தேவைகள்
(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நேரம் பதினொரு மணிக்கு மேலிருக்கும் ‘ என அவன் நினைத்துக் கொண்டான். இரவு . காலி வீதியில் கொள்ளுப் பிட்டியை அண்மிய இடங்களில் இன்னும் சன நடமாட்டம் குறையவில்லை. இரத்மலானைவரை இப்படித்தான் இருக்கும். ஓரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களாவது செல்ல வேண்டும். அவன் அதற் காகக் காத்திருந்தான். அமைதி என்றாலும் அதைப் பூரண அமைதி என்று சொல்ல முடியாது. அடிக்கடி ஏதாவது வாகனங் கள் விரைந்து கொண்டிருக்கும். இரவின் அமைதியில் அவற்றின் ஒலி பூமியையே அதிரச் செய்வது போலிருக்கும். அதைக் கூடச் சமாளித்து விடலாம். பழகிப்போன சங்கதிதான். பூரணை தினத்து இரவு போல வீதியெங்கும் நிரம்பியிருக்கும் வெள்ளை ஒளியை என்ன செய்வது? காலி வீதியில் இருளையே காண முடியாதா – அப்படி நினைக்கத் தோன்றுமளவுக்கு தொடர்ச்சியாக ‘மேர்க்கூரி ‘ லைட்டுக்களின் வெளிச்சம்; அந்த வெளிச்சயே இப்பொழுது அவனுக்கு ஒரு பிரச்சனைதான்.
– முழு இருளிலே உறங்குவதென்றால் அதில் எவ்வள வொரு இயற்கையான சுகம் இருக்கின்றது. அந்த வாய்ப்புக்களை அவன் அனுபவித்து எவ்வளவோ காலமிருக்கும். சொல்லட் போனால் . அதை அவன் ஒரு அத்தியாவசிய தேவையாக எதிர் பார்க்கவில்லை எனலாம். ஆயினும், ஏனோ சில சந்தர்ப்பங்களில் இருள் மிக முக்கியமான ஒன்றாகத் தேவைப்படுகின்றது !
காலி வீதி வழியாக இரவு பன்னிரண்டு மணியளவில் நடந்து சென்றால், வீதியோரங்களில் நடைபாதைகளிலும், கடை வாசல்களிலும் உறங்கிக் கொண்டும் விழித்துக்கொண்டும் இருக் கும் எத்தனையோ சனங்களைக் காணலாம்.
– அந்தச் சனங்களில் ஒருவன் தான் அவனும். அவனுக்கு உழைத்து வாழ முடியாதபடி ஏதோ ஒரு குறையிருக்கும். இருக்க வீடு வசதியும் இல்லாமலிருக்கும். எப்படி அவன் இந்நிலைக்கு வந்தான் என்பதற்கு யாரும் சுலபமாகப் பதில் சொல்லிவிட முடியாது. அவனிடமிருந்து கூட அதற்குச் சரியான காரணத்தை அறிந்து கொள்ள முடியாது.
அவன் ஓர் அனுதாபத்திற்குரிய பிறவி. (பிச்சைக்காரன் எனச் சாதாரணமாக அழைக்கப்படுவான்) உடுத்தியிருந்த (பழைய) சாரத்தினால் கால்களை மூடிக்கொண்டு, இன்னுமொரு சாரத்தினால் தோள்வரை இழுத்து மூடி, குறண்டியவாறே ஒரு கடை வாசற் சுவரோடு சாய்ந்திருந்தான். (பழசுகள் இரண் டும் அவனுடைய சொத்துக்கள்.)
உறங்குவதானால் இப்படியே குறண்டியவாறு சரிந்து, கையை அணையாகத் தலைக்கு வைத்துக் கொண்டு படுக்க வேண்டியது தான். உறக்கம்? அதற்காக அவன் முயன்று முயன்று தோல்வியடைந்து கொண்டிருந்தான்.
இன்றைய இரவு இப்படி ஏன் அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும்? சில இரவுகள் இப்படித் தொல்லை நிறைந்ததாக இருப்பது தவிர்க்க முடியாததாய் இருக்கின்றது.
அவள் அவனுக்கும் அண்மையில் தரையிற் படுத்திருந்தாள். உறங்கிவிடவில்லை. சீமேந்துத் தரையின் குளிரும், வீசி வரும் குளிர்காற்றின் ஊடுருவலும் அவள் உறக்கத்தைத் தடை செய்து கொண்டிருந்தன. குளிர்ச்சியின் தாக்கம் உடலையும், பசியின் தாக்கம் வயிற்றையும் வருத்தின.
விரைந்து வந்த வாகனமொன்றின் வெளிச்சம் அவள் கண்களைக் கூசச் செய்து கொண்டு போனது. மறுபக்கமாகத் திரும்பிக் குறண்டினாள்.
அவன் அவளைப் பார்த்தான் –
…வயது அதிகம் இருக்காது. கறுப்பி என்றாலும் எடுப்பான உடல். ‘ஒழுங்கான சாப்பாடு இன்றிப் பறக்கும். இவளுடைய உடம்பு எப்படித்தான் இவ்வளவு மினுக்கமாக இருக்கின்றதோ!’
அவன் இன்னும் பார்த்துக் கொண்டிருந்தான். போர்த் திக் கொள்வதற்குப் போதுமான துணியின்றி அரை குறையாகத் தெரிந்த அவள் காலின் பகுதிகளை கள்ளத்தனமாக இரசித்தான்.
ஓரிரு தரங்கள் தற்செயலாகத் திரும்பிய பொழுது அவனது கள்ளப் பார்வைகளை அவள் புரிந்து கொண்டாள். அது உள்ளத்தில் ஓர் இன்பக் குமுறலை ஏற்படுத்தியது – சடுதியாகத்தான். பசியின் ஆக்கிரமிப்பு மறுகணமே அந்த அனுபவிப்பை மறக்கச் செய்தது.
அவனால் அவளை மறக்கமுடியாது. இன்று அவனுக்குப் பசியில்லை. ‘யாரோ ஒரு புண்ணியவானுடைய’ (அவனுடைய பாஷையில் ) உபயத்தில் நன்றாக வயிறு புடைக்கப் போட்டாயிற்று. (‘நல்லாயிருப்பீங்க சாமி!’)
அவளுடைய தேவையின் அவசியத்தை சூழ்நிலையின் குளிர்ச்சி இன்னும் அவனுக்கு நிச்சயப்படுத்திக் கொண்டிருந்தது…உடற் பசியைத் தீர்த்துக் கொள்ள முயல்வது தவறென்றால்…வயிற்றுப் பசிக்காக நிரம்பச் சோறு போட்டதும் தவறு தானோ?
தேவைகள் ஒவ்வொன்றும் பூர்த்தி செய்யப்படும் பொழுது இன்னுமொரு தேவை தோன்றுகின்றது. ஏக்கத்துடன் அவளை மீண்டும் நோக்கினான். விலத்திக்கொண்டு செல்லும் வாகனங்களும் வெளிச்சமும் ஒரு பெரிய தடையல்ல . அவளை யொட்டினாற் போலப் படுத்திருக்கும் பொடியனைப் பார்த்து எரிச்சலடைந்தான்; ”சனியன்” என மனதாரத் திட்டினான்.
சிறுவனுக்கு ஆறு வயது மதிக்கலாம். களிரின் தாக்கத் தினால் அம்மாவை இறுக்கி அணைத்துப் படுத்தபொழுது, ‘சீ! வெலகிப் படுடா!” என அவள் உறுமினாள். மிரட்சியுடன் விலகினான். பசி உறக்கத்தைப் பறக்கடித்துக் கொண்டிருந்தது. அம்மாவினால் அவனது பசியைத் தீர்க்க முடிவதில்லை. பகலில் அம்மாவினுடைய உழைப்பில் (”ஐயா….. தர்மம் போடுங்க சாமீ…’ ) அவனுக்கும் நியாயமான பங்கு உள்ளது. எனினும் வயிற்றுக்குப் போதியளவு கிடைப்பதில்லை. அம்மாவினால் முடிந்தது அவ்வளவுதான்.
எழுந்து உட்கார்ந்து கொண்டு வீதியைப் பராக்குப் பார்த்தான். விரைந்து கொண்டிருக்கும் வாகனங்கள் வேடிக் கையான காட்சியாயிருந்தும் மனம் அதில் லயித்துப்போகவில்லை. ‘ஆ’ வென்று ஒரு கொட்டாவி வெளிப்பட்டது. தலையைச் சொறிந்து கொண்டான். அடிக்கடி அம்மாவையும் பார்த்துக் கொண்டான். பகலிற் கண்ட சாப்பாட்டுக்கடைக் காட்சி நினைவில் வந்தது. சாப்பிடுபவர்களிடம் பிச்சை எடுப்பதற் காகக் கடைவாசலில் நிற்பது வழக்கம். சிகரட் வேண்டி மிகுதி யாகும் ஒரு இரு சதங்களையேனும் சிலர் ‘போடுவர்”. மறக்காமல் எல்லோருக்கும், புண்ணியவான் நல்லாயிருப்பீங்க துரே …. எனச் சொல்லிக்கொள்வான். அது அவனுக்கு மனனம் செய்யப் பட்ட ஓர் உயிருள்ள கீதத்தைப்போல. அவனுடைய சீவனைக் காக்கும் கீதம் அது என்பது அவனுடைய நம்பிக்கை
சில வேளைகளில் பசி வேகத்தில் கடை வாசலுக்கே போய் விடுவான். உள்ளே பேக் ‘கென உற்சாகத்துடன் சாப் பிட்டுக் கொண்டிருப்போரை ஏக்கத்துடன் பார்ப்பான். வாழை இலையில் எல்லாவற்றையும் குழைத்துக் கூட்டி அள்ளித் தின்னும் அழகைப் பார்த்தால் நாக்கில் ஜலம் ஊறும். மிகுதியை வீசு வதற்காக எடுத்துச் செல்லும் பொழுது எனக்குத் தரமாட்டார் களா ‘ என மனதுக்குள்ளே அங்கலாய்த்துக் கொள்வான்.
அந்தக் கடை நினைவில் வந்தது; ‘இப்பொழுதும் அப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்களோ? இது இரவா பகலா? பக்கத்தில் இவ்வளவு பேரும் ஏன் மொய்த்துக் கொண் டிருக்கிறார்கள்? இங்கு என்ன சாப்பாடு போடப் போகிறார்களா? அவர்கள் நித்திரையோ? அம்மாவும் நித்திரையாய் இருக்கின்றாளே! அந்தக் கடையில் இப்பொழுது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
பொடியன் அசுகையின்றி நழுவுவதை மலர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
மனிதனுக்கு எத்தனை விதமான தேவைகள்! அவற்றிலே தவிர்க்க முடியாத தேவைகளும் பல. சமூகத்தின் உயர் மட் டத்திலுள்ளவர்கள் தங்களது தேவைகளை ஆடம்பரமாக நிவர்த் தித்துக் கொள்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் ஏனோதானோ என்று ஒரு கடமையாய் நிறைவேற்றிக் கொள்கின்றனர். சமூகத் தின் கீழ் மட்டத்திலுள்ள ஒருவனே தனது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வசதியின்றி அத்தேவையின் அவசியத்திற்காக ஏங்குகின்றான். அந்நிலையில் அது ஒரு வெறியாகவே உருவெடுத்து எப்படியாவது அதை நிவர்த்தித்துக் கொள்ள முற்படும் பொழுது தான் சில விரும்பத்தகாத சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
எத்தனையோ தேவைகளின் சேர்க்கைதான் வாழ்க்கை யெனில் அவற்றை நிவர்த்தித்துக் கொள்வதில் இத்தனை இடையூறுகளா?
அவனுடைய பார்வை மீண்டும் அவள் பக்கம் தாபத்துடன் சென்றது. அவள் பெரியதொரு அழகியாகவே மாறிவிட்டது போன்ற எண்ணங்கள் . சலனமற்ற தூக்கத்தில் உயர்ந்து பதியும் அவள் மார்பைக் கண்டதும் இன்ப ஏக்கம் இன்னும் அதிகரித் தது. அப்படியே அணைத்து அவள் கன்னத்தைக் கடிக்க வேண் டும் போல ஒரு துருதுருப்பு.
‘கண்மணி’ – என்ன அழகான பெயர்
கண்மணி எனும் அவளுடைய பெயரை ஆசையுடன் சொல்லும் பொழுது கண்மணீ என மாறிவிடுகின்றது.
கள்ளத்தனமாக அவள் அண்மையில் அசைந்தான், அவளை விழித்துக் கொள்ளச் செய்ய வேண்டும். கைகளிலே பதட்டம் தோன்றியது. வரும் எதிர்ப்புக்களையும் சமாளிக்கத் தயாராயிருக்க வேண்டும்.
இருபக்கமும் பார்த்துவிட்டு மெதுவாக …. ‘கண்மணீ’ – அவளது கையை வருடினான். அவள் விழித்துக் கொண்டு, மறு பக்கம் திரும்பிப் படுத்தாள். சற்று பின்வாங்கி, மீண்டும் ‘கண்மணீ’ என்றான்.
திடுதிப்பென்று எழுந்தவள், ‘இன்னாய்யா நீ?…சும்மா இருய்யா’ எனச் சத்தமிட்டாள். இச் சந்தர்ப்பத்தில் விழித்துக் கொண்ட, அவர்கள் அண்மையிலிருந்த சிலர் இந்த வழக்கங்களில் கவனம் செலுத்தாமல் மீண்டும் படுத்துக் கொண்டனர். வீதியில் மற்றவர் கட்டிக் கொஞ்சுவதையும் கவனிக்காதது போலிருப்பதும் நாகரிகமென்றால், இவர்களும் நாகரிகத்துடன் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்!
சடுதியான எதிர்ப்பினால் பின் வாங்கிய அவன் சற்று நேர மௌனத்திற்குப் பின்னர் மீண்டும்…..’கண்மணீ….இந்தாம்மே இந்த லைட்டிலே தூங்கமாட்டே….வா….ஒதுக்குக்குப் போகலாம்’ என்றான்.
அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. இவனுக்கு எப்படித் தன் பெயர் தெரியும் என நினைத்தாள். தூக்கக் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தான். சில தினங்களுக்கு முன்னர் கண்டஞாபகம். அதற்கு முன்னரும் எங்கேயோ பார்த்தது போலவுமிருந்தது.
கண்மணீ. உன்மேல எனக்குக் கொள்ளை ஆசை… நீ இவ்வளவு அழகா இருக்கியே!” – இதை அவன் அவளுடைய கைகளைப் பிடித்து காதிற்கு மிக அண்மையிற் சென்று இரகசிய மாகச் சொன்னான். குளிர்ந்த காற்று ஊடுருவிய பொழுது அவனுடைய அணைப்பின் அவசியத்தை அவள் உணர்ந்தாள். சற்று முன்னர் பிள்ளையின் அணைப்பில் எரிச்சலடைந்தவள், ஏனோ அவனுடைய அணைப்பைப் பிரியத்துடன் ஏற்றுக் கொள்கின்றாள்!
அவன். அணைப்பை மெல்ல இறுக்கியவாறே அவளை ஒரு ஒதுக்குப் புறமாக அழைத்தான். அவள் சற்றுத் தயங்கினாள்.
“பய இருந்தானே?”
“அவன் போயிட்டான்”
அவளுக்குத் தெரியும் – பொடியன் எங்காவது இரை தேடப் போயிருப்பான். அதை இப்பொழுதெல்லாம் அவள் கண்டும் காணாமல் ‘ விட்டுவிடுகின்றாள். எப்படியாவது பிள்ளையி னுடைய பசி தீரட்டும் என்ற எண்ணம்.
“கண்மணி”
அவனுடைய அழைப்பு விடுக்கும் பார்வையினுள் அவள் நாணினாள். கூச்சத்துடன் நின்ற அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அவன் நடக்க முற்பட்டான். அவன் நடப்பதற்கும் அவள் தான் உதவி செய்ய வேண்டியிருந்தது. அவனுடைய ஒரு அவனைத் தாங்கியவாறே தொடர்ந்தாள்.
குடும்பக் கட்டுப் பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் சமூகம் ஒரு பிச்சைக்காரன் விஷயத்தில் அசட்டையாக இருந்து விடுகின்றது. அதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளாமையி னால் இங்கே இன்னுமொரு சந்ததி பிச்சைக்காரர்கள் உருவாகு கின்றார்கள்.
சிறுவன் ஓட்டமும் நடையுமாகத் தனது குறியை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
கடை பூட்டப்பட்டிருக்கின்றதா? இங்கே சாப்பிடுபவர்கள் இல்லையா? அவர்கள் மிச்சச் சோற்றை வீசமாட்டார்களா?
பக்கத்தில் இரண்டு நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டன. திரும்பிய பொழுது அவையும் சாப்பாட்டிற்காகப் போட்டியிடுவது தெரிந்தது. இனி, மாநகரசபை லொறி தகரத்தினுள் போடப்பட்டிருக்கும் எச்சிலிலைகளை எடுத்துச் செல்ல வரும்.
காலி வீதியிலிருந்து பிரியும் ஒழுங்கையொன்றின் திருப் பத்தில் இருளில் இறங்கி அவனும் அவளும் (அவர்கள்) வசதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்த பொழுது ….
… சிறுவன் அந்தப் பிரதான சாப்பாட்டுக் கடையின் முன்னால் தகரத்தினுள் போடப்பட்டிருந்த எச்சில் இலைகளுடன் கூடிய சோற்றை வழித்து ஆவேசத்துடன் சாப்பிட்டுக் கொணடிருந்தான்.
இன்னும் சில காலங்களில் தெருவில் வீசப்படும் எச்சில் இலைகளைச் சுவைப்பதற்கு இன்னுமொரு உயிரை அவள் தரக் கூடும்.
– கலாவல்லி 1977
** இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத் தமிழ்ச் சங்கத்தினால், 50-வது ஆண்டு நிறைவு விழாவை யொட்டி அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் . 3-வது பரிசு பெற்றது.
– பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, ,தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்