நிகழ்வுகளும் மீளும் கிராமமும் நிகழ் காலமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 25, 2025
பார்வையிட்டோர்: 304 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பற்றைகள் அடர்த்தியாய் படர்ந்து படர்ந்து குறுகலாகி, மணலால் நிரம்பி வழியும் இந்தத் தெரு நான் போகப்போக இன்னும் இன்னும் குறுகிக்கொண்டு போவதாய்த் தோன்றியது. பற்றைகளின் கிளைத்து நீண்ட சில முட்களும் தடிகளும் சைக்கிளில் போகும் என்னைக் கீறி இரத்தம் பார்க்காமல் விடாது போன்றதான பிரேமை என்னுள் நுழைந்து எழுந்தது. 

கேசவன் முன்னுக்குப் போய்க்கொண்டு இருந்தான். மணல் செறிந்த தெருவில் மிக இலாவகமாக சைக்கிளை வெட்டி வெட்டி ஓடிக்கொண்டிருந்தான். நான் அவனுக்குப் பின்னுக்கு வந்துகொண்டிருப்பதால் எனக்கு அவன் வித்தை காட்டப் பிரயத்தனப்படுவது இரண்டு மூன்று தரம் திரும்பித் திரும்பி பல்லிளித்ததிலேயே எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. 

முதன் முதலாக இப்போதுதான் இந்த இடத்திற்கு வருவது போன்றதான பிரேமை என்னுள் புடைத்துக் கிளைத்தது. புதிர்ப்பிராந்தியம் ஒன்று தன் வாயுள் என்னைச் செரித்துக் கொண்டிருப்பதான பதற்றம் பரவிக் கழுத்து, முகமெல்லாம் வியர்த்தது. சேர்ட் மேல்ப் பொத்தானைக் கழட்டிவிட்டேன். காற்று கழுத்தில் ஊர்ந்து தடவிய போது இனம்புரியாச் சிலிர்ப்பும் பரவியது. 

“டேய் கேசவா கொஞ்சம் மெதுவாய்ப் போடா” என்ர சத்தம் கேட்டதும் ஏதோ கழுத்துச் சுளுக்கெடுத்தது போல வலப்பக்கத்தாலும் இடப்பக்கத்தாலும் முகத்தை மாறிமாறித் திருப்பி “மண்வெட்டிப்”பல்லால சிரிச்சுக்கொண்டு, “டோய் அண்ணா வா…வா வாடா நேரம் போகுது….” அவனின் கத்தல் காதுக்குள் திடுமென இறங்கி ஊர்ந்து நெஞ்சடியில் வந்து அதிர்ந்தது. 

“டேய் நில்லடா நானும் வாறன் என்னை விட்டிட்டு எங்கயடா போறாய்?” 

”ம்பாவுக்குத் தண்ணி வைக்கோணுமெல்லோ, விசுக்கெனப் போய் வருவம் வா” அவன் சொல்லிக் கொண்டே போய்க்கொண்டிருந்தான். இப்பவும் ”ம்பா’ எண்டுதான் மாட்டைச் சொல்லுறான். இப்ப எவ்வளவு வடிவாக் கதைக்கிறான். முந்தியெண்டா அம்மா, அப்பாவைத் தவிர ஒண்டுமே ஒழுங்காச் சொல்ல வராது. 

அவனுக்கு இந்த மணல் தெரு வாலாயமாகி விட்டது. என்னால் இந்த தெருவில் சைக்கிள் ஓடவே முடியவில்லை. மணலுக்குள் “றிம்” புதைய றிம்முக்கு மேலால் மணல் நிரவி வழிந்தது. ஒரு மாதிரி சைக்கிளை வலிச்சுக்கொண்டு அவனுக்குக் கிட்டப் போனேன். 

இந்த றோட்டாலேயே முந்தி வாறனாங்களடா?

“ஓ” 

எனக்கு எல்லாமே புதிராய் வியாபித்தது. கேசவன் வீட்டுக்கு கன வருசத்துக்கு முந்தி வரயிக்கை, எட்டாங்கட்டை வரணியில பஸ்சால இறங்கி நானும் அம்மாவும் சிலவேளை தங்கச்சிகளும் நடந்துகொண்டு மந்துவிலுக்கு வந்திருக்கிறம். எத்தினை அடையாளங்களை மந்துவில் போகுமட்டுமான வழிக்கு வைத்திருந்தேன். வாசிகசாலை, கதிரையில் நீலவாளிக்குள் தண்ணியும் கப்பும் படலை வாசலிலே வைச்சிருக்கும் வீடு, தென்னந்தோட்டம், பனங்கூடல், ஆலடிப்பள்ளிக்கூடம், சங்கக்கடை, மைதானம், சின்னச்சந்தை, கள்ளுத் தவறணை, சின்ன வைரவர் கோவில், ஸ்ரீபாரதிப் பள்ளிக்கூடம், வாழைத் தோட்டம், ஏறி இறங்கும் தெரு, அதுக்கு இரண்டு கால் வைச்சதும் அலம்பலால கட்டின படலை, படலைக்குப் பக்கத்தில் வைக்கல் கும்பி அதுதான் கேசவன் வீடு. அதாவது ஆசையம்மா வீடென்று வைத்திருந்த அடையாளங்கள் எல்லாம் பற்றைக்குள் பதுங்கிக் கிடந்தன. 

“கனவின் நெடும்பாலையில் நெற்றியில் கல்லுவைத்து முட்டுக்காலில் இருப்பதான”ஐயம் தோன்றிப் பிதுங்கியது. 

வீடுகள் சில இருந்ததற்கான அடையாளங்கள் சில தெரிந்தன. அவை சிதை சிதையென்று சிதைந்து போய்க் கிடந்தன. கேசவனை ஏதேதோ கேட்க நா உன்னியது. அவனை இந்த மாதிரி விஷயங்கள் கேட்க, அவன் ஏதேதோ? உள்ளதாய்த்தான் சொல்லுவான். ஆனால் அவன்ர மொழியைக் கிரகிக்கும் நிலையில் நான் இல்லை. 

கேசவன் அவங்கன்ர வீடு, தாடியப்பா இருந்த கொட்டில், நான் முன்னமே அறிஞ்சது மாதிரித்தான் போல, வாஸ்தவத்தை மனம் கிரகித்த போதும், முடியவில்லை, எல்லா நினைவுகளும் மூச்சு முட்டத் தொடங்கியது நாவரண்டு தொண்டை எரிந்தது. நீலவாளிக்குள் தண்ணீர் வைத்திருக்கும் வீடு ஞாபகத்திற்கு வந்தது. 

“டேய் கேசவா முந்தி நாங்கள் வாற வழியில தண்ணி வைச்சுக் கிடக்குமே, அந்த வீடு எதடா?” கேட்க நா துடித்தது வேண்டாம். 

“அண்ணா டோய் வந்தாச்சு”என்று “கூப்போட்டு” இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு படலை இல்லாத வீடிருந்த அடையாளம் உள்ள இடத்திற்குள் உள்ளட்டு சைக்கிளை நிற்பாட்டி இறங்கி நடந்தான். 

என் கண்கள் பனித்தன. நெஞ்சு எரிந்து முகமெல்லாம் ஏதோ ஊர்ந்து அரியண்டம் செய்து என்னைப் பிய்த்து எறிவது போலத் தோன்றியது. சைக்கிளின் ஸ்ராண்டைத் தட்டிவிட்டு இரண்டு எட்டு வைச்சதும் சைக்கிள் விழுந்து சத்தம் கேட்டது. திரும்பி பார்க்க மனம் இல்லாமலேயே கேசவனுக்கு பின்னால் போய் அவன் முதுகைத் தொட்டேன். 

“அண்ணோய் பாத்தியா…” அவன் வாய் திறந்திருந்த விதமும் கண்களின் கலக்கமும் என்னைப் பிசைந்தன. 

வீட்டின் நிலம் மட்டும் கிடந்தது. சீற்றெல்லாம் காணாமல் போயிருந்தன. என் நெற்றியின் ஓரத்தைத் தடவிக் கொண்டேன் “ஆகச் சின்னனில்” நான் ஓடி விழுந்த வாசல் படி சிதைந்து போய் அதில் பதிந்திருந்த சிப்பியும் காணாமல் போயிருந்தது. இப்போதும் இழைப்போட்டதால் அடையாளமாய் இருக்கும் நெற்றியின் ஓரத்தைத் தடவிக்கொண்டேன். ராசாத்தி அக்கா ஆசையோடு வளர்த்திருந்த பூக்கண்டுகளின் அடையாளமே இல்லை. கிணத்தை எட்டிப்பார்த்து அதுக்குள் இருக்கும் கஞ்சலைப் பார்த்துவிட்டு விறுவிறுவென்று ‘அந்த’ இடத்துக்குப் போனேன். தேசி பட்டுப்போய் கிடந்தது. கொட்டில் பாறிப்போய்க் கிடந்தது. கிடுகோ, சிலாகையோ கண்ணுக்குத் தெரியவில்லை. சாணி பூசி மெழுகும் நிலம் மட்டும் உயர்ந்து கிடந்ததே ஒரே ஒரு அடையாளம், அதுவும் சில இடங்களில் யானை மிதித்துப் போனது போல் சிதைந்து கிடந்தது. 

“மெய்தான் அரும்பி விதிர்விதித்து….” 

தாடியப்பாவின் குரல் நானும் கேசவனும் நின்றிருந்த இடத்தில் ததும்புவதாயத் தோன்றியது. 

(2) 

“தாடியப்பா…” 

சொல்லிப்பார்க்கும் போதே மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து ஏதோ ஒரு சக்தி என்னை அருட்டத்தொடங்கியது. 

இதில் இருந்த சின்னக்கொட்டிலில் “கூர்மையான கண்களோடு, சுருக்கம் விழுந்த முகத்தோடு நீண்ட தாடியோடு (அது ஆகலும் நீண்டிருந்தால் தாடி நுனியை முடிந்திருந்தார்) முகத்தில் வளர்ந்த சின்னக் “காயோடு’ கழுத்தில் உருத்திராட்ச மாலையோடு கட்டியிருக்கும் வேஷ்டியைச் சுற்றி ஓம்முருகா என்று எழுதிய துவாய்த் துண்டோடு எளிமையின் எளிமையாய் இருந்த தாடியப்பாவின் உருவம் எங்கும் அசைவதாய்த் தோன்றியது. தாடியப்பாவின் கையில் எப்போதும் தேவாரப் புத்தகம் இருக்கும். நான் ஆசையம்மாவின் வீட்டை வரும்போது அம்மாவின் தம்பியாகிய தாடியப்பாவைக் காணாது போகமாட்டன். நான் வரும் போதெல்லாம் சாணி பூசி மெழுகிய நிலத்தில் சப்பாணி கட்டி இருந்து கொண்டு மடியில் தேவாரப் புத்தகத்தை வைத்து தேவாரத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். அவரின் கைகள் வயது போனதாலோ என்னவோ எப்போதும் நடுங்கியபடி இருக்கும். இராகத்திற்கேற்ப அவரின் நீண்ட வெண்தாடியும் கீழும் மேலும் அசைந்து ஆடும். திடீர் திடீரென கண்களின் அணையுடைத்துப் புனல் பெருகும். எனக்கு கைகளின் மயிர்க் கால்கள் சில்லிட்டு எழும். நெஞ்சு தடவி ஏதோ ஒன்று என்னை நெகிழ்த்தி நுழையும். நான் தாடியப்பாவைப் பார்த்தபடியே இருப்பேன்.”அஜந்தா இங்கே வாடா” அன்பொழுகத் தாடி அசைந்து குழைந்து வரும் சொற்கள். அவருக்கு மிக நெருக்கமாய் போகச் செய்யும். “இரு” பக்கத்தில் சப்பாணி கட்டியபடி இருப்பேன். 

“இந்தா இந்த பாட்டைப் படி பார்ப்பம்” 

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து… 

“உப்பிடி இல்லை.. இராகமாய்ப் படிக்க வேணும்.. இஞ்சதா…” 

“மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து 

உன்விரை யார்கழற்கென் 

கைதான் தலைவைத்துக் கண்ணீர் 

ததும்பி வெதும்பி யுள்ளம்…” 

அவரின் வெண்தாடி அசைவும்,கை நடுக்கமும், கண்ணின் புனல் பெருக்கும், பாட்டின் உருகிப் பெருகும் இராகமும் என்னில் ஏதோ கட்டுக்களை மளமளவென்று அவிழ்த்து நான் “விரிந்து” செல்வதாய்த் தோன்றும். எனக்கும் கண்கலங்கும். அவர் பாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்க மனம் பிரயாசைப்படும் 

“இப்போது தாடியப்பாவும் உயிரோடு இல்லை. சமாதியில் அவரை இருத்தியாச்சு” 

இப்போது அவர் இருந்தாலும் எனக்கு இராகத்தோடு பாடத்தெரிந்தும் நான் பாடமாட்டேன். அவரின் பாடலைக் கேட்க செவி இப்போதும் ஊறுகிறது. (நா ஊறுவது போல). 

காலமை, மத்தியானம், பின்னேரம் என்று மூன்று காலப் பூசையை கந்தசாமி கோயிலில் தாடியப்பா செய்யிறவர். நான் நின்றால் என்னையும் கூட்டிக்கொண்டு போவார். நான் கேசவனையும் கூப்பிடுவேன். 

என் முன் வயல் வெளிக்குள் இருக்கும் கந்தசுவாமி கோயிலும் பக்கத்தில் இருக்கும் ஆண்டா குளமும் விரிந்தது. தாடியப்பா கோயிலுக்குள் போய் விடுவார். நானும் கேசவனும் திருநீறை எடுத்துப் பூசிக்கொண்டு வயல்வெளி வரம்புகளில் ஓடத்தொடங்குவோம். அவனை நானும் என்னை அவனும் மாறி மாறித் துரத்துவோம். வயலுக்குள் இறங்காமல் வரம்பில் மட்டுமே ஓடவேண்டும் என்பது விதி. எப்படியோ நான் அல்லது கேசவன் வரம்பில் இருந்து பிரண்டு விடுவோம். அப்படியே கோயிலோடு பக்கத்தில் இருக்கும் ஆண்டா குளத்தில் குளிப்பதற்காய் பாய்ந்து விடுவோம். கோயிலில் நின்று பார்க்கும் தாடியப்பா தண்ணிக்குள் கன தூரம் போக விடமாட்டார். முகத்துக்கு முகம் ஜலத்தை எத்தி எத்தி விளையாடுவோம். எனக்கும் கேசவனுக்கும் பொழுது போவதே தெரியாது. நானும் அவனும் காற்சட்டை சேர்ட்டுடன் அப்படியே குளத்தில குளிப்போம்.குளத்துக்கு வெளியே வந்து சேர்ட்டைக் கழட்டி இரண்டு கைகளாலும் தலைக்கு மேலே உயர்த்திக்கொண்டு வரம்புகளில் ஓடித்திரிகையில் சேர்ட்டு காற்றுக்கு ஓரளவு காய்ந்து விடும். கொஞ்ச ஈரத்துடன் சேர்ட்டைப் போடுகின்ற போது உண்டாகின்ற ஒரு வகை உணர்வு சந்தோஷத்தைத் தரும். 

கொஞ்சத்தாலே “தம்பியவை இஞ்ச வாங்கோ” எண்டு தாடியப்பா இனிப்பில்லாத பச்சையரிசிப் புக்கையும், கொஞ்சம் கறுத்த கதலிப்பழமும் கைகள் நடுங்கியபடி இருக்க எங்களுக்குத் தருவார். “வோட்டர்ப்பம்” வேலை செய்யும் போது, அதன் மேல் பகுதியில் கைவைக்கும் போது அதிர்வது போல் தாடியப்பாவின் கை என் கையில் படும்போது உணர்வேன். அவர் கை ஒரு மின்சாரம். 

சரஸ்வதி பூசையன்று வடமராட்சிச் சனம் எல்லாம் தென்மராட்சிக்கு பாதுகாப்புக் கருதிப் போனது எனக்கும் வாசியாகிப்போனது. அம்மா அப்பா தங்கச்சிகள் எல்லோரும் ஆசையம்மா வீட்டை வந்துவிட்டார்கள். எனது உலகம் தாடியப்பா, கேசவனோடு சுற்றத்தொடங்கியது. 

பின்னேரப் பூசைக்குத் தாடியப்பா போகையில் நானும் கேசவனும் போவோம். அவர் கோயிலுக்குப் போக, மாடுகளைப் பார்க்க வயலுக்கு அங்கால இருந்த சின்னக்காட்டுப் பகுதிக்குள் போய் விடுவோம். அது பெரிய காடு அல்ல. கனக்க பத்தையள் நிற்கும். இடைக்கிடை மணல் குவிஞ்ச வெளிகளாயும் இருக்கும். மாடுகளைப் பாத்திட்டு கேசவனும் நானும் அந்த மணல் வெளிக்குள் இருப்போம். அதில் இருந்துகொண்டு நான் உழுவான் பூச்சியைத் தேடத் தொடங்குவேன். கேசவனும்தான். எனக்கு உழுவான் பூச்சியெண்டால் நல்ல விருப்பம், எப்பிடியும் அதைக் கண்டு பிடிச்சு கையால சுத்தப்படுத்தின மண்ணில விடுவன். அது உளர்ந்து கொண்டு இலங்கைப்படம் மாதிரிக் கீறத்தொடங்கும். எனக்கும் கேசவனுக்கும் புளுகம் வந்துவிடும். ஒரு நாள் அப்பிடித்தான் உழுவான் பூச்சியைக் கொண்டு படம் கீறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஹெலி இரைந்து கேட்டது. எனக்கும் கேசவனு க்கும் நடுங்கியது. பத்தைக்குள் ஒளிஞ்சு கொண்டோம். கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தேன். ஏதோ பேப்பர்கள் விழுந்து கொண்டிருந்தன. எங்களுக்கு பயம் விலகி விட்டது. யார் கூட பேப்பர் பொறுக்கிறது என்ற போட்டியே வந்து விட்டது. நாங்கள் அந்த காட்டு வெளியெல்லாம் “சுழியோடிப்” பேப்பர் பொறுக்கத் தொடங்கினம். அது சந்திரிக்கா அரசின் துண்டுப்பிரசுரம். நானும் கேசவனும் களைத்துப் போனோம். வந்து மணலில் இருந்தோம். 

உழுவான் பூச்சியைக் காணவில்லை. அது கீறியிருந்த இலங்கை போன்ற படமும் எங்கள் பதகளிப்பு ஓட்டத்தில் எங்களை அறியாமலே அழிந்து போயிருந்தது. திடீரென ஓர் ஐடியா இரண்டு பேருக்கும் வந்தது. இரண்டு துண்டுப் பிரசுரங்களை கீழே வைத்து அதில் மணலில் வீடு கட்டத்தொடங் கினோம். வீடு நல்லாகத்தான் எழும்பத்தொடங்கியது. அப்போதுதான் எங்கோ செல் விழும் சத்தம் கேட்டது. இரண்டு பேரும் பதகளிப்பட்டு எழுந்ததில் மணல் பொல பொலபொலவெனச் சரிந்து விழுந்தது. இரண்டு பேரும் கவலையோடு ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு தாடியப்பாவை நோக்கி ஓடத்தொடங் கினோம். கேசவன் ஓடிக்கொண்டிருக்கையில் “ம்பா” “ம்பா” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு மாடுகள்தான் முக்கியம். ஆனால் எப்பிடியும் வீட்டுக்கு வந்திடும் கவலைப்படாதே என்று நான் அவனைத் தேற்றினேன். தாடியப்பா கோவிலில் இருந்து எங்களைத் தேடி வயல் வரம்பில் வருவது தெரிந்தது. தாடியப்பாவின் கைகள் இரண்டும் எங்களை அணைத்தன. நிமிர்ந்து பார்த்தேன். தாடியப்பாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. தேவாரம் பாடவில்லையே, ஏன் கண்ணீர்? புரியாமல் அப்போது அவரைப் பார்த்தேன். வீட்டை நோக்கி மூவரும் நடக்கத் தொடங்கினோம். எனக்குள் உழுவான் பூச்சி கீறிய படம், மணல் வீடு, வந்துகொண்டிருந்தது. 

(3) 

நாங்கள் எல்லாம் வடமராட்சி வந்த பிறகு தாடியப்பா ஒரு நாள் சமாதியாகிவிட்டார் என்று அறிந்த போது சோகத்தில் துவண்டு போனேன். எங்கன்ர வீடே ஒரு செத்த வீடு போல மாறியிருந்தது. 

ஆமிப்பிரச்சினையில தென்மராட்சிப் பக்கம் போக முடியவில்லை. தாடியப்பாவை எரிக்காமல் அவர் விருப்பப்படியே சமாதியில் இருத்தியதாய் அறிந்தேன். 

மீசாலையில் தான் இப்ப ஆசையம்மாவை இருக்கினம். மந்துவில் வீடு இப்போது இல்லைத்தானே. 

நானும் கேசவனும் மந்துவிலைப் பார்க்க வெளிக்கிடயிக்கையே “தாடியப்பான்ர சமாதிப்பக்கம் போகிடாதே, அங்கால கனக்க மிதிவெடி கிடக்காம்” அம்மாவின் குரல் இப்போதும் பிடரியை பிராண்டுகிறது. அண்ணா வா போவம். கேசவனோடு கொட்டிலைத்(?) திரும்பித் திரும்பி பார்த்தபடி சைக்கிள் இருந்த இடத்திற்குப் போகத் தொடங்கினேன். 

”சமாதியைக் கூடப் பார்க்க முடியவில்லையே” 

நிர்த்தாட்சண்யம் இல்லாமல் “எல்லாவற்றின்” மீதும் எனக்குக் கோபம் எழுந்தது. 

சைக்கிளை “உழக்க” முடியவில்லை. 

திடீரெனக் கண்ணுக்குள் பொருத்துவான்கொடி அம்பிட்டது. எத்தினை நாள், மந்துவில் காடுகளுக்குள் தங்கச்சி பிறந்த நேரம் அம்மாவுக்கு பொருத்துவான் குழைப்புட்டு அவிக்கிறதுக்காக தேடி அலைந்து இருக்கிறேன். இப்போது தாரளமாய்… 

இன்னும் ஆவரசு, கிஞ்ஞா, ஈச்சம், ஆமணக்கு, சூரை, காரை, துவரை, கரும்பை, மாங்கொடி என காணும் இடமெங்கும் விரிந்து படர்ந்து.. 

கேசவன் சைக்கிளை வெட்டி வெட்டி ஓடிக் கொண்டிருந்தான். எனக்குத் தலை சுற்றுவது போலத் தோன்றியது. 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை) 

– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.

– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

தர்மராஜா அஜந்தகுமார்

கரவெட்டி வதிரியைச் சேர்ந்த தர்மராஜா அஜந்தகுமார் 1984ல் பிறந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மூன்றாம் வருட மாணவன். கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு. பத்தி, இதழியல் விமர்சனம் ஆகியதுறைகளில் ஈடுபாடு கொண்டு எழுதிவருகிறார். மாவட்ட மட்ட தழிழ் மொழித்தின கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் (2000), வலம்புரி நடாத்திய செல்லத்துரை ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு, புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (2005) பெற்றுள்ளார். சிறுவர் பாதுகாப்பு நிதியம் அனுசரணையுடனான ‘துளிர்’ சஞ்சிகையின் ஆசிரியர் (2003), ‘புதியதரிசனம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். தொடர்பு முகவரி :- யார்வத்தை, வதிரி, கரவெட்டி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *