நிறை





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘வைரம் என்பது நிலக்கரியின் இன்னொரு ஸ்திதி, முத்துக்கள் புழுக்களின் மலங்களே!’

அவ்வேந்தனின் புகழ் அட்ட திக்குகளெல்லாம் பரவ அவன் தாமரை இலை நீராகக் கனகராஜனைப் போல ராஜ்ய பரிபாலனஞ் செய்வதாகப் பேசிக்கொண்டார்கள். இத்தகைய பிரஸ்தாபத்திலுள்ள உண்மை பொய்யை அறியும் கருத்து, தேசாந்திரியான தபசி ஒருவரின் உள்ளத்தில் முளைத்தது.
அவர் அரண்மனைக்கு வந்து வேந்தனைச் சந்தித்தார். தம்முடைய தபோவலிமையினால், அவனுக்கு முன்னால் மூன்று பொற்றட்டுகள் தோன்றும்படி செய்தார். ஒன்றிலே வைரங்களும், இன்னொன்றில் முத்துக்களும், மற்றதில் அன்றலர்ந்த மலர்களும் குவிந்து கிடந்தன.
‘வேந்தே! உன் முன் மூன்று தட்டுகள். ஒன்றில் வைரங்கள். அவை நிலமடந்தை தன் நெஞ்சின் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் அற்புதச் செல்வங்கள். அடுத்த தில் முத்துக்கள். அவை கடற்கன்னியின் பொக்கிஷங்கள். மூன்றாந் தட்டில் மலர்கள். அநித்தியத்தின் நித்தியத்து வத்தை விளக்கும் அற்பங்கள். இம்மூன்றினுள் நீ விரும்பும் தட்டு ஒன்றினை என் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்….’
மூன்று தட்டுகளையும் பார்த்த வேந்தன் இளநகை சிந்தினான். மலர்த்தட்டிலே இருந்த மலர்களுள் ஒன்றினைக் கையிலெடுத்தான். ‘இதுவே போதும்; ஏனையன வேண் டாம்….’ என வேந்தன் அடக்கத்துடன் கூறினான்.
‘நீ வேந்தன்; துறவியல்லன்!’ என்றார் தபசி.
‘அறிவேன். அத்துடன் வைரம் என்பது நிலக்கரியின் இன்னொரு ஸ்திதி என்பதையும், முத்துக்கள் புழுக்களின் மலங்களே என்பதையும் அறிவேன்….!’
‘உன் கையிலுள்ள மலர்?’
‘இறை சிருஷ்டியின் ஜீவத்துவத்தைப் புன்னகை மூலம் அஃது எனக்கு ஞாபகப்படுத்துகின்றது. அச்சிரிப்பு அதனையும், என்னையும், உம்மையும் சிருஷ்டித்த அநாதி முத்த சித்துரு வாகிய முதல்வனைப் பற்றிய நினைவினை என் நெஞ்சமெல்லாம் நிரம்புகின்றது. இந்நினைவினால், அவன் பணித்த கருமத்தை இயற்றி, அதன் வழி அவனைச் சேரும் யோகத்தைச் சுகிக்க முடிகின்றது’ என்றான் வேந்தன்.
தபசி ஒருகணம் யோசித்தார்.
‘வேந்தே! நீதான் உண்மையான தபசி, நீ வாழ வேண்டிய இடம் காடு. அங்கு செல்லவும்’ என்றார்.
‘காட்டில் வாழும் உமக்கு வைரங்களும், முத்துக்களும் இன்னமும் சம்பத்துக்களாகவே தோன்றுகின்றன. ஆகையால், காட்டிலே சென்று வாழ்வதினால் யான் அடையப் போகும் பயன் யாது?’ பதில் சொல்லத் தபசியின் நா எழவில்லை.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.