தூக்கம் கண்களைத் தழுவட்டும்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

யுத்த முஸ்தீபுகள் ஒருபக்கமும் மிஸ்டர் பூப்பேயின் கூத்துக்கள் இன்னொரு பக்கமுமாக நாங்கள் பதட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் நண்பன் மகேந்திரனைக் காணவில்லை…! மிஸ்டர் பூப்பே பயந்து நடுங்கிய விஷயத்தை மகேந்திரனிடம் கூறவேண்டுமெனத் தோன்றியது எனக்கு. ஆனால் அவனைக் காணோம்.
மகேந்திரன் இலங்கையில் என்னுடன் ஒன்றாக வேலை செய்தவன். ஒரே ஃபிளைட்டில் பயணித்து என்னுடன் இங்கு வந்தவன். குவார்ட்டேஸிலும் ஒரே அறையில் குடியிருந்தோம். அதனால் ஒருவர்க்கொருவர் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு எங்களுக்குள் நெருக்கமிருந்தது.
ஒரு விஷயத்தை முதலிற் சொல்ல வேண்டும்.
ஒருசில நாட்களுக்கு முன்னர்தான் மகேந்திரன் மிஸ்டர் பூப்பேயிடம் மூக்கு உடைபட வேண்டிக்கட்டியிருந்தான். ஏச்சு என்றால், மனுசன் மட்டு மரியாதையில்லாமற் கத்துவார். என்ஜினியர் என்றும் பாராது தொழிலாளர்களுக்கு முன்னே சத்தம் போட்டது மகேந்திரனுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் தன்மேல் ஒரு தவறும் இல்லை எனச் சொல்லிக் கொண்டிருந்தான். நடந்தது இதுதான்… மிஸ்டர் பூப்பே ஒரு வேலையை இன்னமாதிரிச் செய்யுமாறு விபரித்துக் கூறியிருக்கிறார். மகேந்திரனின் கற்கை நெறிப்படி அந்த முறை அவனுக்குச் சரியாகப் படவில்லை. எனவே, அதைத் தன் அறிவுக்கு எட்டியபடி செய்தானாம். பின்னர், பூப்பேயை (அவன் அப்படித்தான்… மிஸ்டர் போடாமல் வெறுமனே பூப்பேய் என்றுதான் சொல்வான். ‘அது பூப்பேயில்லை… பேய்’ என்றும் சொல்வான்.) அவரது அலுவலகத்திற் போய்க் கூட்டிவந்து, தான் செய்திருக்கும் காரியத்தைக் காட்டியிருக்கிறான். அவர் தனது அறிவுத் திறனை மெச்சுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம்…! மகேந்திரன் செய்துவைத்திருக்கும் வேலையைப் பார்த்ததும், அவருக்கு உண்மையிலேயே பேய் உச்சத்தில் ஏறிவிட்டது. “நான் சொன்னதைச் செய்யாமல் இதென்ன வேலை செய்து வைத்திருக்கிறாய்? உனக்குக் கனக்கத் தெரியுமென்று நினைக்க வேண்டாம்” எனக் கத்தல் போட்டிருக்கிறார்.
இப்போது மிஸ்டர் பூப்பே பயந்து நடுங்கிய விஷயம் மகேந்திரனுக்கு ருசிகரமான செய்தியாயிருக்கும். அவனைத் தேடி அறைக்குப் போனேன்.
அவனைப் பற்றிய இன்னும் சில கதைகளை இங்கு சொல்லவேண்டியிருக்கிறது.
மகேந்திரனுக்கு இங்கு வந்த நாள்முதல் ஒரு மனக் குறை இருந்தது. கிழமைக்கு ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து முழுக்குப் போட வேண்டுமென, ஊரிலிருந்து வந்தபோது அவனது தாயார் சொல்லிவிட்டிருந்தாராம். சீயக்காய், அரப்பு, வெந்தயம் போன்றவற்றையும் பதனப்படுத்தி அவனிடம் கொடுத்தனுப்பியிருந்தாள் அம்மா. (ஆனால் நல்லெண்ணெய் பயணம் போகும்போது கொண்டு போவது கூடாது. பின்னர் யாராவது வரும்போது அனுப்பிவிடுவதாக அம்மா கூறினாளாம். அவ்வாறே… அடுத்த கிழமையளவில் வந்தவர்களில் ஒருவரிடம் கொடுத்துவிட்டிருந்தாள். அவரும் ஒரு விக்கினமுமில்லாமல் நல்லெண்ணெயைக் கொண்டுவந்து சேர்த்திருந்தார்.)
அது கிடைத்த நாள்முதல், “ஒரு எண்ணை முழுக்குப் போடவேணும். நேரம்தான் கிடைக்குதில்லை. எனக் குறைப்பட்டுக் கொண்டிருந்தான் மகேந்திரன். தொழிலகத்தில் நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருந்தமையால் ஓய்வொழிச்சல் இல்லை. காலையில் ஏழு மணிக்குப் போனால் திரும்ப வர இரவு எட்டு ஒன்பது மணியாகிவிடும். ஓஃப் டேய்சும் இன்றி ஒரே வேலைதான். அதனால் அவனது முழுக்கு பின்தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.
யுத்த நிலை காரணமாகத் தொழிலகம் மூடப்பட்டு அறைக்கு வந்து சேர்ந்த நேரமுதல் மகேந்திரன் பரபரப்படைந்திருந்தான். சீயக்காய், அரப்பு போன்றவற்றை எடுத்துக் கொதிக்க வைத்தான். ஆடைகளைக் கழற்றிவிட்டு தேகத்துக்கு எண்ணெய் பூசினான். தனது அங்கங்களைத் தானே மஸாஜ் செய்தான். கால்களை நீட்டித் தரையில் அமர்ந்தான். கைகளை உயர்த்தி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக முன்வளைந்து, குனிந்து பாதங்களைத் தொட்டு உழைவு எடுக்கத் தொடங்கினான். எனக்கென்றால் அவனைப் பார்க்க வியப்பாகவும் வினோதமாகவும் இருந்தது. சற்று எரிச்சலாயுமிருந்தது. வெளியே யுத்தம் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. இவன் வலு றிலாக்ஸாக எண்ணெய் முழுக்குக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.
அதன் பின்னர் மகேந்திரன் ‘ரசம்’ தயாரிக்கும் அலுவலில் ஈடுபடத் தொடங்கினான். (அம்மா கொடுத்தனுப்பிய) ரசப் பவுடரையும் புளியையும் கரைத்து ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பில் வைத்தான். உள்ளிப் பருக்கைகளை வெட்டி அதனுள் போட்டான். ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பெருங்காயத்திலும் ஒரு துண்டு வெட்டிப் போட்டான். இப்படியாக ரசம் தயாராகும் படிமுறைகளை அதற்குமுன் அருகிலிருந்து நான் அனுபவித்ததில்லை. சூடாகும்போது அதன் வாசனை எழுந்து நாக்கில் ஜலத்தை ஊறச் செய்தது. அதை வெளிக்காட்டாமலிருக்க எனக்கு மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருந்தது.
மகேந்திரன் அதைக் கவனித்திருப்பானோ என்னவோ, “கொஞ்சம் குடிச்சுப் பார் மச்சான்…” என ரசபானத்தை ஒரு கிளாசில் ஊற்றி என்னிடம் நீட்டினான். அந்த நேரமாகப் பார்த்துக் கதவு தட்டப்பட்டது.
‘யுத்தம் தொடங்கிவிட்டது போல…’ என்று பதட்டத்துடன் ஓடிச்சென்று கதவைத் திறந்தேன். வாசலில் நின்றது… எங்கள் கம்பனியின் சமையற்காரன்.
“என்ன நல்ல மணம் குணமாயிருக்கு… சமையலா?”
“இதுதான் ஸ்பைஸ் சூப்…” பெருமையுடன் கூறியபடி அந்த கிளாஸ் நிறைந்த ரசத்தை சமையற்காரனிடம் கொடுத்தான் மகேந்திரன். அதைக் குடித்துவிட்டு, “ஆஹா… ஓகோ… வெரிகுட் வெரிகுட்…!” எனப் புகழ்நதவாறு சமையற்காரன் (ஆனந்தக்) கண்ணீர் மல்க வெளியேறினான்.
மகேந்திரன் என்னிடம், “கொஞ்சம் இருந்துகொள் மச்சான்… டக்கென வந்திடுவன்…!” என பாத்றூமுக்குள் நுளைந்தவாறே கூறினான். அப்போது நேரம் ஐந்து மணியை எட்டிக் கொண்டிருந்தது.
“நீ இப்ப சாப்பிட வரயில்லையா…” எனச் சத்தம் போட்டேன். “நீ போ மச்சான்… நான் பிறகு வாறன்…!” உள்ளிருந்தவாறே குரல் தந்தான். பின்னர் ஷவரைத் திறந்துவிட்டு பாடிப் பாடி நீராடத் தொடங்கினான். நான் வந்துவிட்டேன். அதன்பின் அவனை மறந்தே போயிருந்தேன்…
அவனைத் தேடித் திரும்ப அறைக்கு வந்தபோது, ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். அண்மையிற் சென்றேன். என்னைப் பார்த்துக் கூச்சமடைந்தான். வேறொன்றும் இல்லை. காதலிக்குக் கடிதம் எழுதுகிறான். வந்த நாள் முதல் அந்த நாள்வரை தனது காதலியைப் பற்றி எனக்கு நிறையச் சொல்லியிருக்கிறான். எதையாவது மனம் விட்டுக் கதைத்துச் சந்தோஷமடைகிறானென நானும் கேட்டுக்கொண்டிருப்பேன். இப்போது கடிதம் எழுதுகிறான். இதை எப்போது போடப் போகிறான், போட்டாலும் போய்ச் சேருமா என்றெல்லாம் எனக்குக் குழப்பமாயிருந்தது. எனினும் அவனிடம் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை.
“உனக்கு ஒரு முசுப்பாத்தி தெரியுமா?” மகேந்திரனின் கவனத்தைத் திருப்பி மிஸ்டர் பூப்பேயின் கதையைச் சொன்னேன்.
“ஐயோ… பாவம்…” எனக் கவலைப்பட்டான். “வயதான மனுசன்.. பயந்திட்டார்போல…!” என்று அவருக்காகக் கவலைப்பட்டான். உண்மையிலேயே அவன் அவருக்காக இரக்கப்படுவது தெரிந்தது.
அப்போது இன்னொரு புதிய செய்தி வந்தது. ‘இன்று இரவு ஈரானிய படைகள் இந்த இடத்தில் பரசூட்டில் இறங்கக்கூடுமாம். முன்னேயுள்ள இராணுவ முகாமிலிருந்து தகவல் வந்திருக்கிறது.’
பதட்டநிலை மீண்டும் கூடியது. ஒவ்வொருவராக அறைகளிலிருந்து வெளிவந்து கூடினார்கள். தகவல் உண்மையாயிருக்குமா எனச் சிலர் கேள்வி எழுப்பினார்கள். ‘உண்மையாயிருக்கும்… உளவறிந்திருப்பார்கள்… நாங்கள் இங்கு வெளிநாட்டுக்காரர்கள். இராணுவ முகாம்களுக்கு இடையில் இருக்கிறோம். எச்சரிக்கையாய் இருக்கட்டுமே என எங்களுக்குத் தெரிவித்திருப்பார்கள்…’ என இன்னும் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.
இதற்கு நாங்கள் என்ன செய்வது? பலருக்கு விழிகள் பிதுங்குவதை அந்த இருளிலும் காணக்கூடியதாயிருந்தது. இருள்தான். அறைகளிலும் விளக்குகள் போட வேண்டாம், சிகரட் பற்றவைப்பதற்கு சிறு லைட்டர் கூட ஒளிரிடக்கூடாது என இராணுவ முகாமிலிருந்து ஓடர் வந்திருந்தது. இப்படி ஆளுக்காள் பயப் பிராந்தியுடன் நிற்பதைக் கண்டு மிஸ்டர் பூப்பே ஒரு வழி கூறினார்.
‘இரவு இரு மணித்தியாலத்துக்கு ஒருமுறை மாறி மாறி, இரண்டிரண்டு பேராக என்ஜினியர்கள் விழித்திருந்து (காவல்) பார்க்க வேண்டும். மற்றவர்களெல்லாம் பயப்படாமல் அறைகளுக்குள் சென்று படுத்துக் கொள்ளலாம்.’
எட்டு மணியளவில் திருவிழா தொடங்கியது. அந்தப் பிரதேசத்தையே அதிரவைக்கும் குண்டுச் சத்தம். ரொக்கட்போல நெருப்பைக் கக்கியவாறு, ஆனால் குத்தென மேலெழாது ஓரளவு பூமிக்கு 45 பாகை உயர் கோணமாக உயரத்தில் சீறிக்கொண்டு போனது ஏவுகணை. அதன் இரைச்சல் காதைச் செவிடாக்கிவிடும் போலிருந்தது. ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்து இராணுவ முகாமிலிருந்து ஏவப்படுவதால், அவை எங்களுடைய தலையையே உரசிக்கொண்டு போவதுபோல பய உணர்வை ஏற்படுத்தியது.
“இதேமாதிரி ஈரானிலிருந்து இவர்களுக்கும் மிசைல்ஸ் அடிப்பார்கள்தானே… அது எங்கட குவார்ட்டேசில்தான் விழுமோ… என்னவோ…” என மகேந்திரன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். இதைக் கேட்டதும் நான் கலங்கிப்போய் மனதிற்குள் கோளறு பதிகத்தைப் பாடத் தொடங்கிவிட்டேன். ‘வேயுறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன்…”
இரவு பத்திலிருந்து பன்னிரண்டு மணிவரை நானும் மகேந்திரனும் காவல் பார்க்க வேண்டிய நேரம். சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். யாரும் வெளியில் இல்லாமல் அறைகளுள் பதுங்கியிருந்தார்கள். உறங்கிப்போயிருப்பார்களோ என்பது தெரியவில்லை. அடிக்கடி பெரும் இரைச்சலுடன் மிசைல்கள் விண் அதிரப் போய்க் கொண்டிருந்தது. முற்றத்தில் கதிரைகளைப் போட்டு அமர்ந்தோம். வானத்தை என் கண்கள் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன. பௌர்ணமியை அடுத்து வந்த ஒரு நாளான அன்று சந்திரனைக் கூடத் தெரியவில்லை. புகைமூட்டம் வானத்தை மூடிக் கொண்டிருந்தது. அது ஏவுகணைகள் கக்கிய புகையா அல்லது மேகமூட்டமா என்றும் புரியாமலிருந்தது.
“பரசூட்டில் இப்ப அவங்கள் வந்து இறங்கினால் நாங்கள் என்ன செய்யிறது?” எனது நியாயமான சந்தேகத்தை மகேந்திரனிடம் வினவினேன்.
“பிளேனில் இருந்து தொகை தொகையாய் அவங்கள் குதிக்கிறதைப் பார்க்க நல்ல வடிவாயிருக்கும்…” என அவன் ஜோக் அடித்தான்.
நேரம் மிக மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. இருள். இருளிலும் ஓடும் கனரக வாகனங்களின் இரைச்சல் ரோட்டிற் கேட்டுக் கொண்டிருந்தது. ஏவுகணைகள் சீறிக் கொண்டு போகும் ஒவ்வொரு கணமும் இன்னுமின்னும் நெஞ்சிடி அதிகரித்துக் கொண்டிருந்தது. வீட்டிலுள்ளவர்களின் நினைவுகளும் வந்தது. வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பெரிய வட்டமாக மங்கிய ஒளி ஒன்று தென்பட்டது. வெண்மதி. புகை மூட்டத்தினூடு பூரண சந்திரனைப் பார்க்கும்போது சோகமாயிருந்தது.
அப்போது பக்கத்திலிருந்து, ‘கொர்ர்…கொர்ர்…’ எனச் சத்தம். திரும்பிப் பார்த்தேன். மகேந்திரன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்! தட்டி எழுப்பினேன்.
“என்னடா காவல் பார்க்க விட்டிருக்கு.. நீ குறட்டை விடுகிறாய்?”
“இப்ப பார்த்துக் கொண்டிருந்து என்ன செய்யப்போறம்?” கேள்வியைக் கேட்டுவிட்டு மீண்டும் உறங்கிப் போனான்.
இப்படி ஸ்விச் போட்டது போல சட்டென உறங்கிப் போவது அவனுக்கு ஒரு கொடுப்பினை. இரவு படுக்கும் நேரங்களில், பக்கத்துக் கட்டிலிற் கிடந்தபடி ஏதாவது அவனுடன் பேசிக்கொண்டிருப்பேன். சற்று நேரத்தில் அவனது குறட்டை ஒலியைக் கேட்கலாம். அது சரி.. இந்தப் பதட்டமான நேரத்திலுமா?
“எல்லாப் பிரச்சினைகளையும் மனசில போட்டுக் குழப்பிக் கொண்டு தேவையில்லாமல் தலையைப் போட்டு உடைக்கிறதில என்ன பயன்? நடக்கிறதெல்லாம் நல்லபடி நடக்கும் என்று நம்பிக்கொண்டு எங்கட கடமையைச் செய்ய வேண்டியதுதான்” எனக் கீதோபதேசம் போல, அடிக்கடி சொல்லுவான்.
உண்மைதான். மகேந்திரன் யுத்தத்தின் சத்தங்களைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |