தின்னாதே! – ஒரு பக்கக் கதை






ஊட்டி மலை மீது ரயில் மெது மெதுவாக ஏறிக்கொண்டு இருந்தது. ஜன்னல் வழியே தெரியும் இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தபடி, முதன்முறையாக ஒரு குடும்பம் அதில் பயணம் செய்தது.

வழியில் ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்று மூச்சுவிட்டது. விற்பனைப் பையன் ஒருவன், கையில் ஒரு தட்டில் விதவிதமான தின்பண்டங்களை வைத்து விற்றுக் கொண்டு வந்தான். அதில் போண்டா போன்ற ஒரு அயிட்டம் ரொம்பப் புதுசாக இருக்க, ஆளுக்கு ஒன்று வாங்கினார் அப்பா.
ரயில் மீண்டும் கிளம்பியது. சற்று தூரம் சென்றிருக்கும். அந்தக் குடும்பத்தின் பையன் ஆர்வமாக அந்தப் புதிய தின்பண்டத்தை எடுத்துத் தின்னத் தொடங்கினான். மற்றவர்களும் அடுத்து தின்னத் தொடங்கும்போது, பையன் கத்தினான்… “ஐயையோ… வேண்டாம்! இதைத் தின்னாதீங்க. இதைத் தின்னதுமே எனக்குக் கண் தெரியாம போயிடுச்சு. எல்லாமே இருட்டாயிடுச்சு!”
மற்றவர்கள் திடுக்கிட்டு விழிக்க, ரயில் ஒரு சுரங்கப் பாதைக்குள் சென்றுகொண்டு இருந்தது!
– ஜூலை 2007