தென்றலும் சுழற் காற்றும்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 299
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தொலைவிலே நின்ற அந்த மாமரம் சலசல வென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன் கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஓர் அணிற் பிள்ளையும் ஒரு கிளிப்பிள்ளையும் அந்த மாமரத்தை நெருங்கின.
“அம்மா, மாமரத் தாயே! பசித்து வந்திருக் கிறோம்” என்றது கிளிப்பிள்ளை.
“உங்களுக்காகத்தானே பழம் வைத்திருக் கிறேன். நன்றாகச் சாப்பிடுங்கள்” என்று கூறியது மாமரம்.
“மாவம்மா! இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல் தெரிகிறதே! என்ன காரணம்?” என்று விசாரித்தது அணிற்பிள்ளை.
“பிள்ளைகளே! தென்றல் மாமா வந்திருக் கிறார். அவர் வந்திருப்பதே ஓர் இன்பம்தானே!” என்று கூறியது மாமரம்.
அணிற்பிள்ளையும் கிளிப்பிள்ளையும் வயிறு நிறைய பழம் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டன. தென்றல் மாமாவுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது மாமரம்.
இரண்டு நாட்கழித்து அணிற்பிள்ளையும் கிளிப் பிள்ளையும் மாமரத்தைத் தேடி வந்தன. “மாவம்மா! நேற்றெல்லாம் ‘ஓ’வென்று அலறிக் கொண்டிருந்தாயே ஏன்?” என்று கேட்டது அணிற்பிள்ளை.
“இதென்ன அநியாயம்! மாமரத் தாயே! உன் கிளைகளெல்லாம் ஏன் முறிந்து கிடக்கின்றன. ஐயோ! பழமெல்லாம் கீழே விழுந்து அழுகிக் கிடக்கின்றனவே, ஏன்?” என்று பதறிப் போய்க் கேட்டது கிளிப்பிள்ளை.
“பிள்ளைகளே, நேற்று சுழற்காற்று என்கிற முரடன் வந்தான். அவன் செய்த அட்டூழியம்தான் இது!” என்று கூறிக் கண்ணீர் விட்டது மாமரம்.
மாமரத்தின் துன்பத்தைக் காணப் பொறுக் காமல் கிளிப்பிள்ளையும் அணிற்பிள்ளையும் கண்ணீர் விட்டன.
அவற்றிற்குப் பழம் கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்று மாமரம் வருந்தியது. பின்னர் அவையிரண்டும் தத்தம் இருப்பிடம் நோக்கிச் சென்றன.
கருத்துரை:- நல்லவர்கள் வரவால் இன்பம் ஏற்படும். தீயோர்கள் வரவால் துன்பமே உண்டாகும்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.