கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 419 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஒரு கனிஷ்ட பாடசாலை அது. எட்டு வரை வகுப்புகள் இருக்கின்றன. 

அன்றும் வழமை போல முற்பகல் பதினொரு மணிக்கு கணீர்… கணீர்… என்று பாடசாலை இடைவேளை மணி ஒலித்தது. 

கல்லடிப்பட்ட தேன்கூட்டிலிருந்து தேனீக்கள் வெளியிலே சிதறுவது போல மாணவர்களும் வகுப்பறைகளிலிருந்து வெளி யிலே சிதறினர். 

சிறிது நேரத்தில், பாடசாலை வளவில் அமைக்கப்பட் டிருந்த இடைவேளையில் உணவுப் பண்டங்கள் விற்கும், மூன்று ‘கூடு’களையும் மாணவர்கள், இனிப்புப் பண்டத்தைச் சுற்றி மொய்க்கும் எறும்புகள் போல மொய்த்துக் கொண்டனர். 

வகுப்பு வேலையை முடித்துவிட்டு சற்றுத் தாமதமாகவே வெளியிலே வந்த இம்தியாஸ், கிழக்குப் புறமாகவிருந்த ஒரு கூட்டை நோக்கி விரைந்தான். ஏழு எட்டு அடிகள்தான் இட்டிருப் பான். ஆலிலைச் சருகுகளிடையே மின்னல் நிறத்தில் ஒரு பொருள் கண்ணை ஈர்த்தது. ‘விசுக்’ கென்று குனிந்து அதனைத் தூக்கி எடுத்தான்; அது ஒரு தங்கமாலை. 

‘காணத்தவர் பதறுவார், பதைபதைப்பார், பாவம்! இது யாருடைய மாலையாகவிருக்குமோ…’ என்று தனக்குள்ளே அனுதாபப்பட்டுக் கொண்டான் அவன். 

‘பட்’டென்று அம்மாலையை தனது நீளக் கால்சட்டையின் வலது புற பைக்குள் புதைத்துக் கொண்டு கிழக்குப் பக்கமாக விருந்த அந்தக் கூட்டை எட்டி, அங்கே ஒரு பனிஸை வாங்கி அவசர அவசரமாய், இரண்டு மூன்று கடிகளில் வயிற்றுக்குள் திணித்துக் கொண்டான். பக்கத்திலுள்ள குளாயடிக்குச் சென்று மொய்த்திருந்த மாணவரிடையே புகுந்து நீர் பருகிக்கொண்டு நிமிர்ந்தான். இடைவேளை முடியும் மணிச்சத்தம், கணீர்… கணீர்… என்று அவனது காதுகளிலும் வந்து மோதியது. 

இம்தியாஸ், வகுப்பறைக்குள் செல்லாது நேரே அதிபரின் அறைக்குச் சென்று அவரைச் சந்திக்கிறான். 

“இன்னாங்க சேர்… ஒரு தங்கமாலை பொறக்கினன்… நான இப்ப… இன்டவெலுக்குப் போகக்க… நம்மிட ஆலமரத்துக்குக் கீழ… சருகுக்குள்ள கிடந்திச்சி சேர்…” 

அந்தத் தங்கமாலையை அதிபரிடம் கொடுத்தான் இம்தியாஸ். அதிபரோ, அதனை வாங்கி, தூக்கிப் பார்த்தார்; தொட்டுப் பார்த்தார்; துடைத்துப் பார்ததார். 

“சா… தங்கமாலைதான்…” வாய்விட்டுச் சொன்னார். தாமதியாது எழுந்து வலது புறமாகவிருந்த ஈய வர்ண இரும்பு அலுமாரியில் அம்மாலையை வைத்துவிட்டு, மீளவும் தனது இருக்கையிலே வந்தமர்ந்து கொண்டார் அதிபர். தனக்கு முன்னே நின்றிருந்த அம்மாணவனின் பெயர், வகுப்பு விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார். 

“மகன்… இத ஒருவரிடமும் சொல்லாதிங்க… நான் இப்ப, இங்க நம்மிட ஒலிபெருக்கி மூலம், உண்மையைச் சொல்லாம, அதை மறைத்து, ‘இன்டைக்கு நம்மிட பள்ளிக்கொடத்துக்க, பணமோ அல்லது வேறு ஏதாவது பொருளோ காணத்தவர் யாராவது இருந்தால் உடனே அதிபரைச் சந்திக்கவும்…’என்று ஒரு பொதுவான அறிவித்தல் கொடுக்கப் போறன்… காணத்தவர் வந்தால் உங்களையும் கூப்பிட்டனுப்புவன்… இப்ப வகுப்புக்குப் போங்க…”அவனை அனுப்பிவைத்தார். 

உடனேயே ஒலிபெருக்கியில் அறிவித்தலும் கொடுக்கப் பட்டது. அவ்வறிவித்தலைக் கேட்ட பர்விஸ் என்ற மாணவன் மூச்சு இரைக்க இரைக்க அதிபரின் முன்னே வந்து நின்றான். அதிபர், அவனை ஊன்றி அவதானித்தார். 

“நீங்க பர்விஸ்ல்லவா… ஏழாம் வகுப்பிலதானே படிக்கிங்க…”

“ஓம் சேர்… என்ட பெயர் பர்விஸ்தான்… நான் ஏழாம் வகுப்பிலதான் படிக்கன்…” 

“என்ன விசயம்… நீங்க வந்த…” 

“சேர்… நான் வச்சிருந்த ஒரு தங்கமாலை இஞ்ச காணத்துப் போச்சி…” 

“ஆ… தங்கமாலையா…” 

“ஓம் சேர்… தங்கமாலைதான்…” 

‘அந்தத் தங்கமாலை இவர் கொண்டுவந்திருந்த மாலையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்ட அதிபர், பாடத்துக்குச் சென்ற ஓர் ஆசிரியர் மூலம் இம்தியாஸ் என்ற மாணவனையும் அங்கே வரவழைத்துக் கொண்டார். 

அவ்விருவரும் அருகருகே, அதிபரைப் பார்த்தபடி நின்றிருந்தனர். 

அதிபரின் பக்கமாக வைக்கப்பட்டிருந்த ‘ஸ்டான்ட்’ மின் விசிறி சாதாரண அளவிலே காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தது. 

தனது ஆசனத்திலே நிமிர்ந்து அமர்ந்து கொண்ட அதிபர், இருவரையும் ஒரு முறை நோட்டமிட்டுக் கொண்டார். பின்னர், அவரது பார்வை பர்விஸின் மேல் நிலைத்தது. 

பர்விஸிடமிருந்து, அவன் தொலைத்த தங்க மாலையின் அடையாளங்களையும், அதனைப் பாடசாலைக்கு கொண்டுவர நேர்ந்தமைக்கான காரணத்தையும் வினவி அறிந்து கொண்டார் அதிபர். 

அவருக்கு, அந்த மாலை பர்விஸ் கொண்டு வந்திருந்த மாலைதான் என்பது உறுதியாயிற்று. 

அதிபர், தனது ஆசனத்தை விட்டு வேகமாய் எழுந்து பக்கத்திலேயிருந்த ஈய வண்ண இரும்பு அலுமாரியிலிருந்து அந்தத் தங்கமாலையை எடுத்து வந்தார். 

தனது இருக்கையிலே சாவகாசமாய் உட்கார்ந்து கொண்ட அதிபர், பர்விஸிடம், “இதுதானா… நீங்க காணத்த அந்தத் தங்கமாலை?” என்றவாறு அதனைத் தூக்கிக் காட்டினார். 

”ஓம் சேர்… இதுதான்…” அதிபரை, மகிழ்வு தளும்பும் விழிகளாலே பார்த்தான் பர்விஸ். 

“இஞ்சப்பாருங்க… இன்னா நிற்கிற இம்தியாஸ் என்ற இந்த மாணவன்தான் இந்தத் தங்கமாலையை பொறக்கிக்கிட்டு வந்து எனக்கிட்டத் தந்தாரு. இம்தியாஸ் ஒரு நல்ல பிள்ளையாக விருந்தத்தால் இந்த மாலை உங்களுக்குக் கிடைக்கப் போகுது… காலம் உங்களுக்கு நல்லம்…”அதிபர், வலது பக்கமாகத் திரும்பி ஜன்னல் வழியே வெளியே நோட்டமிட்டுக் கொண்டார். 

”நாளைக்கே நம்மிட பள்ளிக்கூடத்தில இம்தியாஸைப் பாராட்டிறத்துக்கான ஒரு விசேட காலைக்கூட்டத்த நடத்திறதும், அக்கூட்டத்தில் வைத்தே உரியவரிடம் அந்த மாலையை ஒப் படைத்து விடுவதும் நல்லம் எண்டு நான் யோசிக்கன்… ஆகை யினால், இன்னும் கொஞ்ச நேத்தையால நம்மிட ஆசிரியர் குழுவைக் கூட்டி இவ்விசயங்களப்பத்தி கலந்து பேசி ஒரு முடிவெடுக்கப் போறன்… பாடசாலை கலைந்தாலும் நீங்க ரெண்டு பேரும், இஞ்ச நிண்டு என்னச் சந்திச்சு விசயங்கள அறிஞ்சுக் கிட்டுத்தான் போகணும்… இப்ப வகுப்புகளுக்குப் போங்க…” 

அதிபரோ, தனது இருக்கையை விட்டு எழுந்து, எதிரே, கண்ணாடி பிரேம் செய்யப்பட்டு, சுவரிலே பொருத்தப்பட்டிருந்த பாடசாலை நேரசூசியின் பக்கமாக விரைந்தார். 

இம்தியாஸ், எட்டாம் வகுப்பிலும், பர்விஸ் ஏழாம் வகுப்பி லும் கல்வி பயில்வதால் அவர்களிடையே தொடர்புகள் அருகியே காணப்பட்டன. 

அவர்கள் இருவரும், புன்னகையை மட்டுமே பரிமாறிக் கொண்டவர்களாய் அதிபரின் அறையிலிருந்து வெளியேறினர். 

அடுத்த தினம், அப்பாடசாலையில் ஒரு விசேட காலைக் கூட்டம் கூட்டப்பட்டது. 

ஏழாம் வகுப்பு மாடிக் கட்டடத்தின் கீழே, வகுப்பறைகளின் வழியில் மேற்குத் திசையை நோக்கியவாறு அப்பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் அணிவகுத்து நின்றனர். அவர்களோடு, இம்தியாஸும், அவரது தந்தையும், பர்விஸும் அவரது பிதாவும் நின்றனர். 

இவர்கள் அனைவரையும் நோக்கியவாறு மாணவர்கள், நிரை நிரையாய் நின்றனர். வெள்ளை நீளக் கால் சட்டையும், வெள்ளை சேர்ட்டும், வெள்ளைத் தொப்பியும், சப்பாத்தும் அணிந்து வெள்ளைக் கொக்குகளாய் அவர்கள் தோற்றம் தந்தனர். 

காலை ஆராதனை முடிவுற்றது. 

விசேடமாய் அழைக்கப்பட்ட அந்நால்வரையும் அதிபர் தனக்குச் சமீபமாக அழைத்துக் கொண்டார். 

எங்கும் நிசப்தம். ஆனால், பாடசாலை வளவில், கொஞ்சம் தொலைவில் சீராய் வளர்க்கப்பட்டிருந்த, பூஞ்செடி, மரம், கொடி களுக்கிடையில் பறந்து திரியும் குருவிகளின், கீச்… கீச்… என்ற சப்தம் மட்டும் மெல்லியதாய்க் கேட்டன. 

தனது கவனம் முழுக்க மாணவர் மேல் வைத்திருந்த அதிபர், அவர்களை உவகையோடு பார்த்தார். அவரின் இதழ்கள் பிரிந்தன. 

“அன்புக்குரிய மாணவர்களே, நேற்று பாடசாலை வளவில் ஒரு தங்கமாலை கண்டெடுக்கப்பட்ட செய்தி, உங்களில் பல ருக்குத் தெரிந்திருக்கக் கூடும். அம்மாலையைப் பொறுக்கி எம்மி டத்திலே கையளித்த எமது பாடசாலையைச் சேர்ந்த அம்மாண வனை உங்கள் முன்னிலையில் பாராட்ட வேண்டுமென்பதற் காகவே இவ்விசேட காலைக்கூட்டத்தை நாம், ஒழுங்கு செய் தோம். என்றாலும், அம்மாலையைப் பொறுக்கிய அம்மாணாக் கனோடு அதனைத் தொலைத்த மாணவனும் மற்றும் அவ்விரு வரது வாப்பாமாரும் அவ்விசேட காலைக்கூட்டத்திற்கு வரவழைக் கப்பட வேண்டுமென்றும், அங்கு வைத்தே, அம்மாலையைத் தொலைத்தவரின் முன்னிலையில் அவரின் தந்தையிடம் அம் மாலையை ஒப்படைக்க வேண்டுமென்றும் முடிவு செய்தோம். அதற்கு அமைவாகவே அவர்களை நாங்கள் இங்கே அழைத்தி ருக்கிறோம்.” அதிபர் தனது உரையைத் திடீரென இடை நிறுத்தினார். 

அங்கு, விசேடமாய் அழைக்கப்பட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நால்வரையும் அறிமுகம் செய்துவைத்தார் அதிபர். அத்தோடு அவர், தான் வைத்திருந்த ஒரு பெரிய காகித உறை யிலிருந்து ஒரு தங்க மாலையை எடுத்து மேலே உயர்த்திக் காட்டி, “நேற்று இங்கே பொறுக்கிய அந்தத் தங்கமாலை இதுதான்; இது ஐந்து பவுண் நிறையையுடையது” என்றும் அதனைப் பகிரங்கப்படுத்தினார். 

பின்னர், அதிபர், மீளவும் தனது உரையைத் தொடர்ந்தார்: 

“மாணவர்களே, இம்தியாஸ் என்ற மாணவன் பொறுக்கிய அந்த மாலை இங்கே, அவரின் பக்கத்திலே நிற்கிற பர்விஸி னுடைய தாயாரின் மாலை. இதை அவட தங்கச்சி ஒரு கலியாண வீட்டுக்கு போட்டுக் கொண்டு போறத்துக்காக அவவுக்கிட்டரிந்து இரவல் வாங்கிக் கொண்டு போயிருக்கா… கலியாணம் முடிந்து அடுத்த நாள் மாலை பர்விஸின் தாயும், ‘சுன்னத்’து வீடொன்றுக் குச் செல்ல வேண்டியிருந்ததால அன்று பாடசாலைக்குச் சென்ற தனது மகன் பர்விஸிடம், பாடசாலை கலைந்ததும், அதனை வாங்கிவரும்படி சொல்லியிருக்கா. ஆனால், பர்விஸோ பாட சாலைக்கு வரும் பொழுதே, தனது சாச்சியின் வீட்டுக்குச் சென்று அம்மாலையை வாங்கி, தனது சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு பாடசாலைக்கு வந்துவிட்டார். இடைவேளையின் போது இங்கு அதனைத் தவற விட்டு விட்டார். இங்கே நிற்கின்ற இம்தியாஸ் என்ற இம் மாணவன் அம்மாலையைக் கண்டெடுத்து என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார். பாருங்கள் எவ்வளவு நல்ல மாண வன் இவர். மற்றவருடைய பொருளை அபகரித்துக் கொள்கின்ற தீய குணம் இவரிடம் இல்லை. இம்மாணவன் மாலையைப் பொறுக்கி எடுக்கும்போது யாருமே அதனைக் காணவுமில்லை. இவர் விரும்பி யிருந்தால் அதனை எங்கேயோ மறைத்து வைத்து எடுத்துப் போயிருக்கலாம். ஆனால், இவர், அப்படிச் செய்ய விரும்பவில்லை. 

நேசத்துக்குரிய மாணவர்களே, நீங்களும் இப்படியான நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவருக்கு உங்கள் சார்பாகவும், எமது ஆசிரியர்கள் சார்பாகவும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வருட இறுதி யிலே, எமது பாடசாலையில் நடைபெறவிருக்கின்ற பரிசளிப்பு விழாவிலும் இம்மாணவனை விசேடமாகக் கௌரவிப்பதற்கும் தீர்மானித்திருக்கிறோம். இச்சந்தர்ப்பத்திலே, உங்களுக்கு இன்னு மொரு முக்கியமான விடயத்தையும் சொல்லி வைக்கவேண்டும். நீங்கள் பாடசாலையோடு சம்மந்தமில்லாத எந்த விடயத்திலும் சம்மந்தப்பட்டு எங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும் பிரச்சினை களை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் மிகவும் அன்போடு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.”

அதிபரின் விசேட உரை முழுமை கண்டது. அதனைத் தொடர்ந்து அங்கு, பர்விஸின் தந்தையிடம் அந்தத் தங்கமாலை யைக் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

சூடேறிக் கொண்டிருந்த சூரியனின் கிரணங்கள் அங்கும் பிரவேசித்தன. மாணவரின் பொறுமை தீப்பிடித்துக் கொள்ளும் போலவிருந்தது. 

அதிபர், காலைக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவரை, மேலும் அங்கு நிறுத்திவைக்க விரும்பவில்லை. 

அதிபரின் வேண்டுதலுக்கிணங்க, விசேட காலைக் கூட்டத் திலே கலந்து கொண்ட மாணவர்கள் ‘ஸலவாத் தோடு அக் கூட்டத்தை நிறைவு செய்து கொண்டு தத்தம் வகுப்புகளுக்கு கலைந்து சென்றனர். 

அக்கூட்டத்துக்காக பிரசன்னமாகியிருந்த ஆசிரியர்களோ, மாலையைப் பொறுக்கிக் கொடுத்த இம்தியாஸ் என்ற அந்த மாணவனையும், அவனது தந்தையையும் சுற்றி வளைத்துக் கொண்டனர். அவர்கள், மிகவும் நேசத்தோடு அந்த மாணவனின் தலையையும், தோளையும் தடவியவாறு, நல்ல பிள்ள… நல்ல மாணவன்…” என்று பாராட்டினர். 

அந்தப் பாராட்டு மொழிகளில் தனயனைவிட, தந்தையே பெரு மகிழ்ச்சி அடைந்தார். 

அவரின் மனவானிலே மகிழ்வு மத்தாப்புகள் வெடித்து பலவர்ண மலர்களைச் சொரிந்தன. 

– தினகரன் வாரமஞ்சரி. 2006 ஆகஸ்ட் 13.

– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *