நல்ல மனம் வாழ்க!





“அம்மா..எனக்கு வேலை கிடைச்சிடிச்சு!” துள்ளல் நடையுடன் வீட்டினுள் நுழைந்த மாதவன் மகிழ்ச்சியோடு கூறினான்.

ஆனால் கேட்ட பத்மா சந்தோஷப்ப டவில்லை. மாறாகப் பெருமூச்சொன்று விட்டாள். “ஹூம். இன்னும் ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சிக்கிட்டு நீ உன் படிப்பைத் தொடர்ந்திருந்தா டிகிரி முடிச்சிடுவே..அதுக்கப்புறம் நல்ல வேலை கெடைச்சிடும்…” ஆழ்ந்த மன வருத்தத் தோடு சொன்னாள் .
“அம்மா, கவலைப்படாதே. இந்த வேலையில் இருந்துக்கிட்டு மேற்கொண்டு கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் சேர்ந்து என்னோட படிப்பை தொடருவேன். ”
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாதவனின் தங்கை மாலினி அண்ணன் அருகில் வந்தாள். “அண்ணா..என்ன வேலை?” என்றாள் ஆர்வமுடன்.
“அதுவாம்மா! …ம்…டெலிவரி மேனேஜர் உத்யோகம்!”
“ஐ…பரவாயில்லையே! நல்ல வேலைதான், சம்பளம் நிறைய கிடைக்குமா?” ஆவலோடு கேட்ட தங்கையின் கன்னத்தை செல்லமாக தட்டிய மாதவன், “ம்..ஓரளவு சுமாரா கிடைக்கும் மாலினி!” என்றான்.
“எங்கண்ணா வேலை ?”
“ஒரு தனியார் ஃபுட் ப்ராடெக்ட்ஸ் கம்பெனியிலேம்மா!”
“ஏய்..மாலினி! சும்மா சும்மாக் கேள்வியெல்லாம் கேட்டு அண்ணனத் தொந்தரவு பண்ணாதே!” மகளை அதட்டினாள் பத்மா.
அந்தக் குடும்பத்தின் தலைவர் சபாபதி. ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை
பார்த்து வந்தார். அழகுக்கு ஒரு மகள, ஆஸ்திக்கு ( இருக்கும் ஒரே ஒரு சொந்த வீட்டுக்குத்தான்) ஒரு மகன், அன்புக்கும் பண்புக்கும் உகந்த நல்ல மனைவியென்று கட்டுக் கோப்பான குடும்பம். நன்றாக ஓடிக் கொண்டிருந்த குடும்பத்தில் விதி விளையாடியது.
ஒருமாதம் முன்னால் வேலை பார்த்து வந்த அலுவலகத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் சபாபதி. அலுவலக நண்பர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டனர். நண்பர்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்சிலேயே சபாபதியின் உடல் அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சபாபதியின் மனைவி பத்மாவும் மகள் மாலினியும் திக் பிரமையில் கொஞ்ச நேரம் இருந்தனர். பிறகு அவர்களால் ஓரு பிரளயமே உண்டானது. ஆரம்பத்தில் மனசொடிந்து போய் கண்ணீர் விட்ட மாதவன் பின் சுதாரித்துக் கொண்டான்.
ஒரு வழியாக சபாபதியின் காரியங்கள் நடந்தன.
சபாபதிக்குச் சேரவேண்டிய கிராஜூவடி, சரண்டர் லீவு பணம், மற்றும் பி.எஃப் தொகை பெண்டிங்கில் இருந்தது. காரணம் சபாபதியின் இறப்புச் சான்றிதழ், மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்-இவைகள் இன்னும் மாதவன் கையில் கிடைத்தப்பாடில்லை.
ஏதோ சொந்தமாக வீடு இருந்ததால் வாடகை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மற்ற விஷயங்களுக்குப் பணம் தேவை. தந்தை கொடுத்த பணத்தில் பத்மா மிச்சம் பிடித்து சிறுக சிறுக சேமித்த பணம் கொஞ்ச நாளைக்குக் கை கொடுக்கும். பிறகு…
அதனால் வேறு வழியில்லாமல், மாதவன் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தான் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பி.காம். படிப்பை உதறினான். கஷ்டப்பட்டு ஒரு வேலையும் தேடிக் கொண்டான்.
தந்தையின் டூ வீலரும் அவரது செல்ஃபோனும் மாதவனுக்குக் கை கொடுத்தன.
முதல்மாதம் சம்பளம் வாங்கிய மாதவன்அதைக் கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்தான். அதை வாங்கி எண்ணாமல் அப்படியே ஸ்வாமி படம் அருகில் வைத்து வணங்கினாள்.
” அம்மா…” அழைத்த மாதவன் தயங்கினான்.
“என்னப்பா ?”
“இல்ல…வந்து…என்னோட சம்பளம் ரூபா 18000 ம்னு சொன்னேனில்லையா?”
“ஆமாம் !”
“8000 ரூபாதாம்மா இருக்கு. என்னடா இது முதல் மாச சம்பளமே இவ்வளவு கம்மியா இருக்கேன்னு விசனப்படாதேம்மா!”
“அப்படியா!” என்றாள் பத்மா புன்முறுவலுடன். நிச்சயமாக அநாவசியமாக செலவழித்திருக்கமாட்டான் என அசைக்க முடியாத நம்பிக்கையை மகன் மீது வைத்திருந்தாள்.
மாதவன் தொடர்ந்தான். “அம்மா! எங்கக்கூட வேலை செய்றவர் தண்டபாணின்னு பேர். அவரோட மகனுக்கு வயித்தில கட்டியாம்! ஆபரேஷன் செலவு ஒண்ணரை லட்சம் தேவைன்னு அழுதார். நான் உடனே 10000 கொடுத்தேன். என் கூட வேலை செய்தவர்களும் தங்களால் இயன்ற அளவு கொடுத்தார்கள். சேர்ந்த மொத்தப் பணத்தையும் அந்த தண்டபாணிக் கிட்ட கொடுத்துட்டோம் அம்மா. ஏதோ நம்மால ஆன உதவி. அதனால சம்பளத்துல 10000 ரூபா குறைஞ்சிருக்கும்மா….!”
பத்மா புன்னகைத்தாள். “மாதவா! நல்ல காரியத்துக்குதானே பணம் கொடுத்தே! அதுவும் முதல் மாச சம்பளத்தை! முன்பின் தெரியாதவர்க்கு சமயத்துல உதவி செய்யறது உண்மையிலயே பெரிய விஷயம் மாதவா! உன்னை நினைச்சுப் பெருமைப் படறேன்!”
அம்மாவின் பேச்சைக் கேட்டு ஆசுவாசம் கலந்த மகிழ்ச்சியுற்றான்.
“தேங்க்ஸ்மா!”
அனைத்தையும் கேட்ட மாலினி உள்ளே சென்று கையில் உண்டியலுடன் வெளிப்பட்டாள்.
“அண்ணா! அப்பா அப்பப்போ கொடுத்த பாக்கெட் மணியை செவவு செய்யாம இந்த உண்டியல்ல போட்டு வச்சிருக்கேன். என் சார்பா இந்த உண்டியல் பணத்த உன் நண்பர்கிட்டச் சேர்த்திடறயா?”
நெகிழ்ச்சியில் தன் தங்கையை அணைத்துக் கொண்டான் மாதவன்.