நித்தில வல்லி
எத்தனை முறை பிடுங்கி எறிந்தாலும் திரும்பவும் மனதில் ஒட்டிக்கொள்ளும் அவளை கொஞ்சநாள் மறந்து போயிருந்த சரவணன், எதிரே வந்த குமாரைப் பார்த்ததும் முதலில் நித்தில வல்லியின் நினைவுதான் அவனுக்குள் எட்டிப்பார்த்தது.
நித்தி… இப்போது எப்படி இருக்கிறாய்? நினைக்கும் போது கொஞ்சம் அவனையறியாமல் உதடுகளில் புன்னகை எழுந்தது. யாரையும் பார்க்க விரும்பாமல் இந்தப் பாலை நிலத்திற்கு ஓடி வந்து கத்தாரிலேயே இருபதாண்டுகள் கழிந்து விட்டதை நினைத்த போது கொஞ்சம் திகைப்பாக இருந்தாலும் திடீரென்று குமாரை கத்தாருக்கு மத்தியிலுள்ள அந்த அல் மஹடீன் பஞ்காவில் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.
குமார், பெப்ஸி டப்பாவை கையிலெடுத்து உறிஞ்சுக் கொண்டே சரவணன் அருகில் வந்து “எப்படியிருக்கீங்கண்ணா?” என்று கேட்டான்.

சிரித்துக் கொண்டே “ம்.. நல்லாயிருக்கேன்டா…” ஆனால் என் மன எதிரியை நேரில், அதுவும் கடல் கடந்து வந்து எந்த ஊருக்கு நான் ஞாபகங்களை அடையாளப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரக் கூடாதென்று நினைத்தேனோ… அந்த ஞாபகங்களை கிண்டி விட்ட உன்னை சந்தித்ததில் கொஞ்சம் சந்தோசம்தான் என்றாலும் எரிச்சல்தான் அதிகமாகிபோனது.
“சொல்லு குமார் எப்போது கத்தார் வந்தாய்? உனக்கு இந்த பாலை வனத்திற்கு வரவேண்டிய அவசியம் என்னப்பா? உன் தாத்தா சொத்துக்களே ஏழு தலைமுறைக்கு காணுமே?” பையிலிருந்து சிகரெட் எடுத்து பற்றவைத்துக் கொண்டான் சரவணன்.
சரவணனிடம் சிகரெட் வாங்கி பற்றவைத்துக் கொண்ட குமார் “இருந்து தின்றால் எந்தச் சொத்தும் ரொம்பாநாள் தாங்காது சரவணன். எப்படி போகிறது கத்தார் வாழ்க்கை?” புகையை வெளியே ஊதியவாறு ஆகாயத்தைப் பார்த்துக்கேட்டான் குமார்.
“ம்… அதற்கென்ன என் அம்மாவைப் பார்த்தாயா குமார்?” என்று கேட்டான் சரவணன்.
“வரும் போது தான் பார்த்தேன். ஆனாலும் இன்னும் சந்திர நாயக்கன்பட்டி சரவணனை எளிதில் மறந்து விடவில்லை. நான் கத்தார் போகிறேன் என்றதும் உம்மைப்பற்றி நினைவு கூர்ந்து நமது பழைய நட்பு வட்டங்கள் மிகவுமே விசாரித்தன. நான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் வந்தாலும் சரவணனை கண்டிப்பாக பார்க்க முடியும் என்ற ஆவலும் கூட உண்டு சரவணனா” என்றான் குமார்.
சரவணன் பதில் ஏது சொல்லாமல் சிரிக்க “ஏன் இந்த அன்பான பகைவன் நம்மைப் பார்க்க விரும்புகிறான், என்று எண்ணித்தானே சிரிக்கிறாய்?” என்றான் குமார்.
சரவணன் திரும்பவும் புன்னகைக்க “உன்னைக் கத்தாரில் தேடிப் பிடிக்கவே எனக்கு ஒரு வாரம் ஆகி விட்டது. உனக்குத்தெரியுமா நான் உன்னை ஏன் தேடினேனென்று?” குமார் முடிந்துபோன சிகரெட்டை செருப்பின் கீழே போட்டு நசுக்கி விட்டு பெப்ஸியைத் தொடர்ந்தான்.
“சொல்லு …” என்றான் சரவணன்.
“உனக்கு இன்னும் பழைய கோபங்கள் அப்படியேதானிருக்கிறது. இன்னும் நீ மறக்க வில்லையா?” குமார் சரவணன் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
“மறந்து போக வேண்டிய விசயங்களா? குமார். என்னை ஏன் தேடினாய் என்று கேட்டேன்.” என்றான் சரவணன்.
“ம்… இந்த இருபது வருடங்களுக்குள் எத்தனையோ மாற்றங்கள். ஆனால் நான் அப்போது பார்த்த சரவணன் மட்டும்தான் மாறவில்லை.”
“குமார் நீ இன்னும் சொல்ல வேண்டிய விஷயத்திற்கு நீ வரவில்லை.”
“இல்லை சரவணன், நானுன் நீயும் போட்டிப் போட்டுக் காதலித்த நித்தில வல்லியைப் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும்.”
தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயன்ற போது “என்ன.. என்ன விஷயம்?” என்று அதிர்ந்தான் சரவணன்.
“ம்.. உன்னை விட நான் பணக்காரன் என்பதால் கண்டிப்பாக நித்தியின் அப்பா எனக்குத்தான் கட்டி வைப்பார் என்று நினைத்தேன். ஆனால்… சரி ஏதோ ஒரு டாக்டர் வந்து நித்தியை மணந்து கொண்டது தான் உனக்குத் தெரியுமே..”
“குமார், அவள் நன்றாக இருந்தால் அதுவே போதுமென்றுதானே இனிமேல் நம் ஊரே வேண்டாமென்று நான் கத்தார் வந்தேன்.”
“ம்… அதற்கு பிறகு நடந்த அவிசயங்கள்தான் உன்னை வந்துச் சேரவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
நித்தி உன்னைக் காதலித்ததற்காக டாக்டர் தினமும் அவளை இம்சைப் படுத்தினார். ஆனால் விதி அவனும் ஐந்து வருடத்திற்குள் ஏதோ ஒரு நோயிலே இறந்து விட்டான்.”
“அப்படின்னா, நித்தி… “என்று கேட்டான் சரவணன். “நான் அவளை மணந்து கொள்ள முயற்சித்தேன். இரண்டாம் தாரமாக வைத்துக் கொள்ள பலமுறை நிப்பந்தித்தேன். ஆனால் அவள் மறுத்து விட்டாள்.
எனக்குப் பணப்பிரச்சினைகள் வர, நானும் கத்தார் வந்து சம்பாதிக்கலால் என கிளம்பி வர எத்தனித்தப்போது தான் ஒருநாள் நித்தியை நான் அம்மன் கோயிலில் தனியாக சந்திக்க நேர்ந்தது.
என்னைக் கூப்பிட்டவள் “குமார் என் வாழ்க்கை இப்படி ஒரு பட்டமரமாகி விட்டது. ஆனால் என் வாழ்க்கையில் வசந்த காலம் என்று ஒன்றிருந்தால் அது நான் சரவணனை மனதில் சுமந்த காலம்தான்.
அவர் இன்னும் என்னையே நினைத்துக் கொண்டு திருமணம் செய்யாமல் கத்தாரிலே போய் நினைவுகளுக்காக பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
உண்மையில் அவர் இன்னும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவரிடம் சொல்லுங்கள் இந்த நித்திலவல்லியின் இதத்தில் சரவணனுக்கு மட்டுமே இன்னும் இதயம் முழுவதும் காலியாக இருக்கிறது என்று சொல்லுங்கள்” என்றாள்.
கேட்ட சரவணன் ஓட்டம் எடுக்க, பின்னாலே ஓடிவந்த குமார் “சரவணன் நான் சொல்வதை முழுவதும் கேளுங்கள்” என்றான்.
“ஸாரி, நான் முதலில் ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுக்கப்போகிறேன். நித்தியைப் பார்க்க வேண்டும். முதலில் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு விமான டிக்கெட் வாங்க வேண்டும்” என்ற வாறு மூச்சிறைக்கச் சொல்லிக் கொண்டே ஓடினான்.
குமார் திகைத்தவாறு நின்று விட்டான் சரவணனின் வேகத்தைப் பார்த்து.