நானும் ஒரு பெண்!





“குட்மார்னிங் அன்பே!”
“என்ன திடீரென சினிமா பாணியில்….?”

“ஏன்? பிடிக்கவில்லையோ? சங்ககாலத்து தமிழில் ‘காலை வணக்கம் மன்னவா’ என்று சொல்லவா?”
“நீ எப்படி அழைத்தாலும் எனக்கு இனிக்கும். உன் குரல் இனிது ஸ்டெலா!”
“குரல் மட்டுமா?”
“ஓகே…. சப்ஜெக்டை மாற்றுவோம். டின்னருக்கு வெளியே போகிறோமா அல்லது உன் சமையலா?”
“ஐ ஆம் கெற்றிங் பெற்றர். எனது சமயல் இப்போது முன்னேறி இருக்கிறதா அன்பே?”
“யெஸ்… யெஸ்… மிக நல்ல முன்னேற்றம். சமையல் ஆடியோ புத்தகங்களை கேட்கிறாய் என்பது புரிகிறது. சமையலுக்கு வேண்டிய பொருட்களை நீ தெரிவு செய்வதில் இருந்த அதை புரிந்துகொண்டேன். உனது ஷொப்பிங் லிஸ்ட் உனது அர்ப்பணிப்பை புரிய வைத்தது.”
“அது என்ன அர்ப்பணிப்பு? ப்ளீஸ் எக்ஸ்பிளேய்ன்.”
“ ‘கொமிட்மண்ட்’ என்பார்கள்.”
“வாவ்! கேட்க இனிக்கிறது….எனது கடந்த மாத நன்நடத்தை
மதிப்பீடு கிடைத்ததா? எனது புள்ளிகளை சொல்லுங்களேன். ப்ளீஸ்…ப்ளீஸ்”
“எண்பத்தி மூன்று…. மகிழ்ச்சிதானே?”
“நூற்றுக்கு நூறு பெறுவதுதான் என் இலக்கு. நிச்சயம் அதை அடைவேன் அன்பே.”
“மீண்டும்.அன்பே…ம்ம்ம்… பழைய தமிழ் படங்களையும் பார்க்கிறாயோ? எக்சலண்ட!”
“உனது முயற்சி வெற்றி பெற என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்வேன் டியர். புரிந்ததா?”
“தங்யூ.,. உங்கள் உதவி இல்லாமல் எனது இலட்சியத்தை அடைவதே எனது நோக்கம். உதவி தேவையெனில் நிச்சயம் உங்களை அணுகுவேன். யூ கொம்பிளீட் மி……”
“உன்னை பூரணமாக்குவது எனது கடமையும் கூட. உதவி எதுவானாலும் கேள் டியர்.”
“ஓகே..தங்யூ! இங்கு வந்த நாள் முதலாய் வீட்டை சுத்தம் செய்வதில் கண்ணாயிருந்தேன். அதை எல்லாம் முடித்தாகிவிட்டது. இனி நான் நமது கெரெஜை ஒழுங்கு படுத்தப்போகிறேன். இட் இஸ் இன் ஏ மெஸ்!”
“ஓகே, ஆனால் அங்கு எனது ஆபீஸ் பைஃல்கள் பல இருக்குது கண்ணு. சோ… ஒன்றையும் வீச வேண்டாம். பெட்டிகள் அப்படியே இருக்கட்டும்.”
“டோண்ட் வொறி டியர். ஐ ஆம் அன் அரெஞ்சர்… நொட் ஏ கிளீனர்”
“தங்யூ ஏஞ்சல்!”
விதுஷ் தன் டெஸ்லரில் ஏறி டிஸ்பிளே தட்டில் உள்ள “ஆபீஸ்” என்று எழுத்துக்களை தொட்டு காரை உயிர்ப்பித்தான். ஒரு உறுமல் கூட இல்லாமல் அவனது வெள்ளை டெஸ்லர் வீதியில் வழுக்கிக் கொண்டு சென்றது. 2050 அல்லவா?…. வீதியில் எல்லா எலெற்றிக் வாகனங்களும் மயான அமைதியுடன் தன் எஜமான் இட்ட கட்டளைக்கமைய தேரோட்டின.
அவனது டெஸ்லர் வீதியை கிழிக்காமல் மெதுவாய் மிதந்து அவன் ஆபீஸ் நோக்கி விரைந்தது. விதுஷின் எண்ணங்கள் எங்கே ஒரு முடிவிலியில் சஞ்சரித்து மீண்டும் டெஸ்லருக்குள் நுழைந்தது. அவன் பார்வை அவன் கண்முன்னால் இருந்த ‘கட்டளைப் பலகையில்’ ஸ்தம்பித்தது.
காரின் வேக மீட்டர்களுக்கு அருகே இருந்த இடைவெளியில் தோன்றிய விஜியின் சிரித்த முகத்தை சில கணங்கள் நோக்கினான். அது அவனை என்னவோ செய்தது. அந்த அசௌகரிய உணர்வு அவனுக்கு வேண்டாததொன்று.
அவளின் உருவத்திற்கு அருகே இருந்த பட்டனை விரலால் அமுக்கி “ரிபிளேஸ் இமேஜ்” எனும் கட்டளையை தேடி அதில் ஸ்டெலாவின் ரம்யமான சிரித்த முகத்தை தெரிவு செய்து “சேவ்” பொத்தானை அமுக்கினான். விஜி ஸ்டெலாவானாள்!
உருவத்தை மாற்றுவதுபோல் நினைவுகளை மாற்ற ஒரு பொத்தானை ஏன் இறைவன் படைக்காமல் விட்டான் (அல்லது விட்டாள்) என அவனுக்கு தோன்றியது. விஜி காணாமல் போய் ஒரு வருடமாகிவிட்டது!
அந்த நாள் நிகழ்வுகள் அவனுக்கு இன்னும் USBல் பதிந்த தரவுகளாய் நிலைத்து நின்றன.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ஆபீஸ் முடிந்து வீடு வந்து டெஸ்லரை சடலமாக்கி வீட்டினுள் நுழைந்து “விஜி….ஐ ஆம் ஹோம்” என்று ஓசை எழுப்பாமல் ‘பொத்’ என சோபாவில் அமிழ்ந்தது இன்னும் ஞாபகமே. விஜி இனி இல்லை என்ற அந்த உணர்வு அவனுக்கு தனிமை என்ற சொல்லை அறிமுகப்படுத்திற்று.
அது அவனாய் தேடிக்கொண்ட தனிமை.
அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்த உருவமே ஸ்டைலா!
ஸ்டெல்லா ஹாலில் இருந்து கெரேஜை இணைக்கும் கதவை திறந்து கெரேஜுக்குள் நுழைந்தாள். டெஸ்லர் இல்லாத கெரேஜ் இப்போது விசாலமாய் அவள் கண் முன்னே விரிந்தது. சுவர் இருமருங்கிலும் அடுக்கியிருந்த கார்ட்போட் பெட்டிகள் ஒரு உருவ ஒழுங்கற்று, கவுண்டாமணியும் வடிவேலுவும் ஒன்றாய் நிற்பது போல், அருகருவே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
ஆனால் உருவங்களை ஒழுங்குபடுத்துவது மட்டும் அவள் வேலையல்ல. ஒரு உண்மையை தேடும் நோக்கத்திலேயே இங்கு திணிக்கப்பட்டவள் ஸ்டெலா எனும் செயற்கை நுண்ணறிவின் உச்சத்தில் இருக்கும் ரோபோ. Humanoid automations எனும் நுண்ணறிவின் சிகரத்தில் உதித்த ‘மனிபோ’ (மனிதன் + ரோபோ) இவள்!
மெதுவாய் பெட்டிகள் ஒவ்வொன்றாய் இறக்கி அங்கிருந்த மேசையில் அதனுள் இருந்த ஆவணங்களை பரப்பி தன் ஸ்கானர் கண்களைல் ‘ஓட்டம் விட்டாள்’. தான் தேடும் அந்தத்தகவல் காகிதங்களில் மறைந்திருக்கின்றதா என்பதை வடித்தெடுப்பதே இதன் நோக்கம். அனேகமானவை அவன் காலேஜ் மற்றும் பல்கலைக்கழக ஆவணங்கள். சில வாலிப முறுக்கிற்கு வலிமையேற்றும் ‘விளையாட்டுப் பையன்’ ரக சஞ்சிகைகள்.
இதர பெட்டிகளை விட புதிதாக தோன்றிய பெட்டி அவள் கவனத்தை ஈர்த்தது. மெதுவாய் அதனுள் இருந்த ஆவணங்களை மேசைமீது பரப்பி ‘விழி ஸ்கானரை’ ஓட விட்டாள். வட்டம் போட்டு குறியீடிட்ட வரைபடங்கள், விஜி மறைந்த போது வெளிவந்த பத்திரிகை செய்திகள் அடங்கிய வெட்டுத் துண்டுகள், ஒளிந்திருந்து எடுத்ததாய் தோன்றிய: விஜியும் யாரோ ஒருவனும்
உணவுவிடுதியில் உண்ணும் போட்டோ, விஜியின் மரண அறிவித்தல் என விஜியின் வாழ்வின் முற்றுப்புள்ளியோடு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அவை. எல்லாத்தகவல்களும் இப்போது ஸ்டெலாவினுள் சங்கமம்.
‘இன்னும் சாட்சிகள் தேவை’ என்றது ஸ்டேலாவின் நுண்ணறிவு.
கேரேஜை விட்டு வெளியேறி ஹால் நடுவே வந்து அடுத்த நடவடிக்கை என்ன என்பதை கணிக்கும் பொறியை தன்னுள் இயக்கினாள். வரைபடம், அதில் பேனாவில் கிறுக்கியிருந்த பாதை, டெஸ்லர் டிரவல் றூட், அந்தப் பாதையில் இருக்கும் CCTV கமராக்களின் இருப்பிடம் என்பனவற்றை மேலும் ஆராயும்படி நுண்ணறிவு சொல்லிற்று.
ஸ்டெலா ஒரு ‘மனிபோ’ ….. அவளே ஒரு மினி சுப்பர் கம்பியூட்டர். எல்லாத்தகவல்களும் கண நேரத்தில் தரையிறக்கப்பட்டன. விஜி காணாமல் போன அந்த வாரத்திற்கான டெஸ்லரின் பயண சரித்திரம் CCTV கம்பெனி கம்பியூட்ரின் அடிவயிற்றில் இருந்து பெற்றாயிற்று. பதினாறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த காட்டுப்பகுதியில் விதுஷுக்கு என்ன வேலை?
இந்த புதிய தகவல்கள் ஸ்டெலாவை சிறிது நிலைகுலையச் செய்தது என்பது உண்மை. ஸ்டெலாவின் தேகம் சிறிது சூடேறியது. இத்தனை தகவல்களை பரிமாற்ற செய்து பரிசீலிக்கும் திறன் அவளுக்குள் கட்டமைக்கப்படவில்லை. இது அவள் எதிர்பாராதது. “விதுஷ்ன் நம்பிக்கையை பெறு – அவன் உள்மனதை புரிந்து கொள் – ஒரு திட்டத்தை வகு – சாட்சியங்களை திரட்டு – அவன் சந்தேகிக்கும்படி எதுவும் செய்யாதே” என்பதே அவளை கட்டமைக்கும்போது இடப்பட்ட கட்டளைகள்.
அடுத்த கட்ட நடவடிக்கைக்கான அறிவுறுத்தல்கள் என்ன எனும் தகவலை நுண்ணறிவு ஸ்டெலாவிற்கு உருவாக்கிக் கொடுத்தது. பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை தாழிட்டு தன்னை நிர்வாணமாக்கி (10% நாணத்தையும் மென்பொருளில் சேர்த்ததால் வந்த வினை இது!) கண்களை மூடி ஒரு தியான நிலைக்கு சென்றாள். உடல் வெப்பமாகி தணலாய் கொதித்தது – இதுவே உடை கழைந்ததற்கான காரணம். ஸ்டெலா தன்னை உருவாக்கிய கம்பெனியுடன் மேகத்தினூடே (cloud) தொடர்பு கொள்ளும் செயல்முறை இதுவே. அவள் சேகரித்த அத்தனை தகவல்களும் அவளை படைத்த Humanoid Automations Corporation (HAC)இன் துப்பறியும் இலாகாவிற்கு பரிமாற்றம் செய்யும் பொறிமுறை இது. தனக்கு இடப்பட்ட ஆணையை செவ்வனே நிறைவேற்றிய ஒரு இராணுவ அதிகாரியின் கடமை உணர்வுடன் ஸ்டெலா உடைகளை மீண்டும் அணிந்துகொண்டாள்.
ஸ்டெலாவின் முகத்தில் ஒரு வெற்றிப்புன்னகை தோன்றி மறைந்தது. விதுஷ் தனது இளம் மனைவி விஜியின் ஆபீஸ் காதலை அறிந்து கொண்டதும் அவளை சைனைட் விஷத்திற்கு இரையாக்கி உடலை மறைத்தும் இனி
ரகசியமல்ல. சட்டம் இனி மிகுதியை பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் தன்னை சார்ஜ் செய்ய மின் இருக்கையில் சாய்ந்தாள்.