திறப்பு விழா




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொழும்பில் அந்தச் சிறிய ‘லொட்ஜ்’ திறக்கப்பட்டு சில மாதங்கள் கடந்துவிட்டன். அதன் உரிமையாளரான தர்மபாலன் கொழும்பில் இன்று தமிழ் வர்த்தகப் புள்ளி களில் ஒருவனாகி விட்டான். இளைஞனான அவனுக்கு ஒரு புடைவைக் கடையும் சொந்தமாக இருக்கிறது. நகைக் கடையொன்றிலும் பங்கிருக்கிறது. நகை, புடைவை வியாபாரம் சம்பந்தமாக அவன் அடிக்கடி சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொங் எனப் பறந்து திரிவான்.
அவனது மூத்த சகோதரியின் கணவர்தான் நந்தன். வயது நாற்பத்தொன்று. மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை. ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மனேஜராகப் பல வருடங்களாக வேலை பார்த்தவன். நிறையச் சம்பளம். இலாபங்கள் கிடைத்தன. மிகுந்த செலவாளி. இரவு எட்டு, ஒன்பது மணிவரைகூட வேலைகளைக் கவனிப்பான். பின்னர் மதுவில் மூழ்கித்தான் நித்திரைக்குப் போவது வழக்கமாகி வந்தது. நண்பர்களும் அதிகம். எவ்வளவு பணம் கிடைத்தாலும் மிச்சம் பிடிக்கத் தெரியாத பேர்வழி. வேலையில் நேர்மை இருந்தது. இளகிய மனம்…! இவனது நடவடிக்கைகள் காலப்போக்கில் நிறுவனத்தின் உரிமையாளருக்குப் பிடிக்காததால் இருவருக்குமிடையில் முரண்பாடுகள் முற்றின. வேலையைத் தூக்கியெறிந்து விட்டுப் புறப்பட்டுவிட்டான்.
மைத்துனர் வேலையிழந்ததை அறிந்த தர்மபாலன், அவனை அழைத்து தனது ‘லொட்ஜை’ கவனிக்கும்படி விட்டுவிட்டு தனது வியாபாரப் பயணங்களில் கவனஞ்செலுத்தி வந்தான்.
அந்த ‘லொட்ஜ்’க்கு ஒரு நாள் மாலை வந்துசேர்ந்தாள் ஸ்ரீதேவி. தூரத்து முறையிலான சிறிய தகப்பன் ஒருவருடன் வந்து ‘றூம்’ எடுத்துத் தங்கினாள். மறுநாள் அந்த மனுஷன், தான் வேலைக்குப் போகவேண்டுமெனக் கூறி ஹட்ட னுக்குப் பயணமாகிவிட்டார். அவர் தலவாக்கொல்லை தோட்டத்துப் பாட்சாலையொன்றில் ஆசிரியராம். அவர் போகும்போது மனேஜரான நந்தனிடம், ‘தம்பி… பிள்ளை கலியாணம் முற்றாகி ‘பாரிசு’க்குப் போக வந்திருக்குது… மாப்பிளைப்பெடியன் அங்கயிருந்து பிரயாண ஒழுங்குகள் செய்திருக்கிறான்… போகுமட்டும் கொஞ்ச நாள் இஞ்ச தங்கட்டும்… காசு தருவா பிள்ளை….. நான் வேலைக்குப் போக வேணும்.. பாத்துக் கொள்ளும்.. தம்பி…… ‘ என்று சொல்லிவிட்டுப் போனவர் பின்னர் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
‘லொட்ஜி’ல் வேலை அதிகமில்லையாததால் நந்தன் நண்பர்களுடன் பகலிலும் வெளியில் சென்று மது அருந்தத் தொடங்கி விட்டான். அவனோடு நல்லபடி பழகுவது போல நடித்த ஸ்ரீதேவியிடம் ‘லொட்ஜை’ப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டே அவன் வெளியே செல்வான். ‘லொட்ஜி’ல் மலையகத்துப் பையன் ஒருவனும் உதவிக்கு நின்றான்.’லொட்ஜி’ன் கீழ் தளத்தின் முன் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள்ளிருந்து ஸ்ரீதேவி நிர்வாகம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
ஓரளவு போதையில் வரும் நந்தனை அணைத்துச் சென்று அறையில் தூங்கவைப்பாள். சாப்பாடு எடுப்பித்துக் கொடுப்பாள். அவன் வேண்டாம் என்றாலும் ‘சாப்பிடுங்கோ…’என மனைவி போலப் பரிவாக ஊட்டி விடவும் தொடங்கினாள்…
அவன் லொட்ஜில் இல்லாத வேளையில் ‘பாரிசு’ க்குத் தொலை பேசி எடுத்துக் கதைப்பாள். பாரிசிலிருந்து குணரெத்தினம் தனது மனைவியாக வரவிருப்பவள் பற்றி கற்பனையில் மிதந்தவாறு கதைப்பான். அவனுக்கும் சில பிரச்சினைகள் இருந்தன… பாரிஸ் வந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் நிரந்தர விசா கிடைக்கவில்லை… ஆனாலும் இரவுபகல் பாராமல் பலவிதமாக உழைத்து ஊருக்கு நிறையப் பணம் அனுப்பியிருந்தான். பெற்றோர் ஒழுங்குசெய்த திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்துப் பெண்ணைப் பாரிசுக்கு அழைக்கவும் ‘ஏஜன்சி’யை ஒழுங்கு செய்திருந்தான்.
பெண் நல்லெண்ணெய்க் கறுப்பு என்றாலும் கவர்ச்சி யிருந்தது. வயது இருபத்தினான்கு கடந்துவிட்டது. அவனுக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டதே…!
அடிக்கடி குணமும் கொழும்பில் லொட்ஜிற்கு தொலைபேசி எடுத்து மணிக்கணக்கில் கதைப்பதில் அதிக பணத்தை வீணடிக்க வேண்டியிருந்தது. ஸ்ரீதேவியின் வேண்டுகோளின்படி இப்போது அவன் தொலைபேசி எடுப்பது குறைவு. அவள்தான் அடிக்கடி ‘லொட்ஜ்’ தொலைபேசியில் நீண்டநேரம் பேசுவது வழக்கமாகி விட்டது.
இரவுவேளையில் போதையில் வரும்போது இன்னு மொரு போத்தலும் கையில் கொண்டுவருவான் நந்தன்..! அறையிலிருந்து அவன் குடிக்கும்போது, இவள் எடுப்பித்த சாப்பாட்டிலிருந்து இறைச்சித் துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டிவிடுவாள். தனது அறையில் தனியாகப் படுத்திருக்கப் பயமாகவிருக்கிறதென்ற சாட்டில் அவனது அறையில் வந்து படுத்தவள் பின்பு மனைவி போன்று இரவில் அவன் அறையில் ஒன்றாகத் தங்கிவிடுவாள்…!
நந்தனின் அணைப்பிலிருந்தவாறே பாரிசிலிருக்கும் குணத்துடன்… ‘என்னங்க… எப்ப என்னை கூப்பிடப் போறிங்க….. இஞ்ச எத்தனை நாள்… உங்களை நினைச்ச படியே இருக்கிறது….. உங்களிட்ட வந்தாத்தான் எனக்கு நிம்மதி…’ என்று சிணுங்குவாள். அப்போது ‘அழாதேயடி ராசாத்தி…… என நந்தன் அவளை மர்மமாகக் கிள்ளுவான். இப்படி நான்கு மாதங்கள் ஓடிவிட்டன… லொட்ஜின் வருமானத்தையே அவள் உறிஞ்சிவிட்டாள். நந்தனும் எல்லாப் போதையாலும் உருக்குலைந்து கொண்டே…
ஏஜென்சிக்காரனின் ஏற்பாட்டின்படி ஒரு சிலருடன் சேர்ந்து அவள் சிங்கப்பூர் வந்து, பின்னர் அங்கு மலேசியா விசா பெற்று கோலாலம்பூர் வந்து சேர்ந்தாள்.
கோலாலம்பூர் புறநகர் பகுதியில் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் ஒன்பதாம் மாடியில் ஒரு வீட்டில் ஆறு பெடியன்களுடன் மூன்று பெண்களென ஏஜன்சிக்காரனின் ஏற்பாட்டில் தங்கியிருந்தனர். அந்த மூன்று பெண்களில் ஸ்ரீதேவிக்கு மட்டும் சிறப்புச் சலுகை தான்..! மற்றவர்கள் எல்லோரும் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு இருப்பினும்.ஸ்ரீதேவி…… கொழும்பில் தேடிக்கொண்ட பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டே புறப்பட்ட வளாச்சே……!
பாரிசிலிருந்து குணத்தின் ஏற்பாட்டின்படி ஸ்ரீதேவிக்கென ‘அட்வான்சாக இரண்டு இலட்சம் ரூபா கொழும்பில் ஏஜன்சிக்காரரின் பினாமியிடம் கொடுக்கப் பட்டது. மிகுதி பாரிசுக்கு ஸ்ரீதேவி வந்து சேர்ந்ததும் தந்துவிடுவதாக பாரிசிலிருக்கும் ஏஜன்சிக்காரரின் மைத்துனர் மூலமாக ஏற்பாடு….!
பாரிசுக்கும் இலண்டனுக்கும் கனடாவுக்குமென அங்கு தங்கியுள்ளோர் கனவுகள் பல சுமந்து காத்திருக்கின் றனர். அங்குள்ள இருபது வயது இளைஞன் மீது ஸ்ரீதேவிக்கு ஒரு கண்…! அவனது உயரம், கவர்ச்சித் தோற்றம் எல்லாம் அவளை என்னவோ செய்தது…..
அந்த வீட்டின் நடு ஹோலில் இளைஞர்கள் ஆறுபேரும் உறங்குவர். ஒரு அறையில் பெண்கள்… முறை வைத்து எல்லோரும் மாறி மாறி சமைத்துச் சாப்பிடுவார்கள். ஏஜன்சிக்காரன் ஹோட்டலில் தங்கியிருப்பார். இடைக் கிடை வந்து பார்த்து சமையலுக்குரிய பொருட்கள் வாங்கப் பணம் கொடுத்துச் செல்வார்.
அறையில் புழுக்கமாக இருக்கிறதென்று, ஸ்ரீதேவி குசினிக்குள் நல்ல காற்றோட்டமென அதற்குள் தனது படுக்கையை வைத்துக் கொண்டாள். தான் சமைக்கும் போது வாட்டசாட்டமான அந்த இளைஞன் இலிங்க நாதனுக்கு ‘சாப்பிடுங்கோ தம்பி… …’ எனக் கூறி உபசரிப்பாள். அவனும் ‘அக்கா.. அக்கா…’ எனக்கூறி வழியத் தொடங்கினான்… ஒரு சில நாட்களில் அவனை யும் இரகசியமாக இரவுவேளை குசினிக்குள் அழைத்துக் கொண்டாள். இந்த ‘விளையாட்டு’ மற்ற இளைஞர் களுக்கும் சாடைமாடையாகத் தெரியத் தொடங்கி விட்டது. இதனை ஏஜன்சிகாரனுக்கும் பற்ற வைத்து விட்டார்கள். மறுநாள் ஏஜன்சிக்காரன் வந்து இலிங்க நாதனைக் காரில் கூட்டிச்சென்று காட்டுப்பகுதி யொன்றில் அவனை இறக்கிவிட்டு விபரம் கேட்டான். இலிங்கநாதன் அப்படி ஒன்றுமில்லையென மறுத்தான். ‘இரண்டு அடி’ கையாலும் காலாலும் விழுந்தது. உடுப்புகளைக் கழற்றடா…’ என நிர்வாணமாக விடப் பட்டான். கார் சென்றுவிட்டது. இலிங்கநாதன் நிர்வாண மாக பற்றை ஒன்றிற்குள் ‘மறைந்துகொண்டான். பிற்பகல் மூன்றரை மணிக்கு விடப்பட்டவனை ஏழரை மணி யளவில் வந்து உடைகளைக் கொடுத்து ஏஜன்சிக்காரன் கூட்டிச்சென்று, வீட்டில் ஒழுங்காக இருக்க வேண்டு மெனச் சொல்லி விட்டுவிட்டான்.
ஏஜன்சிக்காரன் நடராஜன் ‘பாஸ்போர்ட்’ மற்றும் அலுவல் எனக் கூறி ஸ்ரீதேவியைக் கூட்டிச்சென்றான். ஒரு உணவகத்தில் புகுந்து உணவருந்தினர். நடராஜனின் ஊரில் தனக்கும் நெருங்கிய உறவினர் உண்டென்றும் அந்த வகையில் நடராஜன் தனக்குக் கிட்டிய உறவினர் என்றும் ஸ்ரீதேவி புதிய ‘புராணம்’ ஒன்றைத் தொடங்கினாள்.
ஏஜன்சி நடராஜனுக்கு விளக்கம் அதிகம். இவளைப் போல எத்தனை பேரை அவன் நாடுநாடாகக் கொண்டு சென்றவன்…… ‘அங்க வீட்டில தங்க வசதி குறைவு. நீ.. ஹோட்டலில் தங்கலாம்… ‘ என ஸ்ரீதேவியை அழைத்துச் சென்றான். அங்கு ஹோட்டலில் நடராஜனுடன் அறை யில் ஒன்றாகத் தங்கினாள். பகல் நேரத்தில் அந்த ‘அப்பாட் மென்ட்’ வீட்டிலும் இரவில் நடராஜனுடன் ஹோட்ட லிலுமாகச் சில நாட்கள்… …
ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அங்கிருந்து ஒரு குழுவுடன் சேர்ந்து ஸ்ரீதேவி அனுப்பப்பட்டாள். ஈரான், துருக்கி வழியாக ஒரு மாதப் பயணத்தின் பின் பாரிஸ் வந்து சேர்ந்தாள். அந்தக் குழுவில் வந்த எல்லோரும் ஸ்ரீதேவிக்கு மரியாதை…! ஏனெனில், ‘நடராஜன் என்ர கிட்டிய சொந்தக்காரர்..’என்ற ஸ்ரீதேவியின் வெருட்டல்… இலிங்க நாதனுடன் மட்டும் அன்பாகப் பேசிக் கொள்வாள்… வாட்டசாட்டமாகக் கவர்ச்சி நாயகனாகப் புறப்பட்ட லிங்கநாதன் இப்போது மலேரியாக் காய்ச்சலால் தொடர்ந்து வாட்டப்பட்டவன் போன்ற தோற்றத்தில் தான் வந்து சேர்ந்துள்ளான்..!
இலிங்கநாதனின் மூத்த சகோதரர்கள் இருவர் இருபது வருடங்களுக்கு மேலாக இலண்டனில் இருக்கின்றனர். நல்ல வசதிகளுடன்… …! ஏஜன்சி நடராஜனின் பினாமி யிடம் இலண்டனில் அவர்கள் நிறையப் பணம் கொடுத்து இலிங்கநாதனை விரைவில் இலண்டனுக்கு அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
பாரிசுக்கு ஸ்ரீதேவி வந்ததும், குணம் அவளுக்குரிய மிகுதிப் பணத்தை நடராஜனிடம் உடன் கொடுக்க முடிய வில்லை… சீட்டு எடுத்துக் கொடுக்க முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை… ஸ்ரீதேவி பாரிஸ் புறநகர் பகுதியில் நடராஜன் ஒழுங்கு செய்த இடத்தில் மற்றவர்களுடனேயே தங்கியிருந்தாள்..
இலிங்கநாதனும் மற்றும் ஒருவரும் இலண்டனுக்கு இரயில் மூலம் செல்ல ஏற்பாடு..! இலிங்கநாதன் மூலமாக இலண்டனிலிருந்து அதிக பணம் பெற்றுவிட்ட ஸ்ரீதேவி, தன்னையும் உடன் இலண்டனுக்கு அனுப்புமாறும் முழுப் பணமும் தான் உடன் தருவதாகவும் கூறிப் பணத்தினை நடராஜனிடம் கொடுத்தாள்.
நடராஜனுக்குத் திகைப்பு…! ‘இவளிடம் ஏது இவ்வளவு பணம்?’ அவனால் ஊகிக்க முடிந்தது… அவனுக்கென்ன.. பணம் வந்தால் சரிதானே…!
ஸ்ரீதேவி, இலிங்கநாதன், மற்றும் ஒருவர் இரயிலில் இலண்டனை நோக்கி.. அவர்களது படத்துடன்கூடிய மலேசியப் பாஸ்போட்டில் பிரயாணம் தடங்கலின்றி…….. பாரிசில் குணம்… ஏக்க வாய்வு பிடித்தவன் மாதிரி. ‘நிரந்தர விசா இல்லை…வீட்டுக்காரர் ஊரிலிருந்து பேசியனுப்பிய பொம்பிளை… எவ்வளவு செலவு வைச்சுப் போட்டு இப்பிடிப் பறந்திட்டாள்……’ எனப் பிதற்றியவாறு விஸ்கிப் போத்தலுடன் குடித்தனமாகி விட்டான்…….!
இலண்டனில் அகதி அந்தஸ்தும் பெற்று, தன்னிலும் நான்கு வயது குறைந்த இலிங்கநாதன் வீட்டில் சொகுசு களுடன் ஸ்ரீதேவி…… மாதாமாதம் இலங்கையிலிருக்கும் பெற்றோருக்கும் காசு அனுப்புகின்றாள்…! ‘இரண்டு வேலை’ என்று இரவு பகல் பாராது ஆலாய்ப் பறக்கின்றான் இலிங்கநாதன்…!
விரைவில் “தேவி ரெக்ஸ்ரைல்ஸ்” திறப்புவிழா இலண்டனில் சிறப்புற நடைபெறவுள்ளது. ஒன்பது வயதுச் சிறுமியொருவரின் நடன அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள இலண்டன் வரும் பிரபல தமிழக சினிமா நடிகை ஒருவர் இத்திறப்பு விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.