திருட்டுப்பையன்
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 432
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இதோ இருக்கிறாளே மீனுக் குட்டி, அவள் அப்பா பிள்ளை. அதோ, தரையில் கிடந்தபடி குறும்பு செய்கிறானே அவன் மணிப்பயல். அவன் அம்மா பிள்ளை. மீனா பேரில் எனக்கு ரொம்பவும் பிரியம். மணிப்பயல் மீது அவன் அம்மாவுக்கு அதிகமான ஆசை,” என்று பெருமை யோடு சொன்னார் ‘வீட்டு ஐயா’- சிதம்பரம் பிள்ளை.
அத்துடன் அவர் திருப்தி அடையவில்லை. தம் கையிலிருந்த குழந்தையோடு கொஞ்சிக் குலாவுவதில் மும்முரமாக ஈடுபட்டார். “இல்லை யாடி மீனி? நீ அப்பாவின் மீனுக் குஞ்சுதானே? செல்லக்குட்டி தானே?” என்று அன்பாகக் குழைந்தார். பூப்பந்து போல் தோன்றிய சிறு குழந்தையை ஆர்வத்தோடு தழுவி, கன்னத்தில் முத்தமிட்டு, அதன் சின்னஞ்சிறு உதட்டுச் சிங்காரச் சிரிப்பைப் பார்த்துப் பார்த்து மிக மகிழ்ந்து போனார்.
அதே அறையில் சுவர் ஓரத்தில் நின்று, சோர்ந்த முகத்தோடு அவரையே கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பக்கம் சிதம்பரம் பிள்ளையின் பார்வை ஆசையோடு வாட்டம் தாவி ஓடவில்லை. கொண்டுவிட்ட அப்பூ முகத்தில், ஏக்கம் துளும்ப நின்ற அழகு விழிகள் சிந்திய பார்வையை தந்தையின் நோக்கு எதிர்கொண்டு ஏற்றுக் கொள்ளவே யில்லை.
அச்சிறுவனை நோக்கியவாறு இருந்த நமசிவாயம் சிதம்பரத்தின் நண்பர் – “இவன் யார் பிள்ளை?” என்று கேட்டார்.
எதிர்பாராத அந்தக் கேள்வியினால் சற்றே கைப்படைந்து விட்ட சிதம்பரம் நண்பனின் முகத்தை நோக்கினார். “ஏன்? நம்ம பையன்தான். ராஜா அவன் பெயர்.” என்று சொன்னார்.
நமசிவாயம் இளம் முறுவல் பூத்தார். “வந்து, மீனு உங்கள் பிள்ளை என்றீர்கள். மணி அம்மாவின் செல்லப்பிள்ளை என்று சொன்னீர்கள். அந்தப் பையன், ராஜா யார் பிள்ளையோ என்ற சந்தேகம். அதனால்தான் எனக்கு ஏற்பட்டது,” என்றார்.
சிதம்பரத்துக்கு என்ன சொல்வது என்றே விளங்கவில்லை. ஆகவே, “அதுவா?” என்று கேட்டுவிட்டுக் கட கட வென்று சிரித்தார் அவர்.
ராஜாவின் கண்கள் மிரண்டு புரண்டன. நமசிவாயத்தின் பார்வையை எதிரேற்றதும் அவனுடைய பிஞ்சு உதடுகளில் சிறு சிரிப்பு நெளிந்தது. அவன் வெட்கத்தினால் தலையைத் தாழ்த்தினான் மகிழ்வினால் அம்முகத்தில் சிறு மலர்ச்சி பிரகாசித்தது.
“அவன் தான் மூத்தவன். நாலு வயசு ஆகுது. இந்த மீனுக்குஞ்சு பிறக்கிற வரையில் அவன்தான் ராசாப் பயலாக இருந்தான். அப்புறம் மீனா ராணி வந்து நம்ம இதய ராஜ்யத்தில் தனி இடம் பிடித்துக் கொண்டாள். இவளுக்கு இப்ப இரண்டு வயசு. மணிப்பயல் பிறந்து ஏழுமாசம் ஆகுது. அம்மாவுக்கு அவன் மீதுதான் கொள்ளை ஆசை. அதனாலே ராசாப் பயல் தனிக்காட்டு ராஜா ஆகிவிட நேர்ந்தது,” என்று பெருமையாகப் பேசினார் பிள்ளைகளைப் பெற்றவர்.
குளுமை என்று எண்ணி அவர் பேசிய பேச்சு எல்லாம் நமசிவாயத்தின் உள்ளத்தில் நெருப்பு மாதிரிச் சுட்டது. அவருடைய கண்கள் மட்டும் ராஜாவைப் பாராதது போல் பார்த்து அளந்து கொண்டிருந்தன.
அந்தச் சிறுவனின் நெஞ்சு விம்மி வடிந்தது. அவன் நாசி நெடிய மூச்சு ஒன்றை வெளியேற்றியது.
“பாவம்! பையனுக்கு தானாகவே பெருமூச்சு வருகிறது. இளம் உள்ளம் ஏங்கத்தானே செய்யும்?” என்று நமசிவாயம் நினைத்தார்.
“ஓடி வாடா ராஜாப் பயலே! இப்படி வா!” என்று இனிய குரலில் அவனை அழைத்தார் அவர்.
அவனுடைய முகம் நிமிர்ந்தது. அவர் முகத்தில் அவனுடைய மின்னும் கண்கள் என்ன கண்டனவோ! காலை வெயிலைக் கண்டதும் பொன்மயமாய்ப் பூத்தொளிரும் சூரியகாந்தி போல் அச் சின்னஞ்சிறு அழகு முகமும் சோபை பெற்றது.
“வா வா…. ஓடி வா….இப்படி வா!” என்று அவர் விளையாட்டுத்தனம் பயிலவும் அவன் சிரித்தான். அவன் கண்களில் ஆனந்த மயமான ஒளி சுடரிட்டது. அவன் தயங்கித் தயங்கி நின்று, அடி அடியாக அசைந்து நெருங்கிக் கொண்டிருந்தான்.
“ராசாப் பயல் வந்து விட்டான்…இதோ வந்துவிட்டான் என்னைத் தொடப் போறான்….இதோ தொட்டுவிட்டான்…!”
நமசிவாயத்தின் குரல் அவனுக்குக் ‘குஷி’ ஊட்டிக் கொண்டிருந்தது. திடீரென்று, அதன் வசிய சக்தியைத் தவிர்க்க முடியாதவனாகி அவன் கலகலவென நகைத்துக் கொண்டு ஓடியே வந்து அவர்மீது சாய்ந்தான். அவர் அவனை வாரி எடுத்துத் தழுவிக்கொண்டார். அந்தப் பையனுக்குப் பொங்கி வந்த உற்சாகத்துக்கு ஓர் அளவு இருக்க முடியுமா, என்ன?
அவன் குதித்தான். ஓடி ஆடி விளையாடினான். அவரிடம் எவ்வளவோ பேசிக் களித்தான். நமசிவாயமும் அவனுடைய தோழனாக மாறி அவனுக்கு மகிழ்ச்சி ஊட்டிக் கொண்டிருந்தார்.
“பரவால்லியே, பயல் உங்களை பிரண்டு புடிச்சிட்டான் போலிருக்குதே?” என்றார் தந்தை.
ராஜாப் பயல் மேலும் மேலும் குதூகலத்தோடு கும்மாளி போடுவதைக் கவனித்த சிதம்பரம் பிள்ளையும், அவர் மனைவி மீனாட்சியும் ஆச்சரியப்பட்டார்கள்.
“இன்னிக்கு அவனுக்கு என்னமோ தெரியலே, ஒரே குஷியாக இருக்கிறான். யாரு கூடவும் அவன் இப்படிப் பேசிச் சிரித்து விளையாடியதே இல்லை. அவன் அம்மாச்சி வந்தால்தான் கொஞ்சம் சந்தோஷமாகக் காணப்படுவான்,” என்றார் தந்தை.
அவனுடைய அப்பா விலகிப் போயிருந்த சமயத்தில், ராஜாப் பயல் நமசிவாயத்தின் முகத்தை ஆர்வத்தோடு கவனித்து மெதுவாகச் சொன்னான்:
“மீனு அப்பாப் பிள்ளை. மணி அம்மாப்பிள்ளை. நான் அம்மாச்சி பிள்ளை.”
இந்த விஷயம் சிறுவனின் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது என்பதை நமசிவாயம் உணர்ந்தார். அவருக்கு அப் பையன் மீது அனுதாபம் ஏற்பட்டது. ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கிடையிலேயே பேதம் காட்டுவானேன்? சின்ன சிறுசுகளின் களங்கமற்ற உள்ளத்தில் வேதனை உண்டாக்குவானேன்? தங்கள் தவறுகளை அவர்கள் எப்பொழுதுதான் உணர்வார்களோ?’ என்ற எண்ணம் அவர் மனசில் படர்ந்தது.
“எங்க ஆச்சி இங்கே அடிக்கடி வரமாட்டாள். எப்பவாவதுதான் வருவாள்,” என்றான் பையன். அவன் குரலில் வருத்தமும் ஏக்கமும் கலந்திருந்ததாக அவருக்குத் தோன்றியது.
அவரது மடிமீது புரண்டு கொண்டு, அவருடைய சட்டைப் பித்தானைத் தன் விரல்களினால் உருட்டி விளையாடியவாறே அவன் கேட்டான், “நீ ஊருக்குப் போயிரிவியோ?” என்று.
“ஊம்ம்…. சாயங்காலம் போய் விடுவேன்”.
“ஏன் போறே? இங்கேயே இரேன்,” என்று பையன் மனுச் செய்தான்.
“இங்கேயே இருந்துவிட முடியாதே. எனக்கு வேறே வேலைகள் இருக்கு, ராஜா,” என்று நமசிவாயம் சொன்னார். அவர் கை விரல்கள் அவன் தலைமுடியினூடே கிளு கிளுத்து ஓடிக் கொண்டிருந்தன.
“வேண்டாம். நீ போக வேண்டாம்.” என்று கெஞ்சினான் ராஜா.
“ஊம்” என்றார் அவர்.
அவன் ஆனந்த மிகுதியால் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான். பிறகு அவனுடைய உற்சாகம் மேலும் அதிகரித்து விட்டது. “டேய் சும்மா கிடடா!…. அடேய், சும்மா இருக்கியா, உதைக்கவா?” என்று அப்பா அடிக்கடி அதட்ட வேண்டிய அளவுக்கு அவன் குதியாட்டம் வளர்ந்து விட்டது.
சாப்பிட்டு முடிந்ததும் எல்லோரும் ஓய்வு பெறுவதற்காகப் படுத்தார்கள். ராஜாப் பயலும் படுத்தான். சீக்கிரமே தூங்கிப் போனான். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நமசிவாயம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிய போது கூட அவன் விழித்து எழ வில்லை.
‘அவன் கண் விழித்ததும் என்னைக் காணாமல் ஏமாற்றம் அடைவான். நான் போய்விட்டதற்காக வருத்தப்படுவான்’ என்று அவர் எண்ணினார். உடனடியாகவே இந் நினைப்பும் தோன்றியது
‘அந்த உள்ளத்தில் எத்தனையோ ஏமாற்றங்கள்! எவ்வளவோ வேதனைகள்! இந்தச் சிறு வயசிலேயே ஏனோ இந்த நிலைமை?’
அச் சிறு உள்ளத்தின் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பற்றியே எண்ணிக்கொண்டிருக்க நமசிவாயத்துக்குப் பொழுது இல்லை. அவருடைய அலுவல்களே அவருக்கு மிக அதிகமாக இருந்தன. அதனால் அவர் அந்தப் அந்தப் பையனை மறந்துவிட்டார் என்று கூடச் சொல்லலாம்.
சிதம்பரம் பிள்ளையை அவர் அடிக்கடி சந்திப்பதுமில்லை. சில மாதங்களுக்கு ஒரு தடவை, எப்பொழுதாவது, அபூர்வமாக நிகழும் அவர்களுடைய சந்திப்பு.
ஆறு-ஏழு மாதங்களுக்குப் றகு, அப்படி ஒரு சமயம், நமசிவாயம் சிதம்பரம் பிள்ளையைச் சந்திக்க நேர்ந்தது. பேச்சோடு பேச்சாக ராஜாப் பயலைப் பற்றியும் சொல்லி வைத்தார் சி.பி.
“அந்தப் பயல் தான் ஒரு மாதிரியாக மாறிக்கொண்டு வருகிறான். மனசிலே ஏதோ எண்ணத்தை வச்சுக்கிட்டு அடம் பிடிக்கிறான். அவன் இப்படி கல்லுளிமங்கத்தனம் யெல்லாம் பண்ணுவான்னு நாங்க எண்ணியதே இல்லை” என்று தந்தை சொன்னார். அவன் தங்கையை அடிக்கிறான். தம்பியைத் தூக்கிக் கீழே போடுவதில் அவனுக்கு உற்சாகம் பிறந்திருப்பதாகத் தெரிகிறது. சில சமயம், “எனக்குப் பசிக்கலே. சோறு வேண்டாம். தண்ணி வேண்டாம்”, என்று சொல்லிப் படுத்து விடுகிறான். உடம்புக்கு ஒண்ணும் இல்லாத போதே சீக்கு வந்து விட்ட மாதிரி பம்மாத்துப் பண்ணி, அழுது அடிச்சு அவன் அம்மாவுக்கு ரொம்பவும் தொல்லை கொடுக்கிறான்” – இவ்வாறு குறை கூறினார் பிள்ளை.

நமசிவாயம் “அட அடா!” என்றார். பிறகு சொன்னார்: “மூன்று குழந்தைகள் உள்ள இடத்தில், நீங்கள் அவனை ஒதுக்கி வைத்ததனாலே தான் அவன் இப்படி எல்லாம் செய்கிறான்….”
“நீங்க ஒண்ணு” என்று குறுக்கிட்டார் சி.பி.
“நாங்க அவனுக்கு என்ன குறை வைக்கிறோம்? சாப்பாடு தின்பண்டம், நல்ல சட்டை துணிமணி, விளையாட்டுச் சாமான்கள் – எதில்தான் அவனுக்குக் குறைவு?” என்றார்.
சொந்தக் குழந்தையின் உள்ளத்தைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத தந்தை மீது நண்பருக்கு அனுதாபம்தான் உண்டாயிற்று. ஆகவே அவர் அதிகம் பேசவில்லை.
நமசிவாயம் மறுபடியும் நண்பரைச் சந்திப்பதற்குள் காலம் வெகு வேகமாக ஓடிவிட்டது. ஓடுகின்ற காலக் கிழவன் அலட்சியமாக ஒரு வருஷத்தை விழுங்கி ஏப்பமிட்டிருந்தான். உலக நிகழ்ச்சிகளையும் மனிதரின் வாழ்க்கைப் போராட்டங்களையும் உள்ளத் துடிப்புக்களையும் பற்றி இதயமற்ற காலதேவனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?
சிதம்பரம் பிள்ளையின் வீட்டில் நமசிவாயம் அடி எடுத்து வைத்த போது, அங்கே அமைதி குலைந்த நிலையே காணப்பட்டது. பிள்ளை ராஜாப் பயலை ‘கண்ணு மூக்கு தெரியாமல்’ அறைந்து கொண்டிருந்தார். மீனாட்சி, “செய்றதைச் செய்து போட்டு இப்ப என்ன, குற அழுகை வேண்டிக் கிடக்குது குற அழுகை?” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
நமசிவாயம் சற்று நேரம் காத்திருந்தார். கோபம் தணியப் பெறாத தோற்றத்துடனேயே சி.பி. வந்து சேர்ந்தார். “என்ன பையன் என்ன செய்தான்?” என்று கேட்ட நண்பரிடம் பெரிதாகவே முறையிட்டார் அவர்.
“அந்தப் பயல் வரவரக் கெட்டுப் போனான். அஞ்சரை வயசு ஆகுது. அதுக்குள்ளே இவன் பெரிய திருட்டுப் பயலாக வளர்ந்து விட்டான். ஏதோ தின்பண்டம் – கின்பண்டம் திருடுகிறான்னு நினைக்கிறீங்களா இல்லையே! அவனுக்குப் பிரயோசனம் இல்லாத சாமான்கள், விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் அமுக்கி விடுகிறான், ஐயா. சட்டைப் பையிலிருந்து ரூபாய் நோட்டுகளை அபேஸ் பண்ணி எங்கோ பதுக்கி வைத்து விடுகிறான். ‘எங்கேடா வைத்தே, என்ன செய்தே’ என்று கெஞ்சியும் கொஞ்சியும், உருட்டியும் மிரட்டியும் கேட்கக் கேட்க அவன் சும்மா சிரித்துக் கொண்டே நிற்கிறான். எவ்வளவு உதை வேண்டுமானாலும் கொடுங்கள்; அறையுங்கள் – ஊம் ஹூம்! கல்லுளிமங்கன் கெட்டான் போங்கள். பிறகு, எப்பவாவது, அவனுக்கா இஷ்டம் ஏற்படுகிற போது அதை மறைத்து வைத்திருக்கிற இடத்தைச் சொல்லுவான். இந்தத் திருட்டுப் புத்தி இவனுக்கு எங்கே யிருந்துதான் வந்ததோ?”
சிதம்பரம் பிள்ளை அழாத குறையாகப் புலம்பித் தீர்த்தார். நமசிவாயம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாரே தவிர, வாய் திறக்கவில்லை. அவர் மனம் எங்கோ சஞ்சரித்து வந்தது. திடீரென்று அவர் கேட்டார், “இன்றைக்கு அவன் என்ன செய்தான்?” என்று.
“திருட்டுப் பயல் தன் வேலையைக் காட்டி விட்டான். மேஜை மீது என் பவுண்டன் பேனா இருந்தது. விலை உயர்ந்தது. அதைக் காணவில்லை. இந்தப் பயல்தான் எடுத்து எங்கோ பதுக்கி வைத்திருக்கிறான். அவனை நயமாகவும் பயமாகவும் கேட்டுப் பார்த்தோம். டேய் ராசா, கண்ணே, மூக்கே என்றெல்லாம் சொல்லச் சொல்ல அவன் அசையவில்லை. அற்புதமாக எதையோ சாதித்து விட்டு. அந்தப் பெருமையில் சொக்கி நிற்கிறவன் போல, சிரித்து கொண்டே இருந்தான். எவ்வளவு தூரம்தான் பொறுக்க முடியும்? கொடுத்தேன் சரியான பூசைக் கபாபு!” என்று தந்தை தெரிவித்தார்.
நமசிவாயத்தின் உள்ளம் கசப்பு உணர்வைப் பெருமூச்சாக வெளியே கக்கியது. வீணாகக் கெட்டுப்போன குழந்தைக்காக வருத்தப்படுவதா, அப்படிக் கெடும்படி தூண்டிய பெற்றோருக்காக வருத்தப் படுவதா என்றே புரியவில்லை அவருக்கு. குழந்தைகளைக் கவனித்து ஆராய்வதில் சிரத்தை உடையவர் அவர். குழந்தைகளைப் பற்றிய நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் வழக்கமும் அவருக்கு உண்டு. எனவே, ராஜாப் பயல் ஏன் திருட்டுப் பையனாக மாறினான் என்பதை அவரால் ஒருவாறு ஊகிக்க முடிந்தது.
பெற்றோரின் அன்பையும் கவனிப்பையும் இழந்துவிட்ட பையன் அவர்கள் கவனத்தைத் தன்பக்கம் திருப்பிக் கொள்ள ஆசைப்பட்டான். அது இயல்பு. அதற்காகத் தான் அவன் சீக்காளி மாதிரி முன்பு செயல் புரிய முயன்றான். உறுதியான உடலும், குறும்புத் தன சுபாவமும் துடிப்பும் பெற்றிருந்த அவனுக்கே அது பிடிக்க வில்லை போலும்! ஆகையால் சுலபமாகப் பிறர் கவனத்தைக் கவருதற்காகத் திருடக் கற்றுக் கொண்டான் அவன்.
சாதாரண சமயங்களில் தன்னைத் திரும்பியும் பார்க்காத பெற்றோர்கள் தங்கையையும் தம்பியையும் கொஞ்சுவதை வாழ்க்கை இன்பமாகக் கருதி விட்ட அப்பாவும் அம்மாவும் – சாமான்களைப் பறி கொடுத்ததும் தன்மீது அபரிமிதமான கவனிப்பைச் செலுத்துவதை அவன் உணர்ந்து கொண்டான். அவர்கள் கெஞ்சினார்கள். கொஞ்சுதலாகவும் நயந்து பேசியும் கேட்டார்கள். இவற்றைப் பெறுவதற்காக அவன் அடியும் உதையும் படவும் தயாராக இருந்தான். அவைகூட அவனுக்கு விசேஷமான கவனிப்புக்களாகத்தான் பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவன் சிரித்துக்கொண்டிருக்க முடிகிறது.
இவ்வாறு எண்ணினார் நமசிவாயம்.
“நீங்கள் அடிப்பதனாலும் ஏசுவதனாலும் ராஜாப் பயலின் திருட்டுக் குணத்தைப் போக்கடிக்க முடியாது. அவனுக்குத் தேவையான அன்பையும் கவனிப்பையும் தருவதற்கு நீங்கள் தயங்கக் கூடாது. மற்றக் குழந்தைகளை விடத் தான் மட்டமானவன் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் நிலைபெறும்படி விட்டுவிடக் கூடாது. இந்த எண்ணம் நிரந்தரமாகி விடுமானால். அவன் வாழ்க்கையே பாழாகி விடும்”. என்று அவர் – நமசிவாயம் நண்பரிடம் சொன்னார்.
அவருடைய பேச்சை அங்கீகரிக்கவும் முடியாமல், வெட்டிப் பேசவும் மனமில்லாமல், மோட்டைப் பார்த்துக் கொண்டு மோவாயைத் தடவியபடி உட்கார்ந்திருந்தார் சிதம்பரம் பிள்ளை.
– ஜூலை 1957, உமா இதழ்.
தொடர்புள்ள சிறுகதைகள்
குங்குமச் சிமிழ்
ஆர்.வெங்கட்ராமன்
May 28, 2026
கௌரவம்
இரா.கலைச்செல்வி
May 28, 2026
நாவினால் சுட்ட வடு
எஸ்.மதுரகவி
May 28, 2026