நிராகரிக்கப்பட்ட நிமிடங்கள்





காற்று வீசியதில் இலைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன, அக்காற்று மெல்ல அவளின் முகத்தை வருடிச் சென்றது. எதிரில் வந்த அண்டை விட்டுக்காரர் கை அசைத்ததும் தனது காரை நிறுத்துகிறாள். சகுந்தலா வேலை எல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது எனக் கேட்கிறார் அவர், நன்றாக போகிறது எந்தக் குறையும் இல்லை என்கிறாள். அசோக் வீட்டுக்கு வந்துட்டான் என அவர் கூறியதும் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் சரி நான் கிளம்புறேன் எனக் கூறிவிட்டு வாகனத்தின் வேகம் அதிகரிக்க வீட்டை அடைகிறாள்.
அசோக் நாற்காலியில் அமர்ந்து சுற்றுலாவின் போது எடுத்தப் போட்டோகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அசோக் என அவள் அழைத்ததும் பாட்டி எங்கே என கேட்கிறான், அவளது முகம் சட்டென மாறியது எனக்குத் தெரியவில்லை ஒருவேளை அருகில் உள்ள கடைக்குச் சென்று இருப்பார்கள் என்கிறாள். சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருந்தாயா? என கேட்கிறாள், ம் என்கிறான். என்ன பார்த்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கேட்கிறாள் போட்டோ என்கிறான் நானும் பார்க்கலாமா? எனக் கேட்கிறாள்.
பாட்டி வரட்டும் என்றதும் அதற்கு மேல் அங்கு தனக்கு என்ன வேலை என்பது போல அங்கிருந்துச் சென்று விடுகிறாள். சகுந்தலா என அழைக்கும் சத்தம் கேட்டு இவள் வெளியே வருவதற்குள் பாட்டி என அசோக் அணைத்துக் கொண்டான். எங்குச் சென்றீர்கள் எனக் கேட்டான் நான் சந்தைக்குப் போய் இருந்தேன் தங்கம் என ருக்மணி கூறினாள். சரி வாங்க பாட்டி நான் உங்க கிட்ட சொல்லவேண்டியது நிறைய இருக்கு என அழைக்கிறான், இருப்பா வாங்கியதை எடுத்து வைத்துவிட்டு வருகிறேன் என்கிறாள்.
அதற்கு சகுந்தலா அவன் உங்களுக்காக தான் காத்துக் கொண்டிருந்தான். நீங்கள் அவனிடம் போய் பேசுங்கள் இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள். அசோக் நடந்த அனைத்தையும் பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருப்பதை சமையலறையில் நின்றபடி கேட்டுக் கொள்கிறாள் சகுந்தலா.
ஒருநாள் சகுந்தலாவைப் பார்க்க அவளின் தோழி சுவேதா வீட்டிற்கு வந்தாள், அசோக் நல்லா இருக்கீங்களா? என சுவேதாவை கேட்கிறான். நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க என அவள் கேட்க நன்றாக இருக்கிறேன் என்கிறான். பாட்டி நான் வெளியே போணும் காசு வேணும் அவங்ககிட்ட வாங்கிக் குடுங்க என்கிறான். நீயே உன் அம்மாவிடம் வாங்கிக்
கொள் என ருக்மணி கூறுகிறாள். எனக்கு பணமே வேணாம் என்று சென்றவனை அழைத்து இரு என்று காசை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைக்கிறாள் ருக்மணி.
அவன் சென்றதும் சுவேதா சகுந்தலாவை தனியாக அழைத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு இருவரும் இப்படியே இருக்க போறீங்க? நீ அவனுக்கு அம்மா டி ஏதோ ஹாஸ்டலில் தங்கி இருப்பதுபோல நீ வருவதும் போவதும் நன்றாக இல்லை. யாரோ எவரோ போல் இருவரும் இருக்கிறீர்கள் இதெல்லாம் எந்த வீட்டிலாவது நடக்குமா? எனக் கேட்கிறாள். என்னைப் பேச அனுமதித்தால் தானே நான் என்ன சொல்கிறேன் என அவனுக்குப் புரியும். போனாலே மூஞ்சியை திருப்பிக் கொள்கிறான். வீட்டை விட்டுப் போய்விடுவேன் என்கிறான். எப்பொழுது நினைக்குறானோ அப்பொழுது பேசட்டும், எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்று விட்டாள்.
ஒருநாள் சோகமாக இருக்கையில் வந்து அமர்ந்தவளிடம் என்னடி ஆச்சு என உடன் வேலை செய்பவள் கேட்க, புதிதாக ஒரு ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது அதற்காக நான் ஆறுமாதம் ஹெட் ஆபீஸில் பணிபுரிய செல்லவேண்டும் என்று கூறுகிறாள். இதுக்கு போய் யாராவது சோகமாக இருப்பாங்களா? என கேட்கிறாள். ஆனால் அசோக்கை விட்டு சென்றால் மீண்டும் விரிசல் ஏற்பட்டு விடுமோ என பயமாக இருக்கிறது மனம் மறுக்கிறது என்று கூறுகிறாள். வேறு வழியில்லை நீ சென்று தான் ஆக வேண்டும் என தோழி கூறியதும் ஆமாம் என்பது போல அவளும் அமைதியாக அமர்ந்து இருக்கிறாள்.
வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை சொல்கிறாள் ஏற்கனவே அவன் உன்னிடம் சரியாக பேசுவதில்லை. இதில் ஆறுமாதம் மீண்டும் செல்கிறேன் என்கிறாய் என ருக்மணி கேட்கிறாள். நான் இருந்தால் மட்டும் என்னுடன் பேசிக்கொண்டா இருக்கிறான், சந்தோசம் என்பான் அதை ஏன் நான் கெடுக்கவேண்டும் என சகுந்தலா சொல்கிறாள். பத்திரமாகச் செல் அங்கு வீடு சமையல் எல்லாம் எப்படி? என ருக்மணி கேட்க அது அனைத்தையும் என் கம்பெனி பார்த்துக் கொள்ளும் நான் நாளைக்கே செல்ல வேண்டும் என்கிறாள்.
அசோக் வந்ததும் அவனிடமும் விஷயத்தை சொல்ல அவன் எதுவும் சொல்லாமல் அறைக்குச் சென்று விட்டான். தனது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அசோக்கின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் கார் அவளை அழைத்துச் செல்ல வாசலின் முன் வந்து நின்றது. உடைமைகள் அனைத்தையும் காரில் எடுத்து வைத்துவிட்டு மேடம் போலாமா? என டிரைவர் கேட்கிறான். ஒரு பத்து நிமிடம் என்றதும் சரி என காரில் காத்திருக்கிறான்.
அரைமணி நேரம் கடந்த நிலையில் மேடம் இதற்குமேலும் தாமதித்தால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்வோம் என்கிறான். சரி என காரில் ஏறிச் சென்று விட்டாள், அவள் சென்று ஒருமணி நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான். ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என ருக்மணி கேட்க, கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி சீக்கிரமாக முடிந்துவிடும் என்று நினைத்தேன் தாமதமாகி விட்டது என்கிறான்.
போய்டாங்களா? என கேட்கிறான் ம் என்கிறாள் ருக்மணி, அவன் அறைக்குச் செல்ல நகர்ந்தவனை டேய் நில்லு, அவ உன் அம்மா ஏதோ விருந்தாளிய கேக்குற மாதிரி கேக்குற என ருக்மணி கேட்கிறாள். அவங்களால் நான் அடைந்த கஷ்டத்தையும் வலியையும் நான் மறக்க மாட்டேன் நீங்கள் அவங்களைப் பற்றி என்னிடம் பேசாதீங்க எனக் கூறிவிட்டு சென்று விட்டான்.
அவள் தான் பத்திரமாய் வந்து சேர்ந்ததை ருக்மணியிடம் தெரிவித்து விட்டு நிற்கிறாள், அவளுக்கு என ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு டிரைவர் அழைத்துச் செல்கிறான். சமைக்கவும் பிற வேலைகளைச் செய்யவும் ஒரு உதவியாளர் அங்கு இருக்கிறார், அவள் எந்த இடையூறும் இல்லாமல் வேலை செய்ய வசதியாக தோட்டத்தில் ஒரு மேஜையும் இருக்கிறது. அவள் சிறிது நேரம் இளைப்பாற அங்கே ஒரு நீச்சல் குளம் இருக்கிறது.
தலைமை கம்பெனிக்குச் செல்கிறாள் அங்கு அவளுக்கென்று ஒரு தனி அறையும் உதவி செய்ய ஒருத்தரையும் கொடுத்து இருக்கிறது, அப்படியே நாட்கள் நகர்கிறது. அசோக் வெகுநேரமாக எதையோ தேடிக் கொண்டிருக்கிறான்,எங்கு தேடியும் கிடைக்கவில்லை என சகுந்தலாவின் அறைக்குச் செல்கிறான்.
அவள் அறைக்கு முதல் முதலில் செல்கிறான், அவளின் படுக்கை அறைக்குப் பக்கத்தில் இருக்கும் மேஜை மீது அசோக்கின் போட்டோ உள்ளது. அலமாரியில் நிறைய புத்தங்கள் இருக்கிறது அதற்கு இடையில் டைரி இருக்கிறது அதை எடுத்துப் பார்க்கிறான். அதில் அவளும் அவனது அப்பாவும் சேர்ந்து எடுத்தப் போட்டோ இருக்கிறது.
முதன்முதலில் இருவரும் இருக்கும் போட்டோவை பார்க்கிறான். அதற்கு பின்னால், சுரேஷும் நானும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் அப்படியே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவனே வந்து என்னைத் திருமணம் செய்துக் கொள்கிறாயா? எனக் கேட்டான்.
இருவரும் ஒரு துணையும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறோம் நல்ல நிலையை அடைந்தவுடன் அதைப்பற்றி சிந்திக்கலாம் என கூறினேன். இருவருக்கும் வேறு வேறு நிறுவனத்தில் வேலைக் கிடைத்தது, போனில் பேசிக்கொண்டே இருவரும் காலத்தை கடத்தினோம்.
இவ்வாறு போனிலேயே எத்தனை நாட்களை கழிப்பது உன் அருகில் அமர்ந்து உரையாடவும், உண்ணவும், உறங்கவும் எப்போது எனக்கு வாய்ப்பளிக்க போகிறாய் எனக் கேட்டான். லோன் போட்டு முதலில் ஒரு வீட்டை வாங்கினோம் பிறகு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டோம், வாரத்தில் இரு நாள் விடுமுறையில் என்னைக் காண வந்துவிடுவார்.
நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என கூறினேன் அச்செய்தியை கேட்டதும் உடனே கிளம்பி வந்துவிட்டார். என்னைப் பார்த்துக் கொள்ள ருக்மணி என்ற அம்மாவை வேலைக்கு வைத்தார் ருக்மணி அம்மா என்னை சொந்த மகள் போல பார்த்துக் கொண்டார், நானும் அவரை எனது அம்மாவை போலவே நினைத்தேன். ஒன்பது மாதம் கடந்த நிலையில் உன்னருகில் இருக்க வேண்டும் என ஆசையாக உள்ளது, என் வேலையை விட்டுவிட்டு இங்கு வேறு வேலையைப் பார்க்கவா? என கேட்டார் சரி
என்றேன். வேலையை விட்டுவிட்டேன் அனைத்து பொருளையும் எடுத்துக் கொண்டேன், இன்னும் ஐந்து மணி நேரத்தில் உன்னிடம் வந்துவிடுவேன் என கூறினார்.
அப்பொழுது தெரியவில்லை அதுதான் அவர் என்னிடம் பேசுவது கடைசி என்று அவர் வந்த கார் விபத்துக்குள்ளாகி அவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். பிறகு அசோக்கை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒரு பக்கம் வீட்டு கடன் ஒரு பக்கம் என இருந்ததால், நான் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் நான் அவனை சிறுவயதிலேயே விட்டுச் செல்ல வேண்டியதாய் ஆயிற்று.
அவனுக்கு ஆறுதல் ருக்மணி அம்மா மூலம் கிடைத்துவிட்டது, தனியே நின்ற என்னைத்தான் தாங்கிக்கொள்ள யாருமில்லை. அவனின் வலியும்,வேதனையும் எனக்குப் புரிகிறது அவனின் வெற்றியில் அவனுடன் சந்தோஷப்பட, தோல்வியில் ஆறுதலை கூற அம்மா என்று ஒருத்தி இருந்தும் உடன் நிற்கவில்லை என என்னை விலக்கி விட்டான். அவனிடம் பேச வேண்டும் நேரம் செலவிட வேண்டும் என்று ஆசை எனக்கு இல்லாமல் இல்லை, அவன் என்னிடம் மூஞ்சி கொடுத்துக் கூட பேசமாட்டான்
அவனை விட அது எனக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. இப்பொழுது என்னிடம் அனைத்தும் இருக்கிறது, ஆனால் இளமைப்பருவத்தில் அவனுடன் இருக்க முடியாமல் போனதும்,அவன் செய்த சேட்டைக்களை பார்த்து மகிழ எனக்கு கொடுத்து வைக்காமல் போனதையும் எண்ணி வருந்தி இருக்கிறேன். நடந்த விஷயங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளாமல் ருக்மணி அம்மாவிடம் பகிர்ந்துக் கொண்டிருப்பதைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேனே என உடைந்து இருக்கிறேன். யாருமில்லாத அனாதை போல் உணர்ந்து இருக்கிறேன்.
சிறுவயதில் என் தீண்டலில் அமைதி அடைந்தவன் பலநாள் கழித்து அவனை அணைத்துக்கொள்ள வந்த போது என்னைப் பார்த்து பயந்து ருக்மணி அம்மாவின் பின் போய் ஒளிந்ததைக் கண்டு என் மனம் அடைந்த வேதனையை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. எங்கையாவது போய்விடலாமா? என்று கூட நினைத்ததுண்டு நான் வாழுகிற வாழ்க்கையே அவனுக்காகத்தானே அவனை விட்டு நான் எங்கு போகமுடியும் என்று அந்த எண்ணத்தை கைவிட்டதுமுண்டு.
கவலை மறந்து சுரேஷின் தோளில் சாய்ந்து கதைகள் பேசிய நாட்கள் எல்லாம் தான் எனக்கு அவ்வப்போது ஆறுதல் அளித்தது, எனினும் என்னைத் தாங்கிக்கொள்ள அவர் இருந்திருக்கலாம் என நினைத்து வேதனை அடைந்தும் இருக்கிறேன். அனைத்தையும்
மறந்து அவன் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் என தோன்றும். என் வலியை கூறினால் அவன் வருத்தப்படுவானோ என அனைத்தையும் என்னுள் போட்டுக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறேன். என்றாவது ஒருநாள் அவன் என்னைப் புரிந்துக் கொள்வான் என நம்பிக்கை இருக்கிறது என எழுதியிருந்தாள்.
ருக்மணியிடம் சென்று சகுந்தலாவைப் பற்றிக் கேட்கிறான், அவள் சொல்ல ஆரம்பிக்கிறாள் உங்க அப்பா உங்க அம்மாவ விட்டுப் போனதுக்கு அப்புறம் மனதளவில் அவள் மிகவும் உடைந்துவிட்டால் அவளை அதிலிருந்து வெளியே கொண்டுவர சுவேதாவும் நானும் மிகவும் சிரமப்பட்டோம். நீ பிறந்த பிறகு இரவு நேரத்தில் உன்னையும் பார்த்துக் கொண்டு அவள் வேலையும் செய்துக் கொண்டிருப்பாள். உன்னைப் பார்த்துக் கொள்ள அவள் சம்பாதிக்க வேண்டியும் இருந்தது. வீட்டுக்கடன் வேறு இருந்தது.
அதையெல்லாம் சமாளிக்கதான் அவள் உன்னை விட்டு வெளியூர் சென்று வேலைப் பார்த்தாள். வீட்டுக்கடன் முடிந்து உன்னுடன் இருக்க வேண்டும் என அவள் வந்தபோது அவளை நீ ஒதுக்கி வைத்துவிட்டாய். அவள் உன்னுடன் இல்லை என்ற வருத்தம் உனக்கு இருக்கும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவள் வெளியூர் சென்று வேலைப் பார்க்காமல் இருந்திருந்தால் வீடு கையை விட்டு போயிருக்கும் உன்னை வைத்துக் கொண்டு அவள் எங்கே சென்றிருப்பாள்.
ஒரு அம்மாவாக உனக்கு அவள் ஒரு குறையும் வைத்ததில்லை. மற்ற அம்மா மகன் போல நாங்கள் ஏன் இல்லை என எத்தனை நாட்கள் அவள் வருத்தப்பட்டாள் என்பதை நான் பார்த்திக்கிறேன். வேண்டும் என்றே யாரும் விட்டு செல்வதில்லை, விலகி இருப்பதில்லை. உன் அப்பா மட்டும் இருந்திருந்தால் அவள் இப்படி ஒரு நிலைக்கு ஆளாக வேண்டிய அவசியமே இருந்திருக்காது. உன் வலி எனக்கு புரிகிறது, நீ எந்த குறையும் இல்லாம இருக்கணும்னுதான் அவ மனசே இல்லாம போன அசோக் புரிஞ்சுக்கோ.
அதேநேரம் அவனைப் பார்க்க சுவேதாவும் வந்து இருந்தாள், அத்தை அம்மா எங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? என கேட்கிறான். தெரியும் ஏன்? என கேட்க நான் அவங்களை பாக்கணும்ன்னு சொல்றான். சுவேதா ருக்மணியை பார்க்க அவள் தலையை அசைக்கிறாள். அவன் அம்மாவை பற்றி புரிந்துக் கொண்டான் என்பதை நினைத்து சுவேதா மகிழ்கிறாள்.
காரில் ஏறு போலாம் என அழைக்கவும் இருவரும் செல்கின்றனர் போகும் வழியில் அவன் அம்மாவுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என சுவேதாவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்கிறான். சகுந்தலா இருக்கும் இடம் வந்துவிட்டது அவனின் இதயம் என்றைக்கும் இல்லாமல் இன்று அதிகமாக துடிக்கிறது, உள்ள போ ஏன் இங்கயே நின்னுட்ட என சுவேதா கேட்கிறாள். இல்ல அத்தை ஒருமாறி இருக்கு என்கிறான், இந்த நாளுக்காகதான் அவள் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தாள். இதுக்காக எத்தனை நாட்கள் ஏங்கி இருக்கிறாள் என எனக்குத்தான் தெரியும், உள்ளே போ அசோக் என்கிறாள் சுவேதா.
அவன் உள்ளே செல்கிறான், சகுந்தலா தோட்டத்தில் நின்று போன் பேசிக் கொண்டு இருக்கிறாள். அம்மா என அசோக் அழைத்ததும் பேசிக் கொண்டிருந்த போன் அவளை அறியாமல் கீழே விழுந்தது. அவள் திரும்பிப் பார்க்கிறாள், அவன் ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். இருவரின் கண்ணீரில் அந்த இடமும் நனைந்தது. எத்தனை வருட ஏக்கம் தவிப்பு இன்று நிறைவேறிவிட்டதா? என சுவேதா கேட்கிறாள்.
அவள் சிரிக்கிறாள் இத்தனை நாட்கள் இந்த சிரிப்பை எங்கு மறைத்து வைத்திருந்தாய் என சுவேதா கேட்கிறாள். சகுந்தலாவும் சுவேதாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்,
எப்படி அசோக்கு தெரியும் யாரு சொன்னா? என சகுந்தலா கேட்கிறாள். அவன் உன் டைரியை படுச்சுருக்கான் அப்புறம் ருக்மணி அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சு இருக்கான் என்கிறாள். அவன் காபி போட்டு வந்து இருவருக்கும் கொடுத்தான், காபியை வாங்கிக் கொண்டு தேங்க்ஸ் என்றாள்.
சகுந்தலாவின் கை மேஜையின்மீது இருந்தது அதைப் பிடித்துக்கொண்டு அம்மா என்னை மன்னித்து விடுங்கள் உங்களை புரிந்துக் கொள்ளாமல் கஷ்டப்படுத்தி விட்டேன். நீங்கள் எனக்காகதான் இத்தனையும் செய்தீர்கள் என அறிந்து கொள்வதற்கு இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது, நீங்கள் என்னிடம் பேச வரும்போது நான் உங்களை அலச்சியப்படுத்தி விட்டேன்.
நீங்கள் எனக்கு தேவையில்லை இவ்வாறு மறுபடியும் என்னைத் தொந்தரவு செய்தால் நான் எங்காவது சென்று விடுவேன் என கூறிவிட்டேன். அப்பொழுது நீங்கள் அடைந்த வேதனையை என்னால் இப்பொழுது புரிந்துக் கொள்ள முடிகிறது. நீங்கள் எனக்கு அறைந்தாவது புரிய வைத்திருக்கலாமே. உங்களை நான் ஏங்க வைத்திருகிறேன்,தவிக்க வைத்திருக்கிறேன், அழ வைத்திருக்கிறேன் இருந்தும் நீங்கள் என்னிடம் கடுமையாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லையே ஏன்? என்கிறான்.
அசோக் உன்னிடம் எனது வார்த்தை, எனது ஏக்கம், எனது தவிப்பு,எனது கோபம் அனைத்தையும் தோற்றுப் போகும் ஆனால் என் அன்பு மட்டும் தோற்றுப்போகாது. நீ குழந்தையாய் இருக்கும் பொழுது மார்பில் உதைப்பாய் அதை தெரிந்தா செய்தாய் அது எப்படி எனக்கு வலிக்கவில்லையோ அதேபோலத்தான் இதுவும். நீ என்னை வேண்டும் என்றே காயப்படுத்தவில்லை அதனால் ஒருபோதும் எனக்கு வலித்ததில்லை வருத்தம் மட்டுமே இருந்தது.
நீ இல்லாமல் நான் இல்லை நீதான் என் வாழ்க்கையின் ஆதாயம் நான் வாழும் வாழ்வே உனக்காகதான். சிலநேரத்தில் நீ விலகி ஓடாமல் என்னை பேச அனுமதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இனிமேல் நீ இவ்வாறு நடந்துக் கொள்ளாதே பேசி தீராத பிரச்சனை இவ்வுலகில் இல்லை அசோக் என்கிறாள்.
சரிம்மா என்கிறான் இருவரும் சேர்ந்து முதன் முதலில் ஒன்றாக சமைக்கிறார்கள், அதைப் பார்த்து சுவேதா சந்தோஷப்படுகிறாள். சகுந்தலாவை விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும் போது அம்மா நான் போய்ட்டு வரேன் பத்திரமா இருங்க என கூறிவிட்டு செல்கிறான்.
அவன் ஊருக்குச் சென்றவுடன் அம்மாவிடம் போன் பண்ணி என்ன பண்றீங்க? ஏது பண்றீங்க? என விசாரிக்கிறான். நீங்கள் அல்லாத வீடு வீடாகவே இல்லை அம்மா சீக்கிரமாக வாருங்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என்கிறான். அந்த வார்த்தை அவளது காதில் அமுதமாய் ஒலித்தது.
அவ்வளவு நாளாக அவனிடம் இருந்து கேட்க நினைத்த வார்த்தை அது வெறும் வார்த்தை அல்ல அவளின் ஏக்கம். சந்தோஷத்தில் அவள் கண்ணில் கண்ணீர் வருகிறது, அந்த கண்ணீர் வெறும் கண்ணீர் அல்ல அது ஆனந்தத்தின் வெளிப்பாடு…