திருவாளர் திருவிழா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 471 
 
 

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை)

இணக்கமற்ற அவர்கள் இருவரும் ஒரு வகையில் பொருத்தமான ஜோடி எனலாம். காரணம், அவர்கள் இருவருமே முட்டாள்கள். மனைவி, கணவரை மாக்கான், மட்டி, மடையன் என்று சொல்வாள். கணவர், மனைவியை மண்டூசு, தத்தி, அறிவிலி என்று அழைப்பார். அவர்களின் பூசல்களும் கூச்சல்களும் ஒருபோதும் ஓயாது.

ஒரு நாள் கணவர் நூறு பவுண்டுக்கு வெண்ணையும் அரிசியும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அதை அலமாரியில் வைத்த மனைவி, “நான் உங்களை மூடர் என்று ஏற்கனவே சொல்லவில்லையா? அதை நிரூபிப்பது போல எதற்காக இவ்வளவு வெண்ணையும் அரிசியும் வாங்கி வந்திருக்கிறீர்கள்? நம்முடைய மகனுக்குத் திருமணம் நடத்தப் போகிறோமா? அல்லது, உங்களுடைய தந்தைக்கு இறுதிச் சடங்கு நடக்க இருக்கிறதா?” எனக் கேட்டாள்.

“என்ன பேச்சுப் பேசுகிறாய்? என்ன திருமணம்? என்ன இறுதிச் சடங்கு? உன்னுடைய நாவை அடக்கிக் கொள்! அந்த அரிசியும் வெண்ணையும், வரவிருக்கிற திருவிழாவுக்கு உரியவை. அவற்றைத் தனியே எடுத்து வை!”

மனைவி அதைக்கேட்டு அமைதியானாள். அந்த அரிசியையும் வெண்ணையையும் தனியே எடுத்து பத்திரப்படுத்தி வைத்தாள்.

நாட்கள் நகர்ந்தன.

மனைவி திருவிழாவின் வருகைக்காகக் காத்திருந்து காத்திருந்து சலித்தாள். திருவிழா வருகிற பாட்டையே காணோம்.

ஒரு நாள் அவள் வீட்டின் முன்பு உள்ள பெஞ்சில் அமர்ந்துகொண்டிருக்கும்போது அந்நியர் ஒருவர் தெருவில் நடந்து செல்வதைப் பார்த்தாள்.

“ஐயா, இங்கே வாருங்கள்!” என அழைத்தாள்.

அவரும் வந்தார்.

“உங்களின் பெயர் திருவிழாவா?”

அந்தக் கேள்வியிலேயே அவளுக்கு மண்டைக்குள் களிமண் என்பதை அந்நியர் உடனடியாகப் புரிந்துகொண்டார்.

‘சரி, நாம் நம்முடைய பெயரைத் திருவிழா என்று சொன்னால் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்’ என எண்ணிக்கொண்டவர், “ஆமாம் சகோதரி! என்னுடைய பெயர் திருவிழாதான்!” என்றார்.

“உங்களுக்காகத்தான் நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

உங்களுக்காக அரிசியும் வெண்ணையும் வாங்கி வைத்துக்கொண்டு எத்தனை நாள் காத்திருப்பது? உங்களுக்கு ஒரு உதவி செய்கிறோம் என்பதற்காக நீங்கள் இவ்வளவு உரிமை எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்கள் தாமதத்துக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். இன்னும் நீண்ட காலத்திற்கு உங்கள் பொருட்களைப் பாதுகாத்துக்கொண்டிருக்க என்னால் முடியாது. நீங்கள் ஏன் அதை இன்னும் எடுத்துச் செல்லவில்லை?” என்றாள் கடுப்பாக.

‘ஆஹா,… இப்படியொரு வாத்து முட்டாளைப் பார்த்ததே இல்லை. இன்றைக்கு எனக்கு அதிர்ஷ்ட நாள் போல் இருக்கிறது!’ என எண்ணிக்கொண்ட அந்நியர், “கோபப்படாதீர்கள் சகோதரி! அதற்காகத்தான் வந்திருக்கிறேன். உங்களுடைய வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எப்படியோ ஒரு வழியாக இன்று கண்டுபிடித்துவிட்டேன்! தாமதத்துக்கு மன்னியுங்கள்!” என்றார்.

“சரி, போனது போகட்டும். வாருங்கள், வந்து உங்களுடைய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்!”

அந்த மனிதர் அவளுடன் வீட்டுக்குள் சென்று அவள் தந்த வெண்ணை மற்றும் ரொட்டி மூட்டையை வாங்கிக்கொண்டார். அதைத் தன் தோளில் சுமந்தபடி கிராமத்தை விட்டு வெளியேறினார்.

மாலையில் கணவன் வீடு திரும்பினார்.

மனைவி அவரிடம், “ஒரு வழியாக திருவாளர் திருவிழா இன்று வந்துவிட்டார். அவரது உணவுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!” என்றாள்.

“திருவிழா – வீட்டுக்கு வந்தாரா? என்ன உளறுகிறாய்?”

“நான் ஒன்றும் உளறவில்லை! திருவாளர் திருவிழா தெருவில் நடந்து செல்வதை நம் வீட்டிலிருந்து பார்த்தேன். அவரை அழைத்து வந்தேன். அவர் இவ்வளவு நாள் வரத் தாமதமானது பற்றிக் கடிந்துகொள்ளவும் செய்தேன். பிறகு அவரது உணவுப் பொருட்களான வெண்ணை மற்றும் அரிசியை அவரது வீட்டுக்கே கொண்டு செல்லும்படி கொடுத்து அனுப்பிவிட்டேன்!”

“மடைச்சி, மடைச்சி!” இரைந்தார் கணவர். “நீ ஒரு அடி முட்டாள் என்பதை நிரூபித்துவிட்டாய்! திருவிழா என்றால் என்ன என்பது கூடத் தெரியாத தத்தியாக இருக்கிறாயே!” என்ற அவர், “எந்தத் தெரு வழியாக அவன் சென்றான்?” என விசாரித்தார்.

அந்நியர் சென்ற வழியை சுட்டிக் காட்டினாள்.

கணவர் தனது குதிரையில் ஏறிக்கொண்டு, அவளால் திருவிழா என்று சொல்லப்பட்ட அந்த மனிதனைப் பிடிப்பதற்காக விரைந்தார்.

கிராமத்தை விட்டுச் சிறிது தூரம் சென்றிருந்த திருவாளர் திருவிழா, பின்னால் குதிரைக் குளம்படிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். குதிரையில் வரும் மனிதர், தனக்கு அரிசியும் வெண்ணையும் கொடுத்த பெண்மணியின் கணவராக இருக்கலாம் என்றும், அதைத் திரும்பப்

பெறுவதற்காகவே வந்துகொண்டிருக்கக் கூடும் என்றும் தோன்றியது. எனவே, அவர் தன்னிடம் இருந்த சாக்கு மூட்டையை அருகே இருக்கும் புதருக்குள் ஒளித்துவிட்டு சாலை ஓரமாக நின்றுகொண்டார்.

குதிரையில் வந்த கணவர், அருகே நின்று, “இந்த வழியாக மூட்டையுடன் ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

நினைத்தது சரிதான் என எண்ணிக்கொண்ட அவர், “ஆமாம், பார்த்தேன்!” என்றார்.

“போய் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?”

“வெகு நேரம் ஆகிவிட்டது!”

“நான் சற்று வேகமாகச் சென்றால் அவரைப் பிடிக்க முடியுமா?”

“கஷ்டம்தான்!” என்றார் திருவாளர் திருவிழா. இந்தக் கணவனும் முட்டாள் பீஸ்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. எனவே, “யோசித்துப் பாருங்கள். நீங்கள் குதிரையில் சவாரி செய்கிறீர்கள். குதிரை ஓடும்போது ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு என ஒவ்வொரு காலாக எடுத்து வைக்கத் தாமதமாகும். ஆனால், நீங்கள் துரத்திக்கொண்டிருக்கும் மனிதனோ, தனது இரண்டே கால்களால் ஓடிக்கொண்டிருக்கிறார். ஒன்று – இரண்டு, ஒன்று – இரண்டு என அவரால் குதிரையை விட வேகமாக ஓட முடியும்!'”

“நீங்கள் சொல்வது தங்கமான வார்த்தைகள்! இனி நான் என்ன செய்வது?”

“நீங்கள் விரும்பினால் நான் உதவுகிறேன். கீழே இறங்கி, உங்களுடைய குதிரையை என்னிடம் கொடுத்துவிட்டு, அவனைத் துரத்திச் செல்லுங்கள்! ஒன்று – இரண்டு, ஒன்று – இரண்டு என எண்ணியவாறே வேகமாக ஓடுங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி அவனைப் பிடித்துவிடலாம்!”

“ஆஹா! நீங்கள் எவ்வளவு நல்ல மனிதர்! எனக்கு அறிவுரை சொன்னது மட்டுமன்றி, முன் பின் அறியாதவராக இருந்தும், தானாக முன்வந்து உதவவும் செய்கிறீர்களே! கடவுள்தான் என் முன்பு உங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும்!” என நெகிழ்ந்தபடியே குதிரையிலிருந்து குதித்துக் கீழே இறங்கினார். அந்த அந்நியருக்கு நன்றி கூறி, குதிரையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் சுட்டிக் காட்டிய திசையில், “ஒன்று – இரண்டு,… ஒன்று – இரண்டு,…” என எண்ணியவாறே ஓடத் தொடங்கினார்.

அவர் பார்வையிலிருந்து மறைந்ததும் திருவாளர் திருவிழா அவர்கள், தான் புதருக்குள் மறைத்து வைத்திருந்த சாக்குமூட்டையை வெளியே எடுத்து, அதோடு குதிரையில் ஏறி எதிர்த் திசையில் விரைந்தார்.

முட்டாள் கணவர் வெகு தூரம் சென்று தேடிப் பார்த்தும் மூட்டையுடன் யாரையும் காணவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார். அவர் விட்டுச் சென்ற இடத்தில் அவரிடமிருந்து குதிரையைப் பெற்றுக்கொண்ட நபரும் இல்லை; குதிரையும் இல்லை. அந்த மனிதரோ குதிரையோ எங்கே

போனார்கள் என்பதற்கான எந்த அடையாளத்தையும் கண்டுபிடிக்கவும் இயலவில்லை.

அவர் வீடு திரும்பியதும் அடுத்த சச்சரவு தொடங்கியது. அரிசி மற்றும் வெண்ணையை மனைவி இழந்ததற்காகக் கணவர் சத்தம் போட்டார். அலர் குதிரையை இழந்ததற்காக மனைவி சத்தம் போட்டாள்.

கணவன், மனைவியை மடைச்சி என்றார்; மனைவி, கணவனை மட்டி என்றாள். ஆனால், அவர்கள் இருவருமே முட்டாள்கள் என்பது ஊருக்கு மட்டுமல்ல; அவர்களை முதல் முறையாகக் கண்ட அந்நியரான திருவாளர் திருவிழாவுக்கே தெரிந்துவிட்டது. அதன் மூலமாகத்தான் அவருக்கு இரு வெகுமதிகள் கிடைத்தன என்பதை எண்ணி அவர் உள்ளூர சிரித்துக்கொண்டார்.

இந்தக் கதையைப் பொறுத்தவரை, சொர்க்கத்தில் இருந்து விழுந்த மூன்று ஆப்பிள்களும் திருவாளர் திருவிழாவுக்குத்தான்! அந்தக் கணவனுக்கும் மனைவிக்கும் மட்டுமல்ல; எனக்கும் உங்களுக்கும் கூட ஒன்றும் கிடையாது! ஏன் என்று உங்களுக்கே புரிகிறதல்லவா!

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *