கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2025
பார்வையிட்டோர்: 311 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு விளையாட்டையாவது முழுசா விளையாடினோம் கிறது கிடையாது நாணாவுக்கு. ‘நாணா இங்கே வா, நாணா அங்கே போ, நாணா கடைக்குப் போய் அதை வாங்கிண்டு வா, நாணா இது நன்னா இல்லே, கடையிலே கொண்டு போய்த் திருப்பிக் கொடுத்துடு, நாணா வர்ற வழியிலே…’

இதேதான் எப்பவும். ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தமா, கொஞ்ச நேரம் ஆசையா விளையாடினோமான்னு கிடையாது.

யாராவது ஒருத்தரா இருந்தா பரவாயில்லே. வீடு பூரா மனுஷா. நாணாவுக்கு ஒரு தாத்தா இருந்தார். அவரோட அப்பா கொடுத்ததோ, தாத்தா கொடுத்ததோ, ஒரு பழைய கிராமபோன் பெட்டியும் பாட்டுப் பிளேட்டும் வச்சிண்டி ருந்தார். “டவுனுக்குப் போய்க் கிராமபோன் ஊசி இருக்கான்னு கேட்டா சிரிக்கிறான். பெரியவரே இது ஸி.டி. யுகம்கிறான்” என்று முனகிக் கொண்டு இருந்தார். தாத்தா வும் போயிட்டார். அவரோட கிராமபோன் பெட்டியும் பர ணுக்குப் போயிட்டுது. அதிலே ஒரு பிளேட் அடிக்கடி தாத்தா வைப்பார். “எங்க குடும்பம் பெரிசு. எங்க எளைய குடும்பம் சிரிசு! சிரிசு!’ன்னு பாடும். அதுக்கு மேலே பிளேட் ஓடாது. ‘சிறிசு சிறிசு சிறிசு’ன்னு அதுவே திரும்பித் திரும்பி வரும். “கீறல் விழுந்துடுத்து. அதை ஏன் கட்டிண்டு மாரடிக்கிறேள்?” என்று பாட்டி சிரிப்பா. தாத்தாவும் சிரிச் சுண்டே அதை எடுத்து வச்சிடுவார்.

அந்த பாட்டிலே வர்ற மாதிரிதான் நாணாவோட குடும் பம். கப்பல் மாதிரி வீடு. வீடு நிறையக் கூட்டம். சமையல் பாட்டுக்கு கல்யாண சமாராதனை மாதிரி நடந்துண்டே இருக்கும். ஒருத்தர் சாப்பிட்டுட்டுக் கையலம் பிண்டு இருக்கிறப்ப இன்னொருத்தர் ‘டம்ளர்லே ரசம் கொஞ்சம் கொடு’ன்னு கேட்டிண்டிருப்பார். அண்ணா, மன்னி, அத்தான், அம்மாஞ்சி, அம்மங்கான்னு போறவா ளும், வர்றவாளும், தூங்கறவாளும், தூங்கறவாளை எழுப் பறவாளுமா எப்பவும் மகாமகம். சின்ன மன்னி, ‘நான் வாக்கப்பட்டு இந்தாத்துக்கு வந்தப்போ யாருக்கு யார் என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கவே எனக்கு ரெண்டு வருஷ மாச்சு’ன்னு ஒரு தடவை சொன்னா.

எல்லா எடுபிடி வேலையும் நாணா தலையிலேதான் விழும். அதுவும் கடைக்கு விரட்டறதுதான் ரொம்ப ஜாஸ்தி. ஊரிலே ஒரு கோடியிலே அவங்க வீடு இருக்கு. மளிகைக் கடையா, கறிகாய்க் கடையா, மருந்துக் கடையா எதுவுமே பக்கத்துலே கிடையாது. குறைஞ்ச பட்சம் அரை மைலா வது நடக்கணும். சைக்கிள் வச்சிண்டிருக்கிற அண்ணாக்கள், ஸ்கூட்டர் வச்சிண்டிருக்கிற மாமாக்கள் இருக்கிறாளே, அவா ளைப் போகச் சொல்லக்கூடாதோ? இல்லே, அவாளேதான், ‘நாங்க போய்ட்டு வர்றோம்’ன்னு சொல்லக்கூடாதோ? நாணா, நாணா, நாணாதான்.

‘நாணா, கண்ணோல்லியோ… கடைக்குப் போய்க் கொத்தமல்லி வாங்கிண்டு வாடா. பெரியப்பாவுக்குத் தொகையல் அரைக்கணும்’ன்னு அம்மா மோவாயைப் பிடிச்சு சொல்லுவா. ‘சரி’ன்னு போய் வாங்கி வீட்டுக் குள்ளே நுழைஞ்சதுமே, சின்ன மாமா, ‘நாணா, பார்மஸி யிலே இந்த மாத்திரியை வாங்கிண்டு வா. குளிர் ஜுரம் வர்ற மாதிரி இருக்கு டாக்டர் எழுதிக் கொடுத்தார்`னு சொல்லி, சீட்டைக் கொடுப்பார். டாக்டர்கிட்டேயிருந்து வர் றப்ப மாத்திரையை வாங்கிண்டு வந்திருக்கக் கூடாதா என்ன? மாட்டார்.

சீனு அம்மாஞ்சி ஒருத்தர்தான் நாணாவுக்கு வேலையே கொடுக்காதவர். அவருக்குத் தேவையெல்லாம் வெத்தலை, சீவல், வாசனைப் புகையிலை அவ்வளவுதான். அதெல்லாம் அவரே வாங்கிண்டு வந்து வெள்ளிச் செல்லத்திலே அடைச்சு வச்சிண்டிடுவார். நாணாவை ஏவ மாட்டார்.

அதனாலேயே அவர்கிட்டே நாணாவுக்குத் தனிப் பிரி யம். ரெண்டு பேரும் திக்ஃ ப்ரெண்ட்ஸ். ராத்திரி ஹோம் ஓர்க்கெல்லாம் முடிச்சப்புறம் சீனு அம்மாஞ்சியோடு மொட்டை மாடியிலேதான் நாணா படுத்துப்பான்.

பாயைப் பிரிச்சுப் போட்டு, அது மேலே ஜமுக்காளத் தைச் சுருக்கமில்லாமே நீவி விரிச்சு, தலைகாணியை உறை யிலேருந்து உருவி, பம் பம்னு தட்டிட்டு, மறுபடி மாட்டிப் போட்டுப்பார். சரியா பாயோட நடு மத்தியிலே உட்கார்ந்து வெத்தலை சீவல் போட்டுப்பார். வெத்தலையை நீள வாக் கிலே ரெண்டா மடிச்சு, காம்பை அழகாய்க் கிள்ளிப் போடு வார். நாணா அதையெல்லாம் திரட்டி வாயிலே போட்டுப் பான். ‘இது நன்னாத்தானே இருக்கு, அம்மாஞ்சி? ஏன் கிள்ளி எறியறே?’ன்னு நாணா கேட்பான். ‘அதுக்கெல்லாம் சாஸ்திரம் இருக்குடா’ன்னு சொல்லிடுவார்.

உலகத்திலே பல விஷயங்கள் தெரிஞ்ச மாதிரி காட்டிப்பாரே தவிர, நெஜத்திலே அவருக்கு ஒண்ணும் தெரி யாதோன்னு நாணா அடிக்கடி சந்தேகப்படுவான். ஒரு நாள் ஹோம் ஒர்க்கிலே ஏதோ சந்தேகம் வந்தப்போ அவர்கிட்டே கேட்டான். ‘அதெல்லாம் சொல்லிக் கொடுக்கக் கூடாதுடா நாணா. நீயாத்தான் கஷ்டப்பட்டுத் தெரிஞ்சுக்கணும். அப் பத்தான் மூளை வளரும்’னு சொல்லிட்டார். ஆனா சில, சில சமயம் கரெக்டா யோசனையும் சொல்வார்.

சீனு அம்மாஞ்சிக்கு வயசு அம்பதோ, அறுபதோ இருக் கும். ஆனா நாணா அவரை ‘நீ, வா, போ’ன்னுதான் கூப் பிடுவான். ‘நீங்க, வாங்கோ, போங்கோ’ன்னு தான் சொல் லணும்னு அம்மா பல தடவை சொல்லியிருக்காள். நாணா வுக்கு என்னவோ அப்படி வர மாட்டேங்கறது.

அம்மாஞ்சிக்கு ஆம்படையா கிடையாது. தனிதான் எப் பவும். ஒருநாள் மொட்டை மாடியிலே நல்ல நெலா காஞ் சிண்டிருந்தப்போ ‘ஏன் அம்மாஞ்சி நீ கல்யாணம் பண்ணிக் கலே’ன்னு நாணா கேட்டான். ‘சின்ன வயசிலே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட் டேன். அவ வேற யாரையோ கல்யாணம் பண்ணிண்டு போயிட்டா’ன்னார் அம்மாஞ்சி. ‘அவ போயிட்டான்னா நீ வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க வேண் டியதுதானே? ‘ன்னு நாணா கேட்டதுக்கு, ‘அதான் சொன் னேனே, ஆசைப்பட்டேன்னு!’ அப்படீன்னு சொல்லிட்டு நீளமா ஏதோ ராகம் பாட ஆரம்பிச்சிட்டார் சீனு அம்மாஞ்சி. அவருக்கு நல்ல குரல். நெறையப் பாட்டு தெரியும். நாணா வுக்கும் அவர் பாடறது ரொம்பப் பிடிக்கும். ஆனா இன் னைக்கு அவரோட பாட்டிலே மனசு போகலே. ‘ஆசைப் பட்டேன்னா என்ன அர்த்தம்?’னு யோசிச்சிண்டே இருந் தான். அப்படியே தூங்கிப் போயிட்டான். அதுக்கப்புறம் அவர்கிட்டே கல்யாணத்தைப் பத்திக் கேட்கலே.

வீட்டிலே எல்லாருக்கும் சீனு அம்மாஞ்சிகிட்டே மரி யாதை, பிரியம். வீட்டிலே ஏதாவது விசேஷம்னா ‘எதுக்கும் அம்மாஞ்சியை ஒரு வார்த்தை கேட்டுக்கணும்’னு தான் எல்லாரும் பேசிப்பா. இரைஞ்சு சண்டை போடறவா கூட, அம்மாஞ்சி வர்றது தெரிஞ்சா அடங்கிப் போயிடுவா.

இத்தனைக்கும் எல்லோரையும் போல அம்மாஞ்சி ஆபீஸ், கீபீஸ்னு எதுக்கும் போறதில்லை. வேளா வேளைக் குக் குளிச்சு, இஷ்டமானா பூஜை பண்ணி, இல்லேன்னா விட்டுட்டு, சாப்பிட்டுட்டு, இங்கிலீஷ் பேப்பர், தமிழ்ப் பேப்பர் ரெண்டையும் படிச்சு முடிச்சுட்டு, தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பார். ஆனா உம்மணா மூஞ்சி இல்லே. எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசுவார்.

ஒருநாள் அம்மாகிட்டே நாணா கேட்டான் – “ஏம்மா, சீனு அம்மாஞ்சி ஏன் எல்லார் மாதிரியும் ஆபீசுக்குப் போற தில்லே? அவர் மட்டும் சம்பாதிக்க வேண்டாமா?”

“பைத்தியக்காரா! அவர் சம்பாதிச்சு என்னடா ஆகணும்? எட்டுத் தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற மாதிரி அவ ருக்கு நெலபுலம் இருக்கு. ‘எதுவும் எனக்கு வேண்டாம், நீங்களே வச்சுக்கோங்கோ’ன்னு நமக்குக் கொடுத்திட்டார். அவர் போட்ட பிச்சையிலேதான் இந்த வீட்டிலே அத்தனை பேரும் சுகமா இருக்கோம்”னு அம்மா பதில் சொன்னாள்.

இனிமே நாமும் அம்மாஞ்சியை மத்தவாளைப் போல நீங்க, வாங்கோ, போங்கோன்னு கூப்பிடணும்னு நாணா நினைச்சிண்டான். ஆனா வரலே. ஒரே ஒருதடவை நீங் கன்னு சொன்னதும் அம்மாஞ்சி சிரிச்சுண்டே ‘என்னடா புது உறவு காண்பிக்கிறே?’ன்னார். விட்டுட்டான்.

எந்த ஒரு பிரச்சினைன்னாலும், கஷ்டம்னாலும், வேடிக் கைன்னாலும் சீனு அம்மாஞ்சிகிட்டேதான் நாணா சொல்லு வான். எங்க கிளாஸ்லே அம்மாஞ்சி, எஸ். கோமதின்னு ஒரு பெண்ணு, கறுப்பா, குள்ளமா இருக்கும். ரொம்பப் பயந்தாங்குளி. இன்னிக்கு இன்டர் வெல் டயத்திலே எழுந்து போனா. அவ உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தா ஒரே ஈரமா இருந்தது. மிஸ் அதட்டினப்போ பயந்து ஒன்பாத்ரூம் போயிட்டா போல இருக்குன்னு நாங்க பாய்ஸெல்லாம் சிரிச்சோம்’னு சொன்னான் ஒருநாள்.

‘சீ…சீ… அப்படில்லாம் இருக்காது’ன்னு சொல்லிட்டு அம்மாஞ்சி கொஞ்ச நேரம் என்னவோ யோசனை பண்ணி னார். அப்பறம், ‘அந்த பொண்ணுக்கு முடி ரொம்ப நீளமா?’ன்னு கேட்டார். ஆமாம்’னு நாணா சொன்னான். ‘அதான். இன்னிக்கு வெள்ளிக்கிழமையோல்லியோ?’ ஸ்நானம் பண்ணிட்டு தலையை அழுத்திப் பின்னிக்காமே, தளர முடிச்சப் போட்டுண்டு ஸ்கூலுக்கு வந்திருப்பாள். சொட்டு சொட்டா ஈரம் வடிஞ்சிருக்கும்’ன்னார் அம்மாஞ்சி.

நாணா கண்ணை மூடிண்டு ஞாபகப்படுத்திப் பார்த் தான். ‘கரெக்ட் அம்மாஞ்சி. நீ சொன்ன மாதிரிதான் அவ வந்திருந்தா. எப்படி அம்மாஞ்சி நீ கரெக்டா கண்டு பிடிச்சே?’ன்னு ஆச்சரியப்பட்டான்.

‘நானும் ஸ்கூலுக்குப் போனவன்தாண்டா’ன்னார் அம் மாஞ்சி.

இந்த மாதிரி ராத்திரி மொட்டை மாடியிலே படுத்திருக் கிறச்சே எத்தனையோ விஷயங்களைப் பேசுவான். இன் னிக்கு ரொம்ப முக்கியமான சமாசாரம் இருந்தது.

மாடியிலே பாயைப் பிரிச்சுப் போடறப்ப அம்மாஞ் சியே கவனிச்சுட்டார். அவன் தலையைத் தொங்கப் போட் டுண்டு பேசாம உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்துட்டு, ”ஏண்டா,நாணா என்னவோ போல இருக்கே? ”ன்னு கேட்டார்.

‘ஃப்ரண்ட்ஸ்கிட்டே இன்னிக்கு அவமானமா போயி டுத்து அம்மாஞ்சி’ன்னான்.

“ஏண்டா அப்படி! நீ தானே எப்பவும் அவாளுக்கு ஹீரோ. என்ன நடந்தது?”ன்னார்.

“ஒரு விளையாட்டிலேயும் என்னைச் சேர்த்துக்க மாட் டேன்னுட்டாங்க”ன்னான் நாணா. “அடேடே, அப்படியா? ஏனாம்?”ன்னார் அம்மாஞ்சி.

”நான் பாதியிலே, பாதியிலே போயிடறேனாம். ‘போடா, நீ பாதி ஆட்டத்திலே அம்மா கூப்பிடறா, அத்தை கடைக்குப் போகச் சொல்றான்னு சொல்லிட்டுப் போயி டறே. ஆட்டமே கெட்டுப் போறது. இனிமே நீ பேசாம திண்ணையிலே தாச்சி மாதிரி உட்கார்ந்திண்டிருங்கறாங் க”ன்னு சொல்லி நாணா மூக்கை உறிஞ்சினான்.

“ஏய், ஏய். நீ பெரிய பையன். இதுக்கெல்லாம் அழ லாமா? கெடக்கறாங்க, விடு”ன்னார் அம்மாஞ்சி.

“அவங்க சொல்றதும் ரைட்தானே அம்மாஞ்சி? வீட்டு வாசல்லேதானே விளையாடறேன்? அதனால விளையாண் டிண்டு இருக்கிறப்போ அத்தை கூப்பிட்டு, ‘கடைக்குப் போய் சக்கரை வாங்கிண்டு வாடா’ங்கிறா. வாங் கிண்டு வந்து கொடுத்தால், பெரியப்பா, ‘ஸ்கூட்டர் ரிப் பேர், மெக்கானிக்கை அழைச்சிண்டு வா’ங்கறார். அதுக்குப் போயிட்டு வந்தால் அத்திம்பேர், ‘இன்னிக்கு நான் லீவு, மோட்டுத் தெரு குப்புசாமிகிட்டே என் லீவு லெட்டரைக் கொடுத்துட்டு வா’ங்கறார். அதைக் கொடுத்துட்டு வந்தால் அத்தை, ஏண்டா நாணா, சக்கரையோடே துவரம் பருப்பும் வாங்கிண்டு வரச் சொன்னேனே. மறந் துட்டியா?’ன்னு சும்மனாச்சியும் பொய் சொல்லி மறுபடி கடைக்குப் போகச் சொல்றா”ன்னான் நாணா.

அம்மாஞ்சி ஒரு நிமிஷம் யோசனை பண்ணிட்டு, ‘ஒரு சைக்கிள் வாங்கிக்கோயேன். செகன்ட் ஹாண்டிலே நல்லதா கிடைக்கும்”ன்னார்.

”எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதே அம்மாஞ்சி”. ”இப்படிச் சொல்லிக்க வெக்கமாயில்லே உனக்கு? இப் பத்தான் என்ன, கத்துக்கோயேன்”

“ஒரு தரம் கத்துண்டேன். விழுந்து விழுந்து காலெல் லாம் சிராய்ச்சுப் போயிடுத்து. அப்புறம் கத்துக்கலை. எனக்கு சைக்கிள் வேண்டாம்”ன்னான் நாணா.

சீனு அம்மாஞ்சி இன்னொரு தரம் கண்ணை மூடிண்டு யோசனை பண்ணினார். அப்புறம் சிரிச்சுண்டே, “நான் ஒரு வழி சொல்றேன், கேட்கறியா?”ன்னார்.

“சொல்லுங்க அம்மாஞ்சி”ன்னான்.

”அத்தை கடைக்குப் போய் சக்கரை வாங்கிண்டு வரச் சொல்றா. உடனே ஓடிப் போய் வாங்கிண்டு வர்றே, இல்லையா?”

”ஆமாம்”

“நீ வந்தவுடனே அத்திம்பேர் ஒரு காரியம் சொல்றார். உடனே மறுபடி ஓடறே, இல்லையா?”

”ஆமாம், அம்மாஞ்சி. “

“அதாவது, என்ன வேலை, யார் சொன்னாலும் உடனே போயிட்டு உடனே வர்றே, இல்லையா?”

“ஆமாம் அம்மாஞ்சி. ஓடிண்டே போறேன். ஓடிண்டே வர்றேன்.”

“ஏன் அப்படிப் பண்றே?”

“விளையாடறதைப் பாதியிலே விட்டுட்டுப் போறோ மேன்னுதான். உடனே வந்தாத்தானே ஆட்டத்திலே சேர்த்துப்பாங்க?”

சீனு அம்மாஞ்சி அவன்கிட்டே நெருங்கி உட்கார்ந்தார். “விளையாட்டை மூணு, நாலு நாளைக்குத் தியாகம் பண்ணு”ன்னார்.

“அப்படின்னா?”

“ஆட்டம் போனா போகட்டும். உடனே ஓடிப் போயிட்டு உடனே ஓடி வராதே. எவ்வளவு மெதுவா போகணுமோ அவ்வளவு மெதுவா போ. எவ்வளவு மெதுவா திரும்பி வர முடியுமோ அவ்வளவு மெதுவா திரும்பி வா”ன்னார் அம்மாஞ்சி.

நாணாவுக்குப் புரியலை. “அப்படியும் என்னை அனுப்பத்தானே அனுப்புவா?”ன்னான்.

“அதான் இல்லே. நாலு நாள் அப்படித் தாமதமா வந்தேன்னு வெச்சுக்கோ. உன்னை அனுப்பினா லேட்டாகும்னு தெரிஞ்சு போகும். யாராவது உன்னை எங்கேயானும் போகச் சொன்னா, உடனே மத்தவா, ‘ஐயையோ, நாணாவையா அனுப்பறே? வேண்டாம், வேண்டாம். அவன் இன்னைக்குப் போனான்னா அடுத்த மாசம்தான் வருவான். நாணாவை அனுப்பாதே. வேற யாரையாவது அனுப்பு. யாரும் இல்லேன்னா நீயே போ’ன்னு சொல்லுவா. கொஞ்சம் கெட்ட பேர் வரும் உனக்கு. பரவாயில்லே. ஃப்ரண்ட்ஸ் தான் முக்கியம். பழையபடி நீ ஹீரோவாயிடலாம்”னு நீ சொல்லிட்டு, ஜமக்காளத்தை உதறிப் போட்டுண்டு சீனு அம்மாஞ்சி படுத்துன்னுட்டார். கொஞ்ச நேரத்திலேயே தூங்கிப் போயிட்டார்.

நாணா ரொம்ப நேரம் வரை தூங்கலே. அம்மாஞ்சி சொன்ன ப்ளானை நினைக்க நினைக்க அவனுக்கு த்ரில்லாக இருந்தது. மனசுக்குள்ளே சிரிச்சிண்டே ரொம்ப நேரம் கழிச்சு அவனும் தூங்கினான்.

அடுத்த நாள் ஞாயித்துக்கிழமை. எல்லாரும் இன்னிக்கு வீட்டிலேயே இருப்பா. ஆளாளுக்கு வேலை கொடுத்து வெரட்டிண்டே இருப்பா. அம்மாஞ்சியோட ப்ளானை நிறைவேத்த சரியான நாள்தான்னு நாணா சந்தோஷப்பட்டுண்டான்.

மணி ஒன்பதாச்சு. இன்னும் ஏண்டா ஒருத்தரும் நம் மைக் கூப்பிடலேன்னு அவன் நினைச்சுக்கிறதுக்கும், பெரிய மாமி கூப்பிடறதுக்கும் சரியாக இருந்தது. “நாணா, லாண் டரிக்குப் போய் மாமாவோட டிரெஸ் ரெடியா இருக்கான்னு கேட்டுட்டு வா. மை காட்! இட்ஸ் ஆல்ரெடி நைன்! க்விக்! க்விக்!’ அப்படீன்னாள். அந்தக் காலத்திலேயே பி.ஏ.படிச் சவளாம்,பெரிய மாமி. அதனால் பட்லர் இங்கிலீஷ்லே தாட் பூட் தஞ்சாவூர்.

பணத்தை வாங்கிப் பையில் போட்டுண்டு வெளியே நடந்தான் நாணா. க்விக்கா க்விக்? இன்னிக்கு என்ன பண்றேன் பாருன்னு நினைச்சுண்டான். மொதல்ல லாண்ட ரிக்குத்தான் போனான். ‘டிரெஸ் ரெடியா இருக்கு’ன்னு

லாண்டரிக்காரர் சொன்னார். ‘வர்றப்ப வாங்கிக்கிறேன்’னு சொல்லிட்டு இன்னும் கொஞ்சம் தூரம் போனான். ‘உடனே உடனே வீட்டுக்குத் திரும்பாதே’ன்னு அம்மாஞ்சி சொன்னாரேயொழிய, எப்படி நாழியாக்கறதுன்னு சொல்லலியே? பராக்குப் பார்த்துண்டே கடைத் தெருப் பக்கம் போனான்.

மூர்த்தித் தெரு முனையில் எப்பவும் ஒரு ஆள் தோளிலே நீளமாய்,பெரிசாய் ஒரு வெள்ளைப் பையை மாட்டிண்டு ‘எடுடா ராஜா எடுடா’ன்னு கூவிண்டே இருப் பான். எப்பவும் அவனைச் சுத்தி பத்து பேர் இருப்பாங்க. பைக்குள்ளே சின்னச் சின்ன கோலி இருக்கும். கால் ரூபா கொடுத்துட்டு, அதுக்குள்ளேயிருந்து ஒரு கோலியை எடுக் கணும். கோலியிலே சிவப்புக் கலரிலே நம்பர் போட்டிருக் கும். எட்டு போட்டிருந்தா எட்டு மடங்கு காசு தருவான். பத்து போட்டிருந்தா பத்து மடங்கு. சில பேர் கையை விட்டு ஆறு, அஞ்சுன்னு நம்பர் போட்ட கோலியை எடுத்து, அந்த மடங்குக்குக் காசு வாங்கிப்பாங்க. அவங்க எல்லாரும் அவனோட ஆளு’ன்னு பாலு சொல்லியிருக்கான். நம்பர் போட்ட கோலியை மொதல்லேயே கையிலே மறைச்சு வச்சிண்டு எடுக்கிற மாதிரி எடுப்பாங்களாம். அவங்க காசு வாங்கறதைப் பார்த்து ஆசைப்பட்டு மத்தவங் களும் கையை விட்டுக் கோலி எடுப்பாங்க. அதிலே சைபர் தான் போட்டிருக்கும். கொடுத்த காசு போச்சு.

நாணா இதை எத்தனையோ நாள் பார்த்திருக்கான். ஆசையா இருக்கும். ஆனா ஏமாறக் கூடாதுன்னு சும்மா கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டுப் போயிடுவான். இன்னைக்குப் போகத் தோணலே. பெரிய மாமி கொடுத்த காசு சட்டைப் பையிலே இருந்தது. அதிலேயிருந்து பத்துப் பைசா கொடுத்து, ஒரு கோலியை எடுத்தான், என்ன ஆச்ச ரியம்! பத்துன்னு நம்பர் போட்ட கோலி வந்தது. பத்து இன்ட்டு பத்து நூறு ஒரு ரூபா!

நெஜமாத்தான் வந்ததா, இல்லே, நம்ம மேலே மேலே காசு வைக்கணும்னு அந்த ஆள் ஏதோ ட்ரிக் பண்ணினா னான்னு நாணாவுக்குத் தெரியலே. அதுக்குள்ளே யாரோ ஒருத்தன் ‘போலீஸ் வருது!’ன்னு இரைஞ்சு கூவினான். உடனே எல்லோரும் ஓடிட்டாங்க. கோலி வச்சிண்டிருந்த ஆளும்தான் – நாணாவோட பத்துக் காசோடே! நாணா பேந் தப் பேந்த முழிச்சிண்டு நிற்கிறதைப் பார்த்து, போறவங்க வர்றவங்க சிரிச்சாங்க. நாணாவுக்கு அவமானமாப் போயி டுத்து.

அந்த எடத்தை விட்டு நடந்தான். ரொம்ப நேரம் ஆகி யிருக்கும்னு நினைச்சு, எண்ணெய்க் கடை கடியாரத்தைப் பார்த்தா பத்தரைதான் ஆகியிருந்தது. வீட்டிலே யிருந்து கிளம்பி ஒண்ணரை மணி நேரம்தானா ஆகிறது?

அதுக்குள்ளே வீட்டுக்குத் திரும்பக் கூடாதுன்னு கோயில் பக்கமா போனான். பழக் கடைக்குப் பக்கத்திலே குவியல் குவியலா ஆத்திக்கீரை வச்சிண்டு வித்திண்டிருந் தாங்க. நாளைக்குத் துவாதசியா இருக்கும். அப்படின்னா தான் இன்னிக்கு ஆத்திக்கீரை விற்பாங்களாம். பாட்டி சொல் லியிருக்கா.

கொஞ்ச நேரம் அதை வேடிக்கை பார்த்துண்டு நாணா நின்னான். ஒரு பையன் நாணா வயசுதான் இருக்கும் ரெண்டு கட்டு ஆத்திக்கீரை வாங்கி, தலையிலே வைச் சிண்டு எங்கியோ பராக்குப் பார்த்துண்டு இருந்தான். அப்ப ஒரு கோயில் மாடு பின்பக்கமா வந்து ஆத்திக் கீரையை ஒரு இழுப்பு இழுத்துண்டு ஓடிடுத்து. ‘ஆ! ஆ!’ன்னு அந்தப் பையன் துரத்தினான். அவனுக்காகப் பெரியவங்க சில பேரும் மாட்டைத் துரத்தினாங்க. ஆனா அதுவாய் நிறைய ஆத்திக்கீரைக் கட்டைக் கவ்விண்டு ரொம்ப ஜோரா ஓடிடுத்து.

அப்படியே போனப்ப சேலையம்மன் தெரு வந்தது. ‘ஊர்லேயே அதுதான் ரொம்ப நீளமான தெரு’ன்னு சாமி சொல்லுவான். அவன் வீடு கூட அந்தத் தெருவிலேதான். நாணா அங்கே அதிகம் போனதில்லே. இன்னிக்குப் போனான். ரேழியிலே நுழையறப்ப உள்ளே பெரிசா சண்டை கேட்டுது. ‘மூடுடி வாயை! பல்லை ஓடைச்சிரு வேன் நாயே!ன்னு யாரோ கத்திண்டிருந்தா. சாமியோட அப் பாவோ என்னவோ. நாணா சத்தம் போடாம வெளியே வந் துட்டான்.

சேலையம்மன் தெருக் கோடியிலே வலப்பக்கமா போனா ஆத்தங்கரை. இடப்பக்கமா திரும்பினா ஒரு தோப்பு. புளிய மரம், தென்னை மரம், பலா மரம்னு என் னென்னவோ இருக்கும். நடுவிலே ஒரு வண்டிப் பாதை. அதன் வழியாவே போனால் நாலஞ்சு தெருக் கோடியைத் தாண்டி அஞ்சாவது தெரு வரும்னு சொல்லுவாங்க.

நாணாவுக்கு பயமா இருந்தது. இருந்தாலும் போய்த் தான் பார்ப்போமேன்னு நடந்தான். வெயிலே தெரியலே. வழி பூரா காய்ஞ்ச சருகுதான். மிதிச்சதும் நொறுக்கு நொறுக் குன்னு சத்தம் கேட்டுது. எதிரிலே யாரும் வரலே.மோகி னிப் பிசாசும்பாளே, அதெல்லாம் இங்கேதான் இருக்கு மோன்னு தோணித்து.

வழியிலே ஒரு இடிஞ்ச வீடு இருந்தது. அதன் வாசல்லே ஒருத்தர் பசு மாட்டைக் குளிப்பாட்டிண்டு இருந் தார். வைக்கோலைப் பந்து மாதிரி சுருட்டி, பக்கெட் தண் ணீரிலே நனைச்சு நனைச்சு மாட்டைத் தேய்ச்சு விட்டார். அதுக்கு ரொம்ப சுகமா இருந்திருக்கும் போலிருக்கு. இடுக் கிலெல்லாம் தேய்க்கச் சொல்ற மாதிரி காலைத் தூக்கித் தூக்கிக் காட்டியது.

பக்கத்திலே ஒரு இடிஞ்ச திண்ணை இருந்தது. அதிலே கொஞ்ச நாழி நாணா உட்கார்ந்துண்டான். ரொம்ப தூரம் நடந்ததால் களைப்பாக இருந்தது. சுவரிலே சாய்ஞ்சுண்டு காலை நீட்டிண்டான். அப்படியே தூங்கிட்டான்.

முழிச்சுண்டு பார்த்தா மாட்டையும் காணோம், ஆளை யும் காணோம், பக்கெட்டையும் காணோம். வானத்தைப் பார்த்தான். வெயில் ரொம்ப இறங்கிடுத்துன்னு தோணித்து. இனிமே இந்த வழியாவே போனா எங்கே போகுமோ, எப்ப போகுமோன்னு திகிலாயிடுத்து. வந்த வழியாவே சேலையம்மன் தெருவுக்கு வந்தான். ஒருத்தர் கையிலே வாட்ச் கட்டிண்டு வந்துண்டிருந்தார். ‘டைம் என்ன சார்?’ன்னு கேட்டதுக்கு, கையைப் பார்த்து ‘மூணே முக் கால்’னு சொன்னார்.

நிறைய டைம் பண்ணிட்டோம்னு ஒரு பக்கம் சந்தோ ஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் ஓவரா பண்ணிட் டோமோன்னு கவலையாயும் இருந்தது. எதுவானா என்ன? இந்த மாதிரி நாலு நாள் பண்ணினால் அப்புறம், ‘நாணா இங்கே வா, அங்கே போ’ன்னு சொல்றது நின்னுடும். அம் மாஞ்சின்னா அம்மாஞ்சிதான்.

பெரிய மாமி கேட்டா ‘லாண்டரி பூட்டியிருந்தது’ன்னு ஏதாவது சொல்லிக்கலாம். மறுபடி அங்கே போயிட்டு வரச் சொல்ல மாட்டாள். டயமில்லை.

வீட்டு வாசல்லே அஞ்சாறு பேர் நின்னுண்டிருந்தா.அப் பாவோட சினேகிதாளா இருக்கும். ஆனா இவ்வளவு பேர் ஒரே டயத்திலே வரமாட்டாளே!

வீட்டுக்குள் நுழையறப்போ அழுகையும் புலம் பலுமா என்னென்னவோ கேட்டுது. ‘இதோ வர்றான் நாணா!’ன்னு யாரோ சொன்னா. ‘என்னமா ஆடி அசைஞ் சிண்டு வர்றான் பாரேன்’ன்னு வேற யாரோ சொன்னா.

‘மாரை என்னவோ பண்றது, தூத்தம் கொண்டுவா’ன் னார். ‘நாணா, நாணா’ன்னு கூப்பிட்டார். ‘நாணா எங்கியோ தெரிய்லியே’ன்னேன். அதான் அம்மாஞ்சி கடைசியா பேசினது…” சின்ன மாமி சொல்றது காதிலே விழுந்தது.

அழுதுண்டிருந்த அம்மா, கண்ணைத் துடைச்சிண்டு வந்து, “எங்கேடா போயிருந்தே, கடன்காரா! ‘அம்மாஞ்சி அம்மாஞ்சி’ன்னு உயிரை விடுவியே! ‘நாணா நாணா’ன்னு கூப்பிட்டுண்டே இருந்தாரே? இப்பப் பார்த்து எங்கேடா போயிட்டே?”ன்னாள்.

“வாயிலே கொழுக்கட்டையா அடைச்சிருக்கு? சொல்லேண்டா?”ன்னு பெரிய மாமா கத்தினார்.

“எங்கேடா போனே? ஏண்டா போனே? எங்கெல்லாம்டா சுத்தினே? ஏண்டா இத்தனை லேட்டு? எதுக்காகடா…”

ஆளாளுக்கு உலுக்கியெடுத்தாங்க. நாணா பொத்துன்னு தரையிலே உட்கார்ந்து விசிச்சு விசிச்சு அழ ஆரம்பிச்சான்.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *