தொட்டால் தொலைவாய்!







(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அடர்ந்த காடு. சத்தியமங்கல வனப்பகுதி. நகரத்தில் பிரபல வங்கியைக் கொள்ளையடித்த திருப்தியில் குணா, பாலு,சிவா, சேகர் நால்வரும் தங்கள் டெண்டை விட்டு வெளியே அமர்ந்து ஏ.கே 47 பக்கத்தில் இருக்க அமைதியாய் ஆளாளுக்கு அவரவர்கள் கைத்துப்பாக்கியைத் துடைத்துச் சுத்தம் செய்தார்கள்.
குணாவிற்கு வயது 35. சொந்த ஊர் அதிகாரப்பட்டி. குக்கிராமம். ஒரு பிள்ளையைக் கூட படிக்க வைக்க முடியாத அளவிற்குக் குடும்பம் ஏழை. தாய் தகப்பன் அன்னாடம் காய்ச்சிகள். இவனின் படிப்பு ஆர்வம் ஆறாம் வகுப்பிலிருந்தே வயலில் அரை ஆள் சம்பளத்திற்கு வேலை செய்து பத்தாம் வகுப்புவரை படித்தான். அடுத்து மீசை அரும்ப முழு ஆள் சம்பளத்திற்கு வேலை செய்து பி.ஏ பட்டம் பெற்றான். அப்படி வேலை செய்து கொண்டே வேலைக்கு விண்ணப்பிப்பதும் நேர் முகத்தேர்விற்குச் சென்று குடும்பம் பார்ப்பதுமாக இருந்தான். முப்பது வயது முடியும் தருவாயில் கடைசியாக இவனுக்கு அரசாங்க வேலைக்கு அத்திப்பூ த்தாற்போல் ஒரு இன்டர்வியூ வந்தது.
அடுத்த ஊரிலிருக்கும் எம்.எல்.ஏவிடம் சென்று தனக்குச் சிபாரிசு செய்யும்படி வேண்டினான். அவரும் ‘பார்க்கலாம்!’- என்றான். பார்க்கலாம் என்றால் அவர் அகராதியில் ஏனோ தானோ அர்த்தம். இவன் விழித்து அடுத்துப் பேச எத்தனிப்பதற்குள் அவர் அறைக்குள் சென்றுவிட்டார்.
கூட இருந்த பி.ஏ. இவனைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்.
“நாப்பது அம்பது குடுத்து காரியத்தை முடிய்யா!“ காதைக் கடித்தார்.
“என்கிட்ட அவ்வளவு பணமில்லீங்க ஏழை” என்றான். “ஏங்க! மக்களுக்கு நல்லது செய்யுறேன்னு சொல்லி ஓட்டு வாங்குனீங்க இன்னைக்கு இப்புடி அநியாயம் பண்ணினா அடுக்குமா சார்?” என்றான்.
பி.ஏ. முறைத்தார். “மக்கள் சும்மா ஓட்டுப் போடலைத் தம்பி. பணத்தைக் குடுத்தார் ஓட்டு வாங்கினார். ஐயா இறைச்ச காசை எடுக்க வேண்டாமா?” என்றார்.
“மக்கள் கேட்கலையேங்க”
“அடுத்தவன் குடுத்துப் போகும்போது நாங்க எப்படி தம்பி சும்மா பார்த்துக்கிட்டு இருக்க முடியும்?”
“அது மக்கள் மேல தப்பு இல்லீங்களே!”
“எவன் ஆதாயம் இல்லாம இறைப்பான்?”
“ஐயா மக்கள் யாரையும் இறைக்கவும் சொல்லலைப் பொறுக்கவும் சொல்லலை. இருக்கப்பட்ட நீங்க கொடுக்குறீங்கன்னு வாங்கறாங்க.”
“அரசியல் வியாபாரம் ஆகிப் போச்சுங்க தம்பி. நாட்டுல இப்போ லஞ்சம் தப்பே இல்லே. போய் வாங்க.”
“எனக்கு வழி?”
“ஆண்டவன் விட்டது!” – இரு கைகளையும் மேலே உயர்த்திக் காட்டினார்.
“இருக்கிறவன்கிட்ட பிடுங்கனும் இல்லாவங்களுக்குச் செய்யனும். இதுதான் நல்லது. அதை விட்டுட்டு எல்லாருக்கும் ஒரே பாட்டா பாடினா எப்படி சார். என் மேல கருணைக் காட்டுங்க.” கெஞ்சினான்.
“நீங்க ரொம்ப சட்டம் தெரிஞ்சவர் போல பேசறீங்க. நிலையைச் சொன்னேன். போய் வாங்க” என்றார்.
‘குணா இவர்களை விடக்கூடாது!’ அப்போதே முடிவு செய்தான்.
“சரிங்க. நாளைக்குப் பணத்தோட வர்றேன். எங்கே எப்போ சந்திக்கலாம்?” கேட்டான்.
“ராத்திரி சரியா எட்டு மணிக்கெல்லாம் வாங்க. தாண்டினா அய்யா சின்ன வீட்டுக்குக் கிளம்பிடுவாரு. அங்கே வந்தீங்கன்னா பணம் இன்னும் எகிறும்.!” – எச்சரித்தார்.
“நான் இங்கேயே வர்றேன்ங்க” – விடை பெற்றுச் சென்றான். போகும் போதே நல்ல வீச்சரிவாளை வாங்கிக் கொண்டான்.
மறு நாள் எட்டு மணிக்கெல்லாம் சரியாய் சென்று இருவரைமே போட்டுத் தலைமறைவானான்.
சேகருக்கு வயது 30 கம்ப்யூ ட்டர் இஞ்னியர் படிப்பு முடிக்கும் அளவிற்கு வசதி முடித்தான். இவனுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசை. இஞ்னியர் வேலைக்கென்று ஒரு ஏஜெண்டிடம் ஐந்து லட்சம் கொடுத்து விமானம் ஏறினான். அங்கு போய் இறங்கிய பிறகுதான் ஏஜெண்ட் எடுபிடி வேலைக்கு அனுப்பினான் புரிந்தது. வேண்டாமென்று திரும்பி வந்தான். அந்த வேலைக்குச் செலவழித்த காசு போக மீதியை நியாயமாக கேட்டான். அவன் ஆள் வைத்து இவனை அடிக்க வர…மறு நாள் அவனுக்கு வீடு புகுந்து வெட்டு கொலை.
சிவா நிலைமை வேறு. ரொம்பவும் வித்தியாசம். ரொம்ப சின்ன வயசு 26. நடுத்தர குடும்பம். பத்தாம் வகுப்பு முடித்தான். சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் ராணுவத்தில் சேர்ந்தான். சின்ன வயசு முதலே பணக்கார மாமா பெண் மீது ஆசை. ஐந்து வருடம் வேலை செய்ததும் தானே சென்று மாமன் மகளைக் கேட்டான். அவர்கள் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். அவளும் இவனைக் கட்டிக் கொள்ள முடியாது என்று சொல்லி விட்டாள்.
விடுப்பில் வந்தவன் திரும்ப சென்றான். எப்படியோ துப்பாக்கியுடன் வந்தான். மாமா வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக சென்று….படபட குடும்பமே காலி.
பாலு கதை பரிதாபம்.. இன்ஸ்பெக்டர் பெண்ணைக் காதலித்தான். அவளும் இவனை உயிருக்குயிராக நேசித்தாள். அவர் இவன் மேல் பொய்க் கேஸ் போட்டு உள்ளே தள்ளி நான்கு வருடம் சிறைவாசமும் அனுபவிக்க வைத்ததுமில்லாமல் பெண்ணை வேறு ஒருவனுக்கும் மணமுடித்துக் கொடுத்துவிட்டார். கறுவிக் கொண்டு வெளியே வந்தவன் அவர் மாற்றலாகிருக்கும் இடம் தேடி போய் அவர் கதையை முடித்து தலைமறைவாகி விட்டான்.
ஒவ்வொருவராக காட்டிற்குள் சென்றவர்கள் ஒருநாள் ஒன்று கூடினார்கள். தங்கள் கதைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கூட்டாளியானார்கள். செலவிற்கு வங்கிகளில் கொள்ளையடித்தார்கள். இன்னும் போலீஸ் கண்களில் விரலை விட்டு ஆட்டி அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.
நேற்று முன் தினம் ஒரு வங்கியில் கை வைத்து கோடிக்கு மேல் கொண்டு வந்துவிட்டார்கள்.
“சிவா!” – குணாதான் முதன்முதலில் குரல் கொடுத்து சூழலைக் கலைத்தான்.
“சொல்லு ?” – அவன் வேலையை விடாமல் செய்து கொண்டே கேட்டான்.
“நகரத்தில் பிரபல வங்கி கொள்ளை. நான்கு முகமூடி திருடர்கள் துணிகரம்! அப்படின்னு ராத்திரி நாம அடிச்ச கொள்ளை இன்னைய செய்தி தாட்கள்ல தலைப்புச் செய்தியாய் வெளியாகி இருக்குமல்லே?”
“ஆமாம்!”
“போலீசெல்லாம் அந்த வங்கியைச் சல்லடைப் போட்டு ஆராய்ச்சி செய்து தடயங்கள் தேடுவாங்க.”
“ஆமாம். அது வழக்கமா நடக்குற சடங்கு. இன்னைய பரபரப்போட முடிஞ்சிடும்.”
“அப்படி சொல்லாதே பாலு தேட முயற்சி செய்வாங்க. நாமதான் எந்த கேசிலும் அகப்படாம நாலு வருசமா அவுங்களுக்குத் தண்ணிக் காட்டிட்டு வர்றோம்“ – என்றான் சேகர்.
“உண்மை!” என்று ஆமோதித்த குணா, “நாம தீவிரவாதியாய் அவதாரமெடுத்து கொலை கொள்ளைன்னு செய்ஞ்சி தனித் தீவாய் மாறி தலைமறைவு வாழ்க்கையே நிரந்தரம் ஆச்சு” – நிலைமையைச் சொன்னான்.
“வருத்தப்படுறீயா?” – சிவா அவனை ஆதரவாகப் பார்த்தான்.
“வருத்தப்படலை. இப்படியே காலத்தை ஓட்டாம மக்களுக்கு நல்லது செய்யலாம்ன்னு மனசுல படுது.” தன் மனதில் உள்ளதை மெல்ல எடுத்து விட்டான். “புரியலை?” அனைவரும் அவனைக் கூர்ந்து பார்த்தார்கள்.
“புரியும்படி சொல்றேன். முதல்ல நமக்கு வேண்டாதப்பட்டவங்களைக் கொன்னு இந்த காட்டுல தஞ்சமடைஞ்சு தலைமறைவானோம். அடுத்து நம்ம தேவைக்குக் கொலை கொள்ளைன்னு நாட்கள் போகுது. நாம போலீஸ் கையில சிக்காதவரை இப்படியேத்தான் காலம் கழியனும்.. நாட்டுல போய் வாழ முடியாது. இப்படி கழியறதை விட நாட்டுல நிறைய அநியாயங்கள் இருக்கு. ஏதாவது ஒன்னுக்கு நம்மால முடிஞ்சவரை முற்றுப் புள்ளி வைச்சுப் போனா என்ன?“ கேட்டு மற்ற மூவரையும் கேள்விக் குறியாகப் பார்த்தான் குணா.
பாலுவிற்கு என்னவோ இது சரி வராது போல தோன்றியது.
“சமூகம் நம்மை தீவிரவாதி கொலை கொள்ளையன்னு முத்திரைக் குத்தி ஒதுக்கிடுச்சு. ஏன் நல்லது செய்யனும்? “ – கேள்வி கேட்டான்
“சமூகம் நம்மைக் கெட்டவன்னு ஒதுக்கலை. நாமும் மக்களுக்கு எந்த கெடுதலும் செய்யலை. கெட்டவனை ஒழிச்சிருக்கோம். நம்ம தேவைக்கு வங்கி கொள்ளை நடத்தியிருக்கோம். மத்தப்படி நம்மால மக்களுக்கு எந்த தொந்தரவும் கெடையாது, நாம சட்டத்தை மீறி நடந்ததால அரசாங்கம் நம்மைத் தேடுது. நாம தலைமறைவாய் இருந்து பிடிபடாம இருக்கோம். ராபின்ஹுட் அரசாங்கத்துக்குத்தான் கொலைகாரன், கொள்ளைகாரன் மக்களுக்கு இல்லே. அவன் இன்னைக்கும் மக்கள் மனசுல நிலையாய் இருக்கக் காரணம் இருக்கப்பட்டவன் கிட்டேயிருந்து எடுத்து இல்லாத பட்டவங்களுக்குக் கொடுத்தான். இருக்கிறவன் கொடுக்கலை அதனால கொள்ளையடிச்சான். அவன் போல தமிழ் நாட்டுல மலைக்கள்ளன், மலையூர் மம்பட்டியான்னு சில பேர் வாழ்ந்திருக்காங்க. அவுங்களைப் போல கெட்ட நாம நல்லது செய்வோம்” – நிறுத்தினான்.
“இதனால நாம நிறைய சங்கடங்கள் சந்திக்கனும்”. – என்றான் பாலு.
“இன்னைக்கு நாம நிம்மதியாய் வாழலை. போலீஸ் கண்ணுல பட்டா சிறை, துாக்கு. நாளைக்கு அந்த காரியத்துக்குச் சிரமம் எடுத்துக்கிறோம் இன்னைய தண்டனைதான் நாளைக்கும். என்ன சரியா?“ – பார்த்தான்.
பாலு, சேகர், சிவா முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின.
“நாம செய்யிற செய்கைகளைப் பார்த்து மக்கள் ஆதரவு இருந்தா நாளைக்கு அரசாங்கம் நமக்குப் பொது மன்னிப்பு கூட வழங்க வாய்ப்பிருக்கு.” – என்றான்.
பாலு கண்களில் சின்ன ஒளி படர்ந்தது.
“என்ன அநியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்?” – சேகர் கேட்டான்.
“நாட்டுல குழந்தைகள் பாலியல் தொல்லை மனசுக்குக் கஷ்டமா இருக்கு. தினசரிகளை விரிச்சா அஞ்சு வயசு குழந்தை கற்பழிச்சு கொலை, சிறு பெண்கள் விபச்சாரத்துக்குக் கடத்தல்ன்னு படிக்கவே நெஞ்சு பதைபதைக்குகு. இதுக்கு எந்த அமைப்பும் சரியான போர்க்கொடி துாக்கலை. நாம நாலு பேரைச் சுட்டுக் கொன்னு கடத்தி தண்டனைக் குடுத்தா ஓரளவுக்குக் குறையும்.”
“இதுல வயசு கெழவன்ங்களையும் சேர்க்கனும். குழந்தைகளைக் கொஞ்சுற சாக்குல அநியாயம் பண்றானுங்க. போட்டுத் தள்ளனும்”. – என்றான் சிவா உற்சாகமாக.
“பாவம்ப்பா கெழவன்ங்க.” – பாலு பரிதாபப்பட்டான்.
“விடக்கூடாது. முடியாத வயசுல உள் மனசுல உள்ள வக்கிரம். இது மன்னிக்க முடியாத குற்றம். செக்ஸ்ன்னா என்னன்னு தெரியாத குழந்தைகளை ஒருத்தன் தொடுறான்னா அவன் எவ்வளவு மோசமானவன், மன்னிக்க முடியாதவன் தெரியுமா. குழந்தைங்க மனசாலேயுயம் உடலாலேயும் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. வளர்ந்தாலும் ஆண்கள்ன்னா மிரண்டு ஒடுங்குற அளவுக்கு மனசால கெடப்பட்டிருக்காங்க.”
“இன்னைக்குப் பன்னிரண்டு பதிமூணு வயசுல பெண் வயசுக்கு வர்றா. ஆனாலும் மனசளவுல அவ குழந்தையாத்தான் இருக்கா. அதுங்களைக் கெடுக்கிறது ரொம்ப கொடுமை.” – என்றான் சேகர்.
“பள்ளிக்கூடத்துல வாத்தியார் சில்மிஷம் பண்றான். வேலைக்காரப் பெண்ணை வீட்டுக்காரன் கை வைக்கிறான். அக்காளைக் கட்டினவன் மனைவி தங்கச்சியை இலவசமா நெனைக்கிறான். இதெல்லாம் கொடுமைதான்.”
“ஓ.கே. இதுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேலையை ஆரம்பிப்போம் !” – தீர்மானமாக சொல்லி எழுந்தான் சேகர்.
அத்தியாயம்-2
ஊரே அல்லோலகல்லோலப்பட்டது. அந்த ஊரின் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் எல்லார் வாயிலும் மிதி பட்டார்.
“அந்தப் பயலை ஒதைக்கனும்.!” – கூட்டத்தில் ஒருவன் ஆத்திரப்பட்டு கத்தினான்.
“பச்சைக் குழந்தை. அதைப் போய்….” ஒருத்தர் வெகுண்டார்.
“அவனைச் செருப்பால அடிக்கனும்”.
“வேலையை விட்டுத் துாக்கனும்.”
“போராட்டம் நடத்துவோம்”.
“ஒருத்தன் அடிச்சாத்தான் குத்தம்,போலீஸ், கேஸ் எல்லாம். ஊரே பூ ந்து ஒதைச்சா எதுவும் கெடையாது.”
“அவன் கையக் காலை வெட்டனும்.”
“பொண்டாட்டி கட்டி புள்ளப் பெத்த நாய் அவன். அவனுக்குப் போய் இந்த ஆசை. அதுவும் குழந்தைகிட்ட?”
சலசலப்புடன் ஊர் மொத்தமும் திரண்டு பள்ளிக்கூடத்தை நெருங்கியது.
பள்ளி. ஒரே ஒரு ரயில் ஓடு கட்டிடம். எதிரே இரண்டு கீற்றுக் கொட்டகைகள். ஒரு சமையல் கொட்டகை. நடுவில் கொஞ்சம் விளையாட்டுத் திடல். சுற்றுச் சுவர். முன்னால் லாரி புகுந்து புறப்படும் அளவிற்கு வாசல். இரும்பு கேட். நான்கு வாத்தியார்கள். ஒரு ஆசிரியை. மொத்தத்துக்கும் ஒரு தலைமை ஆசிரியர்.
“உள்ளாற பூருங்கடா” – கூட்டம் சைக்கிள் செயின் போட்டு பூ ட்டியிருந்த இரும்புக் கேட்டைத் தொட்டது.
இதை எதிர்பார்த்தவர் போல் பயந்து கொண்டிருந்த தலைமை ஆசிரியர் தண்டபாணி கட்டிடத்திலிருந்து பதறி அடித்து ஓடி வந்தார்.
ஆளைப் பார்த்ததும் கூட்டத்திற்கு அதிக ஆவேசம் வந்தது.
“அந்த பொறுக்கி சுந்தரத்தை வெளியே அனுப்புய்யா!” – கத்தினார்கள்.
“சார்…சார் ஆவேசப்படாதீங்க.” – தண்டபாணி கேட்டருகில் வந்து கெஞ்சினார்.
“அவனை வெளியே தள்ளுடா.” – தலைமை ஆசிரியருக்கு மரியாதை போயிற்று.
“ஓடிட்டார் சார்.” தவித்தார்.
“உள்ளாற மறைச்சி வைச்சிருக்கே. நாங்க பூந்தா கொன்னுடுவோம்.”
“சார்! நான் முதன்மைக் கல்வி அதிகாரிக்குத் தகவல் குடுத்திருக்கேன். இப்போ வந்துடுவார்.”
“உன் தகவலைத் துாக்கிக் குப்பையில போடு. அந்த ஆள் வந்து நடவடிக்கை எடுக்கிறேன் கலைஞ்சி போங்கம்பான். நாங்க போவோம். எங்க கண்ணைத் துடைக்கிறதுக்காக அவனுக்கு நாலு நாள் சஸ்பென்ட். இந்த பள்ளிக்கூடத்தை விட்டு அவனுக்குக் கஷ்டம் இல்லாம கொஞ்சதுாரத்துல உள்ள பள்ளிக்கு மாற்றல். இந்த வேலையெல்லாம் வேணாம். இன்னைக்கு நாங்க அடிக்கிற அடியில அவன் தாய்கிட்ட குடிச்ச பாலெல்லாம் ரத்தமா கொட்டனும். ஜென்மத்துக்கும் மறக்காம குழந்தைங்க நெனப்பு வந்தாலே அலறி ஓடனும்.” – சுந்தரம் கிடைத்தால் ஆளை நொறுக்கி விடும் நிலையில் கத்தினார்.
தலைமை ஆசிரியருக்குத் தேகமெல்லாம் நடுங்கியது. எப்படி இவர்களையெல்லாம் தடுப்பது என்று தெரியாமல் தடுமாறினார்.
“சார். அந்த ஆள் சத்தியமா உள்ளே இல்லே சார். உங்க சத்தத்தைக் கேட்டு பின் பக்கமா ஓடிட்டான் சார்.” இவர்கள் காலில் விழுந்து கதறும் அளவிற்குக் கெஞ்சினார்.
மக்கள் அவர் சொல்வதை நம்பத் தயாராயில்லை.
“ஹோ…!” இரும்புக் கேட்டை இப்படியும் அப்படியும் ஆட்டினார்கள். பூட்டு கழலாமல் கேட் ஆடியது.
“டேய் கெழவா! தொறக்கப் போறீயா இல்லியா?” – தலைமை ஆசிரியருக்கு மீண்டும் மரியாதை போனது.
“அவனை என்னடா கேட்கிறது. ஏறிக் குதிங்கடா!”
நெஞ்சுயரக் கேட்டை ஆளாளுக்கு ஏறிக் குதித்தார்கள்.
‘தங்களையும் உதைப்பார்களோ!’ உள்ளே இருக்கும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மிரண்டார்கள்.
“ஐயா! ஐயா! யாரையும் எதுவும் செய்ஞ்சிடாதீங்க.” – தண்டபாணி உள்ளே குதித்தவர்கள் பின்னாலேயே கெஞ்சிக்கொண்டு ஓடினார்.
முடிந்தவர்களெல்லாம் ஏறிக்குதித்து வகுப்பறைகளில் பேயாய் நுழைந்து தேடினார்கள். கட்டிடத்தின் அலமாரி இடுக்கு சந்து பொந்துக்களிளெல்லாம அலசினார்கள். பெஞ்சு அடியிலெல்லாம் குனிந்து பார்த்தார்கள்.
மக்கள் ஆவேசம் ஆசிரியர்கள் பீதியில் உறைந்து கலவரமாய் நின்றார்களேயொழிய தடுக்க வில்லை. தலைமையாசிரியர்தான் தன் பங்கிற்கு அங்கே இங்கே என்று ஓடி தவியாய் தவித்தார்.
“டேய் சோமு!” – ஐந்தாம் வகுப்பில் நுழைந்த ஒருவன் மாணவன் ஒருத்தனைப் பேர் சொல்லி அழைத்தான்
“என்ன சித்தப்பா?” – அவன் எழுந்தான்.
“அந்த வாத்தி எங்கேடா?“
“ஓடிட்டார்!“
“எங்கே?”
“தெரியலை!”
“தே….யாப் பய.” கொச்சையாக திட்டிய அவன், “எங்கே போயிடுவான்!” – ஆவேசமாக திரும்பினான்.
“ஆளில்லா ஆத்திரம். பள்ளிக்கூடத்தைக் கொளுத்துங்கடா” – ஒருவன் கூவினான்.
கேட்ட பெரியவர் ஒருவர் பதைபதைத்துப் போனார்.
“டேய்! ஆத்திரப்பட்டு அப்புடியெல்லாம் செய்ஞ்சுடாதீங்க. உள்ளாற இருக்கிறதெல்லாம் நம்ம புள்ளைங்க.
நமக்குத் தப்பு செய்ஞ்சவன்தான் வேணும். மத்த வாத்தியார், பள்ளிக்கூடத்தைத் தொடக்கூடாது. – கத்தினார்.
“அவன் இந்த ஊரை விட்டு உலகத்தைவிட்டே ஓடினாலும் விடமாட்டோம்.!” – திரும்பினார்கள்.
ஒருவன் கண்ணில் திடீர் மின்னல். “டேய்! அவன் சைக்கிள் கெடக்குடா!” – கத்தினான்.
அடுத்த நிமிடம். முழு செயின் கவரில் சுந்தரம் என்று எழுதப்பட்டிருந்த அந்த புது பச்சை நிற ஹர்குலிஸ் சைக்கிள் துாக்கிப் போட்டு நொறுக்கி அவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள்.
வாசலில் ஜீப்பும் நீலநிற வேனும் வந்து நின்றது. வேனிலிருந்து இரும்புத் தொப்பி, கையில் பிரம்பு இன்னொரு கையில தடுப்புடன் போலீஸ்காரர்கள் திபு திபுவென்று இறங்கினார்கள். சப்- இன்ஸ்பெக்டர் இறங்கினார். கல்வி முதன்மை அதிகாரி இறங்கினார்.
கூட்டம் பயப்படவில்லை.
சப்-இன்ஸ்பெக்டர், “நகருங்க நகருங்க” என்று கூட்டத்தை விலக்கி நடுவில் வந்து “எல்லாரும் அமைதி அமைதி!” கூவினார். அவர் நாற்பது வயதிலும் மிடுக்காக இருந்தார்.
“எங்களுக்கு நியாயம் வேணும்.” – மக்கள் கோரசாக கத்தினார்கள்.
“நான் விசாரிக்கிறோம்.”
‘நீங்க விசாரிக்க வேணாம். நாங்க வெட்டிக்கொல்வோம்.”
“தயவுசெய்து யாரும் ஆத்திரத்துல சட்டத்தை மீற வேணாம். நான் நடவடிக்கை எடுக்கிறேன்.”
“என்ன சார் பெரிய பொல்லாத சட்டம். இருக்கப்பட்டவனுக்கு ஒரு சட்டம் இல்லாதப்பட்டவனுக்கு ஒரு சட்டம். இந்த ஆள் நாளைக்கு அதிகாரிகளுக்குப் பணத்தைக் குடுத்து சரிகட்டி எம்.எல்.ஏவை புடிச்சி தப்பிடுவான். இல்லே பத்து நாள் சஸ்பென்ட் ஒரு சின்ன இடமாற்றத்தோட போவான். பாதிக்கப்பட்ட பிஞ்சு மனசு திரும்ப வருமா, அதெல்லாம் வேணாம். நாங்க ஆளைப் புடிக்கனும் உதைக்கனும்.’
“உதைச்சா மட்டும் பாதிக்கப்பட்ட மனசு மாறுமா ?” – சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“மாறாது. ஆனா தப்பு செய்ஞ்சவனுக்கு இனிமேல் செய்யக்கூடாதுங்குற பயம் வரும். அவன் வாங்குற உதையைப் பார்த்து மத்தவனும் அந்த தப்பை நினைச்சுக்கூடப் பார்க்கப் பயப்படுவான்.”
“தப்பு செய்ஞ்சவனைத் தண்டிக்கப் போலீஸ் இருக்கு. மொதல்ல என்ன நடந்துதுன்னு விலாவாரியா சொல்லுங்க.”
“இது அஞ்சாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் சார். சுந்தரம் அஞ்சாம் வகுப்புக்கு ஆசிரியர் சார். அவனக்குப் பொம்பளைப் புள்ளைங்களைன்னா ஒரு இது போல. எங்களுக்குத் தெரியாது. சும்மா போகும்போதே இங்கே வாடின்னு தலையில குட்டுவானாம். அதுங்களை அணைச்சி அன்பா பண்பா பேசுறாப்போல சாப்பிட்டியா படிச்சியான்னு கேட்டு முதுகைத் தடவுவானாம். நல்ல வாத்தியார்ன்னு நெனைச்சி பார்க்கிறவங்க இதைத் தப்பா எடுத்துக்கல புள்ளைங்களுக்கும் இது தப்பா தெரியலை. ஆனா சில புள்ளைங்க மட்டும் இவன் அத்து மீறல்களால சங்கடப்பட்டிருக்கு, நெளிஞ்சிருக்கு. அவன் கவலைப்படலை. இதோட விடாம ஒரு படி மேலே போய் வகுப்புல பொண்ணுங்களாய்ப் பார்த்துக் கேள்வி கேட்பானாம். பதில் சொன்னாலும் சொல்லாது போனாலும் அதுங்க பதில் சொல்ல முடியாத கேள்வியாக் கேட்டு திணறடிச்சு கூப்பிட்டு தன் மேசையைச் சுத்தி தரையில உட்கார வைச்சி படி சொல்வானாம். நல்ல புள்ளை மாதிரி நாற்காலியில உட்கார்ந்து கையில புத்தகத்தை எடுத்து பாடம் நடத்துற சாக்கு தன் காலை நீட்டி பொண்ணுங்க தொடை இடுக்குல கட்டை விரலை வைப்பானாம். பொண்ணுங்க வாத்தியார் கால் தெரியாம படுதுன்னு பயந்துகிட்டு பேசாம இருந்திருக்கு. அப்புடியும் ஒரு பொண்ணு சார் உங்க கால்ன்னு மெல்ல வாய்விட்டிருக்கு. எனக்குத் தெரியும் நீ படின்னு மண்டையில ஒரு போடு போட்டிருக்கார். அதிலேர்ந்து எந்த பொண்ணும் வாத்தியார் செய்கைக்கு வாயைத் தொறக்கிறதில்லே. முந்தா நாள் கொடுமை. இந்த ஆள் அப்படி செய்ஞ்சதுனால ஒரு பொண்ணுக்கு தொடையெல்லாம் கால் கட்டைவிரல் பட்டு நகக்கீறல். ரத்தமும் கசிஞ்சிருக்கு. பொறுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்திருக்கா. பெத்தவங்கிட்ட சொல்லப் பயந்துக்கிட்டு சுரம் வேற வந்து போச்சு போர்த்திக்கிட்டுப் படுத்து இருக்கா. நல்லா போன பொண்ணுக்கு என்ன இப்படி திடீர் சுரம்ன்னு தாய்க்காரி விசாரிச்சிருக்கா. வா ஆஸ்பத்திரிக்கு ரொம்ப வற்புருத்திக் கேட்டதால வேற வழியில்லாம வாயைத் திறந்து உண்மையைச் சொல்லிட்டா. என்று நிறுத்திய அவன் கொஞ்சம் மூச்சு விட்டு இந்த அநியாயத்தை நீங்க எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கீங்களா சார். எந்த மடையன் முட்டாளாவது சின்ன பொண்ணுங்ககிட்ட இப்படி நடந்துக்குவானா சார்?” பொரிந்தான்.
சப்-இன்ஸ்பெக்டருக்கும் கல்வி முதன்மை அதிகாரிக்கும் கேட்கவே கஷ்டமாக இருந்தது.
தலைமை ஆசிரியர் தலை குனிந்தபடி இருந்தார்.
“ஏன் தண்டபாணி ! இது உங்களுக்குத் தெரியாதா?” – அதிகாரி அவரைக் கேட்டார்.
“தெரியாது சார். காலையில நான் பள்ளிக்கூடம் வரும்போது ஊரே கலவரமா இருந்துது சார். இவுங்க சொல்லி தான் சார் எனக்கு விபரமே தெரியும். அப்புறம் வந்து பசங்களை விசாரிச்சேன். எல்லாம் உண்மைன்னு சொன்னாங்க சார்” என்றார் தழுதழுப்புடன்.
“வாத்தியார் இப்படி சின்ன பெண் குழந்தைகளிடம் நடந்து கொள்வாரென்று எவருக்குத்தெரியும் ?. யார்தான் நினைத்துப் பார்த்திருப்பார்கள்?” – உறைந்தார்கள்.
“கேட்கவே பயங்கரமா இருக்கு. நான் அவனைக் கண்டுபிடிச்சு முட்டிக்கு முட்டி தட்றேன்.” என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.
“நான் அவனை வேலை நீக்கம் செய்யறேன்!” என்றார். கல்வி முதன்மை அதிகாரி.
“நாங்க சுந்தரத்தை உதைக்கனும்.” – கூட்டம் கத்தியது.
“இதுக்கு மேல நீங்க சட்டத்தை மீறுறா மாதிரி இருந்துதுன்னா அது உங்க விருப்பம்” – சப்-இன்ஸ்பெக்டர் கறாராக சொன்னார்.
மக்கள் ஓரளவு அமைதிப்பட்டு கலைந்தார்கள்.
அத்தியாயம்-3
சிவா டெண்டை விட்டு வெளியே நின்று பைனாகுலரில் சுற்றுப்புறத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
குணா, சேகர் டெண்டுக்குள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அவசரமாக உள்ளே வந்த பாலு “சேகர்! நமக்கு வேலை வந்துடுச்சி” – என்றான்.
“சொல்லு?” – அவன் சோற்றை வடித்துக் கொண்டே கேட்டான். பக்கத்து அடுப்பில் சாம்பார் கமகமத்தது,
“இன்னைக்கு நம்ப மலையடிவாரத்துல இருக்கிற ஆழ்வார்குப்பத்துல பெரிய கலவரம்!” என்று ஆரம்பித்து நடந்தைவைகளைச் சொன்னான்.
“வாத்தியார் இப்போ எங்கே இருக்கான்?” – கேட்டான் சேகர்.
“பள்ளிக்கூடத்தைவிட்டு தப்பிச்சு எங்கேயோ ஒளிஞ்சிருக்கான்.”
“எந்த இடம்?”
“தெரியலை. ஆனா ஊர்ல இல்லே. ஊர் எல்லையை விட்டுத் தாண்டலை.”
“நிச்சயமாத் தெரியுமா?”
“தெரியும். கீழே நாலு பேரை விசாரிச்சுட்டேன். நம்ப ஏரியாக்குள்ளேதான் பதுங்கி இருக்கான்.”
“கண்டுபிடிச்சிடுவோம்!” – சேகர் எழுந்தான்.
பாலு சோற்றையும் சாம்பாரையும் வெளியே எடுத்து வந்து மரத்தில் தொங்கிய உரியில் வைத்தான்.
சூரியன் அடிவானத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. நால்வரும் மெல்ல இறங்கினார்கள்.
பொழுது சாய்ந்து காட்டுக்குள் இருட்டுப் புகுந்ததும் புதர்களின் நடுவில் இருக்கும் பாறை மறைவில் பதுங்கி இருந்த சுந்தரத்திற்கு ‘இனி ஆபத்தில்லை!‘ மனம் கொஞ்சம் நிம்மதியாகியது. மெல்ல எழுந்து நின்றான்.
‘கண்டிப்பாய் சஸ்பென்ட் மாற்றல்!’ நிச்சயமாய்த் தெரிந்தது.
‘இனி இந்த ஊரில் வேலை செய்ய முடியாது. எவர் கண்ணில் பட்டாலும் உதைப்பார்கள். மாற்றல் நல்லது.‘ என்று திருப்திபட்டவனுக்கு இன்னொரு இடத்தில் உதைத்தது.
‘ஊரில் எவராவது கட்சி ஆட்களைப் பிடித்து வேலைக்கே வேட்டு வைத்தால்?!’ – நினைக்க சொரக்கென்றது.
இந்த வேலையை வைத்துதான் ஐம்பது பவுன் நகை போட்டு பெண்ணே கொடுத்தார்கள். மனைவியும் அருமையானவள். வேலைக்கு வேட்டு என்றால் அவள் வாழமாட்டாள்.
“பாவி மனுசா!“ என்று காறித் துப்பி பிள்ளையைத் தூக்கிக் கொண்டு பிறந்தகம் சென்றுவிடுவாள். இது என் மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட பழி என்று சமாளித்தாலும் நிற்கமாட்டாள்.
‘இது நமக்கு வேண்டாத வேலை. எதற்காக இப்படி நடந்துகொண்டோம்?‘ – நினைக்க அவனுக்கே அருவருப்பாய் இருந்தது.
இந்த அத்துமீறலை குழந்தைகள் வெளியில் சொல்லாது என்று நினைத்து நடந்தது தப்பு தன்னையே நொந்தான்.
அவர்கள் மேலும் தப்பில்லை. இத்தனை நாட்களும் எவரும் வாயைத்திறந்து சொல்லாமல்தானிருந்தார்கள். இப்போது பொல்லாத வேலை ஜுரம் வந்து காட்டிக்கொடுத்து விட்டது. மனைவியிடம் என்ன சொல்லி சமாளிப்பது ? அப்படியே சமாளித்து மாற்றலாகி வேறொரு ஊரில் போய் வேலை செய்தாலும் மற்ற வாத்தியார்கள் கேவலமாகப் பார்ப்பார்கள். பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி ? இந்நேரம் வீட்டிற்குச் சேதி போயிருக்கும். முதலில் மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டு அடுத்து எவரையாவது பிடித்து வேலைக்கு ஆபத்தில்லாமல் இருக்க வழி செய்ய வேண்டும். யாரைப் பிடிக்கலாம்? யோசிக்கும் போதுதான் முகத்தில் சடக்கென்று டார்ச் ஒளி பாய்ந்தது.
எவரோ கண்டுபிடித்துவிட்டார்கள்! நெஞ்சுக்குள் பயம் வர, “ஐயோ!” அவனையும் அறியாமல் அலறினான்.
“ய….யார் ?” – நடுங்கியபடி கேட்டான்.
“நீ சுந்தரம் வாத்தியார்தானே?” – அவன் முகத்தில் டார்ச் பிடித்த சேகர் கேட்டான்.
“இ…இல்லே!“
“நான் மட்டுமில்லே. இன்னும் மூணு பேர் உனக்கு உதவி செய்ய வந்திருக்கோம். பயம் இல்லாம உண்மையைச் சொல்லு சுந்தரம்தானே?”
“ஆமாம்!”
‘விஷ்ஷ்…’ – சேகர் கைவிரல்களை வாய்க்குள் கொண்டு சென்று விசில் அடித்தான்.
இருட்டில் ஆளுக்கொரு மூலையில் தேடிக்கொண்டிருந்த பாலு, சிவா, குணா கொஞ்ச நேரத்தில் இவர்களிடம் வந்தார்கள்.
“நம்ம நண்பனைக் கண்டுபிடிச்சாச்சுப்பா!” – சேகர் உற்சாகமாக சொன்னான்.
அவர்களுக்கும் ஆளைக் கண்டதில் மலர்ச்சி.
“வாங்க சுந்தரம் மேலே போய் விலாவாரியாப் பேசுவோம்!” – சேகர் சொல்லி திரும்பி நடந்தான்.
சுந்தரத்திற்கும் அவர்கள் மேல் நம்பிக்கை வந்தது. நடந்தான். மற்ற மூவரும் அவனைச் சுற்றி நடந்தார்கள்.
“நான் இங்கே ஒளிஞ்சிருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” – இவன் நடந்துகொண்டே கேட்டான்.
“காலையில ஊர்க்காரனெல்லாம் ஒன்னு கூடி கலாட்டா செய்ததும் ஒரு வாத்தியார் இப்புடி செய்வாரான்னு எங்களுக்கே மனசு சங்கடமாய்ப் போச்சு. நாங்க காப்பாத்தனும்ன்னு நெனைச்சோம். இடையில புகுந்து கலாட்டா பண்ணினா கலவரமாய்ப் போயிடும்ன்னு நீங்க தப்பிப் போனது தெரிஞ்சு கம்முன்னு இருந்தோம்.” – சுந்தரம் நம்பும்படி சொன்னான்.
பின்னிரவு நிலவு மெல்ல எட்டிப்பார்த்தது.
‘சேகர் ஏன் இவனிடம் நல்லத்தனமாய்ப் பேச்சு கொடுத்து வருகிறான்!‘ – மற்ற மூவருக்கும் விளங்கவில்லை.
‘எடுத்த எடுப்பிலேயே ஆளை மிரள வைக்கக் கூடாது என்பதற்காக இப்படி நடக்கின்றானா ? இதனால் என்ன லாபம்? சுந்தரம் இந்த இருட்டில் நம்மையம் மீறி தப்பிப் போக முடியாது. அப்படி இருக்கும் போது ஏன் இந்த பொய் வேடம்?’ பாலு மண்டைக்குள் காய்ந்தது,
‘பூனை தன்னிடம் அகப்பட்ட எலியைச் சமயத்தில் விளையாட விட்டு விளையாட்டுக் காட்டி கொல்லுமே அந்த ரகமா?‘ மௌனமாக நடந்தான். நிலவு அடிக்கும் ஒரு பொட்டல் வெளிக்கு வந்தார்கள். சேகர் நின்றான்.
“உட்காருங்க வாத்தியாரே!” அமர்ந்தான்.
எதிரே சுந்தரம் அமர மற்றவர்களும் அமர்ந்தார்கள்.
“எதுக்காக வாத்தியாரே அப்படி செய்ஞ்சே?” – சேகர் கேட்க சுந்தரத்திற்குத் துாக்கிவாரிப்போட்டது.
“என்ன சொல்றீங்க?” – மிரண்டான்.
“நெருப்பு இல்லாம புகையாது. கை அள்ளாம குறையாது. எங்ககிட்ட உண்மையைச் சொன்னீங்கன்னா கண்டிப்பாய் உதவி உண்டு. எதை எப்படி செய்வோம்ன்னு சொல்லுவோம். நீங்க அப்படி செய்ஞ்சி தப்பிக்கலாம்” – என்றான் சேகர்.
சுந்தரத்திற்கு பயம் விலகியது.
“என்னமோ தப்பு பண்ணிட்டேன்!” என்றான்.
“சின்ன புள்ளைங்ககிட்ட சில்மிஷம் பண்றது ஜாலியா?” சிவா இடையில் சொன்னான்.
“மொதல்ல எதார்த்தமா கால் பட்டிருக்கும். பசங்க வாத்தியார்ன்னு பயந்து வாயைத் திறக்காம இருக்க மனுசனுக்குத் தைரியம் வந்து இதையே ஜாலியாக்கிக்கிட்டாரு. இல்லியா?” குணா என்னவோ இவன் குணத்தைத் தெரிந்து வைத்தவன் போல் சொன்னான்.
‘ஆமாம்’ என்பதற்கடையாளமாய் சுந்தரம் தலையசைத்தான்.
“மாதா பிதா குரு தெய்வம். நீங்க தெய்வத்துக்குச் சமமானவங்க. நீங்க போய்….அதுவும் செக்ஸ்ன்னா என்னன்னு தெரியாத புள்ளைங்ககிட்ட போய்…” குணா இழுக்க
சேகர் தொடர்ந்தான் “உங்களுக்கு ஆசையா இருந்தா விசயம் தெரிஞ்ச விபச்சாரிகிட்ட போயிருக்கலாம். இல்லே மனைவி கிட்ட விளையாடி இருக்கலாம். அதை விட்டுட்டு இந்த புள்ளைங்ககிட்ட இப்படி நடந்துகிட்டது அசிங்கமா இல்லே?” கேட்டான்.
சுந்தரம் தலையை கவிழ்ந்து கொண்டான்.
“இந்த காரியத்தை எத்தினி வருசமா நடத்துறீங்க சார்?” – சிவா கேட்டான்.
“நாலு வருசமா….” சுந்தரம் உண்மையைச் சொன்னான்.
“மொதல்ல தெரியாம செய்ஞ்சீங்க. அப்புறம் தெரிஞ்சு செய்ஞ்சீங்க. என்ன தண்டனை குடுக்கலாம்ன்னு எதிர்பார்க்கிறீங்க?”
சுந்தரத்திற்கு இப்போதுதான் அடிவயிற்றில் பயம் வந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
“பயப்படாதீங்க. நாங்க எந்த ஒரு கொலை, கொள்ளையையும் வேறு வேறு மாதிரி செய்வோம். இப்போ உங்ககிட்ட நான் நல்லத்தனமா பேசினது உண்மையை வரவழைக்க தெரிஞ்சாச்சு. இப்போ தண்டனை. எப்படி சாக விரும்புறீங்க?”
“சார்ர்ர்…” – அலறி எழுந்தான்.
“கூண்டுக்குள்ள மாட்டியாச்சு. தப்பிக்க வழி இல்லே. விருப்பத்தைச் சொல்லுங்க?“
சுந்தரம் நடுங்கினான்.
“இது சின்ன தப்புன்னாலும் புள்ளைங்க மனசைப் பாதிக்கிற தப்பு. தண்டனை தவிர்க்க முடியாது. என்ன கொடுக்கலாம் ?” சேகர் மற்றவர்களைப் பார்த்தான்.
“நம்ம குடுக்கிற தண்டனை இதுக்காகத்தான் இதுன்னு நாலு பேர் பார்த்து பயப்படனும் திருந்தனும். அதை வெட்டிடலாம்!” என்றான் பாலு.
“சார்ர்ர்…” – சுந்தரம் அதிர்ந்தான்.
“இதுவும் நல்ல தண்டனை. கொன்னு போட்டாக்கூட இங்கே சிங்கம் புலி கரடி தின்னு ஆள் அட்ரஸ் இல்லாம ஆக்கிடும். ஏன் செத்தேங்குற காரணம் வெளியில தெரியாது. இப்படி செய்ஞ்சா உனக்கே ஒரு அடையாளமாய் இருக்கும். என்ன?“ – சொல்லி சேகர் முதுகில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்தான். அது நிலா வெளிச்சத்தில் பளபளத்தது.
“என்னை மன்னிச்சிடுங்க…” – சுந்தரம் தடாலென்று அவன் காலில் விழுந்து கதறினான்.
“அழாதே ! உன்னை உசுரோட விட எனக்கு விருப்பமில்லே. காரணம் போலீசுக்குப் போய் எங்களைப் போட்டுக்குடுத்துடுவே. ஆனா நண்பர்கள் உன்னை அதை வெட்டிவிடலாம்ன்னு சொல்றாங்க. எங்களைக் காப்பாத்திக்க எங்களுக்குத் தெரியும். இந்த காடு எங்களுக்கு நாலு வருசமா வீடு. தினம் ஒரு இடம் மாறுவோம். எந்த போலீசும் எங்களைப் புடிக்க முடியாது. உனக்கு உயிர் வேணுமா, உறுப்பு வேணுமா?” விரல் வைத்து அரிவாள் கூர்மையைச் சரிபார்த்தான்.
தப்பிக்க வழி இல்லை! சுந்தரத்திற்க மயக்கம் வரும் போலிருந்தது.
“நண்பர்களே! ஆளை அமுக்கிப் புடிங்க” – சேகர் எழுந்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பாலு, குணா, சிவா சுந்தரம் மேல் பாய்ந்து இறுக்கிப் பிடித்தார்கள்.
அடுத்த வினாடி
“ஆஆஆஆஆ…!” – சுந்தரம் காடே கிடுகிடுக்கும்படி அலறினான்.
– தொடரும்…
– பாக்யா வார இதழில் வெளிவந்தது