தோல்வி
(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விலை இருக்கத்தான் செய்கிறது என்று யாரோ சொன்னதைப்போல ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சமயத்தில் இளகத்தான் செய்கிறார்கள் -எவ்வளவுதான் வரண்டு தெரிந்தாலுங் கூட.

சிலர் அடிக்கடி இளகுகிறார்கள். சிலர் எப்போதோ ஒரு தருணத்தில் இளகு கிறார்கள் இதுதான் வித்தியாசம். மனதிலிருப்பவை அந்த நேரத்தில் வெளிச் சங் காண்கின்றன. தண்ணி, இந்தச் சாத் தியப்பாட்டை, சில பேருக்கு சில சமயங்க ளில் அதிகரிக்கலாம். தண்ணியில்லாமலும் சாத்தியமுண்டு. வேறு பல காரணங்களிருக்கக்கூடும்.
தனபால், இந்த இரண்டாவதில் இரண் டாவது வகையைச் சேர்ந்தவனாகத் தன்னை அன்று இனங்காட்டினான். இந்த அலுவலகத் தில் தனபாலும் கிருஷ்ணனும் நாலாண்டு காலம் ஒரே சமயத்தில் வேலை செய்திருக்கிறார்கள். என்னதான் பெரிய கந்தோர் என்றாலும், இரண்டு பேரும் வெவ்வேறு பிரிவுகள் என்றாலும், நாளைக்கு ஒருதரமா வது சந்திக்க முடிந்திருக்கிறது. இருந்தாலும் ஆளுக்காள் காணுகிற இடத்தில் புன்னகைப்பதுகூட இல்லை. முதலில் இரண்டொரு நாள் கிருஷ்ணன் முறுவல் காட்டியும், தனபால் பிரதிபலிக்காததில் தானும் விட்டு, பிறகு முற்றுமுழுதான அந்நியம் இருவரிடை குடிகொண்டது ஞாபகமிருக்கிறது.
ஆனால், இப்போது மூர்த்தி இடையில் வந்ததிலிருந்து, இந்த நிலைமையில் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்கி யிருக்கிறது. சாதாரண சகபாடி உறவு குடிகொள்ள ஆரம் பித்திருக்கிறது. பகடி முசுப்பாத்தி கூட.
மூன்றுபேருமாகக் கன்ரீனில் தேநீர் குடித்துக்கொண் டிருக்கும்போது தனபால் சொன்னான்.
“மச்சான், உனக்குத் தெரியுமா உன்னை மற்றப்படி யான் எண்டெல்லோ எனக்கு முந்தி ஆரோ சொல்லிவைச்சான்கள்……?”
“எந்தப்படியான் எண்டால்தான் என்ன?” -கிருஷ்ணனும் சிரித்துக்கொண்டு இந்தக் கூற்றால் தனக்கு ஆத்திரமெதுவும் ஏற்படவில்லை என்ற நிச்சயத்தில் பெருமித முங்கொண்டு சொன்னான்.
“…கன நாளைக்குப் பிறகு அண்டைக்கு இவன் மூர்த்திதான் சொன்னான் ‘எட பேயா? அவன் சுண்டி யெடுத்த வெள்ளாளனெல்லோ ‘ எண்டு..”
இந்த இடத்தில் கணமேயெனினும் தன் மனம் கிளுகிளுத்ததை கிருஷ்ணனால் உணர முடிந்தது. அதனால் அடுத்த கணத்தில் தன் தோல்வியையும்…
– ஆரைகள், 1983.
– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.