சிறுகதைத் திறனாய்வுக் கட்டுரை

 

From: Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>
Sent: Thursday, June 3, 2021 11:50 PM
To: sirukathaigal@outlook.com
Subject: Fw: Story Review Article – 2021

வணக்கம்

திறனாய்வுப் போட்டி முடிவுகளைச் சிறப்பாக வெளியிட்டமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதல் 3 பரிசுகள் பெற்ற கட்டுரைகளை இத்துடன் இணைத்திருக்கின்றேன். சிறுகதைத் திறனாய்வுக் கட்டுரை எப்படி எழுதலாம் என்பதற்கு இவை உதாரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.விரும்பினால் பிரசுரிக்கலாம்.

அன்புடன்

குரு அரவிந்தன்

தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

அன்புடன்

குரு அரவிந்தன்

……………………………………..

சிறுகதைதிறனாய்வுப்போட்டி – 2021

பரிசுபெற்றமுதல் 5 கட்டுரைகள்.


(குருஅரவிந்தன்வாசகர்வட்டம்நடத்தியசிறுகதை, நாவல்திறனாய்வுப்போட்டி – 2021 இல் 14 நாடுகளில்இருந்துவந்தநூற்றுக்குமேற்பட்டதிறனாய்வுக்கட்டுரைகளில்இருந்துதெரிவாகிமுதலாவதுபரிசுபெற்றதிறனாய்வுக்கட்டுரை.)

எழுத்தாளர்குருஅரவிந்தன்சிறுகதைகள்ஓர்அலசல்

த. நரேஸ்நியூட்டன், கழுபோவிலை, இலங்கை.

அறிமுகம்

தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக்கல்லூரி, மற்றும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளவர். நான் படித்த இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் சில சிறுகதைகளை தேர்வுசெய்து அவைசார்பான எனது ஆய்வை சமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவு பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.

சிறுகதைகள், நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் போன்ற பல்வேறு படைப்புக்களை தனக்கேயுரிய பாணியில் வாசகர் மனமறிந்து வழங்குவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறலாம். இவர் பல்வேறு வகையான படைப்புக்களை வழங்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்தாலும் இக்கட்டுரை இவரது சிறுகதைளின் நான்கை மட்டுமே ஆய்வு செய்வதாக அமைகிறது. ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்பதற்கான ஒழுங்குமுறைகள் பல இலக்கிய கர்த்தாக்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்து அவற்றை பின்பற்றி எழுதுகின்ற ஆற்றலை சிறப்பாக வளர்த்து வைத்திருக்கின்றார் என்பது இவரது ஒவ்வொரு சிறுகதையிலும் இளையோடிப் போயிருக்கும் கதையெழுதும் முறைமையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த திறனாய்வுக்காக “இதுதான் பாசம் என்பதா”, “ரோசக்காரி”, “அவளுக்கு ஒரு கடிதம்” மற்றும் “தங்கையின் அழகிய சிநேகிதி” என்ற நான்கு சிறுகதைகளை இவரது வெவ்வேறு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்திருக்கிறேன்.

பொதுவாக குரு அரவிந்தன் அவர்கள் இந்த நான்கு சிறுகதைகளிலும் ஒரு சிறுகதைக்குரித்தான பொதுவான அம்சங்களை சரியாக பின்பற்றி சிறுகதை எழுதுவதில் தனக்கு இருக்கும் ஆற்றலை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார். புலம் பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வரும் இவர் அங்கு வாழ்ந்தாலும் தனது கதைகளில் தான் பிறந்த தாய் மண்ணின் வாசனையை மிகத்தத்ரூபமாக உள்ளே அசைபோட வைத்திருப்பதை ஒவ்வொரு கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

கதைகளின்சுருக்கம்

“இது தான் பாசம் என்பதா” என்ற சிறுகதை ஒரு குடும்பச் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதையாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையில் மகளுடைய வருமானத்தில் தங்கி வாழும் குடும்பத்தின் நிலைமை முன்வைக்கப்படுகிறது. பெண் கதாபாத்திரமாகிய மகளுக்கு திருமணம் பேசப்படுகிறது. அவளது தந்தை அவள் திருமணமாகி சென்றால் குடும்பச்சுமையை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்ற ஆதங்கத்தால் அவளுடைய திருமணத்தில் அவளுக்கு தெரியாமலே தடையாக இருக்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை காலம் கடந்து ஏதேச்சையான ஒரு சூழலில் அறிந்துகொண்ட மகள் தானே நிலைமையை உணர்ந்து திருமணத்தை தானாகவே முன்வந்து தள்ளி வைத்து தனது பாசத்தை வெளிக்காட்டும் நிலைமை. இதனை புரிந்துகொண்ட தந்தையின் பாசத் தவிப்பு என்று அவர்களுக்குள் இருந்த பாசத் தவிப்பையும் பாசப்போராட்டத்தையும் மிகவும் சாதுரியமாக கதையிலே வெளிக்கொணர்ந்திருக்கிறார் கதாசிரியர்.

அடுத்த கதையாகிய “ரோசக்காரி” என்ற சிறுகதையில் பொறியியல் படித்த பட்டதாரிப்பெண் திருமணம் செய்து கணவனுடன் வாழ்ந்துவருகிறாள். பட்டம் பெற்ற இவள் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். கணவன் எவ்வளவு தடவை அவளது படிப்புக்கு பொருத்தமான வேலையை தேடி செய்யும்படி கூறியும் அவள் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இறுதியில் அவளுடைய தந்தையின் ஆலோசனையின்படி கணவன் அவளது ரோசத்தை தூண்டிவிடும்படியான செயற்பாட்டில் ஈடுபட்டார். இது வெற்றியளித்ததா? அவள் வேலைக்குச்சென்றாளா இல்லையா என்பதை கூறுவதே கதை.

மூன்றாவது கதை “அவளுக்கு ஒரு கடிதம்” என்பது. இந்தக் கதையில் கல்லூhயில் கல்விகற்கும் மாணவன் அவனுடன் கற்கும் சக மாணவியை நீண்ட நாட்களாகவே தனது காதலுக்குரியவளாக மனதில் இருத்தி வைத்திருக்கிறான். கல்லூரி நாட்கள் நிறைவை அண்மித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது தனது காதலை அவளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என் முடிவு செய்கிறான். அவனது நண்பர்களும் உந்துதலளிக்கவே அடுத்து வந்த காதலர் தினத்தை அவளுக்கு தெரியப்படுத்தும் நாளாக குறிவைக்கிறான். அந்த நாள் வரவே நேரடியாக கூற தயக்கப்பட்டு ஒரு வாழ்த்து அட்டையில் தனது காதலை தெரிவித்து அவளிடம் கொடுத்து விடுகிறான். அவளும் அவன் அந்த அட்டையில் குறிப்பிட்டிருந்தபடி அவனைப்பார்த்து புன்முறுவல்செய்து அதனை ஏற்றுகொண்டது போல் காண்பித்தாலும் மறுநாள் அதிபரிடமிருந்து அவனுக்கு விசாரணைக்கான அழைப்பு வருகிறது. விசாரிக்கவும்படுகிறான். ஏன் இப்படி செய்தாய் என அவளிடம் கேட்டுவிட கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி அவளைத் தேடி செல்கிறான். அவளை சந்தித்து கேட்டானா? அவனது காதல் வெற்றி பெற்றதா? என்பதை கூறுவதே மிகுதிக்கதை.

இறுதியாக இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நான்காவது கதை “தங்கையின் அழகிய சிநேகிதி” என்பது. இந்தக்கதையில் அண்ணன் தங்கை இருவருக்கிடையிலான அவ்வப்போது ஏற்படகின்ற சிறிய சிறிய செல்லச் சண்டைகள். தங்கையின் சிநேகிதி ஒருவர் அவர்களுடைய வீட்டிற்கு வந்தபோது ஏதேச்சையாக அவளை காண்கிறான் அண்ணன். அந்தக் கணமே அவளது அழகில் மயங்கி தன்னகத்தே காதல் வயப்படுகிறான். சிநேகிதிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடாகியிருக்கிறது ஆனால் அவளுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. அப்படியாயின் அந்த சிநேகிதியின் மனதில் இருந்தது என்ன? தங்கைக்கும் அண்ணனுக்கும் இடையில் நடந்த சண்டைகள் எவ்வளவு ஆழமாக தங்கையின் மனதில் பதிந்திருந்தால் அவள் அந்த உண்மையை தனக்குள் புதைத்துவைத்திருப்பாள். அண்ணனின் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதை மிகவும் சாதாரணமாக காரண காரியங்களுடன் இந்தக் கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர்.

கதைத்தலைப்புக்கள்

இவர் எழுதுகின்ற ஒவ்வொரு கதைகளையும் எடுத்து நோக்கும் போது சிறுகதை எழுதுவது எப்படி என்பது பற்றி பல எழுத்தாளர்கள் குறிப்பிடுவதுபோல் கதைத்தலைப்பிலிருந்தே கதையின் உட்கருப்பொருளை உணரக்கூடியதாகவும் அந்தக் கதைகளை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாகவும் கதையின் தலைப்புக்கள் மிகச் சிறப்பானதாகவும் பொருத்தமுடையதாகவும் ஒவ்வொரு கதைக்கும் தேர்வு செய்து சூட்டியிருக்கிறார். சில எழுத்தாளர்களின் சிறுகதையில் அவர்களது கதையின் கருப்பொருளுக்கும் கதைத் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் தலைப்பிடுவார்கள். ஆனால் இவருடைய கதைகளில் அப்படி ஒரு நிலைமையை காணமுடியவி;ல்லை. கதைத் தலைப்புக்கள் கதையின் இறுதிவரை நினைவில் நிற்கும்படியாக ஒவ்வொரு கதையின் கருவுடனும் பின்னிப் பிணைந்து இறுதிவரை நகர்கிறது.

கதைக்கருவும்உள்ளடக்கஅளவும்

வாழ்க்கை பற்றிய போதாமைகளைச் சொல்வது சிறுகதை என்பது ஒரு அறிஞரின் கருத்து அதேபோல சிறுகதைகள் அநேகமாக வாழ்கையோடு ஒன்றித்துப்போகும் பல விடயங்களை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. சமூகம், கலை, கலாசர விழுமியங்கள், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றின் உள்ளார்ந்த நிலைமைகள் காலவோட்டத்தில் மாறுபடுகின்றபோது பழமை மற்றும் புதுமை என்கின்ற மாறுதல்கள் தோற்றம் பெறுகிறது. இந்த மாறுதல்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மனித வாழ்வியல் முறைமைகளிலும் பாரிய மாறுதல்களை ஏற்படுத்த விளைகின்றன. இந்த இடத்திலேதான் சிறுகதைகள் முன்நிலைபெறுகின்றன. சிறுகதைகள் மூலமாக அந்தந்த கால சூழ்நிலைகளை மையப்படுத்தி மாறுதல்களினால் ஏற்படும் பல்வேறு விதமான உள்ளக்குமுறல்களை வெளிக்கொணர்வதற்கு இவை களம் அமைத்துக்கொடுக்கின்றன. இந்த வகையில் எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூக வாழ்வியல் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகம் சார் பல்வேறு விடயங்களை வெளிக்கொணரும் வகையில் கதைக்கருவைக்கொண்டவையாக தோன்றுகின்றன.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் அவற்றை நன்கு உணரக்கூடியதாக இருக்கிறது. இவருடைய இந்த நான்கு கதைகள் மட்டுமன்றி மற்றய கதைகள்கூட அவ்வாறேதான் எழுதப்பட்டிருக்கின்றன.

இதுதான் பாசம் என்பதா என்ற இந்த ஆய்வின் முதற் கதையில் மிகவும் வசதி குன்றிய குடும்பத்தில் மகளின் வருமானத்தை நம்பியே வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் தந்தை மகள் திருமணமானால் எதிர்கால வாழ்வாதார நிலை என்னவாகும் என்ற தவிப்பில் இருக்க அந்த இடத்தில் மகளுடைய பாசம் எத்தகையது என்பதை வெளிக்கொணர்கிறார். இவ்வாறான சூழலில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முன்மாதிரிகையான அறைகூவலாக தனது கதையெழுதும் பாங்கின் மூலம் முன்வைத்திருக்கிறார் அரவிந்தன். அதுமட்டுமன்றி ஒரு குடும்பத்தினுடைய சுமையை முழுமையாக ஒரு பெண்ணாலும் கூட சுமக்க முடியும் என்பதையும் அதற்கு இந்தக் கதையில் வரும் மூத்த மகள் பாத்திரத்தை சிறந்த உதாரணமாக கையாண்டிருக்கிறார்.

இரண்டாவது கதையாகிய ரோசக்காரி என்ற கதையில் பெண்மை என்பது அமைதியாக இருப்பது மட்டுமல்ல அவளுக்குள்ளும் ரோசம் கோபம் போன்றவை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தனது ரோசம் கோபம் போன்றவற்றையும் வெளிக்கொணர்வாள் என்பதையும் அவளாலும் சாதனைகளை நிலைநாட்ட முடியும் என்பதையும் கதாசிரியர் வெளிப்படுத்துகிறார். அத்தோடு ஒரு கணவன் தனது மனைவியை சமூகத்தில் ஒரு அந்தஸ்துடைய சாதனைகளை நிலை நிறுத்தும் பெண்ணாக வெளிக்கொணர எத்தகைய ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பதையும் இந்த கதையில் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

அவளுக்கு ஒரு கடிதம் கதையிலே இன்றைய சமூகத்தில் சாதாரணமாக பாடசாலைகளில் நிகழும் காதல் முன்மொழிவை எடுத்து முன்வைத்து அதன்மூலம் காதலிப்பது தப்பில்லை ஆனால் காலகாலத்துக்கும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான சரியான மற்றும் உறுதியான அடித்தளத்தை இடுவதில் அக்கறைகாட்டி அதனை முன்னுரிமைப்படுத்துவது எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாசூக்காக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

அடுத்த கதையாகிய தங்கையின் அழகிய சிநேகிதி மூலமாக சமூகத்தில் பல குடும்பங்களில் உண்மையாகவே நிகழ்கின்ற சகோதரர்களுக்கிடையிலான சிறிய சிறய முரண்பாடுகளை புடம்போட்டுக் காட்டியிருக்கிறார். அதனைக் காட்டுவதன் மூலமாக இவ்வாறான சிறிய சண்டைகள் மற்றும் முரண்பாடுகள் அடிமனதில் ஆழமாக பதிந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பையோ இழப்புகளையோ கூட பொருட்படுத்தாமல் பழிவாங்கும் சூழலை உருவாக்கிவிடுகிறது என்பதை அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறார். நெருக்கமான உறவுகளுக்கிடையிலும் வெவ்வேறு கராணங்களின் நிமித்தம் பழிவாங்கும் மனப்பாங்கு ஏற்படாமலில்லை என்பதையும் இக்கதை மூலமாக ஒரு எச்சரிக்கையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த ஒவ்வொரு கதைகளும் அவர் கூறவந்த குறிப்பிட்ட கருப்பொருளை தாண்டி அவசியமற்ற விடயங்களுக்குள் நுளைந்துவிடாது மிக கவனமாக கதைகளை நகர்த்திச்சென்றிருக்கின்ற கதையின்போக்கு மெய்சப்படவேண்டியதே. கதைக் கருவில் எந்தவொரு இடத்திலும் தொய்வோ சலனமோ காணப்படவில்லை என்பது இன்னும் கதையின் போக்கிற்கு வலுச் சேர்கிறது. ஒவ்வொரு கதையிலும் கதையினுடைய வேகம் பொருத்தமான சீரில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக கதை தனது உச்சக்கட்டத்தை நோக்கி செல்லும்படியாக அடுத்து வரக்கூடிய காட்சிகளை தொடர்ச்சியான ஒரு கோர்வையாக ஒழுங்குபடுத்தியிருக்கிறார். இவற்றோடு ஒவ்வொரு கதையிலும் மிகப்பொருத்தமான இடத்திலே எதிர்பாராத ஒரு ஆச்சரியத்தை (ருவிஸ்ற்) கொடுத்து வாசகர் மனதில் அக்கதையை படிக்க ஆரம்பித்தபோது இருந்த கதைப்போக்கு கருப்பொருள் பற்றிய அவர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பில் திடீர் மாற்றத்தை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி கதையை தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடுகிறார்.

கதையினுடைய உள்ளடக்கம் அதாவது நீட்சியை அநேகமாக ஒவ்வொரு கதாசிரியர்களும் தங்கள் கதைக்கேற்ப தாமே வகுத்துக்கொள்வதுண்டு. ஆனால் பொதுவாக ஒரு சிறுகதையானது 5 முதல் 7 (யு 4) பக்கங்களுக்குள் அடக்கப்படவேண்டும் என்பது சிறுகதை பற்றிய அறிவார்ந்தோரின் கருத்து. அது உண்மையும் கூட. அதற்கு மேல் எழுதினால் வாசகர் பொறுமையிழந்துவிடுவர். அத்தோடு அது குறுநாவல் என்ற கட்டத்திற்கு நுளைந்துவிடும். போட்டிகள் என்று வரும்போது போட்டிக்கான அழைப்பு விடுப்பவர்களால் பக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இத்தனை பக்கங்களுக்குள் சிறுகதைகள் உள்ளடக்கப்படவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்படும். இங்கு எழுத்தாளர் குரு அரவிந்தனுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றையும் எடுத்து நோக்கினால் அவர் தனக்குத்தானே வரையறை ஒன்றை வைத்திருப்பது புலனாகிறது. ஒவ்வொரு சிறுகதையும் 5 பக்கங்களை தாண்டாமல் அதற்குள் அடக்கிவிடுகிறார். தனது கதையில் தான் கூறவந்த கதையின் கருவை மிகவும் நுணுக்கமாக இந்த பக்கங்களுக்குள் அடங்கிவிடுமாறு செய்திருக்கின்றார்.

கதைஎழுதும்போக்கு

கதையின் ஆரம்பம் கதையின் கருப்பகுதி அதன் முடிவுப் பகுதி போன்றவற்றை அவற்றுக்கான எல்லைகளை வகுத்து அந்த எல்லைகளுக்;குள் மட்டுப்படுத்தி குறிப்பிட்ட பகுதிக்குள் கதையின் ஒவ்வொரு பகுதிகளையும் கச்சிதமாக அநேகமாக அனைத்துக்கதைகளிலும் சிறைப்படுத்திவிட்டிருக்கிறார். அவசியமற்ற அலட்டல்களை அறவே தனது கதைகளுக்குள் நுளையவிடாது பார்த்திருக்கிறார். இது இவரது சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற அனுபவத்தை புடம்போட்டுக் காட்டுகிறது.

இவரது கதையெழுதும் போக்கில் ஒரு கேள்வி என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது ஆகையால் அதை தவறவிட்டுவிடாது இங்கு குறிப்பிடுகிறேன். ஆதாவது இவருடைய இந்த நான்கு கதைகளிலும் இலக்கண முறையிலான எழுத்து முறைமையையே கூடுதலாக கையாண்டிருக்கிறார். பாத்திரங்களுக்கிடையிலான சம்பாசணைகளும்கூட இலக்கண முறை வழக்கிலேயே கையாளப்பட்டிருக்கிறது. அது ஏன் என்பது தான் எனது கேள்வியும் புரியாத விடயமாகவும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர்ந்து வேறு நாட்டில் வாழ்ந்து வருவதால் எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய இவரது அனைத்து வாசகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கோடு வெவ்வேறு வகைiயான பேச்சு வழக்குகளை உள்ளே நுளைத்துவிடாது இலக்கண முறைமையை கையாண்டிருப்பாரோ? இது இவ்வாறு இருப்பினும் இவரை அறியாமலே கதாபாத்திரங்களிடையிலான சம்பாசணைகளில் சில இடங்களில் பேச்சு வழக்கு இயல்பாகவே நுளைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

கதாபாத்திரங்களும்காட்சியமைப்புகளும்

இந்த ஆய்விற்குட்பட்ட எழுத்தாளர் குரு அரவிந்தனின் நான்கு கதைகளையும் எடுத்து நோக்கும்போது அவர் தனது ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான அதேவேளை கதைக்கருவின் தேவைக்கேற்ற வகையில் கதா பாத்திரங்களை மட்டுப்படுத்தியிருக்கிறார். கதைக்கருவை மிகைப்படுத்தும்படியான அல்லது கவர்ச்சியூட்டும்படியான தேவைக்குப் புறம்பான எந்தவொரு பாத்திரத்தையும் கதைக்குள் நுளையவிடாது கச்சிதமாக பாத்திர அமைப்புக்களை கையாண்டிருக்கிறார். முதலாவது கதையில் தந்தை, மகள் மற்றும் மகளுக்காக பார்த்த மாப்பிள்ளை என்ற மூன்று பாத்திரங்களையும் இரண்டாவது கதையாகிய ரோசக்காரி எனும் சிறுகதையில் கணவன், ரோசக்கார மனைவி, அவளுடைய தந்தை மற்றும் தாய் என கதைக்கு அவசியமான அந்த நான்கு பாத்திரங்களையும் முன்நிலைப்படுத்தி கதையை சுவாரசியமாக நகர்த்தி முடித்திருக்கிறார்.

அவளுக்கு ஒரு கடிதம் என்ற மற்றய சிறுகதையில் கல்லூரியில் கற்கும் மாணவன், அவன் தனது காதலை முன் வைக்கும் பெண் மற்றும் கல்லூரியின் அதிபர் என்ற மூன்று பாத்திரங்களையும் முன்வைத்து நான்காவது பாத்திரமாகிய அவன் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்ற பாத்திரத்தை புதிதாக ஒருவரை நுளைக்காது கல்லூரி அதிபரையே ஒரு திருப்புமுனை பாத்திரமாக காண்பித்து அதே நேரம் நண்பர்களையும் காதலியின் தாயையும் பொதுவாக பயன்படுத்தி குறித்துரைக்கும்படியாக யாருக்கும் நடிபாகத்தை தராமல் விட்டு கதையை முழுமைப்படுத்தியிருக்கிறார். இறுதியாக வரக்கூடிய தங்கையின் அழகிய சிநேகிதி என்ற கதையிலும் பிரதான பாத்திரமாகிய கதையின் நாயகன், அவனது தங்கை, அவளுடைய சிநேகிதி மற்றும் அவனுடைய தாய் என்று இந்த நான்கு பாத்திரங்களை மட்டும் காட்சிகளுக்குள் நுளைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்.

மேற் கூறியவாறு ஒவ்வொரு கதையிலும் குறிப்பிட்ட 3 அல்லது 4 கதாபாத்திரங்களுக்கு மேற்படாதவாறு பாத்திரங்களை மட்டுப்படுத்தி சொல்ல வந்த கதைக்கருவை அழகாகவும் தெளிவாகவும் காண்பித்து தனது கதைகளை முடித்திருப்பதானது வாசகர்களும் பாத்திரங்கள் சார்பான அனாவசியமான குளப்பங்களுக்கு உட்படாது கதையை ஆர்வமாக படிக்க தூண்டிவிட்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதே வேளை அவர் உருவகித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் அவசியமற்ற சம்பாசணைகளை தராமல் கதைக்கு பொருத்தமான அதேவேளை அவசியமான சம்பாசணைகளை மட்டும் கனகச்சிதமாக வழங்கி அவசியமற்ற அலட்டல்களை ஒவ்வொரு கதையிலும் தவிர்த்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாக காணப்படுகிறது.

முடிவுரை

எழுத்தாளர் குரு அரவிந்தனுடைய கதைகள் பலவற்றில் நான் படித்தவற்றுள் சில தொகுப்புகளிலிருந்து நான்கு கதைகளை இந்த திறனாய்வின்பொருட்டு தேர்வு செய்திருந்தேன். அவை சார்பான ஒரு சிறுகதையை எழுதும்போது பொதுவாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய பல விடயங்களை முன்நிலைப்படுத்தி இந்த ஆய்வை சமர்பித்திருக்கிறேன். இந்த கதைகளுக்;குள் நான்; மேலே குறிப்பிட்டிருக்கக்கூடிய நேரான பல விடயங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்த போதிலும் எதிர்மறையான வியங்களை காண்பது சற்று சவாலான விடயமாகவே காணப்பட்டது. இருப்பினும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இவருடைய சிறுகதைகள் அமைந்திருக்கும் என நான் கருதிய ஒரு சில விடயங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். இவற்றுக்கும் மேலாக சில சுவாரஸ்யம் தரக்கூடிய விடயங்களையும் இடையிடையே ஒவ்வொரு கதைகளிலும் சேர்த்திருந்தால் வாசகர்களுடைய வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்குமோ என்பதை மேலதிகமான ஒரு கருத்தாக நான் இங்கு குறிப்பிடுகிறேன். பொதுவாக நான் படித்த ஏனைய கதைகளையும் வைத்துப் பார்க்கின்றபோது இவரது கதைகள் யாவும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருக்கும், குரு அரவிந்தன் மேலும் பல படைப்;புக்களை தமிழ் இலக்கிய உலகிற்கு தரவேண்டும் என்ற வாஞ்சையுடனான பதிவையும் முன்வைத்து இவ்வாய்வை நிறைவு செய்கிறேன்.

உசாத்துணை:

‘இதூன் பாசம் என்பதா?’ – மணிமேகலைப்பிரசுரம். சென்னை.

‘தங்கையின் அழகிய சினேகிதி’ – இனிய நந்தவனம் பதிப்பகம். திருச்சி.

‘அவளுக்கு ஒரு கடிதம்’ – ஆனந்தவிகடன் காதலர்தினமலர் (14-2-99).

‘ரோஷக்காரி’ – hவவிள:ஃஃமரசரழெஎநடளவழசல.டிடழபளிழவ.உழஅஃ

……………………………………………………………………………..

(குருஅரவிந்தன்வாசகர்வட்டம்நடத்தியசிறுகதை, நாவல்திறனாய்வுப்போட்டி – 2021 இல் 14 நாடுகளில்இருந்துவந்தநூற்றுக்கும்மேற்பட்டபலதிறனாய்வுக்கட்டுரைகளில்இருந்துதெரிவாகிஇரண்டாவதுபரிசுபெற்றதிறனாய்வுக்கட்டுரை.)

பகுப்புமுறைத்திறனாய்வுஅடிப்படையில்குருஅரவிந்தனின்சிறுகதைகள் – ஒருவிமர்சனநோக்கு

சிவனேஸ்ரஞ்சிதா, கெக்கிராவ, இலங்கை.

அறிமுகம் –

ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கும் கணிசமான பங்களிப்பு உள்ளது. மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் இலக்கியப் பரப்பை குறிப்பாக புனைகதைத் துறையை தனது பேனாவால் அலங்கரித்தவர். சிறுகதைஇ நாவல்இ ஒலிப்புத்தகங்கள்இ திரைப்படம்இ மேடை நாடகம்இ சிறுவர் இலக்கியம் என பன்முக ஆளுமையுடன் தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி வைத்துள்ளார். இவருடைய புனைகதை இலக்கியங்களை தமிழ்த்திறனாய்வுத் துறைக்குள் கொண்டுவந்து பேசவேண்டிய தேவை தமிழ்த்திறனாய்வாளர்களுக்கு உள்ளது. அவ்வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் படைப்புவெளிக்குள் அழைத்துவரப்பட்ட ‘இதுதான் பாசம் என்பதா’, ‘சிந்து மனவெளி’, ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’இ ‘தாயாய் தாதியாய்’ ஆகிய நான்கு சிறுகதைகளும் பகுப்புமுறைத் திறனாய்வின் அடிப்படையில் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக்காண்பது பகுப்புமுறைத்திறனாய்வு எனப்படும். இத்தகையத் திறனாய்வு ‘அலசல் முறைத் திறனாய்வு’ என அன்றைய திறனாய்வாளர்களால் அழைக்கப்பட்டது. இத்திறனாய்வு முறையினூடாக குரு அரவிந்தன் அவர்களின் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதைகளில் வரும் கதைக்கரு, தலைப்பு, பாத்திரப்படைப்பு, பின்னோக்கு, கடித உத்தி, தொடக்கமும் முடிவும் ஆகிய கூறுகளின் வழி ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

கதைக்கரு –

குரு அரவிந்தனின் சிறுகதைகளில் அவர் கையாண்டுள்ள கரு சமூக யதார்த்தம் கொண்டதாக படைக்கப்பட்டுள்ளது. சான்றாக ‘தாயாய் தாதியாய்’ என்ற சிறுகதையிலும் ‘என் செல்லக்குட்டி கண்ணணுக்கு’ என்னும் சிறுகதையிலும் தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனாவின் பாதிப்புகள் சமூகத்தில் வாழும் பாத்திரங்களினூடாக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவினால் பொதுமக்கள் மட்டுமல்ல வைத்தியத்துறையில் பணிபுரியும் வைத்தியர்களும், தாதியரும் தமது பொதுவாழ்விற்காக குடும்ப வாழ்வை அர்ப்பணித்து கடமையாற்றுவதை இவ் இரு சிறுகதைகளும் தெளிவுறுத்தியுள்ளன. ‘சிந்து மனவெளி’ என்னும் சிறுகதை ஆண் – பெண் உறவுநிலையில் எழும் சந்தேகக்கோடுகளை மனப்போராட்டமாகவே சித்திரிக்கின்றது. ‘இதுதான் பாசம் என்பதா’, ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’ – சற்று வித்தியாசமான சிறுகதைகள். ‘இதுதான் பாசம் என்பதா’ என்னும் சிறுகதை திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகள் திருமணம்செய்து சென்றுவிட்டால் குடும்ப பொருளாதாரத்தை யார் சுமப்பது என்ற பயத்தில் திருட்டுத்தனமாக திருமணத்தை நிறுத்திவிடும் தந்தையொருவரையும் பின்னர் அதனை அறிந்து திருமணமே செய்யாமல் வாழத்துடிக்கும் மகளைப்பற்றியும் தீட்டப்பட்டுள்ளது. ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’ என்னும் சிறுகதை ஒரு பெண் விருப்பமின்றி தனது கணவனுடன் வாழ்ந்து பின் முரண்பாடு உச்சக்கட்டத்தை எட்டி தனது மகள் அவருக்கு பிறக்கவில்லை என கூறி வைத்திய பரிசோதனை வரைக்கும் செல்கின்றாள். இதையறிந்த மகள் தனது அப்பாவிற்கு எழுதும் உணர்வுபூர்வமான கடிதத்தில் மனமுறுகிய அந்த தந்தை வைத்திய பரிசோதனை ‘ரிப்போர்ட்’டை பார்க்காமல் தனது மகளை ஏற்றுக்கொள்கிறார். அந்த ரிப்போர்ட்டில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாது என்பது போலவே இறுதியில் கதை முடிகிறது. குரு அரவிந்தன் இவ்வாறு கையாண்டுள்ள சிறுகதையின் கரு வித்தியாசமானதாகவும் எவரும் சிந்தித்து பார்க்காத ஒன்றாகவும் வெளிப்படுகின்றது.

தலைப்பு –

எந்தவொரு படைப்பும் தாம் கொண்டிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமாகவே அமையும். சில தலைப்புகள் குறியீடாகவும் சில தலைப்புகள் பாத்திரங்களின் பெயரையும் கொண்டு அமைக்கப்படும். ஆனால் ஒரு சிறுகதையின் தலைப்பு தாம் எடுத்துக்கொண்ட கதையின் கருவிற்கு மிக பொருத்தமாகவே அமையவேண்டும். குரு அரவிந்தனின் சிறுகதைகளில் குறியீடான தலைப்புக்கள் எவற்றையும் காணமுடியவில்லை. இருப்பினும் கதையின் கருவிற்கேற்ற பொருத்தமானத் தலைப்புக்கள் அவரது சிறுகதைகளில் இழையோடியுள்ளன. உதாரணமாக ‘தாயாய் தாதியாய்’ என்ற சிறுகதையை நோக்கும்போது ஒரு தாதி தனது இரண்டு பெண்பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு தாதியர் சேவைக்கு பயணமாகின்றாள். கொரோனா சூழ்நிலையில் பணியாற்றும் அந்த தாதி தனிமைப்படுத்தல் காலகட்டத்தில் தனது சிறிய மகள் வயதிற்கு வந்து தனியே தவிக்கும்போது வைத்தியசாலையிலிருந்து வரமுடியாமல் தவிக்கிறாள். தனது மூத்த மகளிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என தொலைபேசியில் அறிவுறுத்துகின்றாள். அயலவர் இந்த பிள்ளைகளுக்கு உதவிபுரிய முடியாத சூழலை தனிமைப்படுத்தல் சட்டங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு தாயாய் உரிய வேளையில் கடமைகளைப் பூர்த்திசெய்யமுடியாமல் அதே தருணம் தாதியாய் சேவையாற்ற வேண்டிய கட்டாயத்திலும் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வை கருவாக்கிய இச்சிறுகதையின் தலைப்பு ‘தாயாய் தாதியாய்’ என்பது மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

பாத்திரப்படைப்பு –

ஒரு சிறுகதைக்கு அதன் மொழி உயிரோட்டம் தருவது எவ்வளவு உண்மையோ அதுபோல கதையில் வரும் பாத்திரங்கள் அந்த மொழிநடையை காவிச்சென்று மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றன. சிறுகதைகள் பொதுவாக தனிமனித உணர்வுகளை அல்லது ஒரு பிரச்சினையை கணநேரத்தில் சொல்லி முடிக்கவேண்டும். பாத்திரங்களும் வளர்க்கப்படாது வார்க்கப்பட வேண்டும். குரு அரவிந்தனின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்களும் அப்படியானவையே வார்க்கப்பட்டள்ளன. உதாரணமாக ‘இதுதான் பாசம் என்பதா’ என்னும் சிறுகதையில் வரும் சீதா, ஸ்ரீராம், அப்பா ஆகிய பாத்திரங்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. அளவான பாத்திரங்களையும் இச்சிறுகதையில் குரு அரவிந்தன் கொண்டுவந்துள்ளார். ஏனைய சிறுகதைகளும் அவ்வாறே அளவான பாத்திரங்களுடன் முடிந்துள்ளன. இச்சிறுகதையில் உலா வரும் சீதா என்னும் பாத்திரம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளாள். தனது குடும்பத்திற்காக தனது உணர்ச்சிகளை, ஆசைகளைத் துறந்து திருமணம் செய்யாது போராடத் துணிகின்றாள். இதனை ‘…என்னோட உணர்ச்சிகளை எப்படியாவது பல்கலைக் கடித்துக் கொண்டு என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால் இந்தக் குடும்பத்தால் வயிற்றுப்பசியை பொறுக்க முடியுமா? இவங்க என்னோடு உழைப்பை நம்பி இருக்கும் வரை நான் கல்யாணமே செய்துக்கப்போறதில்லை பயப்படாதீங்க அப்பா’ என்று சீதா கூறுவது இப்பாத்திரத்தின் மீது ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்துகின்றது. பொதுவாக ஒரு சிறுகதையில் இரண்டொரு பாத்திரங்கள் நடமாடினாலும் மனதை உடைத்துச் செல்வது ஒரு பாத்திரமாகவே இருக்கும். அவ்வாறே ‘இதுதான் பாசம் என்பதா’ என்ற சிறுகதையில் பல பாத்திரங்கள் நகர்ந்தாலும் சீதா என்னும் பெண் பாத்திரமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னோக்கு –

பின்னோக்கு உத்தியைப் பாத்திரங்கள் நினைத்துப் பார்ப்பது போலவும் ஆசிரியரே கதைகூறுவது போலவும் அமைக்கலாம். நனவோடை உத்தியும் இதில் அடங்கும். கடந்த காலத்தைக்காட்டவும் பின்னோக்கு உத்தி பயன்படுகின்றது. இவ்வாறான பின்னோக்கு உத்திமுறையை ‘இதுதான் பாசம் என்பதா’ என்னும் சிறுகதையில் வெளிப்படுகின்றது. ரயிலில் சந்தித்துக்கொள்ளும் சீதா – ஸ்ரீராம் ஆகிய இரு பாத்திரங்களும் தாம் பெண்பார்க்கும் படலத்தில் சந்தித்துக்கொண்டமை பின்னோக்குநிலையில் ஆசிரியரால் காட்டப்பட்டுள்ளன. ‘அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் ஒரு கணம் அதிர்ந்துபோனாள். அவனைநேருக்கு நேர் சந்திப்போம் என்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கண்களில் சட்டென ஈரம் படர்ந்தது. தலை லேசாக வலிப்பது போலிருந்தது…’ என இச்சிறுகதையின் ஆரம்பம் முன்னர் இவர்களின் வாழ்வில் கசப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளதை பின்னோக்கி கூறவிழைகின்றது. சிந்து மனவெளியும் இத்தகைய பின்னோக்கு உத்தியை ஒரு ஆண் பாத்திரத்தின் மூலம் கூறுகின்றது. ‘ மனம் குழம்பிப்போய் சஞ்சலப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கக் கூடாதோ என்று எண்ணத்தோன்றியது. சஞ்சலம் என்பது எப்போதும் எவருக்கும் வரலாம்… கண்முன்னால் நடப்பதைப் பார்த்துக்கொண்டு எப்பொழுதும் இளிச்சவாயாக இருந்துவிடமுடியுமா?…’ என ஒரு திரைப்படத்தை பார்த்து தனது மனப்போராட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆணின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பின்னோக்கி நகர்வதை கதையின் ஆரம்பத்தில் குரு அரவிந்தன் காட்டியுள்ளார். ஏனைய சிறுகதைகள் அடுத்தடுத்த சம்பவங்களை தொடர்ச்சியாக கூறுகின்றன.

கடிதஉத்தி –

சிறுகதைகளில் கதையைக் கூறிச்செல்லும்போது இடையில் கடிதங்களை கொண்டு வந்தும் கதையை கூறிச் செல்வதை காணலாம். குரு அரவிந்தன் தனதுசிறுகதைகளில் கடிதங்களை கொண்டு வந்துள்ளமையையும் காணமுடிகின்றது. சிறப்பாக ஒரு அப்பா ஒருமகள் ஒரு கடிதம் என்னும் சிறுகதை தலைப்பே கடித உத்திக்கு சான்றுகாட்டுகின்றது. தந்தை – மகள் உறவின் ஆழத்தை அற்புதமாக படம்பிடிக்கும் இச்சிறுகதையின் ஆரம்பத்தில் ஒரு மகள் அவளது தந்தைக்கு

‘அன்புள்ள அப்பா,

அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு அப்பா என்று என்னால் அழைக்கமுடியுமோ தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘டி.என்.ஏ.ரிப்போர்ட்’ உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப்பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்…’ என கடிதம் ஆரம்பமாவதோடு பின்னோக்கு நிலையைக் கடித உத்தியைக் கொண்டு வந்து நனவோடையாக கதையை நகர்த்தியுள்ளார் குரு அரவிந்தன். ‘இதுதான் பாசம் என்பதா’ சிறுகதையில் கடிதம் பற்றிய பதிவுகள் விரிவாக அலசப்படவில்லை. எனினும் ஒரு கடிதத்தினால் சீதா என்னும் பெண்ணின் திருமணம் தடைபடுவதை இச்சிறுகதையாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே குரு அரவிந்தன் தமது சிறுகதைகளில் கடித உத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளமையை நன்கு அறியமுடிகின்றது.

தொடக்கமும்முடிவும் –

சிறுகதைகள் இயற்கை வர்ணணைகளுடனும், உரையாடலுடனும், ஆசிரியரின் கூற்றாகவும் அமைவதுண்டு. அவ்வாறு அமையும் சிறுகதையின் தொடக்கம் வாசகரை வாசிக்கத்தூண்டுவதாக அமைதல் சிறந்தது. குரு அரவிந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளிலும் கதையின் தொடக்கம் வாசிக்கத்தூண்டுவதாகவே அமைந்துள்ளது. அடுத்து சிறுகதையின் முடிவு சிந்திக்கவைப்பதாகவும் முடிவை அவர்களிடமே ஒப்படைதாகவும் படைக்கப்பட வேண்டும். முடிவு முடிந்துவிடாமல் மீண்டும் தொடர்வதாகவும் திருப்புமுனையுடன் கூடியதாகவும் படைப்பது சாலச்சிறந்தது. ‘இதுதான் பாசம் என்பதா’ என்னும் சிறுகதை தொடக்கம் முதல் முடிவு வரை உணர்வோட்டத்துடன் ஓடி முடிகின்றது. ஒரு பெண் தனது தந்தையாலே வஞ்சிக்கப்பட்டு திருமணவாழ்வை இழக்கும் துன்பத்தை பதிவுசெய்யும் இச்சிறுகதை இறுதியில் ‘ ‘அப்பா நீங்களா அப்பா இப்படிச் செய்தீங்க? என்னுடைய பிரிவால், என்னையே நம்பி இருக்கும் இந்தக் குடும்பம் நடுத்தெருவிலே நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று பயந்துட்டீங்களாப்பா? என்னோட உணர்ச்சிகளை எப்படியாவது பல்கலைக் கடித்துக் கொண்டு என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால் இந்தக் குடும்பத்தால் வயிற்றுப்பசியை பொறுக்க முடியுமா? இவங்க என்னோடு உழைப்பை நம்பி இருக்கும் வரை நான் கல்யாணமே செய்துக்கப்போறதில்லை பயப்படாதீங்க அப்பா.’ கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு கடிதத்தை கிழித்துப் போட்டாள். மனதில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது.’ என இச்சிறுகதையில் வரும் சீதா என்னும் பாத்திரத்தின் உரையாடலுடன் கதையின் முடிவு முடிந்தாலும் இனி அவள் திருமணம் செய்வாளா? அவளது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அவளது தந்தை ஏன் இப்படிச் செய்தார்? மகளின் வாழ்விற்கு என்ன பதில் கூறபோகிறார் என முடியும் சிறுகதையின் முடிவு பல முடிவுகளை எடுக்கவைக்கின்றது. இவ்வாறு குரு அரவிந்தனின் சிறுகதைகளில் முடிவுகள் சிறப்பாக சிந்திக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

முடிவுரை –

எனவே குரு அரவிந்தனின் சிறுகதைகளை பகுப்புமுறைத் திறனாய்வின் வழி ஆராயும்போது அவர் கையாண்டுள்ள சிறுகதையின் கூறுகள் ஒரு சிறுகதைக்கு வடிவம் தந்து உயிருடன் நடமாட வைப்பதை அறியமுடிகின்றது. பொருத்தமான தலைப்பு, தலைப்பிற்கேற்ற கரு, கதையின் ஆரம்பம், வாசகரை சிந்திக்கத்தூண்டும் முடிவு, பின்னோக்கு உத்தி என அனைத்துஅம்சங்களும் சிறப்பாக பொருந்தி நிற்கின்றன. பொதுவாக குரு அரவிந்தனின் சிறுகதைகளில் உணர்ச்சிகளோடு, பாசத்தோடு, சந்தேகத்தோடு போராடும் பாத்திர வார்ப்புகளே எல்லை விரிந்துகிடக்கின்றன. சற்று போராட்டத்துடன் புரட்சிகரமாக சிந்தித்து செயலாற்றும் பாத்திரங்களையும் கதைக்கருவையும் அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சூழல் தொடர்பான வருணணைகளையும் சற்று கையாண்டிருந்தால் புலம்பெயர்வாழ் மக்களின் பண்பாட்டையும் தெளிவாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எது எவ்வாறு இருப்பினும் கலையம்சத்துடன் இவரது சிறுகதைகள் சிறப்பாக வடிவம் பெற்று தமிழ் உலகில் நடைபயில்வதையும் தனக்கான ஒரு இடத்தைக் குரு அரவிந்தன் நிலைநாட்டியுள்ளமையையும் மறுதளிக்கமுடியாது.

உசாத்துணை:

1.hவவிள:ஃஃமரசரழெஎநடளவழசல.டிடழபளிழவ.உழஅ

2.நடராசன், தி.சு., திறனாய்வுக்கலை, நிவ் சென்ஜரி புக்ஹவுஸ், சென்னைஇ 2003.

3.புயல் ஸ்ரீகந்தநேசன், போர்க்காலச் சிறுகதைகள், தாய்மொழிக் கலை மன்றம் வெளியீடு, வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம்.

……………………………………………………………………………………………….

(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி மூன்றாவதுபரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)

வாழ்வின்ஒளிபொருந்தியகதைகள்

மு. முருகேஷ், வந்தவாசி, தமிழ்நாடு.

‘வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்து, பரந்து விரிந்த உலகினைப் பார்த்து எழுதுவது புதினம். வீட்டின் சாளரத்தின் வழியாக வெளியே நடப்பதைப் பார்த்து எழுதுவது சிறுகதை’ என்பார் கவிஞரும் திறனாய்வாளருமான பேராசிரியர் பாலா.

எவ்வளவு சத்தியமான உண்மையிது; விரிந்த தளத்தில் வாழ்வின் பல்வேறு சிக்கல்களைப் பற்றி விஸ்தாரமாக விவாதத்தைத் தூண்டுவதுபோல் எழுதுவதற்கு புதினம் கைகொடுக்கும். ஆனால், பத்துப் பனிரெண்டு பக்கங்களுக்குள் எழுதப்படும் சிறுகதையானது வாழ்வின் ஏதாவதொரு நிகழ்வைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்து, அதன் வழியே நம் சிந்தனைக்குள் சில கேள்விகளை எழுப்பிட முடியும். அப்படியான கேள்விகளை எழுப்பும் கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். ‘தமிழ்ச் சிறுகதையின் கம்பீர முகம்’ என்றறியப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொடங்கி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட தமிழ்ச் சிறுகதை ஆளுமைகளின் ஏராளமான கதைகளை வாசித்திருக்கின்றேன். இன்றைக்கு எழுதும் இளம் தலைமுறை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து வருகின்றேன். பெரும்பாலும் வார, மாத இதழ்களில் வெளியாகும் கதைகளை விடவும், ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு நூலாகப் படிப்பதில் பெருவிருப்பம் கொண்டவன் நான். காரணம், அப்போதுதான் ஒரு எழுத்தாளரின் சிறுகதை நடையையும், அந்த எழுத்தாளனது உள்ளக்கிடக்கினையும் ஒருசேர அறிந்துகொள்ள முடியும். மேலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என புலம்பெயர் தமிழர்களின் சிறுகதைகளும் என் வாசிப்புக்கு நெருக்கமானவை. என் நூலகத்தில் நான் சேர்த்து வைத்திருக்கும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களில் கவிதை நூல்களுக்கு அடுத்தப்படியாகச் சிறுகதை நூல்களே அதிகம் இடம் பிடித்திருக்கின்றன.

‘இனிய நந்தவனம்’ இதழின் வழியேதான், குரு அரவிந்தன் எனும் பெயர் எனக்கு முதல் அறிமுகம். கனடாவில் வாழும் தமிழ் எழுத்தாளர் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ‘தங்கையின் அழகிய சினேகிதி’ (இனிய நந்தவனம் வெளியீடு – ஜூலை -2020) எனும் அவரது சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. கடந்த வாரத்தின் ஓர் இரவில் 2 மணி நேரத்திலும், மறுநாள் காலையில் 2 மணி நேரத்திலும் இந்தச் சிறுகதை நூலை வாசித்து முடித்தேன்.

மொத்தமுள்ள 16 கதைகளையும் 4 மணி நேரத்தில் படித்து முடித்திருந்தாலும்கூட, கதைகளை வாசித்து நான்கு நாள்களைக் கடந்த பின்னும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளில் பேசப்பட்ட சமூக அக்கறையுடன் கூடிய கேள்விகள் எனக்குள் தொக்கி நிற்கின்றன. என் அன்றாட செயல்களின் ஒவ்வொரு நொடியிலும் குரு அரவிந்தனின் கதைகளின் பேசுபொருளும் கதாமாந்தர்களின் அறிவார்ந்த உரையாடலும், அதைவிட்டு விலகமுடியாமல் மீண்டும் மீண்டும் உள்ளெழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்; இந்நூலைப் படித்ததும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் முன்னிருக்கை வாசகனாகிப் போனேன் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இந்தத் தொகுப்பிலுள்ள 16 சிறுகதைகளுமே எனக்குப் பிடித்தமான கதைகளாக இருந்த போதிலும், பக்க அளவு கருதி, விதிமுறைப்படி இந்தத் தொகுப்பிலுள்ள 4 சிறுகதைகளைப் பற்றி மட்டுமே எனது திறனாய்வுக்காக எடுத்துக்கொண்டுள்ளேன்.

நூலின் முதல் கதையே எனது திறானாய்விற்குமான முதல் கதையாகவும் அமைகிறது. சிறுகதை நூலின் தலைப்புக் கதையை நூலின் முதல் கதையாக அல்லது நூலின் கடைசிக் கதையாக வைப்பதே சிறப்பான தொகுப்புக்கான அடையாளம் என்பேன். அப்போதுதான் வாசக மனதில் அந்தக் கதையின் தலைப்போடு சேர்ந்து, நூலின் தலைப்பும் அழுத்தமாக மனதில் பதியும். ‘சிறுகதையின் ஆன்மாவை வழித்து, நெற்றியில் இடப்படும் திலகம்தான் கதைக்கான தலைப்பு’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது, எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைத் தலைப்புகளுக்கு வெகு பொருத்தமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில், ‘தங்கையின் அழகிய சினேகிதி’ நூலின் முதல் கதையெ, நூலின் தலைப்புக்கான கதையுமாகி, கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

தன் தங்கையைப் பார்க்க வீட்டிற்கு வரும் சினேகிதியின் அழகில் மயங்கும் ஒரு சராசரி இளைஞனின் காதல் கதை இது என்று யாராலும் ஒதுக்கிவிட முடியாத வகையில், இந்தக் கதையின் போக்கும், கதையின் முடிப்பும் வாசகனை வெகுவாக யோசிக்க வைத்துவிடுகிறது.

கதையோட்டம் அபாரம். ஒவ்வொரு கதையும் தொடங்குவது மட்டுமே தெரிகிறது. முடிந்த பிறகுதான் நம்மால் சுயநினைவுக்கு வருவதுபோல் கதையோடு ஒன்றிப்போய் விட வைக்கிறார் எழுத்தாளர் குரு அரவிந்தன். சரசரவென வேகமாகக் கதை நம்மை இழுத்துக்க்கொண்டு போகிறது. அடுத்து என்ன நடக்குமோ… என்கிற எதிர்பார்ப்போடு கூடவே சேர்ந்து போகிறோம். இல்லையில்லை… தொடர்ந்து படிக்கிறோம். கதையை வாசித்து முடிக்கையில், நம் மனதில் ஆழமான வருத்தமொன்று கவிழ்ந்துகொள்கிறது. அதென்ன முடிவு..? நீங்களும் அந்தக் கதையைப் படியுங்கள். (முடிவை இப்போதே நான் சொல்லிவிட்டால், உங்களின் வாசிப்பு சுவாரசியம் தடைபடுமன்றோ..!).

ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தாலும், ‘எலியும் பூனையுமாக’ இருந்தால், ஒவ்வொருவரின் மனதிலும் வேறு வேறு மாதிரியான எண்ணங்களும் செயல்பாடுகளும் அமையுமென்பதை மிக நுட்பமான பார்வையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்தச் சிறுகதையில் வரும் எந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் (அம்மாஇ அண்ணன், தங்கை, சினேகிதி) கதாசிரியர் பெயர் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்ததா, இல்லை கதாசிரியர் திட்டமிட்டுச் செய்தாரா என்பதை நாம் அறியோம். ஆனால், பெயரில்லாத இடங்களில் இந்தக் கதையைப் படிக்கும் வாசகன் தன் பெயரினைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் செய்கை நிகழ்வதற்கான வாய்ப்பினை இதன் வழியே வழங்குகிற அந்த உத்தியை வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையை உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும், வாசிப்பவர் மனதில் பெரிய அளவிலான தாக்கத்தினை இந்தக் கதை நிச்சயம் ஏற்படுத்தும். அத்தகைய வல்லமைமிக்க கதைக்கரு கொண்ட மிகநுட்பமான பார்வையில் எழுதப்பட்ட கதையாக இந்தக் கதையைப் பார்க்கின்றேன்.

ஒவ்வொரு இன மக்களின் மனதிலும் அவரவர் பண்பாடு குறித்த உயரிய எண்ணங்களும், அவை தலைமுறைகள் கடந்தும் தொடர வேண்டுமென்கிற விருப்பமும் இருப்பது இயல்பே. ஆனால், ‘வலித்தாலும் காதலே..!’ கதையின் நாயகி, காதலனின் அழைப்பையேற்று கனடாவிற்கு வந்து படிக்கிறாள். அங்குள்ள கலாச்சார முறைகளைப் பார்க்கிறாள். மன மாற்றம் உண்டாகிறது.

அவளது காதலன் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறபோது, “தாலி கட்டப் போறீங்களா, என்ன நாய்க்குக் கழுத்திலே பட்டிகட்டுற மாதிரியோ?’ என்று கேட்கிறாள். ‘என்னாயிற்று… இவளுக்கு?’ என்று திகைத்துப் போகிறான் காதலன்.

தாலி கட்ட வேண்டாமென்று மறுத்த காதலியிடம், ‘உன்னுடைய இந்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. உன்னோட ஒரு ரூம்மேட் போல வாழ்வதிலும் எனக்கு இஷ்டமில்லை’ என்று மறுதலிக்கின்றான்.

‘அப்போ தாலி கட்டிக்கொண்டு ஒரு அடிமை போல உங்கட தயவில நான் இங்கே வாழவேணும் என்று எதிர்பார்க்கிறீங்களோ?’ என்று அவள் கேட்கிற கேள்வி, இன்றைக்கு பெண்ணியத்தைக் கையிலெடுத்திருக்கும் இளைய தலைமுறை பெண்களின் கேள்வியாக எழுகிறது.

பிறகு, இருவருமே மனமொத்து, தாலி கட்டிக்கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள். காதலனின் இனத்தவரின் திருமண வீட்டிற்குச் சென்று திரும்பியதும், அவளது மனதிலொரு மாற்றம் நிகழ்கிறது.

‘காலம் போனாலும் பரவாயில்லை. ஏதாவது கோயில்லை என்றாலும் எனக்குத் தாலி கட்டிவிடுங்கோ’ என்கிறாள்.

அவளது இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்தில் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு என்ன மாதிரியான சமூக மரியாதை கிடைக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. பெண் உளவியல் சார்ந்த இந்தக் கதை, ஒரு ஆண் எழுத்தாளரால், பெண்ணின் மன உலகிற்குள் சென்றும் எழுத முடியுமென்பதை மிகக் காத்திரமாக மெய்ப்பித்துள்ளது.

மூன்றாவது கதை ‘காதல் போயின் சாய்தல்..!’

தமிழ்க் கலாச்சாரத்தில் பிறந்த அவள், கனடிய கலாச்சாரத்தில் பிறந்தவனைக் காதலித்து, கணவனாகக் கரம் பிடிக்கிறாள். தேன் நிலவு, விடுமுறை என நாள்கள் கடக்க, மணமான ஆறாவது மாதத்தில் கணவனான அன்றூவின் பிறந்த நாள் வருகிறது. அன்றூ இருப்பது ரொறன்ரோவில்.

அடிக்கடி வெளியிடங்களுக்குப் பயணம்போகும் அவள், அப்போதும் வெளியிலிருக்கிறாள். பொஸ்டனிலிருந்து அதிரடியாக விமானம் பிடித்து, ரொறன்ரோ வருகிறாள்.

பியர்சன் விமான நிலையத்தில் அவள் வந்திறங்கியபோது நள்ளிரவு 12 மணி. வாடகை வண்டி ஒன்றினைப் பிடித்துஇ வீட்டிற்கு வருகிறாள். தன்னிடமிருக்கும் சாவியைக்கொண்டு, வீட்டின் கதவை மெதுவாகத் திறந்து, விளக்கைப் போடாமலேயே படுக்கை அறைக்குள் நுழைகிறாள். கதையைப் படிக்கிற நமக்கோ ‘திக்… திக்’ என்று மனம் அடித்துக்கொள்கிறது.

தனது காதல் கணவனுக்குத் திருமணமான பிறகு வருகிற முதல் பிறந்த நாளில், இன்ப அதிர்ச்சியைத் தர திட்டமிட்டு, ஆவலோடு வந்தவளுக்கு காத்திருந்தது இன்னொரு பெரிய அதிர்ச்சி.

குறட்டை விட்டு உறங்கும் கணவனின் போர்வைக்குள் அவனை அணைத்தபடி இன்னொரு உருவம். எதிர்பாராத பேரதிர்ச்சி அடைகிறாள்.

‘அன்றூ ஓரினச் சேர்க்கையாளனா..?’ அவளால் நம்ப முடியவில்லை. உடம்பெல்லாம் வியர்க்க, வந்த சுவடு தெரியாமல் பிறந்த வீட்டிற்குப் பெட்டியோடு வருகிறாள்.

மகளின் வருகை கண்டு பெற்றோர் அதிர்ந்தாலும், அவளை வரவேற்கின்றனர். அம்மாவிடம் நடந்தவற்றைப் பகிர்கிறாள். ‘உனக்கான முடிவை நீயே தேடிக்கொள்’ என்கிறாள் அம்மா.

மனம் பதறாமல் நிதானமாக யோசிக்கிறாள். ‘ஆத்திரத்தில் கையை விட்டால், அண்டாவிற்குள்ளும் கை நுழையாது’ என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றெண்ணி, மன அமைதியடைகிறாள்.

ஒருபாற் சேர்க்கை என்பது கனடிய மண்ணில் ஒன்றும் தவறானதில்லை. சிகரெட் பிடிப்பதுபோல, மது அருந்துவதுபோல இதுவும் இளமையில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம் என்கிற புரிதலுக்கு வருகிறாள். ஆனாலும், அவன் ஒன்றும் ஆண்மை குறைந்தவனல்ல என்பதையும் அவனது மனைவியாக அவளறிவாள். இப்போது என்ன செய்யலாம்? ‘அன்றூவோட சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை இத்தோடு போதுமென விவாகரத்து கோரலாமா?’ வேண்டாமென்கிற முடிவுக்கு வருகிறாள்.

‘காதல் போயிற் சாதல் அல்ல சாய்தல்’ என மகாகவி பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் புது முடிவு ஒன்றினை எடுக்கிறாள். ‘இனிமேல் அன்றூவை தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். முதலில் அவனிடம் அப்படியான தொடர்புகளை வைத்திருக்கும் கூட்டாளிகளை வெட்டிவிட வேண்டும். பிறகுஇ கவனமாகச் செயல்பட்டால் அதைச் சரிசெய்ய முடியும்’ என்கிற நம்பிக்கையோடு, மீண்டும் பியர்சன் விமான நிலையத்திற்குச் செல்கிறாள்.

இன்றைய இளைய தலைமுறை பெண்கள் முடிவெடுப்பதில் எப்படி உறுதியாகவும் திடமாகவும் இருக்கிறார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், எதிர்கால வாழ்க்கையைக் கவனத்தில் கொண்டு, மிகச் சரியான முடிவை எடுப்பதில் தெளிவானவர்கள் என்பதை மிக நேர்த்தியாக இந்தக் கதையில் பகிர்ந்துள்ளார் குரு அரவிந்தன்.

மனக் குழப்பத்திலிருக்கும் எவரும் இந்தக் கதையைப் படித்தால், குழப்பத்திலிருந்து தெளிவைப் பெறலாம். எதிர்காலத்தைச் சிதைக்கா வண்ணம் சரியான முடிவெடுக்க வேண்டுமென்பதற்கான வழியினை காட்டும் சுடரொளியென இந்தக் கதை நம்மை வழி நடத்திப் போகிறது. இந்தக் கதையைப் படிப்பவர் வேறொரு எழுத்தாளனின் வாசகனாக இருந்தாலும், இந்தக் கதையினூடாகத் தனக்கான வாசகனாக அவரைத் தன்பக்கம் சாய்த்து, சாதித்து விடுகிறார் குரு அரவிந்தன்.

நான்காவதான கதை ‘அவள் வருவாளா?’ இந்த நூலின் நிறைவுக் கதை. ஒரு நூலின் முதல் கதையும் நிறைவுக் கதையும் சிறந்த கதையாக அமையுமானால், அந்த நூல் வாசக மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொள்வது நிச்சயம் என்பார்கள். அப்படியான தேர்ந்த கதையாக இந்நூலின் நிறைவுக் கதையும் இடம்பெற்றுள்ளது சிறப்புக்குரியது.

‘குடும்பச் சண்டைகள் நான்கு சுவர்களுக்குள் தீர்க்கப்பட வேண்டியவை’ என்பது தமிழ் மக்களின் வாழ்வியலில் சொல்லப்படாத நீதி. ‘எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். குறுக்கால நீ ஏன் மூக்கை நீட்டுறே?’ என்று கணவன் – மனைவி சண்டைக்குள் நுழைபவரைப் பார்த்துக் கேட்பதை இன்றும் தமிழ்க் குடும்பங்களில் காண முடிகிறது. அப்படியான ஒரு வாழ்முறையைக் கொண்ட தமிழ்க் குடும்பமொன்று கனடிய நாட்டில் வாழ்கிறது.

கணவன் – மனைவிக்கான காரசாரமான உரையாடல் வலுக்கவே, ஒரு கட்டத்தில் மனைவியை அடிக்க கையோங்கி விடுகின்றான் கணவன். மனைவி படித்தவளாயிற்றே… சும்மா விடுவாளா?

செல்பேசி வழி சினேகிதிக்கு உடனே இதனைப் பகிர்கிறாள்.

‘அடிக்கிற கணவனிடத்தில் வாழாதே. ம்… கிளம்பு’ என்கிறாள் தோழி. தன் குழந்தையோடு தனியாக வாழச் செல்கிறாள். மனைவியோடு சேர்ந்துவாழ ஆசைப்படுகிறான் கணவன். ஆனாலும், சுற்றிருப்பவர்கள் இவர்களைச் சேர்ந்துவாழ விடுவதாகயில்லை.

‘ஒரு பொம்பிளைக்கு இவ்வளவு திமிர் எண்டால் நீ ஏன் அடங்கிப் போக வேணும்? நீ பேசாமல் இரு. இவையெல்லாம் பட்டுத்தெளிய வேணும்’ என்கிறார்கள்.

இருவர் பேசித் தீர்த்துக்கொள்ளும் சிறுசிறு சண்டைகளுக்குள்ளும் மூன்றாம் நபர் நுழைந்தால், நூலிழைச் சிக்கல் கூட நூலாம்படைச் சிக்கலைப்போல பெரிதாகிவிடுமென்பது இவர்களது வாழ்க்கையிலும் உண்மையாகிறது.

ஒரு நாள், எதிரே தன் மனைவியைச் சந்திக்கும் கணவன், ‘ஐயாம் சாரி’ என்கிறான்.

‘ஏன் மன்னிச்சுடு என்று சொல்ல மாட்டீங்களோ, பெரிய மானஸ்தன்’ என்கிறாள் மனைவி.

இந்த உரையாடலில் தமிழர்களின் மனச் சிக்கலையும், காலங்காலமாகத் தமிழர்கள் மொழி குறித்து கொண்டுள்ள எண்ணத்தையும் நம்முன்னே விவாதமாக்கியுள்ளார் எழுத்தாளர் குரு அரவிந்தன். அதையும் கதைக்குள் துறுத்திக்கொண்டிருக்காமல், கதையின் இயல்பான போக்கிலேயே பேச வைத்து, நம்மையும் ‘ஆமாம்’ என ஏற்க வைத்துள்ளதும் கதாசிரியனுக்கு மட்டுமே வாய்த்த சவாலான பணி. அதை மிகத் திறம்பட இந்தக் கதையில் கையாண்டுள்ளார் கதாசிரியர் குரு அரவிந்தன்.

வாய்க்கூசாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘சாரி’ கேட்கும் தமிழர்களான நாம், ஏனோ ‘மன்னிப்பு’ என்று நம் தாய்மொழியில் கேட்கத் தயங்கவே செய்கிறோம். இதுதான் ஒருவனது தாய்மொழி, அவனது மனதோடு எவ்விதம் இணக்கமான உறவைக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்வதாகும். அந்நிய மொழியில் கேட்கும் ‘சாரி’ என்பதை வெறும் வார்த்தையாக மட்டும் கருதும் ஒருவன், அவனது தாய்மொழியில், அதனையே ‘மன்னிப்பு’ என்று கேட்கையில் தனக்கான தன்மானக் குறைவாகக் கருதுகின்றான். இந்த உளவியல்ரீதியான சிக்கலை ஒரு சிறிய உரையாடலின் வழி விவாதமாக்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன்இ தமிழ்ச் சிறுகதையாளர்களில் போற்றுதலுக்குரிய உயர்ந்த இடத்தைப் பிடிப்பது இந்த இடத்தில்தான்.

கணவன் – மனைவி சண்டை என்பதாக மட்டுமே இந்தக் கதை சுருங்கிவிடாமல், நவீன காலப் பெண்வாதப் போக்கையும் இந்தக் கதை மெல்லக் குட்டுகிறது. கதையின் முடிப்பு படிக்கும் எவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

கணவன் – மனைவிக்குள் விழுந்த சிறுகீறலைப் பெரிய இடைவெளியாக்கி, இருவரையும் பிரித்த சினேகிதி கேட்கிறாள். ‘இவனெல்லாம் ஒரு ஆம்பிளையா, உன்னைக் கைநீட்டி அடிச்சவன்ரி.’

இதற்கு அவள் சொன்ன பதில்தான் இந்தக் கதையின் உச்சம்.

‘இல்லை. ஆத்திரத்தில் நான்தான் முதல்ல அவரை அடிச்சனான். அதுக்குத்தான் அவர் கையோங்கினவர்.’

அப்படியானால், கணவன் அடிக்கத்தான் கையோங்கினான். அடிக்கவில்லை; உண்மையில் அடித்தவள் மனைவிதான்!

‘மாறும் என்ற விதியைத் தவிர மற்றதெல்லாம் மாறும்’ எனும் சமூக நியதியின்படி, இப்படியான மாற்றங்களும் இன்றைய சமூகத்தில், முக்கியமாக புலம்பெயர்ந்த சமூகத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை இந்த ஒரு கதையின் வழியே பட்டவர்த்தமாகப் பதிவுசெய்துள்ளார் எழுத்தாளர் குரு அரவிந்தன்.

‘சிறுகதை உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் ரஷ்ய எழுத்தாளர் ஆண்டென் செகாவ், ‘கதைகளில் மனித மனங்களிலுள்ள உண்மைகள் பேசப்பட வேண்டும். அந்த உண்மையின் பேரொளியே வாசக மனதிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்’ என்றார். அப்படியான ஒரு சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகள் இருக்கின்றன.

எழுத்தாளர் குரு அரவிந்தனின் இதில் உள்ள கதைகள் அனைத்துமே காதல் கதைகளாக என்றாலும், காதல் எனும் மையப்புள்ளியில் நின்றுகொண்டு, முதல் பார்வையிலேயே தூண்டப்படும் ஆண்-பெண் எதிர்பாலின கவர்ச்சியை, மனித உடலின்பத்தை, ஓரினச் சேர்க்கையை, பெண் சமத்துவத்தை, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதன் சமூகத் தேவையை என அனைத்தையும் பேசுகின்றன என்பதே எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகள், இளையோர்களுக்கு மட்டுமின்றி, மூத்தோர்களும் விரும்பிப் படிக்க காரணமாகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சின்னச் சின்னப் பத்திகளில் ஓடும் நதியின் வேகத்தோடு நம்மை அழைத்துச்செல்லும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் விறுவிறுப்பான மொழிநடை. ஆகா… அற்புதம். உங்களின் வாசகன் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமையடைகின்றேன். வாழ்த்துகள்… எழுத்தாளரே.

உசாத்துணை:

தங்கையின் அழகிய சினேகிதி – இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *