நடுச்சாமம்
“இந்த நேரம் என்று கிடையாது. ராப்பகலா யாருமே அந்தப் பக்கம் போறதே கெடையாது தங்கச்சீ ! செல வருசம் முன்ன, உன்ன மாதிரி வயசுப் பய புள்ளைக நாலஞ்சு, இப்படித்தேன், நாங்க சொல்றதக் கேட்காம, எங்கள ஒரு மாதிரி பாத்துபுட்டு, ‘அட போங்கையா’னு ரொம்ப ஆர்வமா போச்சுங்க. போயி அரை நாழி இருக்காது…” என்று சற்று நிறுத்தினார் ராமமூர்த்தி …..
“வந்தது வந்துட்டோம், எனக்கு பேயப் பார்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை” என்று தங்குமிடம் திரும்பிய வனிதா சொல்ல, “எனக்கும் தான், எனக்கும் தான் !” என்று அனைவரும் குஷியானார்கள். “இன்னிக்கு நடுச்சாமத்துல போய் அந்தப் பேயப் பார்க்கிறோம்” என்று தோழிகள் அனைவரும் செயலில் இறங்கினர்.
அடர்ந்த இருளில் படர்ந்த கொடிகள் விலக்கி, நிலவில் ஒளியில் மெல்ல அடி எடுத்து நகர்ந்தனர் சிவகாமியும் தோழிகளும். தூரத்தே பள்ளத்தாக்கில் தெரிந்தது பலரைப் பழிவாங்கியதாகச் சொல்லப்பட்ட அந்த பாழடைந்த பங்களா.
கொடிகளோடு விரிசல்கள் பின்னிய நான்கு உயர்ந்த தூண்கள் கொண்ட முகப்பு. தலைக்கு மாட்டிய தொப்பி போல் சரிந்து கிடந்தது மாடியின் முகப்பு அறை. கீரைப் பொட்டலத்தில் ஆங்காங்கே வெளித்தெரியும் தண்டுகள் போல நீட்டி வெளித்தெரியும் உத்திரங்கள். மொட்டை மாடி முழுதும் இடிந்து விழுந்த ஓட்டைத் தாழ்வாரம். அலைகடல் பாசி அப்பியது போன்று தரையில் எங்கும் பசுமை. நெசவாளியின் அறையாய் எங்கும் சிலந்திகளின் வலைப்பின்னல்.
பாம்பா ? கொடியா ? எதோ ஒன்று கால்களில் இடற “ஐயோ, அம்மா, என்ன விட்டுருங்க, நான் வரல, ரூமுக்குப் போறேன்” என்று அலறிய வனிதாவை, “ஏய் என்னாச்சு ?” என்று தோழிகளும் சேர்ந்து அலறினர்.
“ரூமில் இருந்த வரைக்கும், ‘பயமா ? எனக்கா ? இதுக்கெல்லாம் போயி பயப்படறீங்க ?’ என்று நீ தானே முதலில் கிளம்பினே” என்றாள் ஸ்வப்னா.
“அதில்லடி. நான் பேய்க்கெல்லாம் பயப்படல. பாம்பு திரியுது இங்க. சர்ருனு இப்ப தான் என் காலத் தொட்டுப் போகுது !” என்று சிலிரித்தாள்.
“நம்ம வனிதாவைப் பயமுறுத்திய பாம்பப் பாருங்கடி” என்று பக்கத்தில் கிடந்த பழைய சைக்கிள் டயரை எடுத்துக் காண்பித்து, ஸ்வப்னா சிரித்தாள்.
“ஏய், கீழ போடு. எல்லாம் காரியத்துக்கு வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான் பங்களாவை அடைந்து விடுவோம். யார் யாரு என்ன என்ன பண்ணனும்னு ஞாபகம் இருக்கு தானே ?! கெளம்புங்க கெளம்புங்க” என்று துரிதப்படுத்தினாள் சிவகாமி.
பழைய தெம்பு வரப் பெற்ற தோழிகள், பயம் களைந்து தொடர்ந்து பயணித்தனர். பங்களாவின் கிட்டே நெருங்க நெருங்க, ஏனோ ஒரு வித பயம் அனைவருக்கும் தொற்ற ஆரம்பித்தது. சரியாக அப்போது “ஊவ்வ்வ்வ்” என்று எங்கிருந்தோ ஒரு நாய் கத்த, அடைபட்ட கூண்டு திறக்க, விடுபட்டுப் பறந்த குருவிகளாய், எட்டுத் திக்கும் பறந்து மறைந்தனர் தோழிகள்.
சற்றைக்கெல்லாம் மயான அமைதி. சுற்றிலும் பார்த்தாள் சிவகாமி. தன்னைத் தவிர அங்கும் யாரும் இல்லை ! முதன்முறையாய் உதிரம் உதரலெடுக்க ஆரம்பித்தது அவளுள்.
“சரியா ராத்திரி பண்ணெண்டு மணிக்கு தான் அந்தப் பேய் வெளிய வரும் !” என்ற ராமமூர்த்தியின் வாசகங்கள், நெஞ்சுக் குழிக்குள் டைப் அடிக்க, கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பதினொன்று ஐம்பத்தி எட்டு. ‘அவர் சொன்ன போது, ஏதோ ஸ்கூல் பசங்க அடிக்கும் ஜோக் போல இருந்தது. ஆனால் இப்ப நிலைமையே வேறு ! இருந்து பார்த்து விடுவோமா ? அல்லது தோழிகள் போல அடித்துப் பிடித்து ஓடிவிடுவோமா ?’ என்று சிந்தித்து மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பதினொன்று ஐம்பத்தி ஒன்பது !
பங்களாவின் வெகு அருகாமையில் இருந்தாள் சிவகாமி. ருபெக் ருபெக் என்று தவளைக் கத்தலும், கீச் கீச் என சில் வண்டுகளின் ரீங்காரமும், மெலிதாய் தீண்டிச் செல்லும் தென்றலும், அடர்ந்த செடிகொடிகளுக்கு மத்தியில் நிலவொளியில் மிளிறும் பழைய வெள்ளைக் கட்டிடமும், ஒரு ரம்மியமான சூழலைத் தந்திருக்க, ஏனோ பயமே மேலோங்கியது.
தென்றல் காற்று மெல்லச் சீற ஆரம்பித்தது. ஷ்யூயூயூஊஊஊய்ய்ய்ய் என்று சுழன்ற காற்றின் சத்தத்தில், அண்டமே சுழலுவதாய் உணர்ந்தாள் சிவகாமி.
மணி பண்ணிரெண்டு !
பங்களாவின் வாசலில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எறிவது போல அப்படி ஒரு பிரகாசம். தலையில் முக்காடு போட்டது போன்ற வெள்ளை உடுப்பில் ஓர் உருவம். மெல்ல சிவகாமி இருந்த திசை நோக்கி முன்னேறியது.
சிப்பிக்குள் சுருளும் நத்தை போல புதருக்குள் நன்கு புதைந்து கொண்டாள்.
ஒருவித மல்லிகை வாசனை காற்றில் மிதந்தது. கால்கள் இருக்கிறதா எனப் பார்த்தாள், தரை படர்ந்து வந்த சேலையில் சரியாகத் தெரியவில்லை. இரண்டு கைகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். கிட்டே நெருங்க நெருங்க, அழகான தேவதை போல காட்சி தந்தது அவ்வுருவம்.
தோளில் தொங்கிய டிஜிட்டல் கேமிராவைத் தட்டுத் தடுமாறி எடுத்து, க்ளுக்கிய சத்தத்தில், திரும்பிப் பார்த்தது அவ்வுருவம். தேவதை முகம் மாறி, குழி விழுந்த கண்களும், குவியிழந்த நாசியும், கறை படிந்த பற்களும், கூரிய நகக் கரங்களுமாக காட்சி அளித்தது உருவம். ‘சந்தேகமே இல்லை, பேய் பேய்ய்ய்ய் பேயே தான் !’ என்று மென்று விழுங்கிய எச்சில் தொண்டைக்குழிக்குள் இறங்காமல் படுத்தியது. ‘தெரியாமத் தான் வந்துவிட்டோம். ராமமூர்த்தி அத்தனை சொல்லியும் கேக்காம வந்து விட்டோமே !’ என்று படபடக்க, வியர்த்துக் கொட்டி முதுகுத் தண்டில் வழிந்தோடியது.
“அதான் பார்த்துவிட்டாய் அல்லவா ? வெளியில் வா !” என்பது போல சிவகாமியை நோக்கி தன் உலர்ந்த கரங்களை நீட்டியது. மரப்பட்டை பிரிந்து வளர்ந்த மரக்கிளை போல இருந்த அதன் கரும்பச்சைக் கரம் மேலும் திகிலூட்டியது.
“வேண்டாம். நான் இனிமே இங்க வரல. என்ன விட்டுடு….” என்று பயத்தில் கத்தி பின்னோக்கி தவழ்ந்து, அருகில் இருந்த கிணற்றில் தலை குப்புற விழுந்தாள் சிவகாமி.
கிணற்றின் உடைந்த மதிலில் அமர்ந்திருந்த காட்டுப்பூணை ஒன்று மியாவ் என்று கத்தி குதித்தோடியது.
நெல்குதிருக்குள் விழுந்து, கை கால்கள் குத்துவதெல்லாம் பொருட்படுத்தாது, நாசியில் ஏறிய தூசியின் ஆதிக்கத்தில் விழும் பல தும்மல்கள் போல, அந்த இருள் அறையில் நுழைந்ததிலிருந்து மூச்சடைத்து புழுக்கத்தில் தும்மினான் தமிழவன்.
தரையின் பிசுபிசுப்பு, சுவற்றிலும், ஜன்னல் கம்பிகளிலும், கதவுகளிலும் படர்ந்து கான்க்ரீட் கூரை வரை அப்பி கறுத்திருந்தது. நான்கு மூலைகளிலும் ஆளுயரத்துக்கு இருந்த ஐந்து முக விளக்குகளில், தவழும் குழந்தையாய், நெய்யூரிய திரியில் நீந்தி விளையாடியது நெருப்புச் சுடர்.
அறையின் மையத்தில் இணையும் விளக்குகளின் ஒளியில் அமைந்திருந்தது அந்தச் சிறிய மேடை. இடுப்புயர அளவிற்கு இருந்த அம்மேடையின் கிழக்கு முகத்தில் இருந்தது நான்கு படிகள். மேடையின் மற்ற மூன்று மதில்களிலும் எண்ணை அப்பிய ப்ரேமிற்குள், மிரள வைக்கும் பல்வேறு அம்மன்களின் ஆக்ரோஷ காட்சிகள். தெற்கு பார்த்த அறைவாயில், அதன் அருகில் இருந்த சிறிய ஜன்னல் சாத்தியே இருந்தது. வெகுநாட்கள் திறக்காமல் இருந்ததற்கான அடையாளமாக சிலந்திகளின் வலைப்பின்னல் சாட்சியம் கூறியது.
மேடையின் ஒருபுறத்தை ஆக்கிரமித்து மேலெழும்பி, நாலைந்து துவாரங்கள் கொண்டு ஆங்காங்கே சிறு குன்றுகளாய் நீண்டிருந்தது அந்தப் புற்று. அதைச் சுற்றிலும் மஞ்சளும் குங்குமமும் தெளித்து, புஷ்பங்கள் தூவி, ருத்ராட்சமாலையும், சில புத்தகங்களும், ஒரு மரப்பலகையும், ஒருசில சிறிய மரப் பெட்டிகளும், சருகாய் சுருண்டு கிடந்த பாம்புச்சட்டைகளும் என பார்ப்பவரை ஒரு கணம் மிரள வைக்கும்படி இருந்தது. அறைக்கதவை நன்கு திறந்துவிட்டாலும் வெளிச்சம் படாவண்ணம் இருந்தது மேடையும் புற்றும். மேடைக்குக் கீழே யாகம் வளர்க்க சதுரமாக மூன்றடுக்கு உயரத்தில் செங்கல் மதில்.
‘குளிக்கப் போன சாமியார் சற்று நேரத்தில் வந்துவிடுவார், உள்ளே அமர்ந்திருங்கள்’ என்றிருந்தாள் வாசலில் கோலமிட்ட பணிப்பெண்.
ஒருசில நிமிடங்கள் கூட உள்ளே இருக்க முடியவில்லை. படபடக்கும் காகிதங்கள் கூட பயத்தை ஏற்படுத்தின. உருளும் மாலையும் ஏனோ பாம்பையே நினைவுபடுத்தியது. ‘உண்மையிலேயே இங்கு பாம்பு இருக்கிறதா ? எத்தனை இருக்கும் ? திடீர் என்று வெளியில் வந்துவிட்டால் என்ன செய்வது ?” என அடுக்குக் கேள்விகளில் திகைத்து எவரும் அறையில் இன்றி தனியனாய் காத்திருந்தான் தமிழவன்.
விரிசடை முடியும், நீள்சாம்பல் தாடியும், காவிசூழ் உடலும், கையில் கைத்தடியுமாக வருவார் குடுகுடு சாமியார் என்று எதிர்பார்த்த தமிழவனுக்கு, கெண்டை வேட்டியும், காவி ஜிப்பாவும், கழுத்தில் சிறு ருத்ராட்ச மாலையும், கரும்பச்சையில் தலைப்பாகையும், நெற்றியில் திருநீறும், பழுத்த வெள்ளரிப் பட்டையாய் மஞ்சள் கீற்றும், செர்ரிப் பழமாய் அதில் குங்குமப் பொட்டும் என வந்த நடுத்தர வயது சாமியாரைக் கண்டு சிறிது அதிசயித்தான்.
அறைவாயிலில் குனிந்து, சரிந்த ருத்ராட்ச மாலைகளை மார்போடு அணைத்து உள்ளே நுழைந்தார் புற்று சாமியார். திருநீற்று மனம் காற்றில் மிதந்து அந்த அறையை நிறப்பியது. நேரே மேடையில் ஏறி மரப்பலகையில் அமர்ந்து, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டார்.
சளசளத்து ஓடும் அருவியாய் வெளியே பேச்சுக் குரல்கள். ‘ஆறு அறரைக்கு முன்னாடியே போய்ட்டேன்னா சாமியாரப் பாக்கறது சுலபம்’ என்ற பாலாவின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்து காணப்பட்டது. ஒரு நேரத்தில் ஒருவர் தான். அவருக்கு எத்தனை நேரம் ஆனாலும், அதுவரை மற்றவர் வெளியில் காத்திருக்க வேண்டும். முதல் ஆளாய் வந்ததில் சிறிது கர்வமும் கொண்டான் தமிழவன்.
“சொல்லுங்க, என்ன விஷயமா வந்திருக்கீங்க ?!” என்றார் கண்களைத் திறந்த சாமியார் தமிழவனை நோக்கி.
வடநாட்டு சாமியான அவர் உடைந்த தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்தவனுக்கு, அவரது இயல்பு தமிழ் தொடக்கம் புதிதாய் இருந்தது. வாளின் கூர்மையில் அறுபடும் கதிராய் உணர்ந்தான் அவரது பார்வையில். தூசி விழாத பாலில் மிதக்கும் இரு ஒற்றை திராட்சைகளாய் திகழ்ந்தது அவரது விழிகள். துவைத்து அணிந்த ஆடைகள். குளித்த தூய மேனி. ஆனால் அறைமட்டும் தூசிபடிந்து தூய்மையின்றி !
“நான் சென்னையில் இருந்து வருகிறேன். என் பேரு தமிழார்வன். நண்பர்களும் மற்றவர்களும் சொல்லியே காலப்போக்கில் தமிழவன் என்றாகிவிட்டது. சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில்” என்று தமிழவன் தொடர, போக்குவரத்து போலீஸ் போல கைகாட்டி நிறுத்துமாறு கூறிய சாமியார், “ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள், விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க” என்றார்.
தமிழார்வன் சொல்லச் சொல்ல …
‘அதகள பயங்கரீ, ஆக்ரோஷ பைரவீ, ஆனந்த ரூபஸ்ரீ …. உத்தரவு வாங்கிய பின்னுமா நீ இங்கு இருக்கிறாய் ?’ என்று நினைத்து உள்ளுக்குள் அதிர்ந்தார் சாமியார்.
“ஓம் சர்வேஷீ
ஓம் தர்மேஷீ
ஓம் நாகேஷீ
க்லீம் ஜ்லீம் ந்லீம்
ஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்
நாகேஷ்வரீஈஈஈ”
என்று உச்சரித்த சாமியாரின் மேனி வியர்வையில் வழிந்தது. பேரிறைச்சலோடு அறைக்குள் புகுந்தது சூராவளிக் காற்று. நெருப்பு சுடர்கள் படபடத்தன. புத்தகத் தாள்கள் சடசடத்தன. கையில் ருத்ராட்ச மாலையை விடாது உருட்டினார் சாமியார்.
சற்றைக்கெல்லாம் மயான அமைதி நிலவியது அறையில்.
நடப்பது எதுவுமே புரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் தமிழார்வன்.