திருடனுக்கு வேலை




பரமன் அந்த வெளியூர் பஸ் நிலையத்தில் அப்படியும் இப்படியும் உலாவிக் கொண்டிருந்தான். இறங்கும் பயனியர்களை உன்னிப்பாக அலசிப் பார்ப்பான். யாரை பிடித்தால் தேறும் என்று கணக்கு போடுவான். பசையுள்ள ஆசாமியாக இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொள்வான்.

டீசண்டாக வெளியே வரும் ஒருத்தரைப் பிடிப்பான். ‘ஹலோ, ரூம் வேணுமா. நல்ல டீசண்டா ரூம் சார்.’.
அப்படியேப் பேசிக்கொண்டு வெளியே வருவான். கொஞ்சம் வெளிச்சம் குறைவானப் பகுதிக்கு வந்தப் பின் டக்-கென்று தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை அவன் கையில் வைப்பான். ‘அலட்டி கொள்ளாமல் அங்கே ATM பக்கம் போலாம் . 20000 எடுத்துக் கொடு. காயப்படமா போய்ல்லாம் ‘.
பெரும்பாலான பயணியர் கேட்டத் தொகையை சத்தம் போடாமல் கொடுத்து விடுவார்கள். ஒரு சிலர் பார்கெய்ன் செய்வார்கள். பரமனின் டார்கெட் குறைந்தது 5000. ஒரு சில சமயம் சிலர் கெஞ்சினால், அவர்களை விட்டு விடுவான்.
பரமனுக்கு ஒரு பாலிசி உண்டு. அதாவது போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பேராசை கிடையாது. தன்னிடம் காசு தீரும் சமயம் தான் அடுத்த டார்கெட் ஆரம்பிப்பான். அப்புறம் இன்னொரு விஷயம்: பரமன் யாரையும் கத்தியால் கீற மாட்டான். மிரட்டுவானே தவிர யார் மேலும் கத்தி வைத்ததாக சரித்திரம் இல்லை.
ஒரு மாதம் வரையில் தான் ஒரு ஊரில் இப்படி. அடுத்த மாதம் தன்னோட ஜாகையை வேறு ஊருக்கு மாற்றி விடுவான்.
அவனிடம் டார்கெட் செய்யப்பட்ட ஆசாமிகள் பொதுவாக போலீசிடம் புகார் கொடுப்பதில்லை. அதற்கான காரணம்: தொகை சிறியது. சம்பவம் ராத்திரியில் நடப்பது. அடுத்த நாள் தங்கள் வேலை கெட்டு விடக் கூடும். பாதிக்கப்பட்ட ஆசாமிகள் வேற்று ஊர் நபர்களாக இருப்பதால் கேஸுக்காக திரும்ப இந்த ஊருக்கு வந்து அலைய வேண்டியிருக்கும் என்ற பயம்.
பரமனின் வீட்டைப் பொறுத்த வரை அவன் ஒரு சேல்ஸ்மேன் . வீட்டிற்கும் சுமாராக பணம் கொடுப்பான். நிறைய கொடுத்தால் அவர்களுக்கு தன மகன் தப்பான வழியில் போவதாக நினைத்து விடுவார்கள் என்று பரமன் அந்த மாதிரி திட்டம் போட்டான்.
இப்படி வாழ்க்கை சௌகரியமாகக் கொண்டுயிருந்தது.
அன்று ஒரு நாள் தன் டார்கெட்டைப் பிடித்து 20000 லபக்கென்றுப் போட் டுக் கொண்டப் பின் , டீ சாப்பிடக் கிளம்பினான். திடிரென்று ஒரு ஆளின் கை பலமாக பரமன் தோளில் வலிமையாக விழுந்தது. தன்னைப் பிடிப்பவன் தனக்கு வல்லவனுக்கு வல்லவனா இருக்கணும் என்று பரமன் நினைத்தான்.
திரும்பிப் பார்க்க திடகாத்திரமான ஒரு நடுத்தர ஆள் தென்பட்டார்.
‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்’.
‘எனக்கு எதுவும் பேச விருப்பமில்லை’.
‘அப்போ போலீஸ் கஸ்டடி தான். எப்படி சவுகரியம்?
அப்போது தான் எதிரில் நிற்பது சாதாரமான ஆள் கிடையாது என்பதை உணர்ந்தான் பரமன்.
‘என்ன வேணும்? என் லூட்டியில் 20 பர்சன்ட் குடுக்கிறேன் ‘
‘எனக்கு உன் பணம் வேணாம். நான் CID டிபார்ட்மென்ட். நீ இப்பப் பண்ற வேலையை நிறுத்திட்டு எனக்காக வேலை செய்யணும். நீ ரொம்ப கிளவரா ஜனங்களை எடை போடுறே. அந்த திறமையை எங்களுக்காக யூஸ் பண்ணனும். கஞ்சா , போதை, தங்கம் இந்த மாதிரி கடத்தற ஆளுங்களைக் காட்டிக் கொடுக்கனனும். ஒவ்வொரு மாசமும் ஒரு மாவட்டம். ரெகுலர் சேலரி போல உனக்குப் பணம் கொடுக்கப்படும். ஓகேயா?’
தனக்கு சாய்ஸ் கொடுக்கப்படுவதாகப் படவில்லை பரமனுக்கு. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாக வெறுமனே தலையை ஆட்டினான். கட்டாயமாக நல்வழிக்கு திருப்பப்பட்டான் பரமன்.