திவ்யாவின் சவால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 5,180 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஹலோ ராம்கோ மில் ஓனர் பிரபு பேசறேன் யார் பேசறது?”

“நான் தயிர்ச் சோறு பேசறேன் யா”

“என்னம்மா ஒரு மாதிரி பேசுறது மாதிரி தோணுது. யார் கிட்டே பேசிறே தெரியுமில்ல…”

“ஓ.. நல்லாவே தெரியும் சார். ஏறக்குறைய மெட்ராசையே கைக்குள்ளே வைத்திருக்கிற பிரதீப் என்ற ஒரே வாரிசின் தகப்பனார், கோடீஸ்வரர் பிரபு தி கிரேட் கிட்டதான் பேசறேன்”

“யாரு அந்த அய்யராத்துப் பொண்ணு திவ்யாவா பேசறது”.

“பரவாயில்லை மாமனாரே. இந்த திவ்யா பிரியதர்சினியை எளிதிலே அடையாளம் கண்டு கொண்டீர்களே”

“பாரு… இன்னும் இந்த தயிர்ச் சோறும் ஊறுகாயும் தவிர உலகத்திலே தின்றுறதுக்கு உண்டான்னு தெரியாத மண்ணாங்கட்டி பொம்மனாட்டிக்கு திமிர் அடங்கலே பாரு…”

“எப்பவும் கோழிக் கறியும் மாடும் தின்னே வளர்ந்த உடம்பு மாமனாரே உங்களுக்கு அதானாலே தான் இவ்வளவு குடா பேசறீங்க. வீணாகக் கோபப்பட்டு ஏன் பிளட் பிரஷரை ஏத்திக்கிக்கிறீங்க? பார்த்தீங்களா… வெறும் தயிர்ச்சோறு தின்று வளர்ந்தாலே உடம்புலே எந்த நோயும் வரலே… எல்லாத்தையும் தின்று போட்டு உடம்பு முழுவதும் நோயாக கட்டி வைத்திருக்கீங்களே… ம்… பேச வந்த விஷயத்தை பேசாம உங்க கிட்டே எதை எதையோ பேசிகிட்டிருக்கேன் பாருங்க….ஏதோ சேலன்ஞ் விட்டீங்களே ஞாபகம் இருக்கா?”

“என்னடி சொல்றே பொட்டைக் கழுதே”

“சும்மாயிருடா…பார்த்தீங்களா நான் மதிப்புக் கொடுத்துப் பேசும் போது நீங்க மதிக்கலேன்னு தெரிஞ்சவுடனே எனக்கு பேச்சு மாறிடுது. கொஞ்ச மதிப்புக் கொடுத்து பேசக் கத்துக்கப்பா”

“ஏய்.. சுண்டைக்காய். வீணாக என் நேரத்தை வீணாக்காதே…விஷயத்தைச் சொல்லு”

“ஹாய் தடி மாடு பிரபு. உன்னோட வாரிசை நான் கடத்திட்டு வந்திருக்கேன்டா. வந்து பார்க்கிறியா?”

“ஏய்…ஒகே திவ்யா… என்னதான் சொல்கிறாய்?”

“அப்படி வாங்க. அன்றைக்குச் சபதம் போட்டீங்களே மாமா. நீ எனக்கு மருமகளாக வரமுடியாதுன்னு”

“இப்பவும் சொல்றேம்மா… மெட்ராஸ்லே எவ்வளவு பணக்காரங்க இருந்த பிறகும் அளவிற்கதிகமாக பணம் இருக்கிற என் மகனைத் தேடி கண்டு பிடிச்சி வெள்ளைத் தோலை காட்டி மயக்கிட்டா… என் வீட்டிற்கு மருமகளா வந்திடலாமனு மனப்பால் குடித்தாயா? அம்மா பொண்ணு ஏன்? மாரிலே கயிறு போட்டிருக்கிற ஒரு ஊறுகாய் புளியஞ் சோறு பையனை காதலிச்சிருக்க கூடாதா?”

“பெரிய மனுஷா… உனக்குக் காதல் தெரியாதுப்பா?”

“காதலாவது கத்தரிக்காயாவது. பொண்ணு நான் நெனைச்சா. ஒரே நாளையிலே உன்னை இந்த உலகத்தை விட்டே அனுப்பியிருக்க முடியும்.. சுண்டைக்காய் பொண்ணுகிட்டே வீணா நேரத்தை பேசிக் கழிக்க வேண்டாம் பிரதீப். எங்கே இப்போ…”

“நான் கடத்திக் கொண்டு என் கஷ்டடியிலே வச்சிருக்கேன்”

“என்னது”

“கடத்தல்னர் எல்லோரும் தூக்கிண்டு போவா. நான் கூட்டிண்டு வந்திருக்கேன். இவ்வளவு தான் வித்தியாசம். என்னவோ பணம் பாதாளம் வரை போகும் அப்படீன்னீங்களே….இப்போ சவால் விடறேன். நீங்கள் சம்மதிக்கா விட்டாலும் இந்த சுண்டைக்காய் தயிர்ச் சோறு பிராமணத்துப் பொண்ணு தான் உங்கள் மருமகள். பிரதீப்போட மனைவி என்பதை மறந்து விடாதீர்கள்”

“திவ்யா எங்கேயிருந்து பேசறே”

“எதற்கு… என்னைப் பரலோகம் அனுப்பவா?”

“அடச்சீ, என்னடி சொன்னே”

“பாரு…திரும்பவும் மரியாதை குறையுது”

“எப்படி நீங்கள் நான் மருமகளாக. முடியாதுன்னு சவால் விட்டீங்களோ…அதே மாதிரி நான் இப்போ சவால் விடுறேன். நாளைக் காலை பத்தரை மணிக்கு எனக்கும் பிரதீப்புக்கும் வடபழனி முருகன் கோயிலிலே கல்யாணம். வந்து முடிஞ்சா ஆசீர்வாதம் பண்ணுங்கோ”

“அடப் போய்யா”.


மறுநாள் காலை ஐந்து மணிக்கே பிரதீப்பை அழைத்துக் கொண்டு தன் வீட்டின் அருகில் இருந்த முருகன் கோயிலை திவ்யாவும் தோழிகளும் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

“புரோகிதர் இன்னும் வரமில்லையே” என்றாள் திவ்யாவின் தோழி புவனா.

“பரவாயில்வை. நம்ம கோவில் பூசாரியைக் கூட்டிட்டு வா. எப்ப வேணுமானாலும் பிரதீப்போட அப்பா கும்பல் வரலாம். சீக்கிரம்” என்றவாறு புவனாவை விரட்டினாள் திவ்யா.

பூசாரி வேகமாக வர பட்டு வேட்டிச் சட்டையில் வந்த பிரதீப்பை அழைத்து கையில் இருந்த மாலையை கொடுத்து அணிவிக்க சொன்னாள் புவனா.

திவ்யா பூசாரிக்கு முன்னால் நின்று மாலையை பிரதீப்பிற்கு போட பிரதீப் திவ்யாவிற்கு மாலை போட்டான். “பூசாரி ஐயா இந்த தாலியை முருகன் சன்னிதானத்திலே வைத்து எடுங்கள்” என்று திவ்யா கூறும் போது, “வெரி குட் தயிர்ச் சோறு. என்னை வட பழனிக்கு டைவர்ட் பண்ணி விட்டு இங்கே என் மகனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்தாயா? என்றவாறு கையில் பிஸ்டலுடன் தன் பரிவாரத்தோடு வந்தார் பிரபு.

“பூசாரி ஐயா சீக்கிரம் தாலியைக் கொடுங்க. பிரதீப் சார் திவ்யா கழுத்திலே கட்டுங்க” என்று கத்தினாள் புவனா.

“யாரது… வீணாக என் பிஸ்டலுக்கு வேலை கொடுக்க விரும்புறது. ஒதுங்குடி… பூசாரி ஒழுங்கா ஓடிப் போ… பிரதீப் வா வீட்டுக்கு போகலாம்” என்று பிரபு முன்னேறி வர, வேகமாக பிரதீப் கையை பிடித்து இழுத்து வந்து “மாமா எங்களை ஆசீர்வதியுங்கள். இப்படியெல்லாம் செய்வீர்கள் என்று தெரிந்து தான் நாங்கள் நேற்றே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டு நேற்று இரவு வட பழனி முருகன் கோயிலிலே தாலியும் கட்டிக் கொண்டோம் பாருங்க” என்று தாலியை எடுத்துக் காட்டியவள், “இந்தத் தயிர்ச் சோற்றுக்கு கொஞ்சம் மூளை அதிகமாகவே வேலை செய்யும். ஆசீர்வாதம் பண்ணுகிறீர்களா?” என்றாள்.

பிரபு திகைத்துப் போய் நின்றார் துப்பாக்கியை கீழே போட்டபடி.

– ஞாயிறு மலர், மராத்திய முரசு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *