தியாகம்
வழக்கத்திற்கு மாறாக அன்று செசன்ஸ் கோர்ட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரிசை கிராம மக்கள் வீர நரசிங்க அவதாரம் வேஷம் போடும் வீரபத்ரனின் கொலை வழக்கு நடக்கப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சைலேன்ஸ்’ என்று டவாலி கூற, நீதிமன்றமே அமைதியானது. நீதிபதி டயஸின் மீது ஏறி இருக்கையில் உட்கார, நின்றிருந்த அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
“வீரசிங்க-வீரபத்திரன்’ என்று மூன்று முறை அழைக்க கைகளில் விலங்கிடப்பட்ட வீரபத்திரன் குற்றவாளிக் கூண்டில் வந்து நின்றான். இப்பொழுது நீதிபதி பெஞ்ச் கிளார்க்கைப் பார்க்க, அவர் குற்றம் சாட்டப்பட்ட வீரபத்திரனைப் பார்த்துக் கேட்கலானார்.
“”ஏன்பா வீரபத்திரா, நீ உன்னோடு கூத்தாடும், இரணிய வேஷம் போடும் நடேசனைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு அன்று பக்த பிரகலாதன் என்னும் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது கொலை வெறி கொண்டு, நடேசனை அடித்து, இழுத்து உன் மடியில் வைத்து அவன் வயிற்றை உன் கூரிய நகங்களால் கிழித்து அவனுடைய குடலை எடுத்து, உன் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு அவனை ஆவேசத்தோடு கொன்றுவிட்டாய். இதற்கு உன் பதிலென்ன?”
“”ஐயோ, நான் கொல்லவில்லை” என்று கத்திக்கொண்டே விலங்கிட்ட தன் கையால் தலையிலடித்துக் கொண்டான், வீரபத்திரன். ஆவேசமாக “”அவனைக் கொன்றது, சாமி அவதாரம் – நானில்லை. நான் இல்லவே இல்லை” என்று அழுது ஆர்ப்பரித்தான். நீதிமன்றமே இப்படி ஒரு கூச்சலைக் கேட்டிராது போலும்! கூச்சல் மட்டுமல்ல இதுபோன்ற ஒரு விநோதமான வழக்கையும் கண்டிருக்காது.
நடந்தது இதுதான். அன்று புரிசை கிராமத்தில் நடந்த கூழ் வார்க்கும் திருவிழாவில் புரிசை ரத்தினம் பிள்ளை நாடக சபாவின் “பக்தபிரகலாதன்’ என்னும் நாடகம் நடந்து கொண்டிருந்தது. இரணிய ராஜன் தன் மகன் பிரகலாதனை “கடவுள் எங்கே?’ என்று கேட்டுக்கொண்டே, சாட்டையால் அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். அடி தாங்காமல் ஓடிக் கொண்டிருந்த பிரகலாதன், நாடகக் கொட்டாய் நடுவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய கம்பத்தைக் காட்டி, “”என் நாராயணன் இதில் இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டி விட்டுத் தள்ளி நின்று கொண்டான். இரணியன் வீர கர்ஜனையுடன் வலது காலால் கம்பத்தை எட்டி உதைத்து “”எங்கேடா? நாராயணன்” என்று கத்தினான். அவ்வளவுதான், உள்ளே இருந்த வீரசிங்க வேஷம் போட்ட வீரபத்திரன் கம்பத்தைப் பரித்துத் தள்ளிக்கொண்டு, ஆவேசமாய் பாடிக்கொண்டு, இரணிய வதத்தில் இறங்கினான். தாளம், மேளம், ஆர்மோனிய இசைக் கருவிகள், வீரபத்திரனின் பாடலுக்கு பேருயிர் ஊட்ட, கையில் இருந்த கதையாலும், சாட்டையாலும், அடித்து விரட்டிக் கொண்டே வர, முடிவில் இரணிய வேஷம் போட்டிருந்த நடேசன் கீழே விழுந்தான்.
வழக்கமாக விழுந்தவன் உடனே நாடகக் கொட்டையிலிருந்து பொம்மை ஒன்றை எடுத்து நரசிங்க அவதாரத்திடம் யாருமறியாமல் கொடுத்துவிட வேண்டும். பொம்மையை மடியில் கிடத்தி, அதன் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருக்கும் சிவப்பு பைப்பைக் கிழித்தெடுத்து நரசிங்க அவதாரம் வேஷம் போட்டவன், கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தாக வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன? அடிவாங்கிய இரணியன் – நடேசன் கீழே விழுந்தவன் உடனே எழுந்திருக்கவில்லை. அவனால் எழுந்திருக்க இயலவில்லை. நிதானமாகத் தள்ளாடி எழுந்தவனை, வீர நரசிங்க வேஷம் போட்ட வீரபத்திரன், என்றுமில்லாத கோர ஆவேசமாகக் குதித்து அவனை இழுத்துத் தன் மடியில் வைத்து, கூரிய நகங்களோடு கையுறை அணிந்த கைகளால் வயிற்றைக் கிழித்து, நிஜமாகவே அவன் குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்து கொண்டான்.
நாடகக் கொட்டகை அருகில் அமர்ந்திருந்த நாடக ஆசிரியர் ரத்தினம் பிள்ளை, அதட்டிக்கொண்டே மேடையேறி அவன் அருகில் வர எல்லாமே முடிந்துவிட்டது. நாடகம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம், மேடையில் ஏறி சூழ்ந்து கொண்டது.
வீரபத்திரனைப் பார்த்து ரத்தினம் பிள்ளை தலையில் அடித்துக் கொண்டார். திட்டினார். வீரபத்திரனின் முகம், உடை, தொடை, கை, கால்கள் எல்லாமே ரத்தக் கறையாக இருந்தன. உடனே நடேசனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவன் இறந்துவிட்டதாக டாக்டர் சொன்னார்.
போலீஸ் வந்தது. போஸ்ட் மார்ட்டம் செய்த நடேசன் உடல், அவனுடைய சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் மனைவியும் மூன்று மகள்களும் அழுது புரண்ட காட்சி ஊர் மக்களின் கண்களில் உதிரமாய் கொட்டச் செய்தது.
ஆயிற்று. வீரபத்திரனை போலீஸ் கைது செய்து ஸ்டேசன் அருகில் இருந்த சப் ஜெயிலில் அடைத்தது. அவனைப் பார்க்க ரத்தினம் பிள்ளை வந்தார். அவரைப் பார்த்ததும் வீரபத்திரன், ஜெயில் கம்பிகளின் மீது தலையை இடித்துக்கொண்டு அழுதான். “ஏன் இப்படிச் செய்தாய்?’ என அவனிடம் கேட்டார் ரத்தினம் பிள்ளை.
“”ஐயா நான் சிறு வயதிலிருந்தே தங்கள் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வருகிறேன். என் உடல், உயிர், மூச்சு எல்லாமே நாடகம்தான். எந்த வேஷமானாலும் ஓர் அர்ப்பணிப்போடு நடித்து உங்களிடம் பாராட்டு பெறுவேன். ஆனால் பக்த பிரகலாதன் நாடகத்தில் நான் நரசிங்க அவதாரம் போட்டு நடிக்கும்போது அந்த நாராயணனே என் உடலினுள் புகுந்து ஆட்டுவிப்பதைப்போல ஒரு பிரமை. அப்போது மெரள் என்மீது வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அன்று எப்படி இதெல்லாம் நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. நடேசன் எனக்கு அண்ணன் முறை. அவனிடம் எனக்கு விரோதம் இல்லை. இப்படி நடந்துவிட்டதே நான் என் செய்வேன்?” அழுதுகொண்டே கூறினான்.
புரிசை ரத்தினம் பிள்ளை என்றால், நாடகத்துக்காகவே வாழ்பவர் என்று இந்த மாவட்டத்திற்கே தெரியும். அவர் காலடி படாத ஊரே இல்லை எனலாம். இவரிடம் இதுவரை நூற்றுக்கணக்கானோர் நடிப்பைக் கற்றுக்கொண்டு தனி நாடகக் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர். ஆனால் வீரபத்திரன் மட்டும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தன் குரு ரத்தினம் பிள்ளையைப் பிரிய மனமில்லாமல் அவருடனேயே இருந்து நடித்து வந்தான்.
ஐம்பது ஆண்டுகளாக நாடகம் நடத்தி வரும் ரத்தினம் பிள்ளைக்கு இது புரியவில்லை. இது கொலையா? தெய்வச் செயலா? ஒருவேளை வீரபத்திரனுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்துக் கெடுத்து விட்டேனோ?
“நாராயணா! இது என்ன விபரீதம்?’ என்றவாறு தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதார். என்ன செய்வது? சட்டம் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.
நீதிமன்றத்தில் அவன் கோரமாக அழுத விதம் நீதிபதிக்கே ஒருவித சங்கடத்தைக் கொடுத்தது. எஸ்கார்ட் போலீûஸ சைகை காட்டி அழைத்துச் செல்லும்படிக் கூற போலீஸார் வீரபத்திரனை அழைத்துச் சென்று விட்டனர்.
நீதிபதி காரில் வீட்டுக்குச் சென்றார். காரிலிருந்து இறங்கி வந்ததும் வராண்டாவில் தந்தை ரத்தினம் பிள்ளை அமர்ந்திருப்பதைப் பார்த்தார். “”வாங்கப்பா! எப்போ வந்தீங்க?” என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தார். பதில் கூறாத தன் தந்தையை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
இருவரும் அந்தப் பெரிய ஹாலில் அமர்ந்தனர். ரத்தினம் பிள்ளை தன் மகன் நீலகண்டன் ஜட்ஜ் ஆகி, ஆஜானுபாகுவாக அமர்ந்திருப்பதைப் பார்த்தார். மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது. நாடக வாசனையே பிடிக்காமல், சட்டம் படித்து வக்கீலாகி இன்று இந்த ஜில்லாவுக்கே நீதிபதியாக வந்தது ரத்தினம் பிள்ளைக்குப் பேரானந்தம்.
“”என்னப்பா என்னையே பார்க்கறீங்க?”
“”என் மகன், ஒரு கூத்தாடியோட மகன் } ஜில்லா ஜட்ஜ். உன் அம்மா உயிரோடிருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பாள்” என்றவாறு பனித்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“”உன்னிடம் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன்”
“”என்னிடமா? என்னப்பா அது? சொல்லி இருந்தால் நானே ஊருக்கு வந்திருப்பேனே. சொல்லுங்க நான் என்ன செய்யணும்?”
“”வீரபத்திரன் உனக்குத் தெரியும். சின்ன பையனிலிருந்தே என்னிடம் நாடகம் கத்துக் கொண்டவன். நடிப்பாலும், நாடக மோகத்தாலும், திருமணமே செய்து கொள்ளாமல் எனக்கு சிஷ்யனாக இருக்கிறவன். நம்ம ஊரிலேயே அன்று பக்த பிரகலாதன் என்னும் நாடகம் போட்டோம். என் முன்னிலையிலேயேதான் அது நடந்தது. வீரபத்திரனுக்கு நரசிங்க அவதாரம் ரொம்பப் பிடிக்கும். தன் முழுத் திறமையையும் காட்டி, நான் சொல்லிக் கொடுத்த பாட்டையும் “லயம்’ மாறாமல், அடி பிறழாமல், பாடிக்கொண்டு, ஆவேசமாக நடித்துக்கொண்டு இருந்தபோது அவன் மேல் “மிரள்’ வந்து அதாவது தெய்வம் வந்து உள்ளபடியே இரணியன்னு நெனைச்சி, அவன் குடலை உருவி மாலையா போட்டுக்கிட்டான். இரணியனாக நடித்த நடேசன் இறந்துவிட்டான். இது நாடகத்தில் ஏற்ற வேஷத்தின் ஆவேச நடிப்பால் ஏற்பட்ட விபரீதம். இருவருக்கும் எந்தவிதமான விரோதமும் இல்லை.
“”உனக்குத் தெரியும். வீரபத்திரன் ஊரில் பணக்காரப் பிள்ளை. திருமணமே செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. அவனிடமிருந்து 10 ஏக்கர் நிலமும், பம்பு செட்டும் நடேசனின் மனைவி மீது கிரையம் எழுதிவிட்டான். சில லட்சங்களும் ரொக்கமாகக் கொடுத்து ஓரளவுக்கு அவங்க கஷ்டத்தைத் துடைத்துள்ளான். அதனால் நீ மனசு வச்சி அவனை எப்படியாவது விடுதலை செய்யணும்” என்று கூறிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்து தன் மகனைக் கையெடுத்துக் கும்பிட்டார்.
ஏதோ நெருப்பை மிதித்து விட்டவர்போல், பதறிப்போன நீதிபதி ஆவேசமாகப் பேசினார்.
“”அப்பா! நான் ஒரு நீதிபதி. நீதி தவறாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்று, நான் பதவி ஏற்றபோது நீங்கதானே ஆசீர்வதித்து அனுப்பினீர்கள். அப்பா – மகன் என்ற பாசம் மட்டுமே நமக்குள் இருக்க வேண்டும். தீர்ப்பிலோ, வழக்கிலோ, நீதி பரிபாலனத்திலோ தாங்கள் தலையிட்டால் அது நம் இருவருக்குமே நல்லதல்ல. இந்த எண்ணத்தோடு நீங்கள் இங்கிருக்க வேண்டாம். நீங்கள் போகலாம். நேர்மை தவறாத ஒரு புரிசை ரத்தினம் பிள்ளை மகன் ஒரு சிறந்த நீதிபதி என்று ஊர் உலகம் மதித்தால் போதும்” என்று கூறி விட்டுத் தன் இருக்கையை விட்டெழுந்து, தன் தந்தையை இருகரம் கூப்பி வணங்கினார். தலைகுனிந்த ரத்தினம் பிள்ளை திரும்பிப் பாராமல், தன் ஊருக்கு வந்துவிட்டார்.
நீதிபதிக்கு அந்த இரவெல்லாம் தூக்கமில்லை. ஒரு நீதிபதியின் நிலைப்பாடு சட்டதிட்டத்திற்கும் சாட்சிகளுக்கும் கட்டுப்பட்டதே. இதில் தனி மனிதன் தலையிடுவது தவறு என்று தன் தந்தைக்குத் தெரியாதா? போய் வருகிறேன் என்றுகூட கூறாமல் போய் விட்டாரே! முன்சீப்பாகப் பதவி ஏற்று இந்த இருபது ஆண்டுகளில் சப் ஜட்ஜாகவும், அடிசனல் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாகவும், இன்று டிஸ்டிரிக்ட் ஜட்ஜாகவும் பதவி உயர்வு பெற்று வந்துள்ளேன். நேர்மையும், நீதியும் இரு கண்களாகப் பாவிக்க வேண்டும் என்ற தந்தை சொல்லைத்தானே நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இது என்ன சோதனை? நீதிபதிக்கு இரவெல்லாம் உறக்கமில்லை.
மறுநாள் பங்களாவை விட்டு நீதிமன்றம் வளாகம் வந்து தனது சேம்பருக்குச் சென்றதும், முதல் வேலையாகத் தன் பி.ஏ.வையும், ஹெட் கிளார்க்கையும் அழைத்தார். வீரபத்திரன் (எ) வீர நரசிங்கன் கொலை வழக்கு கோப்பைக் கொண்டு வரச் செய்தார். வழக்கை (டிரையல் அண்டு டிஸ்போசல்) விசாரித்து முடிக்க உடனே அடிசனல் டிஸ்டிரிக்ட் கோர்ட் நீதிபதிக்கு மாற்றிவிட உத்தரவிட்டார். அதன்படியே அடுத்த ஒரு மணி நேரத்தில், வழக்கு அடிசனல் நீதிபதிக்குக் கோப்பு மாறிவிட்டது. நீதிபதி சற்று நிம்மதியாக அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
பிற்பகல் இரண்டு மணிக்கு இவருக்கு ஊரிலிருந்து போன் வந்தது. ரத்தினம் பிள்ளை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் உறவினர் ஒருவர் போன் செய்திருந்தார்.
நீதிபதி தன்னுடன் இரு டாக்டர்களை அழைத்துக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டார்.
நாடகக் காவலர் ரத்தினம் பிள்ளை படுத்த படுக்கையாக இருந்தார். அவரிடம் கூத்து பயின்ற நூற்றுக்கணக்கானவர்கள் வந்து பார்த்துச் சென்றவண்ணம் இருந்தனர். வந்திருந்த இரு டாக்டர்களும் ரத்தினம் பிள்ளையைப் பரிசோதித்துவிட்டு பிழைப்பது ஆண்டவன் செயல் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அவருடைய ஒரே மகன் நீதிபதி நீலகண்டன் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அந்தக் காலத்தில் புரிசை கிராமத்தில் ரத்தினம் பிள்ளை நாடக சபா ஒன்றை நிறுவி அந்தக் கூத்துப் பட்டரையிலேயே அவர் காலம் ஓடிக் கொண்டிருந்தது. உமையாம்பிகையை மணந்து பதினைந்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. வேண்டாத தெய்வமில்லை. கடைசியில் திருப்பதி ஏழுமலையானுக்குப் பிரார்த்தனை செய்ததில் ஓர் ஆண்மகன் பிறந்தான். அவனையே தன் உயிராக வளர்த்து வந்தார். பத்து வயதில் உமையாம்பிகை உலகத்தைவிட்டே போய் விட்டார். ரத்தினம் பிள்ளை ஒருவரே பையனுக்குத் தந்தையாகவும் தாயாகவும் மார்மீதும், தோள்மீதும் போட்டு வளர்த்தார். மகன் விருப்பப்படியே சட்டம் படிக்க வைத்தார். இன்று மாவட்ட நீதிபதியாக அவர் காலடியில் உட்கார்ந்துகொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். ஆனாலும் பிள்ளை அவர்கள் மகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மகனை எவ்வளவோ நம்பிக்கொண்டு இருந்தார். மகனிடம் வைத்த கோரிக்கை நிறைவேறவில்லை. இத்தனைக்கும் வீரபத்திரன் ஓர் அப்பாவி. இன்றுதான் பிணையில் வெளியில் வந்து குருவைப் பார்க்க வந்திருந்தான்.
அதோ கூட்டத்தோடு வீரபத்திரனும் வந்துவிட்டான். உள்ளே வந்தவன், நாற்காலியில் உட்கார்ந்திருந்த நீதிபதியை வணங்கினான். அவரும் சங்கடத்தோடு பதிலுக்கு வணங்கினார். வந்தவன் ரத்தினம் பிள்ளை அருகில் சென்று அவர் கால்களைத் தொட்டு கன்னத்தில் ஒற்றிக் கொண்டான். ரத்தினம் பிள்ளை அவனைப் பார்த்தார். கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
பிள்ளை கைகாட்டி வீரபத்திரனை அழைத்தார். “”நீ நரசிங்க அவதாரப் பாடலை எனக்காக ஒருமுறை பாடு. மனச் சாந்தியோடு இறந்து விடுகிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.
“”ஐயா! நீங்கள் பாட்டெழுதி என்னைப் பயிற்றுவித்தீர்கள். இந்த நேரத்தில் இதைப் பாடுவது என் பாக்கியம்” என்றவாறு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். பரணை மேலிருந்து நரசிங்க அவதார ராஜபார்ட் உடைகளை எடுத்துத் தரித்துக் கொண்டான். அங்கிருந்த ஆர்மோனியம் ஆரோக்கிய சாமியும், தபேலா, டோலக் தட்ட தண்டபாணியும், தங்கள் இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு தயாரானார்கள்.
“”ஓம் நமோ! ஓம் நமோ!” என்று கடவுள் பக்திப்பாடலை ஓரிருவர் பாடிவிட்டு, நரசிங்க அவதாரப் பாடலைப் பாடலானான். வார்த்தைகள் அவன் வாயிலிருந்து நெருப்பாக விழுந்தன. ஆவேசத்தோடு எகிறினான். குதித்தான். தாளமும் ஆர்மோனியமும், தபேலாவும், அவன் பாடலுக்கு உயிர் ஊட்டின. தோள்
பட்டையில் அவன் கட்டியிருந்த கட்டைகள், காது மடல்கள், கிரீடம் எல்லாமே பேசின. இரணிய வதம் செய்ய ஆவேசத்தோடு துள்ளினான். அவன் கட்டுக்குள் அடங்காமல் ஆகாசத்தில் பறந்தான்.
ஓ! நரசிங்கனே அவன் உடலில் புகுந்து ஆட்டுவிக்கும்போது ஆகாசத்தில் பறந்தான்.
பொதுவாக நாடக ஒத்திகையின்போது, ஒரு மனித பொம்மையை வைத்திருப்பார்கள். அருகில் ஒரு சேரில் படுக்க வைத்திருந்த பொம்மையை எடுத்து, சேரில் உட்கார்ந்து கொண்டு ஆக்ரோஷமாக அதன் வயிற்றைக் கிழித்து, குடல் போலிருந்த பிளாஸ்டிக் பைப்களை எடுத்து மாலையாக அணிந்து கொண்டான். அவன் உடல் வழக்கத்துக்கு மாறாக துடித்தது. இப்பொழுது அவன் பாடிய வார்த்தைகளில் வாய்குழற ஆரம்பித்தது. மூர்ச்சையாகி சரிந்தான்.
ஆபத்தான நிலையில் இருந்த பிள்ளையை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்ததினால், இவனை யாரும் பார்க்கவில்லை. ஆனால் வாத்தியக்காரர்களும், ஏனைய நடிகர்களும் அவன் அருகில் ஓடி வந்தனர். நரசிங்க அவதாரம் எடுத்த நரசிம்மன் மூச்சு நின்று விட்டது. பதை பதைத்துப்போன ஜட்ஜ் அருகில் சென்று பார்த்தார். பாவம்! கொலைக் குற்றவாளி மரண தண்டனை அனுபவித்து விட்டானே!
அவன் உயிரை ரத்தினம் பிள்ளைக்குத் தாரை வார்த்து விட்டானோ? மரணப் படுக்கையில் இருந்தவர் எழுந்து உட்கார்ந்து கொண்டார். பிணமாகிப் போன சிஷ்யனைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். அவர் வளர்த்த பிள்ளையல்லவா? எழுந்து சென்று உயிர்த் தியாகம் செய்த அவனை மடியில் கிடத்திக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார். அவன் கொடுத்த உயிரில் ரத்தினம் பிள்ளை வாழ்ந்தாக வேண்டும். கூத்துப்பட்டரையை இயங்கச் செய்ய வேண்டும். இன்னொரு நரசிங்கனை உருவாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பக்திப் பரவசமூட்டும் பக்தப் பிரகலாதன் நாடகத்தை நடத்த வேண்டும்.
– அ.இலட்சுமிபதி (நவம்பர் 2014)