துறவு




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பொருள்களின் மேல் உள்ள ஆசையை வெறுத்தல்
பட்டினத்தார் அருளால் துறந்தவர் பத்தர கிரியார். இவர் துறந்தாலும் தமக்காக ஒரு சிறு ஓடும் நாயும் வைத்திருந்தார். ஒருநாள் பட்டினத் தாரிடம் ஒரு துறவி போய்ப் பிச்சைக்கேட்டார். கேட்டவருக்கு அவர் “எதிர்கோபுரத்தில் ஒருவர் குடும்பத்துடன் இருக்கிறார் அவரிடம் போய்க்கேள்” என்று சொல்லி அனுப்பினார். அனுப்பினவர் எதிர்கோபுரத்தில் உள்ள வரைக் கண்டு அவர் சொல்லியவற்றைச் சொல்லிப் பிச்சைக்கேட்டார். அச்சொற்களைக்கேட்ட பத்தரகிரியார் தம்முடைய சட்டியைப்போட்டு உடைத்தார். நாயையும் அடித்துக் கொன்றார். இவ்விரண்டையும் அழித்ததைக்கண்டு பிச்சைகேட்க வந்தவர் பேசாது திரும்பிப்போனார். பத்தரகிரியாரும் தினம் சுத்தம் செய்து பிறர் எடுத்துக்கொள்வார்களோ என்று கவலையோடு காத்துவந்த சட்டி ஒழிந்ததால் அச்சட்டியைப் பற்றிய கவலையும் நீங்கியது. நாய் பட்டினி இல்லாது உணவு அளிக்கவேண்டுமே என்ற விசாரம் இருந்தது. நாய் ஒழிந்ததால் அந்தக்கவலையும் நீங்கியது. இனி உலகில் எந்த ஆசையும் இல்லை என்று யாவற்றையும் விரைவில் வெறுத்து வாழ்ந்ததால் தம் குருநாதர் முத்தி அடைவதற்கு முன்னே இவர் இறைவன் பாத நிழலை அடைந்தார். இதை சிய வள்ளுவரும் ஒருவன் எந்தப்பொருளில் ஆசையை விட்டானோ அவன் அந்தப்பொருளினால் கவலைப்படுதல் இல்லை என்று கூறியுள்ளார்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
யாதனின் யாதனின் = ஒருவன் எந்தெந்தப் பொருள்களின் ஆசையிலிருந்து
நீங்கியான் = விடுபட்டிருக்கிறானோ
அதனின் அதனின் = அவன் அந்தந்தப் பொருளிலிருந்து
நோதல் = துன்பம் அடைதல்
இலன் = இல்லாதவன் ஆவான்.
கருத்து: ஆசையில்லாது வெறுத்த பொருளைப்பற்றி மக்கள் துன்பப்படுதல் இல்லை.
கேள்வி: மக்கள் எப்பொருளைப்பற்றித் துன்பப்பட மாட்டார்கள்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.