கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 5,331 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

இரண்டு அறை. சாமிக்கென்று சின்ன சந்து ஹால், சமையலறை, கழிவறை குளியலறை என்று எட்டு சதுரத்தில் அடக்கமாய் ஒரு வீடு. ஹாலில் உள்ள சோபாவில் சரிந்து டீபாயில் கால் கை நீட்டி தலையை அன்னாத்தி மேலே பார்த்தபடி இருந்தான் சுரேந்தர். தலைக்கு மேலே மின் விசிறி சுற்றியது,

‘விசிறி கடிகார வரிசையில் சுற்றினால் காற்று வரும். எதிர் வரிசையில் சுற்றினால் ?!….வாழ்க்கை இந்த மாதிரிதான் போய்விட்டது. எப்படியோ தடம் புரண்டு விட்டது, !‘ பெரு மூச்சுவிட்டு நிமிர்ந்தான். சுவரில் அவனும் அவன் மனைவியும். திருமணத்திற்கு பின் எடுத்த முதல் புகைப்படம். அழகான மனைவி. ஏன் அடக்கமானவளும் கூட. இப்போது…? மனசுக்குள் கேள்வியைப் போட்டான்.

“ஏன் அப்பா உம்ன்னு உட்கார்ந்திருக்கீங்க ?” – பத்து வயது மகன் மனோ. நல்ல துறு துறு. தபாலில் வந்த மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டு சோபாவில் ஏறி அப்பாவைக் கட்டிக்கொண்டான்

“ஏன் அப்பா பேச மாட்டேங்குறீங்க?…” கன்னத்தைத் திருப்பினான்.

“ஒன்னுமில்லே மனோ…”. இப்போதுதான் நல்ல சுதாரிப்புக்கு வந்து மகனைக் கட்டி அணைத்தான்.

“என் மார்க் லிஸ்ட் பார்த்தியா?”

“பார்க்கலையே ?!”

குழந்தை காட்டினான்.

“ஆங்கிலம் 91 கணக்கு 100 சமூக அறிவியல் 95 அறிவியல் 93….” சொல்லிக் கொண்டே போனான். அவன் கவலை அவனுக்கு. இந்த வயதில் இதுதான். படிக்கும் வயதில் இதைப் பற்றித்தான் நினைவு வேண்டும். சிந்தனை வேண்டும்.

“படிக்க மாட்டேன் போ”- மாறான சிந்தனை முரண்டு பிடிக்கத் தோன்றும். முரண்டு பிடிவாதமாகும், முரட்டாகும், முரடாகும். வாழ்க்கை !

“ஹாய்….ஹோத்தா!”

“என்கிட்ட வெளையாட்டுக் காட்டினே..! மஞ்சா சோத்தை எடுத்திடுவேன்.“ – வாழ்க்கை திசை மாறிப் போகும்.

படிக்கும் வயதில் படிப்பு என்றால்….

“வணக்கம் சார்.”

“நல்லா இருக்கீங்களா?“

“நல்லா இருக்கேன்!”

“என்ன பண்றீங்க?”

“எம்.பி.ஏ முடிச்சுட்டு டாடா நிறுவனத்துல வேலையில இருக்கேன். நல்ல சம்பளம்.”

”குட்மார்னிங் சார்.”

“எஸ் குட்மார்னிங்க”

“நம்ம மாவட்டத்து மக்கள் உங்களைச் சந்திக்க காத்திருக்காங்க”

“வரச் சொல்.”

“கலெக்டர் ஐயா. வணக்கம்‘

“வணக்கம். எனி ப்ராப்ளம்?“

“எங்க கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லே.”

“அப்புறம்?”

“பள்ளிக்கூடம். அது இது….”

“ஓ கே நான் எல்லாத்தையும் நிவர்த்தி பண்றேன். அரசாங்கத்துக்கு எழுதறேன்.”

நாலு பேர் மதிக்கும் உத்தியோகம். மதிப்பாய் நடக்கும் கண்ணியம். பதவி வரும் போது பணிவு வரும். படிப்பு வரும் போது அழகு வரும். படிக்கும் போது படிப்பு. எழுதும் போது எழுத்து. அதைப் பற்றிதான் சிந்தனை, செயல் வேண்டும். அதே போல் தான் வாழும்போதும். இந்த நாட்டில் இப்படித்தான் வாழ வேண்டுமென்கின்ற நெறிமுறை இருக்கின்றது. மாறினால்… மாற்றப்பட்டால்….?

“என்னப்பா மறுபடியும் உம்ன்னு ஆகிட்டீங்க?”

“ஒ…ஒன்னுமில்லே…” சாமாளித்தான்.

“நீங்க வரவர சரி இல்லே. சரியா பேச மாட்டேன்றீங்க..” குழந்தைகளுக்கு என்ன கூர்மையான அறிவு! அப்பன் சரி இல்லாததை துல்லியமாய்க் கண்டுபிடித்துவிட்டான்.

“அம்மாவும் சரி இல்லை?” – அடுத்து அவனுக்கு வருத்தம்.

சுரேந்தர் துணுக்குற்றான். “என்ன சரி இல்லே?” – என்ன அர்த்தத்தில் கேட்கிறான். தன்னை கவனிக்கவில்லை என்றா. அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சரியான பேச்சு வார்த்தை இல்லை என்றா அவன் மனதில் தங்களைப் பற்றி என்ன குறை?

இவன் அறிவிற்கு எட்டும் அளவில் உள்ளே இருக்கிற பிளவு தெரிகிறது. கணவன் மனைவியின் விரிசல் புரிகிறது என்றால் குழந்தை மனம் எப்படி இவனுக்கு ஆரோக்கியமாக இருக்கும்? – நினைக்க உள்ளுக்குள் திக்கென்றது.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லியே!?“- மகனை இறுக்கிக் கட்டிக்கொண்டான். குழைந்து போனான் குழந்தை.

அம்மா அப்பா அன்பு, அணைப்பில் எல்லா குழந்தைகளும் குழைந்துதான் போகின்றன.

‘பிரவீணா ஏனிப்படி மாறிப்போனாள்?!…மாறிப் போகின்றாள்? ‘- சுரேந்தருக்குள் மறுபடியும் நினைவு ஓடியது.

அன்றைக்கு அவள் இருந்த இருப்பிற்கும் இன்றைக்கு இருக்கும் நிலைக்கும் நிறைய மாறுதல்கள். கணவன் மனைவிக்குள் கடுமையான கண்ணாடித் தடுப்பு மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் ஒரு அவஸ்தையான அந்தரங்க தவிப்பு. புரட்ட முடியாத கனமான கனம்.

எப்படி விழுந்தது?

நாம் காரணம். நாமே காரணம்! நல்ல குடும்பப் பெண்ணாக இருந்து…. கணவன், குழந்தை என்று கவனித்தவளை கெடுத்தது நாம். மனதிற்குள் அடித்துச் சொன்னான்.

கெடுத்தால் மட்டும் ஒருத்தி கெட்டவளாகிவிட முடியுமா? பாதை திருப்பிவிட்டால் மட்டும் தவறான வழியில் ஒருத்தி போவாளா. வழி தவறென்று திரும்ப வாய்ப்பில்லையா…? சகதியில் விழுந்த பின்பு நாறுகின்றது என்று எழுந்திரிக்காமல் நீ தள்ளி விட்டாய் விழுந்து கிடக்கிறேன் சேராய் இருந்தாலும் பரவாயில்லை என்பது என்ன ரகம்?- புத்தி புரண்டு கேள்வி கேட்டது.

எப்படி இருந்த குடும்பம், மனைவி?

அத்தியாயம் – 2

சுரேந்தருக்கு அலுவலகம் விட்டால் உடனே வீடு. வழியில் தங்குமிடமெல்லாம் கிடையாது,

“ஹாய் பிராண்!” – பெயரை முழுதும் உச்சரிக்காமல் முக்காலும் உச்சரிக்காமல் உற்சாகமாக அழைத்துக் கொண்டே உள்ளே நுழைவான். மாலை வந்ததும் வீடு நுழைந்து மனைவியைப் பார்த்தால் தான் அவனுக்கு அலுவலக களைப்பெல்லாம் தீர்ந்து போகும். நல்ல கணவன் யாருக்கும் அப்படித்தான்.

போகும் போது பிரவீணா கூட இவனைக் கிளு கிளுத்துதான் அனுப்புவாள். வாசலுக்கு வெளியே வந்து, அக்கம் பக்கம் யாராவது இருக்கின்றார்களா என்று திருட்டுப் பார்வை பார்த்து, திடீரென்று கன்னத்ததில் பசக்கென்று முத்தமிட்டு வாயைத் துடைத்து புன்னகை புரிந்து அனுப்புவாள். சமயங்களில் இவனும் அவளைச் சடக்கென்று கட்டிப்பிடிப்பான்.

“விடுங்க கசங்குது -” முரண்டுவாள்.

“எது?” – இரட்டை அர்த்தத்தில் கேட்பான்.

“உங்க சட்டை!” இவளும் சமாளித்து பதில் சொல்வாள்.

இவன் விடமாட்டான். அவளும் விலக மாட்டாள்.

“அப்புறம் கழட்டிப் போடுவீங்க. நான் துவைக்கனும் இஸ்திரி போடனும்.” – கொஞ்சுவாள்.

சுரேந்தர் ஏக்கமாய்ப் பார்ப்பான். அவள் பேச்சின் அழகு உதட்டின் குவியல் ஒட்டியிருக்கும் உரசல் எல்லாவற்றையும் ரசிப்பான். அவன் மனைவி அவனுக்கு அழகு. அவனவன் மனைவியும் அவனவனுக்கு அழகு.

எல்லார் மனைவியும் எல்லாருக்கும் அழகு. எந்த கணவனாவது ‘ஐயே! என் பொண்டாட்டி அழகா இல்லே!’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கின்றானா…?! திருப்பிக் கொண்டால் அவன் நல்ல கணவனில்லை. இல்லை… அது அவள் காதில் விழுந்தால் ‘அப்படின்னா ஏன்ய்யா என்னைக் கட்டிக்கிட்டே?’ – அடுத்த கேள்வி கேட்பாள். மண்டையிலும் அடிப்பாள். கணவன் மனைவிக்குள் வருத்தம் வரக்கூடாது. வந்தால் வாழ மாட்டார்கள்.

சுரேந்தருக்கு அந்த முத்தமும் அழுத்தமும் பகல் பத்து மணி நேரம் தாங்கும். சில சமயத்தில் நாலு மணி நேரம் தாங்காது. மதியம் வந்து விடுவான். பகல் என்று பார்க்காமல் தொல்லை செய்வான். ‘மேட்னி’ முணகுவான். அவர்கள் அர்த்தத்தில் மேட்னி வேறு. அது இளசுகள் விளையாட்டு.

இவன் பிடித்த பிடியை விடமாட்டான்.

“ஐயா ஜாலியா இருக்கனும்ங்குற நெனப்புலதான் பையனை விடுதியில சேர்த்தீங்களாக்கும்?!” – அவன் மூக்கு நுனியைப் பிடித்து செல்லமாக கிள்ளுவாள்.

“ரெண்டு காரணமிருக்கு” நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொல்வான்.

“என்ன?”

“முதல் காரணம். குழந்தைங்க பெத்தவங்களை விட்டுப் பிரிஞ்சா நல்லா படிப்பாங்க.”

“அப்புடியா?!”

“ஆமாம். அம்மா அப்பாக்கிட்ட இருந்தா செல்லம் குடுப்பீங்க. படிடா கண்டிக்க கண்டிக்க மாட்டீங்க. எழுதுடா அடிக்க மாட்டீங்க. விடுதியில….படிச்சுதான் ஆகனும். படிக்கிற நேரத்துல படிப்பு. எழுதுற நேரத்துல எழுத்து. விளையாடுற நேரத்துல விளையாட்டு, சாப்பாட்டு நேரத்துல சாப்பாடு. துக்க நேரத்துல தாக்கம்ன்னு எல்லாம் சரியா இருக்கும்”

“அப்புடீங்களா?! புள்ளைங்களைக் கவனிக்க முடியாமத்தான் விடுதியில கொண்டு போய் விடுறாங்கன்னு நெனைச்சேன்!” – நொடிப்பாள்.

“அதுவும் உண்மை. டாக்டர், வக்கீல்ன்னு தொழில்ல இருக்கிற பெத்தவங்க, பிரபலங்களால புள்ளைங்களைக் கவனிக்க முடியாது, ரெண்டு சம்பாத்தியம் உள்ளவங்களும் அப்புடித்தான். கண்டுக்கவே முடியாது. எல்லாத்தையும் விட முக்கிய காரணம் புருசன் பொண்டாட்டி இப்புடி ஜாலியா இருக்க முடியாது.”

“நீங்க இந்த கடைசி காரணத்துக்காகத்தான் விட்டிருக்கீங்க.”

“ஆமாம்!”

“பாவம் புள்ளை ஏங்கும்”.

“ஆமா.”

“அது குழந்தை மனசைப் பாதிக்கும்”.

“புத்தி படிப்பிலிருந்தா பாசம் தலை தூக்காது. தாக்கினாலும் பாதிப்பு வராது”

“விடுதியில படிக்கிற புள்ளைங்க பெத்தவங்க மேல பாசமில்லாம இருக்காங்களே?!”

“அது பெத்தவங்க தன்னைத் தனியே விட்டுட்டாங்களேங்குற கோபம்.”- சில்மிசம் செய்வான்.

“போதும் விடுங்க எப்பவும் உங்களுக்கு இதே நெனைப்பு.” விலகாமல் முரள்வாள்.

“இளமை இருக்கிறபோது துாத்திக்கனும். விட்டா முதுமையில வருத்தப்படனும்”.

வாலிப வயதில் கணவன் மனைவி தனித்திருந்தால் இப்படித்தான். ஆணுக்கு உற்சாகம் பிறந்துவிடும். பெண்கள் என்ன மாய மந்திரம் போட்டு வைத்திருக்கிறார்களோ?! ஆண்கள் சுற்றி சுற்றி வருவார்கள்.

“அப்புறம்மா?“ ஜாக்கெட் ஊக்கைக் கழற்றிக் கொண்டே பேச்சை ஆரம்பிப்பான்.

“….”

“இன்னைக்கு ரோட்டுல செம பிகர். நல்ல கட்டைபோனா”

“பின்னாலேயேப் போனீங்களா?”

“பொண்டாட்டி இருக்கும் போது பொறத்தியா ஏன்டான்னு போன மனசை இழுத்து வந்துட்டேன்.”

“நல்ல புள்ளைதான்.”

“இல்ல கெட்ட புள்ள” – இறுக்குவான்

“ஆ… வலி வலி…”

அலுவலகம் விட்டு கொஞ்சம் இருட்டிப் போய் வந்தால் இன்னும் விசேசம். “ஏன் லேட்?” இவள் கேட்பாள்.

“புது சி.டி கெடைச்சுது புடிச்சிக்கிட்டு வர்றேன்.” இவன் சொல்லி முடிப்பதற்குள் “உவ்வே…” குமட்டுவாள்.

“என்னம்மா வாந்தி அடுத்ததா?“ சுரேந்தர் கேட்க….

“மூஞ்சி!” – முறைப்பாள்.

“என்னடி?”

“இந்த கேசட் சி.டி. கண்டுபிடிச்சவனைக்கண்டா நான் கொலை பண்ணுவேன்.”

“எதுக்கு?”

“உங்களை மாதிரி புருசன் என்னை மாதிரி பொண்டாட்டிகிட்ட போட்டுக்காட்டி பாடாய்ப் படுத்துறதுக்கு.”

“பிரவீணா! புருசன்கிட்ட பொண்டாட்டி தாசி போல நடந்துக்கனும்ன்னு பெரிசுங்க சொல்லி இருக்காங்க”

“என்னைத் தாசியாவே ஆக்கிடுவீங்க போலிருக்கு.”

“எனக்கே எனக்கு மட்டும்தானே!”

“படிக்கும்போது குனிஞ்ச தலை நிமிர மாட்டேன். அக்கம் பக்கம் பார்க்க மாட்டேன். ஆபாச சுவரொட்டியும் பார்த்தது கெடையாது. குமுதம், ஆனந்த விகடன் படிச்சாக்கூட அதெல்லாம் கெட்ட புத்தகம் ஏன் படிக்கிறேன்னு அம்மா திட்டுவா.” – முணகுவாள்.

“இப்போ? “- இவன் எதிர் கேள்வி கேட்பான்.

“அப்புடியே தலைகீழ் மாற்றம். ஆங்கிலம், தமிழ்ன்னு வேறு கெட்ட கெட்ட புத்தகமா திணிக்கிறீங்க. இதுல படம் வேற. கர்மம் கர்மம் என்னை எப்புடித்தான் மாத்துனீங்களோ?! இப்போ என் அம்மா பார்த்தா உசுரை விட்டுடுவா.”

“உன் தங்கை பார்த்தா?”

“சொல்ல மறந்துட்டேனே! முந்தா நாள் அவ திடுதிப்புன்னு வீட்டுக்குள்ளே நுழைஞ்சா. பிளேயர் மேல கேசட் இருந்துது. அவ பார்க்க கூடாதுன்னு சடக்குன்னு எடுத்து மறைச்சேன். மாட்டிக்கிட்டேன். பார்த்துட்டா. என்ன அதுன்னு கேட்டா. கலியாண கேசட்ன்னேன். போட்டுக் காட்டுன்னு பிடுங்கினா. நான் பிடியை விடாம நீலப்படம்டின்னு போட்டு உடைச்சேன். அக்கா! இதெல்லாம் நீ பார்ப்பியான்னு ஆச்சரியமா கேட்டா. நான் பார்க்கமாட்டேன் அத்தான் பார்ப்பார்ன்னு பழியை உங்க மேல போட்டேன். ஏய்! பொய் சொல்லாதேன்னு சொல்லி புருசன் பொண்டாட்டி போட்டுப் பார்க்கலாம் தப்பே இல்லே. என்கிட்ட குடு என் வீட்டுக்காரரை ஒரு வழிப் பண்றேன்னா. நான் விடலை.”

“அடிப்பாவி விட வேண்டியதுதானே?!”

“ஏன் இதைச் சாக்காய் வைச்சி நீங்க அவளைத் தொட்டுக்கவா?”

“போடி இவளே!”

“புருசன்காரன் ஏதுன்னு கேட்பான் விபரம் சொல்லுவாள். மானம் போகும். இன்னைக்கு என்ன கர்மம் தமிழா இங்கிலீஷா?”

“மலையாளம்!”

“தலையெழுத்து!”

சுரேந்தர் மனைவியைச் சமமாக மதித்து தன் வழிக்கு கொண்டு வந்துவிட்ட ரகம்.

பெண் வாழ்க்கை துணை. சமமாக நடத்த வேண்டும். அவள் சொல், புத்தி கேட்க வேண்டும். வேண்டும். அவள் அவள் உணர்வு, உணர்ச்சிகளுக்கு மதிப்புப் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஆணுக்குப் பெண் வில்லாக வளைவாள். அன்பாய், அடிமையாய் இருப்பாள். இதை சுரேந்தர் கரைத்துக் குடித்திருந்தான்.

கணவனும் மனைவியும் எந்த விசயத்தையும் விவாதிப்பார்கள். விருந்துகளுக்குச் சேர்ந்து செல்வார்கள். இவனுக்கு நல்ல வேலை. நான்கு பேர் மதிக்கும் சம்பளம். நல்ல திறமைசாலி, உழைப்பாளி. இவனின் மேலதிகாரி இவன் தோள்மீது கை போட்டுக் கொண்டு பீர் குடிப்பார். பிரவீணாவைத் தங்கச்சி என்று அழைப்பார். அதனால் அவர்கள் பார்க்காத பார்ட்டி பார்ட்டி கிடையாது. பழகாத சொசைட்டி இல்லை. எதிலும் அளவு, நிதானம்.

முதல் தடவை இவன் மனைவியோடு சென்றபோது “பீர் குடிக்கிறீங்களா தம்பி?” – அவர்தான் கேட்டார்.

“இல்ல சார். மனைவியோட வந்திருக்கேன்.” – பிரவீணாவிற்கு மதிப்பளிக்கும் பொருட்டு நாசூக்காக மறுத்தான். கணவன் நண்பர்களோடு சென்று வருகையில் கொஞ்சம் குடிப்பான் என்று தெரிந்தும் இவள் அந்த இடத்தில் குடி சொல்லவில்லை.

பின் இவளே கேட்டாள்.

“அது என்னங்க விஸ்கி குடிச்சிட்டு ஆடுறாங்க. தண்ணி அடிச்சா போதை ஏறுமா?“

“வீட்டுக்கு ஒருநாள் வாங்கி வர்றேன். சாப்பிட்டுப் பாரு” – சொன்னான்.

சொன்னபடி மறுநாள் விஸ்கி வந்தான். இருவரும் சேர்ந்து குடித்தார்கள்.

“அம்மா! தலையைச் சுத்துது.” – தள்ளாடித் தள்ளாடி விழுந்தாள். இவன் தாங்கித் தாங்கிப் பிடித்தான். அந்த மதுவின் போதையில் மங்கை சுகத்தை அனுபவித்தான். அவளுக்கும் அது புது அனுபவமாக இருந்தது. அதன் பிறகு அவளும் தொடவில்லை. இவனும் தொடவில்லை. அவன் தொட்டாலும் “பார்த்துங்க…” என்று எச்சரிக்கை எச்சரிக்கை செய்வாள். அந்த அளவிற்குப் பாசம் நேசம்.

கட்டிக் கொண்டவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். கொஞ்சும் நேரத்தில் கொஞ்சி, மிஞ்சும் நேரத்தில் மிஞ்சி, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் ஆணென்ற அகம்பாவமும், பெண்ணென்ற பிடிவாதமும் கூடாது. அவர்கள் தராசு தட்டுகளாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒளிமறைவு இருக்கக்கூடாது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

அத்தியாயம் – 3

சுரேந்தருக்குக் காம சூத்திரத்தையே கரைத்துக் குடிக்க ஆசை. புதிது புதிதாக படிக்க பரீட்ச்சித்துப் பார்க்க விருப்பம். அதனால் அவன் பலான புத்தகங்கள் குப்பையில் கிடந்தாலும் தேடிப்பிடித்து வாங்கி வருவான்.

ஆண்களுக்குத் தாம்பத்தியத்தில் ருசி வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தலைமேல் ஆடுவார்கள். எவருக்கு மனம் ஒன்றை விரும்புகிறதோ அதிலேயேதான் அவருக்கு ஆர்வமும் துடிப்பும் அதிகமாக இருக்கும்.

சுரேந்தர் படிக்கும் வரை ஒழுங்கான படிப்பு. இளமைக்கே உள்ள குறும்பு, குறு குறுப்பு, குதுாகலிப்பு, எல்லாமிருந்தது. ஆனால் அளவோடு இருந்தது. கல்லுாரி வந்துதான் நண்பர்கள் கெடுத்தார்கள்.

“புடிடா!” முதலில் சிகரெட். பில்டர் வைத்தது. அவர்கள் சம்பாதித்த காசில்லை. அம்மா அப்பா சம்பாதிப்பு. புகைக்கக் கற்றுக்கொடுத்தார்கள். முதலில் இருமி அப்புறம் சுருள் சுருளாய் வளையமிடும் வரை வந்து விட்டான்.

அடுத்து மது!

“பீர் போதை வஸ்து இல்லை. வெறும் பார்லி தண்ணி. சதை விழும். சூட்டைத் தணிக்கும், வயிறு கோளாறு ஆகாம லெட்ரீன் சுகமாக போகும்” என்று நிறைய அதன் உபயோகம் சொல்லி குடிக்க வைத்தார்கள். ரம், ஜின், விஸ்கி, பிராந்தி என்று எல்லாவற்றையும் தொட்டு உச்ச போதை வரை போய் அதையும் முடித்து விட்டான்.

சுரேந்தருக்கு எல்லாரையும் விட ஒரு தனி குணம். தொடமாட்டான். தொட்டால் எது உச்சமோ அது தொட்டுதான் திரும்புவான். இதற்கு இதுதான் எல்லை என்ற பிறகுதான் அவனுக்கு விடவே மனசு வரும். காரணம் பின்னால் ஏக்கம் கூடாதென்ற நினைப்பு.

“என்னடா இப்புடி?!” – மற்றவர்கள் ஆச்சரியமாக கேட்டாலும் இந்த பதிலையே சொல்வான்.

அடுத்து மாது!

கல்லுாரி வாழ்க்கையில் இவனை எவரும் எவளும் சிம்ப முடியவில்லை. எத்தனை நண்பர்களிருந்தார்களோ அத்தனை பேர்களும் இவனை அசைத்து அசைத்துப் பார்த்து அசந்து போனார்கள்.

“வி. டி. வரும்ங்குறாங்க உசுருக்கே வேட்டு எய்ட்ஸ் வரும்ங்குறாங்க. ஆளை விடுங்கப்பா !” அவர்களை உதறி புறந்தள்ளினான்.

வேலை கிடைத்தது…… லதா! -அவளுக்கு இவன் மேல் கண்.

“எக்ஸ்கியூ ஸ் மி சார்! இந்த லட்டர் சரியா இருக்கா?” – என்னமோ முக்கிய வேலையாய் வரும் சாக்கில் வந்து ஒட்டி நின்று உரசுவாள். முன் பக்கம் குனிந்து முந்தானையை நழுவ விடுவாள்.

உறுத்தும். இவன் குனிந்த தலை நிமர மாட்டான்.

“போடா ஜடம்!” – ஒரு நாள் அவளே வெறுத்து தனக்கு இவன் அதிகாரி என்று கூட நினைக்காமல் சுரேந்தர் காது படவே திட்டிவிட்டுச் சென்றாள்.

“நான் இப்புடி செய்ஞ்சேன். திட்டினேன்னு எனக்கு மெமோ கொடுத்தே….நீதான் என்னைக் கையைப் புடிச்சி இழுத்தே… இணங்க மறுத்தேன். வஞ்சம் வைச்சி மெமோ கொடுக்கிறேன்னு குற்றத்தை உன் மேல திருப்புவேன் படவா!” – என்று உடனே திரும்பி வந்து எச்சரித்து விட்டு வேறு சென்றாள்.

ஆண் ஆண்டியாக இருந்தாலும் அதிகாரியாக இருந்தாலும் ஆணாக நடக்காதவரை பெண்ணுக்கு அவர்கள் வெறுப்பானவர்கள். என்பதை கோடிட்டுக் காட்டிய முதல் பெண்மணி அவள்.

சுரேந்தர் ஆடிப் போனாலும் அவள் திட்டிவிட்டுச் சென்றதற்காக வருத்தப்படவில்லை. தொட்டுவிட்டால் மூழ்கித் திரும்புவோம் என்கிற பயம். இதையெல்லாம் மனைவியிடம்தான் வைத்துக் கொள்ள வேண்டும் மாற்றாளிடம் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சுயக்கட்டுப்பாடு. இதனால் எவள் வந்தாலும் திரும்பியே பார்ப்பதில்லை. பிரவீணா வந்தபிறகுதான் பெண்ணின் சுகத்தில் காலடி எடுத்து வைத்தான். அதில் முழுமூச்சனான். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து தனக்கேற்ற பெண்டாட்டியாக்கினான்.

இவள் வந்த புதிதில் ரொம்ப அடக்க ஒடுக்கம். உடம்பில் ஒரு இடம் தெரியாமல் புடவையைப் போர்த்தி பொத்தி பொத்தி இருந்தாள். பின்னால் இவன்தான் மாற்றினான். முதன் முதலில் ஒரு மஞ்சள் பத்திரிக்கையை எடுத்து வந்து காட்டினான்.

“ஐயோ!… கர்மம்! கர்மம்!” துாரத்தள்ளி ஓடினாள். சுரேந்தர்தான் வலுக்கட்டாயமாக அவளைப் பிடித்து இழுத்து வந்து அமர்த்தி “இதுவும் பாடப் புத்தகம் தான் படி” திணித்தான்.

“நான் மாட்டேன்!”

பிரவீணா கண்களை மூடிக் கொண்டாள்.

“திருமணமாகாதவங்க படிச்சாத்தான் தப்பு. மனசு கெட்டு தப்பு பண்ணுவாங்க. அப்புறம் மான அவமானம் சிக்கல். திருமணமானவங்க படிச்சா பிரச்சனையே இல்லே. பரீட்சித்துப் பார்க்கலாம்.” – கண்ணடித்தான்.

இவள் தொடவே இல்லை. துாக்கி துாரப் போட்டாள். சுரேந்தர் அவளை வழிக்குக் கொண்டு வர கோபப்பட்டவன் போல் இரண்டு நாட்கள் முகத்தைத் துாக்கி பேசாதிருந்தான். மூன்றாம் நாள் தானாக வழிக்கு வந்தாள்.

“எதுக்கு இந்த கோபம்? படிக்கிறேன்!” என்று தானே தொட்டாள். கணவனிடம் ஒத்துப் போனாள். அவன் ஆசை ஆட்டுவித்தபடியெல்லாம் ஆடினாள். சுரேந்தருக்குத் தாள முடியாத மகிழ்ச்சி.

மனைவி, கணவன் மனம் கோணாமல் நடந்து கொண்டால் எவ்வளவு இன்பம், மகிழ்ச்சி, குதுாகலம், கொண்டாட்டம். என்பதை நடைமுறையில் இருவருமே கண்டு கொண்டார்கள்.

அதற்கு அடுத்து கேசட் விவகாரம். முதல் நாள் வாங்கி வந்து விபரம் சொன்னதுமே இவளுக்கும் பார்க்க குறுகுறுப்பு ஆவல். ஆனாலும் அடக்கிக் கொண்டு.

“டெக்குல போட்டா கொன்னுடுவேன்!” – பொய்க் கோபம் எச்சரித்தாள்.

சுரேந்தர் மனைவியை அக்கக்காய் அலசியவன் அதனால் “அதையும் பார்க்கலாம்!“ – என்று சொல்லி சிரித்து டெக்கை உயிர்ப்பித்தான்.

“ஐயோ! அசிங்கம் அசிங்கம்!…” கைகளிரண்டினாலும் முகத்தை மூடிக்கொண்டாள் இவன் அவைகளைப் பிரித்து விட பார்த்த அவள் முகத்தில் ஏகப்பட்ட பிரதிபலிப்புகள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவ அளவில்தான் வேற்றுமையே தவிர உள்ளம், உணர்வு அளவில் எல்லாம் ஒன்று. ஆண்கள் தயங்க மாட்டார்கள். இவர்கள் தயங்குவார்கள், கூச்சப்படுவார்கள் இதுதான் வித்தியாசம்.. தட்டிக் கொடுத்து துணிவு கொடுத்தால் ஆணுக்கு இணையாவார்கள். ஏன் அவனையும் மிஞ்சுவார்கள்.

தினம் இவர்களுக்குக் கட்டில் போர்க்களம். வெற்றி தோல்வி சகஜம்.

“நீங்க பண்ற அநியாயத்துக்கு அளவே இல்லே. புள்ளய விடுதியில விடலாம்.” – ஒருநாள் தப்பித்தவறி விளையாட்டாய்ச் சொன்னாள். சுரேந்தர் தன் கொண்டாடத்திற்கெல்லாம் இதுதான் சரி என்று அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டான். பிடிபிடிவென்று பிடித்து மகனை மூன்றாம் வகுப்பில் ஊட்டி கான்வென்டில் சேர்த்துவிட்டான். பிரவீணா மெய்யாய்த் தடுத்தும் கேட்கவில்லை.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *