நாவினால் சுட்ட வடு
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 454

கோடை காலத்தின் தாங்க முடியாத வெய்யில் நாளின் பிற்பகல் நேரத்தில் பேரிளம் பெண்மணி எழுத்தாளர் பார்வதி, தமது வீட்டின் கூடத்தில் தரையில் அமர்ந்து மற்றொரு பேரிளம் பெண்மணியான தோழி சரஸ்வதி தேவி உடன் தாயம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
“என்ன பார்வதி… உன் மருமகள் ஆபீஸ் போகலியா”
சரஸ்வதி கேட்டார்.
“இல்ல இன்னிக்கு வீட்டில் இருந்து வேலை செய்யறா மெதுவாக பேசு இந்த ரூம்ல தான் ஜூம் மீட்டிங்ல இருக்கா “
பதில் சொன்னார்.
“என்ன பெரிசா அரைச்ச மாவையே அரைப்பது தான் ஜூம் மீட்டிங்”
என்று சரஸ்வதி, வேண்டாத வார்த்தையை விட்ட தருணத்தில், பார்வதியின் மருமகள் ஒடிசலான, கோட் அணிந்த இளம்பெண் ரம்யா, அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
சரஸ்வதி தேவி, பேச்சை மாற்றுவதற்காக தாயக் கட்டையை உருட்டிக் கொண்டே பார்வதியின் முகத்தைப் பார்த்து பேசினார்.
“பார்வதி, நீ விருது எல்லாம் வாங்கின எழுத்தாளர் தானே.. நான் இப்ப ஒரு தலைப்பு சொல்றேன்… நாவினால் சுட்ட வடு…. இன்ஸ்டன்ட் டா உடனே கதை சொல்லு பார்ப்போம்”
பார்வதி “சவாலா” என்று கேட்டு விட்டு ரம்யாவைப் பார்த்தார்
“ஏம்மா… மீட்டிங் முடிஞ்சுதா?”
“இப்ப பிரேக் அத்தை…. நீங்க சொல்ற உடனடி கதையை நானும் கேட்கறேன் அத்தை…”
“சரி உன்னால இந்த ட்ரெஸ்ல தரையில் உட்கார முடியாதே அந்த ஒத்தை சோபாவில் உட்கார்ந்துக்க”
ரம்யா, ஒற்றை சோபாவில் அமர்ந்தபடியே கதையை கேட்க தயார் ஆனாள்.
பார்வதி தேவி பேசத் தொடங்கினார்:
“ரங்கா – செல்வா நீண்டகால நண்பர்கள். ரங்கா திருமணம் ஆகாதவர். செல்வா திருமணம் ஆனவர். செல்வாவின் மனைவி ராணி, ரங்கா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள். அவளுக்குப் பிறந்த மகள் மலர்க்கொடியிடம், ரங்காவை பெரியப்பா என்று அழைக்கச் சொல்கிறாள். மலர்க்கொடியும் ரங்காவிடம் ஒட்டிக் கொண்டு விடுகிறது.
காலங்கள் உருண்டோட, இளம் பெண் மலர்க்கொடி, தன் உடன் அலுவலகத்தில் பணிபுரியும் ரவிக்குமார் என்ற இளைஞனை காதலிக்கிறாள். செல்வா, அவள் மனம் போலவே ரவிக்குமார் உடன் அவளுக்கு சுப நாளில் திருமணம் செய்து வைக்கிறார்.
ஆனால், குறுகிய காலத்தில் இந்த ஜோடி பிரிந்து விடுகிறார்கள்.
ரவிக்குமாரின் அலுவலகத்தில் அந்த நிறுவனத்தின் சிஎம்டி குணாவைப் பார்க்க வந்த ரங்காவிடம், ரவிக்குமார் சுடுசொற்களை பேசி விடுகிறான். குணா, ரங்காவின் நண்பர் என்பதால் பார்க்க வந்திருந்தார் ரங்கா. நம்முடைய பர்சனல் லைப் பற்றி கோள் மூட்ட வந்து விட்டார் என்று நினைத்துக் கொண்டு ரவிக்குமார் ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடுகிறான்.
“என் எம்டி கிட்ட போட்டு குடுத்து பஞ்சாயத்து பண்றதுக்கு நீ யாரு…”
“மாப்ளே” என ரங்கா பேசத் தொடங்கும் போது…
“நான் எப்படி உனக்கு மாப்ளை ஆவேன்… எனக்கு புரியலையே… மலர்க்கொடி, அவங்க அப்பா ப்ரெண்டு ஒன்னை ஏன் பெரியப்பா ன்னு கூப்பிடறா… உண்மையில் மலர்க்கொடி இந்த உலகத்துக்கு வர்றதுக்கு நீதான்…”
ரங்கா “மிஸ்டர் ரவிக்குமார், பிபி டேப்ளட் போட்டு ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி நகர்ந்து விடுகிறார்.
அதன் பின்னர், சில மாதங்களில், ரவிக்குமார், மனைவி மலர்க்கொடி உடன் இணைகிறான். மாமனார் வீட்டிற்கு வந்து விடுகிறான். அங்கிருந்து அலுவலகம் போகிறான். மலர்க்கொடி, கர்ப்பிணி ஆகிறாள்.
பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.
சில மாதங்களுக்குப் பிறகு…
ஒரு நாள். பகல் நேரத்தில் குழந்தையைத் தூங்க செய்து விட்டு அம்மா அருகில் வந்த மலர்க்கொடி,
“ரங்கா பெரியப்பா ஏன் வளைகாப்புக்கும் வரலை பெயர் சூட்டும் பங்ஷனுக்கும் வரலை சொல்லும்மா” என்றாள்.
ராணி மௌனம் காத்தாள்.
“சொல்லும்மா நான் இப்ப பச்சை உடம்புக்காரி இல்ல என்னவா இருந்தாலும் சொல்லு”
டிவியை நிறுத்திய ராணி, மாப்பிள்ளை ரவி, ரங்காவிடம் உதிர்த்த வார்த்தைகள் பற்றி மகளிடம் கூறினாள்.
மலர்க்கொடியின் கைபேசி ஒலித்தது. அவளுடைய கணவன்.
“மலர், சிஎம்டி, இன்னிக்கு மேனேஜ்மென்ட் டீம் மெம்பெர்ஸ் மீட்டிங்ல தமிழ் பழமொழி சொல்லி ஆரம்பிக்கணும் னு சொல்லி இருக்காரு… நீதான் தமிழ்ல நிறைய படிக்கறியே ஒரு பழமொழி சொல்லேன்…”
மலர்க்கொடி கடுகடுத்த குரலில் பதில் அளித்தாள்
“நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது”/
“நல்லா இருக்கே ஆமாம் அதை ஏன் கடுப்போட சொல்ற”
“ம்ம்ம் இது உங்களுக்கும் பொருந்தும்”
இணைப்பைத் துண்டித்தாள் மலர்க்கொடி.
“என்ன ரம்யா கதை எப்படி” பார்வதி மருமகளிடம் கேட்டார்.
“நல்லா இருக்கு அத்தை… மீட்டிங் ஆரம்பிச்சுடுவாங்க அத்தை”
ரம்யா, விரைவாக அறையை நோக்கிச் சென்றாள்.
அமர்ந்து இருந்த சரஸ்வதி எழுந்து நின்றார்.
“நான் வரேன் பார்வதி… பேரப்பிள்ளைகள் வந்திடுவாங்க”
“என்ன கதைய பத்தி ஒண்ணும் சொல்லல”
“பெரிய மனுஷன் பெரியப்பா ஸ்தானம் குடுத்து இருக்காங்க ஆத்திரத்தில் சொன்னதுக்கு தலைய காட்டாம மறையணுமா”
பார்வதி என்று ஆண் குரல் ஒலித்தது. வரேங்க என்றபடியே கணவர் இருக்கும் அறையை நோக்கிச் சென்றார் பார்வதி. சரஸ்வதி, வாசலை நோக்கிச் சென்றார்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
குங்குமச் சிமிழ்
ஆர்.வெங்கட்ராமன்
May 28, 2026
கௌரவம்
இரா.கலைச்செல்வி
May 28, 2026
திருட்டுப்பையன்
வல்லிக்கண்ணன்
May 28, 2026
