நன்றியில் செல்வம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 4,431
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பிறர்க்குப் பயன்படாத செல்வம்
தருமபுரத்தில் அருட்செங்கோல் நடத்த, 11-வது குருநாதராக விளங்கியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர். இவர் காலத்தில் ஒரு நாள் இரவு நடு யாமத்தில் வெளியிலிருந்து, ”பசி, பசி, சோறு வேண்டும்” என்று ஒருவன் கூக்குரல் போடுவதைக் கேட்டார்கள். பணி செய்பவர் எவரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அச்சொல் காதில்பட்டவுடனே குருநாதர் தாமே எழுந்து சமையல் அறையினுள் சென்று, ஓர் வெங்கலப்பாத்திரத்தில் சோறு, கறி யாவற்றையும் வைத்து எடுத்துவந்து வெளியில் கூக்குரல் போடுபவனிடம் கொடுத்துப் புசிக்கச் சொன்னார். கூக்குரல் போட்டவன் பாத்திரத்தை எங்கே சேர்ப்பது? என்றான். இவன் பேச்சைக் கொண்டு தமது ஞானத்தால் இவனை அரசன் என்று அறிந்து அரண்மனையில் சேர்க்கலாம் என்றார். மறுநாட்காலையில் அரசன் சபை கூட்டி மந்திரிகளிடம் ஞான தேசிகரின் கருணைத் திறத்தை யும், எந்நேரத்திலும் உதவும் கொடையையும் பற்றிப் புகழ்ந்தான். ” இவ்விதம் அளித்துத் தானும் உண்ணாத செல்வம் பயன் இல்லாத செல்வமாகும்” என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்
கடுக்கிய கோடியுண் டாயினும் இல் (74)
கொடுப்பதும் = (பிறர்க்கு ) ஈவதும்
துய்ப்பதும் = (தான்) அனுபவிப்பதுமாகிய (இரண்டு செய்கையும்)
இல்லார்க்கு = உடையவரல்லாதவர்க்கு
அடுக்கிய = பலவாக அடுக்கிய
கோடி உண்டாயினும் = கோடிப் பொருள் இருந்தபோதிலும்
இல் = ஒன்றும் இல்லை.
கருத்து: கொடுத்தலும், உண்ணுதலும் இல்லாத ‘ வர்க்குக் கோடிப்பொருள் இருந்தாலும் அதனாற் பயன் இல்லை .
கேள்வி: மக்கள் தாம் பெற்ற பொருளை யாது செய்தல் வேண்டும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.