தெருக் கூத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2026
பார்வையிட்டோர்: 112 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டம் டம டம்!”

ஊரின் ஒரு கோடியிலிருந்து அந்த ஓசை எங்கும் பரவியது. சிறிது நேரத்திலேயே அவனைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது. அவன் இன்னும் தன் கையிலுள்ள கொட்டை ஓசைப்படுத்திக்கொண்டிருந்தான் ‘டம் டம் டம்’ என்று. தரித்திர தேவதையின் அவதாரம் போன்ற தோற்றம். கிழிந்து தாறுமாறா கத் தையல் ஓடும் வேஷ்டி சிக்குப் பிடித்த தலை மயிரை மறைக்க ஒரு முண்டாசு. உடை எப்படியும் போகட்டும். அந்த முகம்!

காலத்தில் அடிபட்டு உணர்ந்த அனுபவரே கைகள் படர்ந்த முகம். ஒளியிழந்த கண்கள்,ஏங்கி ஏங்கித் துள்ளும் இரு வண்டுகளைப்போல் ஆழ்ந்த குழிகளில் அப்படியும் இப்படியும் அலை புரள்கின்றன. அவனது அகத்தின் பிரதிபலிப்பே அந்த வாட்டமுற்ற முகம்.

அவனைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டனர். அவனது கையோ கொட்டை முழக்குகிறது, டம் டம் டம்’ என்று. அந்த நாதந்தான் அவனது வயிற் றுத் துடிப்பின் எதிரொலியோ?

அவன் ஒரு கூத்தாடி. கழை மேல் வித்தை களும், பல ஜாலங்களும் செய்துகாட்டும் பேர்வழி. அவன் கலா ஆர்வங்கொண்டு இந்தத் தொழிலை ஏற்க வில்லை. அவனுக்கும் வயிறு ஒன்று இருக்கிறதே!

தினந்தோறும் உண்டு களித்து போக வாழ்வு வாழும் சீமான் சொல்லலாம். ‘வாழ்க்கை வாழ்வதற் கே!’ என்று. ஆனால் அவனுக்குத் தெரியும் வாழ்வில் வாழ்வது என்றால் என்ன என்பது. அதற்குப் பதில் அவனது அடிவயிற்றிலிருந்து கிளம்பும், அதை ஆமோதிப்பதுபோல் மிரள நோக்கும் ஏக்கத்தால் நிரம்பிய கண்கள்.

முடிவாக மேளத்தை முழக்கிவிட்டு எழுந்து நின் றான் அவன். கூட்டத்தை ஒரு முறை நோக்கினான். அவனையறியாமலே ஒரு நீண்ட மூச்சு கிளம்பியது. அவன் அங்கு என்ன உணர்ந்தானோ? இது அவனது முதல் அனுபவம் இல்லையே!

‘ஏலே!’ என்று உரக்கக் கத்தினான் கூத்தாடி. ‘என்னலே பன ஓலே!’ என்று துடுக்காக மொழிந்த வண்ணம் முன் வந்து குதித்தான் ஒரு சின்னப் பயல். அவன்தான் கூத்தாடியின் சிஷ்யன்; து ணைவன், வேலைக்காரன் எல்லாம். ஏண்டா டேலே’ எ ன் று சொல்லி நிமிர்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின் றான் கூத்தாடி. ‘உருளைக் கிழங்கு போண்டா டேலே’ என்றான் சின்னப்பயல்.

‘என்னடா நீ சின்னப்பயலா லெட்சணமாக இல்லையே!’ என்றான் கூத்தாடி.

சிறுவனோ துடுக்காக ‘என்னலே நீ பெரிய மனு ஷனா அழகா ஒன்னுமில்லையே! என்று கத்தினான்.

‘அடே! நான் இப்ப இன்ன செய்யப்போறேன் தெரியுமா?’ என்ற கேள்வி கிளம்பியது கூத்தாடியிட மிருந்து.

‘தெரியும்!’

‘என்னாது?’

‘நின்னுக்கிட்டு முழிக்கப்போறே!’

‘போடா சின்னப்பயலே!’ என்றான் தலைவன்.

‘வாடா பெரிய பயலே’ என்றான் அந்தச் சோக்ரா!

கூத்தாடி இதிலெல்லாம் கோபமடைவதில்லை. இதுதான் ஹாஸ்யம் என்பது அவனது எண்ணம். பார்க்கிறவர்களைச் சிரிக்கச்செய்து மனமிரங்க வைக்க வேண்டுமே. மானம் அவமானம் என்றால் முடியுமா? வயிறு இருக்கிறதே!

‘அடே நான் இப்ப வேடிக்கை காட்டப்போ றேன்’ என அறிவித்தான் கூத்தாடி. சின்னப்பயலோ “அட, நீயா, அல்லது நானா?’ என்றான்.

‘யாரோ பார்க்கலாம்’

‘சரி. பார்க்கலாமே!’

இப்படிச் சொல்லுக்குச் சொல் இடக்குடன் அவனது பேச்சும் கூத்தாடியின் வேடிக்கைகளும் எவ்வுகின்றன.

2

‘டே, இப்ப நான் என்ன செய்யப்போறேன் தெரியுமா?’

‘தெரியும்!’

‘என்னாது?’

‘நான் ஏன் சொல்லவேணும்?’ என்றான் சின்னப் பயல்.

‘போடா முட்டாள்’

‘நீதான் முட்டாள்’ என்ற சிறுவனின் நொடிப் பைக் கேளாதவன் போலவே கூத்தாடி ஒரு சிறுமி யை அழைத்து வந்தான்.

‘இது யார் தெரியுமா?

‘குழந்தைபோல்தான் தெரியுது’ என்றான் சோக்ரா.

அவன் வேடிக்கையாகத்தான் சொன்னான். ஆனாலும் சிறுமியின் தோற்றமும் அப்படித்தான்! பருவத்திற்கேற்றபடி வளர்ச்சியடையாத அங்கங்கள். எலும்பு கிழித்துக்கொண்டு வருவது போன்ற மார்பு. ஒட்டிய வயிறு. ஏழ்மையின் கைத்திறன் ஒவ்வொரு அங்கத்தின் குழைவுகளிலும் விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆச்சர்யம்!

கூத்தாடி சிறுமியை ஒரு மூங்கில் கம்பால் தாங்கி உயரே தூக்குகிறான். அது என்ன உயிருள்ள சிறுமி யா? இல்லை துணிப் பொம்மையா! உயிரற்ற குழல்களைப்போல கால்களும் கைகளும் ஊசலாட குழந்தை யே ஒரு பொம்மைபோல்தான் கிடக்கிறது மூங்கிலின் உச்சியிலே!

வேடிக்கை!

ஆம்; வேடிக்கைதான். தன் வயிற்றை வளர்க்க ஒரு ஜீவனுக்கு வேதனையளிக்கும் வேடிக்கை! பிறகு சிறுமியைத் தரையில் நிறுத்திவிட்டு அடுத்த வேடிக் கையைக் காட்ட ஆரம்பித்தான் கூத்தாடி.

சிறுமியின் கால்களை மடக்கினான்; கைகளை மடித் தான்; குழந்தையையே ஒரு துணியில் வைத்துப் பொட்டணமாகக் கட்டிவிட்டான். சின்னப்பயல் ‘இது என்ன மூட்டை ஐயா?’ என்றான்.

‘இதா ஜவுளி மூட்டைடா’ என ஏகத்தாளமாக பதில் அளித்தான் கூத்தாடி.

‘ஜவுளி மூட்டையா அது?’

உயிருள்ள சதை மூட்டை!

பாவி குழந்தையை எவ்வளவு நாட்களாகச் சித் திரவதை செய்தானோ? குழந்தையின் கைகளை முறித்து, கால்களை ஓடித்து எத்தனை மாதங்கள் இந் தப் பயிற்சி அளித்தானோ?

அந்தச் சிறுமியின் மோனத் துடிப்பு, அவளது அங்கங்களின் அலறல் அவனது காதில் விழவில்லையா?

எங்கே கேட்கப்போகிறது!

புற உலகக் கூச்சல்களையும், தன்னைச் சார்ந்த ‘ஐந்து’க்களின் சுகதுக்கங்களையும் அவனது கண்ணி லும் காதிலும் படாதபடி மறைக்கும் இயந்திரம் அவ னுள்ளேயே பதுங்கிக் கிடக்கிறதே!

ஆம்; அவனது வயிறுதான்.

3

கூத்தாடி அந்தச் சிறுமியை ஒரு படுக்கையில் படுக்கவைத்துவிட்டு, தான் செய்யப்போகும் கீர்த்திப் பிரதாபங்களை அளந்தான்.

‘பிள்ளையைப் பெற்ற தாய்மார்களே! இரக்க முள்ள பெரியோர்களே! பணம் படைத்த கனவான் களே! இந்தச் சின்னக் குழந்தையின் துயரம் உங் களுக்குத் தெரியவில்லையா? இரக்கம் வரவில்லையா?’ எனப் பிரலாபித்தான்.

சின்னப்பயல் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு காசு வாங்கக் கிளம்பிவிட்டான். ஐயோ, பிள்ளை பெறாத மங்கைமார்களே…. இரக்கமில்லாத சிறுவர் களே…. பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ள கனவான்களே காசு போடுங்கோ!….ஐயா இன்னும் வேடிக்கை காட்டுவாரு!’ எனக் கத்தினான்.

இது கெண்டைமொழியா? சமூகத்திற்குச் சாட்டையடியா?

அந்த மூலையிலிருந்தும், இந்தப் பக்கத்திலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலணாக் காசு கள் அவன் தட்டத்தில் வந்து விழுந்தன. காசு விழும் ‘டக்’கெனும் ஓசைக்கு ஈடாக கூத்தாடியின் கொட்டு ‘டம் டம்’ என நாதம் எழச் செய்தது.

கூத்தாடி தனது பெரிய வித்தையைக் காட்ட ஆரம்பித்தான். சிறுமியின் கழுத்தை அறுத்து இரத்தத்தை எடுத்துக் காட்டிவிட்டு, மீண்டும் குழந் தையை உயிர்பெற்றெழச் செய்யும் ஜாலவித்தை.

கூத்தாடி கத்தியைத், துணியால் மூடிய குழந்தையின் கழுத்தருகில் கொண்டு சென்றான். இரத்தக் கறை படிந்த கையுடன் நிமிர்ந்தான்; அவனது கண் கள் வரப்போகும் வெற்றியை எண்ணி ஜ்வலித்தன.

‘கண்கட்டி வித்தை’ என முணுமுணுத்தனர் சிலர். ‘கத்தாழம்பழக்கரை’ என்று அபிப்பிராயங் கூறினர் பலர்.

ஆனால் அன்று…

அந்தக் குழந்தையின் துடிப்பைக் கவனிக்க வில்லை. நீண்ட அலறலை அறியவில்லை; துணியில் ஓடிய இரத்தப் பெருக்கை உணரவில்லை. கூத்தாடி ‘ஜல்….மந்திரக்காளி!’ என்று சுடக்கிவிட்டு ‘ஏட்டி சின்னாயி!’ என்று கூப்பிட்டான்.

அப்பொழுதுதான் அறுபட்ட தொண்டையிலிருந்து தப்பிய ஒரு சோக ஒலி காற்றோடு காற்றாய்க் கலந்து மறைந்தது.

‘ஏட்டி சின்னாயி!’ என்று மறுபடியும் கூப்பிட்டான் அம் மந்திரவாதி.

‘செத்துப் போச்சே!’ என உதட்டைப் பிதுக்கி கைகளை விரித்தான் சின்னப்பயல்.

‘என்ன! என்று ஆச்சரியத்துடன் மேலே கிடந்த துணியை இழுத்தான் கூத்தாடி. குழந்தை இரத்த நீரில் புரண்டு கிடந்தது. தொண்டையில் பட்ட ஒரு வெட்டின் வழியாக இரத்தம் பொங்கி வழிந்தது.

‘ஐயோ!,என அலறினான் கூத்தாடி.

‘என் புள்ளே!’ என அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள் ஒருத்தி. ஏழ்மையின் விக்கிரகம்.

குழந்தையின் தாய்; அவனது மனைவி.

‘நீ நாசமாய்ப் போனே…. உன் மந்திரமும் நீயும்!’ எனக் கதறினாள் அவள். தாயுள்ளம் அளவு மீறித் துடித்தது.

அவன் மிரள மிரள விழித்து நின்றான். அன்று அவனது தந்திரமும் மந்திரமும் மண்ணைக் கவ்வின. தந்திரமாய்ச் சொருகிய கத்தி உண்மையாகப் பாய்ந்து விட்டது குழந்தையின் கழுத்திலே! தெருக்கூத்து அன்று தோல்வியை அறிந்தது.

ஆனால் மறலியின் கூத்து இளம் இரத்தத்தைச் சுவைத்து வெறிகொண்டது.

கூற்றுவனின் வயிறு ஓர் ஏழையின் இரத்தத் தால் நிரம்பிவிடுமா?

வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூத்தாடியைத் திட்டினர். அவன் மிரண்டு நோக்கினான். ஏக்கம் நிறைந்த கண்குழிகளில் தோன்றிய பயத்தை, சிறு சிறு நீர்த்துளிகள் மறைத்தன. அவனது உள்ளமோ கொந்தளித்தது, பலவகைக் குமுறல்களால் கட்டுக் கடங்காத கடலைப்போல! பல ரக உணர்வுகளையும் படம் பிடித்துக் காட்டியது கரடுமுரடான அந்த முகம். அவன் கைகளைப் பிசைந்து நின்றான்.

அவ்வேளையிலே அவன் கழுத்திலே விழுந்தன சட்டத்தின் இரும்புக்கரங்கள் இரு போலீஸ் கரங் களாக! கைகளைப் பிணைத்தது சட்டத்தின் தளை இரும்புச் சங்கிலி வடிவில்.

‘ஐயோ…. சாமி…நான் வேணுமின்னு செய்யலி யே!’ என அலறினான் அவன். அவனுக்கு – அந்த அலறலுக்கு – போலீஸ் தடி பதில் சொல்லிற்று. அந்தக் கட்டை உணருமா உள்ளமும் வயிறும் எதி ரொலிக்கும் துடிப்புகளை

தெருக் கூத்தைக் காண வந்த மக்கள் இத் திருக் கூத்திற்காகக் கூடினர். போலீஸ் அதிகாரம் அவர் களை விரட்டியடிக்கவே கூட்டம் சிறிது சிறிதாகக் கலைந்தது.

அவள் இறந்த குழந்தையைத் தோளில் கிடத்திச் சென்றாள் ஒரு சந்திரமதிபோல்! கூத்தாடியைக் கூட்டிச் சென்ற போலீசார் பின்னாலேயே அழுது கொண்டு போனாள். கெஞ்சினாள்; அழுதாள்; அலறி னாள்; வயிற்றில் அடித்தாள்-அவனை விட்டுவிடும்படி!

இருந்தாலுமென்ன?

ஏழைகள் கூத்து சட்டத்தைத் தாண்ட முடியுமா?

– இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942ம் வருஷம் எழுதப்பட்டவை, 1943ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உருவானவை.

– – நாட்டியக்காரி, முதல் பதிப்பு: 1964, கவிக்குயில் நிலையம், தென் திருவிதாங்கூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *