நயாகராவில் துடுப்பிழந்த படகு ஒன்று!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 10,822 
 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

‘ஹரிஸ் நீ சரியாகப் பயந்து போயிருக்கிறாய், நான் எப்படியும் சமாளித்து கொள்வேன், ஆகவே நீதான் முதலில் போகிறாய்’ என்றான் லொவ்பேர்க்.

‘அதெப்படி, உங்களைத் தனியே விட்டு நான் போவதா, என்னாலே அப்படி எல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாது’ லொவ்பேர்க்கின் கரங்களைப் பற்றிக் கொண்டு அழாக்குறையாகச் சொன்னான் ஹரிஸ்.

‘இங்கேபார், வாழ்வா, சாவா என்பதுதான் இப்போது எங்கள் போராட்டம், இந்தக் கயிற்றில் இருவரும் ஒரே சமயத்தில் போகமுடியாது. விவாதிப்பதற்கு இது நேரமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்.’ என்று அறிவுரை வழங்கினான் லொவ்பேர்க்.

லொவ்பேர்க்கின் விருப்பப்படி ஹரிசுக்கு வெளியேற முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் ஹரிஸ் செல்வதற்குப் படகில் அவரோடு ஒன்றாக இருந்த லொவ்பேர்க் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார்.

கயிறு இரண்டு பக்கமும் இறுகக் கட்டப்பட்டு, மெல்ல மெல்ல மின்நிலையத்தின் கூரையில் நின்றவர்கள் தொங்கும் கயிற்றில் கப்பியின் துணையோடு ஹரிஸைக் கரையை நோக்கி இழுத்தார்கள்.

சீறிப்பாயும் தண்ணீருக்கு மேலால் அந்தரத்தில் நின்ற ஹரிஸ் கிட்டத்தட்ட மயங்கி விடும் நிலையில் இருந்தார். பசிக்களை ஒருபக்கம், பொதுவாகவே உயரத்தில் அதுவும் அந்தரத்தில் நின்று கீழே பார்த்தால் பயிற்சி பெறாத யாருக்கும் தலையைச் சுற்றத்தான் செய்யும், அதுவும் வேகமாக ஓடும் தண்ணீரைக் கீழே குனிந்து பார்த்தால் எப்படி இருக்கும்?

நல்ல காலமாக லொவ்பேர்க் ஹரிஸைக் கிழே விழுந்து விடாமல் கவனமாகக் பாதுகாப்புக்கவசத்தோடு சேர்த்துக் கட்டி விட்டிருந்தார்.

கரையில் இருந்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் ஹரிஸைவிட பயந்தவர்களாய் உணர்ச்சி வசப்பட்டவர்களாய், என்ன நடக்குமோ என்று தவித்துக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்லக் கயிறு நகர்ந்ததால், கரையில் நின்று பார்த்தவர்களின் தவிப்பு இன்னும் அதிகமாகியது. கயிறு பாதிவழியில் அறுந்து விடுமோ என்ற பயமும் அவர்களுக்கு இருந்தது.

கட்டிடத்தின் கூரையில் நின்ற பாதுகாப்புப் படையினர், ஹரிஸை மெல்ல மெல்ல இழுத்துக் காலை நேரம் சுமார் 8:50 மணியளவில் கரை சேர்த்தார்கள். கரைசேர்ந்த ஹரிஸ், உயிரோடு தப்பிவிட்ட மகிழ்ச்சி தாங்க முடியாமல் மயக்கம் போடவே அவருக்கு உடனடியாக முதலுதவி செய்தார்கள்.

1918 – 08 – 07

புதன்கிழமை – காலை நேரம் 9:50 மணி

இந்த நடவடிக்கை மெதுவாக நடைபெற்றாலும், அவர்களின் பாதுகாப்பு கருதி அவசரப்படாமல் செய்ததாக இதற்குப் பொறுப்பாக அப்போது இருந்த காப்டன் நெல்சன் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார்.

ஹரிஸ் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்ததைத் தொடர்ந்து லொவ்பேர்க்கையும் அதே முறையில் கயிற்று மூலம் சுமார் ஒரு மணி நேரத்தின் பின் அதாவது 9:50 மணியளவில் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். எந்தப் பாதிப்பும் இல்லாமல், கஷ்டப்பட்டு இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதில் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

கட்டவிழ்த்த படகு மட்டும் அதே இடத்தில் தனித்து தரித்து நின்றது. ஒருநாளல்ல, இரண்டு நாளல்ல, நூறு வருடங்கள் அதே இடத்தில்

காத்திருக்கப் போகிறது என்பதை அப்போது யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆமாம், நூறு வருடங்களாக அந்த இடத்திலேயே படகு காத்து நின்றது.

எந்த வசதிகளும் இல்லாத காலமாக இருந்தாலும், உயிர்களின் மதிப்பை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டிருந்ததால்தான், அந்த இருவரின் உயிர்களும் அன்று காப்பாற்றப்பட்டன. மிகப் பெரியதொரு சாதனையை அன்று மனிதாபிமானத்தோடு ரெட்ஹில் போன்றவர்கள் எந்தத் தயக்கமும் இன்றி முன்வந்து செய்ததால்தான் மனித நேயம் இன்றும் நிலைத்து நிற்கின்றது.

சரியாக நூறு வருடங்களின் பின் ஹலோவின் தினத்திலன்று (31-10-2019) நயாகரா ஆற்றங்கரைப் பகுதியில் தென்மேற்கே இருந்து இரவு அடித்த சூறாவளியின் போது திடீரென இடம் பெயர்ந்து வரலாறு படைத்தது அந்தப் பழைய இரும்பினாலான படகு.

அந்தப் படகு ஹலோவீன் தினத்திலன்று இரவு இடம் பெயர்ந்தது பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். இடம் பெயர்ந்த படகு நீர்வீழ்சியில் இருந்து சுமார் 2000 அடி தூரத்தில் மேலாற்றங்கரையில் தரித்து நின்றது.

மறுநாள் கூட்டமாகக் கரையில் நின்று வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவனாக நின்று வேடிக்கை பார்த்தேன். எனக்கு அருகே ஆண்களும் பெண்களுமாய்க் கலந்து நின்ற சிலர் இந்தப் படகு பற்றி ஆங்கிலத்தில் விவாதிப்பதும் என் காதில் விழுந்தது.

ஆவி, பேய், பிசாசு என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர்களும் மேலை நாடுகளில் இருப்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். சிறுவர், சிறுமிகளுக்கு ஹலோவீன் தினம் வேடிக்கையாக இருந்தாலும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் ஹலோவீன் தினம் அதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. விவாதத்தில் ஈடுபட்ட ஒரு சாரார் பழமை வாதிகளாக இருந்தனர்.

‘இதுவரை காலமும் இல்லாமல் ஹலோவீன் தினத்திலன்று இரவு படகு தள்ளப்பட்டது என்றால், அதுவும் சரியாக 100 வருடங்களின் பின் நடந்திருக்கிறது என்றால், ஆவிகளின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது என்பது தானே அர்த்தம்’ என்ற வாதத்தை ஒருவர் முன்வைத்தார்.

‘நீங்கள் சொல்வது சரிதான், பிதிர்களுக்கான கடமைகளைச் செய்யாவிட்டாலும் இப்படி நடக்கும், எத்தனை இளைஞர்களும்,

யுவதிகளும் இங்கே இந்த ஆற்றில் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களின் ஆவி சாந்தியடையக் கூடிய மாதிரி இவர்கள் எதுவுமே செய்திருக்க மாட்டார்கள். பஞ்சபூதங்களில் ஒன்றான நீரைத் தரும் நயாகரா அன்னை எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுத்திருப்பாள், அதனால் வந்த வினைதான் இது’ என்றார் இன்னுமொருவர்.

பஞ்சபூதங்களை மேற்கோள் காட்டியது யாரென்று திரும்பிப்பார்த்தேன். அவரைப் பார்த்ததும், ஆசிய நாட்டைச் சேர்ந்தவராக, போய் பிசாசில் நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

ஒரு படகு இடம் மாறியதற்குப் பின்னால் இவ்வளவு கதைகள் இருக்கிறதா? அப்படி என்றால் இடம் பெயர்ந்த, புலம்பெயர்ந்தவர்களுக்குப் பின்னால் இன்னும் சொல்லப்படாத எத்தனை கதைகள் இருக்கக்கூடும்!

‘இந்தக் காலத்திலும் இதை நீங்கள் நம்பிறீங்களா? என்றார் ஒருவர்.

நீண்ட காலமாகி விட்டதால், படகு துருப்பிடித்திருப்பதால் அதில் துவாரம் விழுந்திருக்கலாம். அதனூடாகத் தண்ணீர் வெளியேறியபடியால் படகின் பாரம் குறைந்திருக்கலாம். ஹலவீன் அன்று பெரும் காற்று வீசியதால், பாரம் குறைந்த படகு தண்ணீரால் தள்ளப்பட்டிருக்கலாம், அவ்வளவுதான்’ என்று எனக்கு அருகே நின்ற ஒருவர் அறிவியல் சார்ந்த யதார்த்தமான தனது கருத்தைச் சொன்னார்.

அவர்கள் உரையாடும் போது, அவர்களுடைய கருத்துக்களைச் செவிகள் உள்வாங்கினாலும், நான் அந்தப் படகைப் புகைப்படம் எடுப்பதில் கவனமாக இருந்தேன். அவர் சொன்னது போல, துருப்பிடித்த படகில் பெரிய துவாரம் விழுந்திருந்ததால், அதனூடாகப் படகில் இருந்த தண்ணீர் வெளியேறி இருக்கலாம். அதையும் குளோசப்பில் படம் எடுத்தேன். காரணம், படகு இடம் மாறியது பற்றி அவர் சொன்னதில் ஒரு அர்த்தம் இருந்தது.

சுமார் 2000 அடி தூரத்தில் மேலாற்றில் படகு தத்தளித்ததால், எந்த நேரமும் படகு காற்றினால் தள்ளப்பட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் விழலாம் என்ற பயம் இருந்தது. அதன் கடைசி யாத்திரையைப் படம் பிடிப்பதற்காகச் சக்தி வாய்ந்த வீடியோ கமெராவை ஊடகத்தினர் அருகே உள்ள நயாகரா மின் நிலையத்தின் கூரையில் தற்போது பொருத்தியிருக்கிறார்கள். சென்ற வாரமும் நான் நயாகரா சென்ற

போது உடைந்த நிலையில் இருக்கும் அந்த இரும்புப் படகைக் காணமுடிந்தது.

மிகவும் பாரமான இரும்பினாலான துருப்பிடித்த இந்தப் படகு நீர்வீழ்ச்சியில் திடீரென விழுந்தால், அச்சமயம் கீழே Maid of the Mist ஐப் பார்ப்பதற்காக படகுகளில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதிப்பு எற்படலாம் என நயாகரா பாக் குழுவினர் எதிர்பார்ப்பதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். சில சமயம் இந்தப் படகு இன்னும் சில காலம் தொடர்ந்தும் இந்த இடத்தில் நிலைகொண்டிருக்கலாம் எனவும் சிலர் நம்புகின்றார்கள்.

சாதனை வீரன் ரெட்ஹில்லைப் பற்றிச் சொல்வதென்றால், பொலிஸாருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு, அவர் பயமின்றி ஆற்றிலே சுழியோடி, நீர்வீழ்ச்சியில் விழுந்து இறந்தவர்களின் சுமார் 180 உடல்களை வெளியே கொண்டு வந்திருக்கின்றார். இதேபோல ஆற்றிலே விழுந்த 28 பேரை உயிரோடு காப்பாற்றி இருக்கின்றார். இதைவிட மிருகங்கள், பறவைகள் என்று தண்ணீரில் தத்தளித்தபோது, துணிந்து தண்ணீரில் இறங்கிப் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றார். மனிதநேயம் அவரோடு கூடப்பிறந்ததால்தான் அவரால் இதை எல்லாம் சாதிக்க முடிந்தது.

றிவர்மான் (River Man) என்று அழைக்கப்பட்ட அவர் செய்த நல்ல காரியங்களை அப்பொழுது யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. 1912 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நயாகரா நீர்வீழ்ச்சியில் பனிப்பாறை உடைந்த போது நடந்த விபத்தில் மூவர் கொல்லப்பட்டாலும், உடைந்த பனிப் பாறைகளுக்கு மத்தியில் துணிந்து சென்று பலரைக் காப்பாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. நயக்கராவின் மடியில் தவழ்ந்த இவர் 1942 ஆம் ஆண்டு 54 வது வயதில் மரணமானார்.

மரணப்படுக்கையில் இவர் தனது பிள்ளைகளுக்கு ‘The river will keep you poor but in return it will give you a reward greater than money. I can’t put it into words’ என்று தான் குறிப்பிட்டார்.

தனது உயிரைத் துச்சமாக மதித்து ஆபத்தான செயலைச் செய்து இரண்டு உயிர்களை அன்று காப்பாற்றிய இவரைக் கௌரவிப்பதற்காக இவர் மரணமான அன்று நயாகரா ஆற்றில் தரைதட்டி நின்ற அந்தப் படகின் மீது பிரகாசமான மின்சார விளக்கின் ஒளி பாய்ச்சப்பட்டு,

வித்தியாசமான முறையில் நினைவு கூரப்பட்டார். நயாகரா பாக் குழுவினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

சாதனை படைக்க முற்படுபவர்கள் தங்கள் உயிரைப் பற்றி எப்பொழுதும் கவலைப் படுவதில்லை. இவரது மகனான ரெட் ஹில் யூனியர் 1951 ஆம் ஆண்டு பீப்பா ஒன்றில் இருந்தபடி நீர்வீழ்ச்சியில் குதித்து சாதனை படைக்க முயன்றபோது, கனடாவின் ‘ஹோஸ் சூ’ நீர்வீச்சியின் சுழியில் அகப்பட்டு மரணமானார். இவரது மரணம் அவர்களின் குடும்பத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதனால் அவர்கள் தங்கள் பாரம்பரிய நிலத்தை விட்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இடம் பெயர்ந்தார்கள்.

100 வருடங்களின் பின் ரெட்ஹில் செய்த சாதனையை நினைவு கூர்ந்து ரெட்ஹில்லின் குடும்பத்தினர், நயாகரா பார்க் குழுவினரால் ஒன்ராறியோவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பேரப்பிள்ளைகளும், பூட்டப் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். நூறு வருடங்களின் பின் இந்தப் படகு நயாகரா ஆற்றிலே தனது இருப்பிடத்தை மாற்றியதால்தான், கடந்த காலத் தியாகங்களையும், அப்போது இருந்த சூழலையையும் எங்களால் நினைத்துப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வரலாற்றில் சாதனைகளும், தியாகங்களும் உடனுக்குடன் ஆவணப் படுத்தப் படாவிட்டால், காலம் அதற்கான தடயங்களை அழித்து, புதிய தவறான வரலாற்றை உருவாக்கி விடலாம். இது எங்கள் இனத்திற்கும் பொருந்தும்.

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *