவுண்’ அணிந்திருப்பா.
அப்படித்தான் ஒரு நாள் மைமல் பொழுதில் விளையாடிவிட்டு நான் வீடு திரும்பும் போது ஆறுமுகப்பாவின் கடையில் தேயிலையும், சீனியும் வாங்கி வரும்படி என்னிடம் காசு கொடுத்துவிட்டு அவசர அவசரமாக ரீச்சர் உள் நுழைந்துவிட்டா. எதேச்சையாக எனது பார்வை வீட்டு முற்றத்தில் பதிந்த போது சிகப்பு பாஸ்கட் பூட்டிய அந்தப் புத்தம் புதிய றலி சைக்கிள் என் கண்களில் சிக்கியது.
‘அது கந்தசாமி சேரின் சைக்கிள் அல்லோ?’
ஹாட்லி, நெல்லியடி சென்ரல், எம்.எச்.எஸ்., வட இந்து மகளிர் என பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு எல்லோரும் நுழைவுப் பரீட்சைகளுக்கு எம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தோம்.
ஒரு திங்கட்கிழமை.
புத்தகங்களைத் தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் நுழைகின்றேன். தூரத்தே நெசவுசாலைப் பக்கமாக பத்தாம் வகுப்பு அண்ணன்மார்கள் தும்புக் கட்டையுடனும், வாளியுடனும் கூட்டமாக நிற்பது தெரிந்தது. சிரமதானம் எதற்கோ செல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
பள்ளிக்கூடத்திற்குள் கூட்டங் கூட்டமாக நின்று பொடியள் ஏதோ குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். பிறின்சிப்பல் பின்னுக்கு கையைக் கட்டியவாறே நிலத்தை அளந்து கொண்டிருந்தார். சங்கீத ரீச்சருக்கு வீரகத்தி சேர் கையை அசைத்து, அசைத்து உற்சாகத்துடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். ‘இவளுக்கேன் இந்தக் குறுக்காலை போன புத்தி? நல்ல குடும்பத்திலை உயர் சாதியிலை பிறந்திட்டு இவனைப் போய்…..” அருகால் செல்லும் போது சங்கீத ரீச்சர் உச்சஸ்தாயியில் சொன்னது எனது காதுகளில் விழுந்தது.
வகுப்பறைக்குள் நுழைகின்றேன்.
ராசேந்தி என்னை நோக்கி ஓடிவந்தான்.
“டேய் இரத்தி, நெசவுசாலை சுவர் முழுக்க எங்கடை ரீச்சரின்ரை பெயரையும், கந்தசாமி சேரின்ரை பெயரையும் சேர்த்து ஆரோ கண்டபடியெல்லாம் எழுதி இருக்கிறாங்களடா. அது தான் அதை அழிக்கச் சொல்லி பத்தாம் வகுப்பு அண்ணாமாரை பிறின்சிபல் அனுப்பியிருக்கிறார்.”
“ராசேந்தி, அது புன்னரைக்காயாலை எழுதினதோ அல்லது பூவரசம் இலையாலை எழுதினதோவெண்டு நீ நினைக்கிறாய்?” கேட்டவாறே ராமச்சந்திரன் அருகில் வந்தான். மேலும் அதில் நின்றால் நானே பந்தயத்தை வெட்டி விட வேண்டிவரும் என்ற பயத்தில் அங்கிருந்து விலகிச் செல்கின்றேன்.
அன்று ரீச்சர் பள்ளிக்கூடம் வந்திருந்தும் வகுப்பிற்கு வரவில்லை. நெடுநேரமாக ஸ்ராவ் ரூமிற்குள் இருந்துவிட்டு அரை நேரத்தோடு சென்றுவிட்டா.
இரண்டொரு நாட்களின் பின்னர்…….
பின்னேரம் விளையாடிவிட்டு திரும்பிய போது அம்மா சொன்னா, “உங்கடை ரீச்சரை தகப்பன் வந்து அவையின்ரை ஊருக்குக் கூட்டிக்கொண்டு போயிட்டார். வேறு இடத்துக்கு மாற்றம் எடுத்துக் குடுக்கப் போறன். இனி உந்தப் பள்ளிக்கூடத்துக்கு மட்டும் அவளை விட மாட்டன் எண்டு தகப்பன் வீட்டுக்காரருக்குச் சொல்லிப் போட்டு போயிருக்கிறாராம்.”
அன்று இரவு சுடலைக் குருவிகள் எழுப்பிய ஒலியும், ஆந்தைகளின் அலறல்களும் இரவு வெகு நேரமாக எனக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது.
– 27.01.2002, தினகரன் வாரமஞ்சரி
– நிலாக்காலம் (சிறுகதைத்தொகுப்பு), முதற் பதிப்பு: 25 ஜூலை 2002, ஆ.இரத்தினவேலோன் வெளியீடு, கொழும்பு.