தாலிக்குள் இல்லை தங்கம்!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 3,437
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7
மாலை. பிரவீணா எப்போதும் போல் குளித்து மலர்ச்சியாக இருந்தாள். எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையிலுமிருந்தாள். அலுவலகம் விட்டுத் திரும்பிய சுரேந்தர் வழி வகுத்தான்.
“கோபம் தணிஞ்சிட்டாப் போல இருக்கு.”- வலிய பேச்சு கொடுத்தான்.
“ஆமா” – இவள் பதில் சொன்னாள்.
“அப்போ வெள்ளைக் கொடியா?”
“ஆமா. நாளைக்குப் பின்னால என்னைக் குறை சொல்லக்கூடாது. உங்க வற்புருத்தலுக்காக மட்டும் ஒரே ஒரு தரம். நான் மெழுகுவர்த்தி.” என்றாள்.
“இது போதும்டி என் செல்லக் கட்டி!” – இழுத்து அணைத்தான்.
‘அப்பா! எவ்வளவு சந்தோசம்! ‘- அவள் கண்கள் கணவனைப் பார்த்து ஆச்சரியத்தால் விரிந்தது.
மனைவி மனசு மாறிவிடக்கூடாது பயத்தில், “அப்போ நான் உடனே வேலையை ஆரம்பிக்கிறேன்.” என்று சுரேந்தர் காபி கூட குடிக்காமல் வெளியில் பறந்தான்.
அரை மணி நேரத்தில் அதற்கென்றிருந்த பிரத்தியோக புத்தகம் தேடிப் பிடித்து வாங்கி வந்தான். உள்ளே நுழைந்து கதவை அடைத்து பிரவீணாவையும் இழுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து புரட்டினான். அதிலுள்ள விளம்பரங்களை ஒன்று விடாமல் படித்தான்.
“இதோ பார் இந்த ஜோடி தான் நம்ப வயசு. ஒத்து வரும். விண்ணப்பிக்கவா?” – காட்டி கேட்டான்.
“நான் இந்த விசயத்துல உங்க கை பொம்மை. உங்க விருப்பம் எது வேணுமின்னாலும் செய்ங்க. நீங்க வான்னா வருவேன் போன்னா போவேன். என் விருப்பம் எதுவும் கெடையாது”. அவன் காட்டியதைப் பார்க்கக்கூட செய்யாமல் இஷ்டமில்லாமல் பதில் சொன்னாள்.
சுரேந்தர் கவலைப்படவில்லை. பிரவீணா மனசுமாறிவிடக் கூடாதென்பதற்காக பறந்தான்.
“சரி. இவுங்களுக்கே விண்ணப்பிக்கிறேன்!“ என்றவன். பேனாவும் தாளும் எடுத்து எழுதினான். முடித்து அவளுக்கு வாசித்துக் காட்டினான்.
“நான் அழகன். மனைவி அழகு. எங்களுக்கு வயது 30, கலந்துறவாட விரும்புகிறோம். தங்கள் இசைவைத் தெரியப்படுத்தவும். உடன் பதில்”.
பிரவீணாவிற்குள் ஒவ்வொரு வார்த்தையும் இடியாக இடித்தது. அசிங்கமாக தெரிந்தது.
சுரேந்தர் சட்டை செய்யவில்லை. முகம் திருப்தியாக தன் விலாசம் எழுதினான். பெறுநர் விலாசத்தையும் விடுநர் விலாசத்தையும் ஒரு தடவைக்குப் பத்துத் தடவை சரி பார்த்து உடனே தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு திரும்பினான்.
“பதில் வருமா பிரவீணா?” – பக்கத்தில் அமர்ந்து கேட்டான்.
“தெரியலை”
“வீட்டுக்குக் கூப்பிட்டா பிரச்சனை இல்லே. அவங்க பணக்காரங்க ஸ்டார் ஓட்டலுக்கு கூப்பிட்டா செலவு பகிர்ந்துக்கனும்!” – சொல்லி வங்கியில் பத்தாயிரம் பணம் எடுத்தான்.
:யாரையாவது அனுபவப் பட்டவங்களைக் கேட்கலாமா?” – யோசனை கேட்டான்.
“வெட்கக் கேடு.” – பிரவீணா தலையை குனிந்து அவமானப்பட்டாள்.
“ரொம்ப பேருக்கு இந்த மாதிரி ஒன்னு நடக்குதுன்னு தெரிய வாய்ப்பில்லை. என்னை மாதிரி பத்திரிக்கைப் படிக்கிறவங்க இந்த பத்திரிக்கையைப் பார்த்து தெரிஞ்சிருப்பாங்க. சில பேர் முகம் சுளிச்சிருப்பான். உண்மையான்னும் கேட்டு எழுதி இருப்பாங்க. கண்டனக் கடிதமும் போயிருக்கும். என்னைப் போல ஆசை உள்ளவங்க வழி தெரிஞ்சிருப்பாங்க. மக்கள் திருந்தனும்ன்னு பத்திரிக்கைக்காரன் இதை எழுதியிருப்பான். ஆனா இது தெரியாதவங்களுக்கும் தெரிவிச்சது போல. நன்மையில் தீமை.. தரமான பத்திரிக்கையெல்லாம் இந்த மாதிரி விசயம் எழுதக் கூடாது. நல்ல புள்ளையா நான் உண்டு என் மனைவி உண்டுன்னு இருந்தேன். அநாவசியமா எழுதி என் ஆசையைக் கௌப்பி விட்டுட்டான் பார்.” – அதே நினைவு. என்னென்னமோ பேசினான்.
“முதல் தடவை பயம் இருக்கத்தான் செய்யும். அதாவது ஆத்துல இறங்கறவரை ஆறு ஆழமா, தண்ணிஅதிகமா, ஓட்டம் நம்மை இழுத்துச் செல்லுமா, குளிருமா அப்புடி இப்புடியெல்லாம் பயம், தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். துணிஞ்சு இறங்கிட்டா துாசு பிரவீணா.”
“இதோ பார். நீ இன்னும் உம்ன்னு இருக்கிறதைப் பார்த்தா எனக்கு மனசு கஷ்டமா இருக்கு வேணாம்ன்னு கண்டிப்பா சொல்லிடு நானும் விட்டுடுறேன். நமக்குள்ளே வருத்தம் வேணாம். இல்லே இவதான் என் மனைவின்னு எவளையாவது இழுத்துப் போய் என் ஆசையைத் தீர்த்துக்கிறேன்.”
“உதைப்பான்ங்குறீயா. அவன் சொந்த பொருள் கொடுக்கும்போது நீ எவளையோ கூட்டிப்போய் இரவல் காட்டி ஏமாத்துறது நியாயமாங்குறீயா?”
நாலைந்து நாட்களாக இவன் துாங்கவில்லை. பிரவீணாவையும் துாங்க விடவில்லை. சதா இதே பேச்சு, தொணதொணப்பு.
பிரவீணாவிற்கு முகம் சரி இல்லை. நெஞ்சு திக் திக்கென்று அடித்தது. மனம் கலக்கமாய் இருந்தது. ஒருகணம் ஏன் சம்மதித்தோம் என்றும் இருந்தது. இன்னொரு சமயம் கணவன் விருப்பம். துணிவும் வந்தது.
‘அவர்கள் புது ஜோடியா, தங்களைப் போலவே இதில் புது அனுபவமா, பழக்கப்பட்டவர்களா, பல இடங்கள் பார்த்தவர்களா…?’ – யோசனை.
‘வாழ்க்கையை அனுபவிப்பதற்கென்றே பிறந்தவர்கள். ஆண் அழகில்லை. கரடு முரடு என்றால் என்ன செய்வது?‘ முகம் மாறி மாறி சிந்தனை காட்டியது.
அவளுக்கு இவரையும், இவருக்கு அவளையும் பிடித்துப் போக… அவள் கணவருக்கு என்னைப் பிடித்து எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? வேண்டாமென்று சொன்னால் கணவன் விடுவானா. எனக்காக பல்லைக் கடிச்சிக்கிட்டு கொஞ்சம் பொறுத்துக்கோ கொஞ்சுவானா?! இதற்கு நாம் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. உயிரே போனாலும் சம்மதித்திருக்கக் கூடாது. நல்ல குடும்ப் பெண்ணாய் இருந்திருக்க வேண்டும். இல்லை உன் ஆசையைத் தீர்க்க என் பெயரைச் சொல்லி எவளையாவது கூட்டிப் போ விட்டிருக்க வேண்டும். நீ கெடு என்னைக் கெடுக்காதே விலகி இருக்க வேண்டும். இந்த நினைப்பில் வேறொரு வேதனையும் உள்ளுக்குள் சூழ்ந்தது.
அது…முதல் இரவுக்குள் போகு முன் இருந்த பயம். என்னமோ படபடப்பு. ஒரு வகையில் இது இரண்டாவது முதலிரவு. எவருக்கும் முகம் தெரியாதவர்கள் தொட்டால் முதலிரவுதான். அப்படியென்றால் பாலியல் தொழிலில் உள்ளவர்களுக்கு எத்தனை முதலிரவுகள்! அது வியாபாரம். உடல் மரத்து மரக்கட்டையாகிப் போன விசயம். அதில் உணர்வுகளுக்கு வழி இல்லை. தேறினாள்.
எப்படி நடப்பான், எப்படி நடந்து கொள்வது ?
முரண்டா, முசுடா, கோபப்படுவானா, போதைப் பழக்கம் உண்டா, இம்சை படுத்துவானா, இதமாய் நடப்பானா, வெளியே வந்ததும் ஜோடிகள் சந்திப்பு எப்படி? ஒருவர் முகத்தில் ஒருவர் எப்படி விழிக்க?
“உங்க மனைவி ரொம்ப நல்ல ஒத்துழைப்பு” என்று சொன்னால் கணவன் முகம் பூக்குமா, இறுகுமா, நமக்குத் தலை குனிவா? எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்? கணவனைப் பார்க்க முடியும்?!
சுரேந்தருக்கும் இதே நினைவுதான். ஆனால் கோணம் வேறு. வரப் போகிறவள் எப்படி இருப்பாள் கனா. எப்படியெல்லாம் ஆளைப் புரட்டலாம் கற்பனை. இருட்டில் எல்லா பெண்ணும் ஒன்று என்பதை மறந்தான். வித்தியாசமில்லாமல் ஏன் ஒருவர் மேல் ஒருவர் பழியாய்க் கிடக்கிறார்கள். நினைத்தான்.
இன்னும் பதில் வரவில்லையே! – தவித்தான்.
அத்தியாயம் – 8
“தபால்!” – வெளியில் குரல் கேட்டது. ஒடிப் போய் வாங்கினான். அவசர அவசரமாகப் பிரித்தான்
‘அன்பு நண்பருக்கு வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி. தாங்கள் வரும்போது தங்கள் திருமண ஆல்பம். வீடியோ கேசட். சி. டி ஏதாவது ஒன்று எடுத்து வரவும். நம் இருவருக்கும் தாஜ் கொரமண்டல் பொதுவான இடம் சந்திக்கலாம். நாளை மறுநாள் 78ஆம் அறையில் தங்களுக்கு 77 அறையுடன் காத்திருக்கிறேன். நம் சந்திப்பு மாலை 6 மணி அளவில் நடைபெறும்.’
சுரேந்தருக்குள் சந்தோசம் குதித்தது.
“ஆத்தா நான் பாசாகிட்டேன்!” – ஐந்து வயசு சிறுவனைப் போல் குதிக்கவேண்டும் போல் உள்ளம் துடித்தது. லாட்டரியில் கோடி விழுந்திருந்தாலும். இப்படி ஒரு மகிழ்ச்சி வந்திருக்காது போல. உற்சாகமாய் ஓடிப் போய் மனைவியிடம் காட்டினான்.
பிரவீணா குப்பென்று வியர்த்தாள். மயக்கம் வரும் போலிருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு சமாளித்தாள். ஆனாலும் வெட்டுக் கத்தி விழுந்த பலி ஆடு போல் துடித்தாள். மறுநாள்.
“சீக்கிரம் புறப்படு பிரவீணா!“ அவசரப்படுத்தினான்.
புது சட்டை போட்டுக் கொள்ளலாமா எல்லாமே புதிதாய் உடுத்திக் கொண்டாலென்ன குழம்பினான். அதன் விளைவு. “நான் என்ன போட்டுக்கட்டும் பிரவீணா?“ – மனைவியைக் கேட்டான்
“உங்க இஷ்டம் எனக்குத் தெரியாது!”
இவள் இப்படி சொன்னதே இல்லை.
“ப்ரவுன் கலர் சட்டையும் வெள்ளை பேண்டும் எடுப்பா இருக்கும்ங்க” – கணவன் அலுவலகம் செல்லும் அவசரத்தில் ஏதாவது மாட்டிக் கொண்டு வந்தால் இவள் இப்படி சொல்வாள். அவள் இன்றைக்குச் சொல்லும் நிலையில் இல்லை. தவறப் போகும் படபடப்பு. தவறான வழியில் செல்லும் திக் திக். அதையும் மீறி பயம். என்ன நடக்குமோ திகில். நெஞ்சுக்குள் வெட்டு குத்து.
சுரேந்தருக்கு அவள் நிலை தெளிவாகத் தெரிந்தது. கவனத்தை வேறு வழியில் விட்டான்.
பிரவீணாவிற்கு இந்த பேண்ட் சட்டை பிடிக்கும் சந்திக்கிறவளுக்குப் பிடிக்குமா…? எது எடுப்பாய் இருக்கும். எது அசத்தும். ஆள் பாதி ஆடை பாதி. அவள் தன்னைப் பார்த்ததுமே கிரங்க வேண்டும்!. அலமாரி அடுக்கையே தலைகீழாகப் புரட்டினான். மனசுக்குப் பிடித்தது என்னவோ வெளிர் நிற மஞ்சள். பச்சை நிற சட்டை. அதிலும் அரைகுறை திருப்தி.
கப்பென்று உடுத்துபவர்கள் கரடு முரடாக இருப்பார்கள். வெளிர் நிறம். மென்மையாய் இருப்பார்கள். ஆடை வைத்தே ஆட்களை எடை போடலாம்.
பெண்ணுக்கு முரடு பிடிக்குமா மென்மை பிடிக்குமா?
தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தினான்.
முரடு எவருக்கும் பயம் காட்டும். மென்மைதான் எவருக்கும் அன்பை ஏற்படுத்தும். இதுவே சரி என்று தனக்குத்தானே தீர்ப்பு எழுதி அவளுக்குத் தன்னை மென்மையானவனாய் நல்லவனாய்க் காட்ட வேண்டுமென்பதற்காக எடுத்ததையே உடுத்திக் கொண்டான்
மல்லிகைப் பூ வா, ரோசாவா என்ன வாசனை அடித்துக் கொள்ளலாம் என்று அடுத்து தடுமாற்றம். நாளை மல்லிகை இன்று ரோசா. அடித்துக் கொண்டான். காலையில் மழித்த முகம் சொரசொரப்பாக இருக்கிறதா தடவிப் பார்த்தான்.
எந்த பெண்ணுக்கும் முகத்தில் முடி பிடிக்காது. “முகத்தோட முகம் தேய்க்காதீங்க கன்னம் எரியுது.” பிரவீணா கத்துவாள். நாளை வழவழவென்று மழிக்க வேண்டும் இப்போதே முடிவெடுத்துக் கொண்டான்.
சுரேந்தருக்குப் பிரவீணாவைப் பற்றி சிந்தனையே இல்லை. தன்னைப் பற்றிதான் கவலை சிந்தனை. ஒருவாறு முடித்து திரும்பிப் பார்த்தான். அவள் எந்தவித ஆரவாரமுமில்லாமல் சாதாரண புடவை அலங்காரத்தில் இருந்தாள்.
“என்ன பிரவீணா இது?“ துணுக்குற்றான்.
“ஏன்?“ – ஏறிட்டாள்.
“இன்னும் நல்லதா உடுத்திக்கலாமே?!” தன் அதிருப்தியை வெளியிட்டான்.
“போதும்!”
சரி இல்லை என்று வற்புருத்தினால் எங்கே வராமல் காரியத்தைக் கெடுத்துவிடப்போகின்றாளோ என்று பயம் வர மூடிக் கொண்டான். இருந்தாலும் முன்னேற்பாடுகள் சரியாய் இருக்கிறதா என்பதை அறிய “நாளைக்கு வேண்டிய துணிமணியெல்லாம் எடுத்து வைச்சிருக்கியா?” கேட்டான்
“வைச்சிருக்கேன். ஒரு புடவை ஜாக்கெட்.”
“போதுமா?“
“போதும்.“
“எனக்கு?“
“குடுங்க.”
எடுத்துக் கொடுத்தான். சூட்கேசில் வைத்துக் கொண்டாள்.
“புறப்படலாமா?”
“ம்ம்…” – பெட்டியைத் தூக்கினாள்.
“கியாஸ் அணைச்சாச்சா ? ஜன்னல் கதவெல்லாம் சரியா மூடிருக்கா…?” என்று தனக்குள் முணுமுணுத்து பிரவீணாவை வேலை வாங்காமல் இவனேப் போய் பார்த்து எல்லாம் சரியாய் இருக்க திரும்பி வந்தான்.
‘இவன் எதிலும் முன் ஜாக்கிரதை முன்னேற்பாடு. புத்திதான் என்னவோ தின்ன போகிறது. என்னையும் இழுத்துச் செல்கிறது.‘ – பிரவீணா தனக்குள் நினைத்தாள். முகம் காட்டியது.
“வீட்டைப் பூ ட்டும்போது ஆல்பம் எடுத்து வைச்சிருக்கேனா…?” – சந்தேகம் வந்து கேட்டான்.
“இருக்கு பார்த்தேன்.”
திருப்தி. பூட்டினான். நடந்தான்
‘தப்பு செய்யப்போகிறோம்’ என்கிற உறுத்தல். அதனால் இப்போதே உடம்பு திறந்து கிடப்பது மாதிரி கூசல். பிரவீணா முந்தானையால் உடம்பை போர்த்தி தலையைக் குனிந்து கொண்டு கணவனைத் தொடர்ந்தாள். அவனுக்கு அது இல்லை. உற்சாகமாக நடந்தான்.
காரில் போய் இறங்கினால்தான் கௌரவம். சுரேந்தரனுக்குள் தோன்றியது “டாக்சி!“ அழைத்தான்.
வந்து நின்றது. ஏறிக் கொண்டார்கள்.
“அவுங்க முன்னாடி வந்து காத்திருப்பாங்களா?” – வண்டி நகர பேச்சுக் கொடுத்தான்.
“தெ…தெரியலை.”
“கண்டிப்பா வந்திருப்பாங்க வந்திருக்கனும்!”
ஆர்வக் கோளாறு, பதட்டம் சுரேந்தருக்குள் நிதானமே இல்லை. தாஜ் கொரமண்டல். வரவேற்பில் பெண் நன்றாகஇருந்தாள் நளினமாக இருந்தாள்.
“என்ன வேணும்?”
“அறை எண் 77”
“முன் பதிவு செய்திருக்கு. உங்க பேரு?” – புருவத்தை உயர்த்தி குறிப்பு ஏட்டைப் புரட்டினாள்
“சுரேந்தர் பிரவீணா!” – இவன் சொன்னான்.
“இருக்கு இந்தாங்க சாவி மூன்றாவது தனம்!” – எடுத்துக் கொடுத்தாள்.
மின் துாக்கியில் ஏறினார்கள். ஓடிவந்து ஒரு ஜோடி ஒட்டிக்கொண்டது.
‘இவர்கள்தானா?!‘ அடிக்கண்ணால் பார்த்தான். அவர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
‘இவர்கள் இல்லை.’ முடிவிற்கு வந்தான்.
‘எவர்களைத் தேடிப் போகிறார்களோ?!…’ தான் திருடி பிறத்தியார்களும் அப்படி! – நினைக்க வைத்தது. மின் துாக்கி மேலே ஏறியது.
அது மூன்றாவது தளத்தில் சின்னதாக குலுங்கி நின்று திறந்தது. இவர்கள் வெளியே வர அந்த ஜோடி வெளியே வராமல் மேலே சென்றார்கள். வலப்புறத்தில் 77ம் 78 ம் எதிரெதிரில் இருந்தது.
‘ஆள் உள்ளே இருக்கிறார்களா…?!’ – சுரேந்தர் 78 முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவு திறந்தவன் ஆளை அசத்தும் அழகில் எடுப்பான இளைஞன். சுரேந்தரே ஒருகணம் தடுமாறினான். ஆனால் அதையும் மீறி இவனுக்குள் தன் இரையைப் பார்க்கும் ஆசை. பார்வையைத் திருட்டுத்தனமாக உள்ளே விட்டு இழுத்துக்கொண்டான்.
“வாங்க நான் எதிர்பார்க்கவே இல்லே” – சுரேந்தர் தன் கடிதத்தோடு தங்கள் புகைப்படங்களையும் அனுப்பி இருந்ததால் அவன் இவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொண்டான். வரவேற்றான்.
நுழைந்தார்கள். குளிர்சாதன அறை. பிரவீணாவிற்கு வேர்த்தது. வரவேற்றவன் இவளை ஆழமாகப் பார்த்தான். பார்க்கமாட்டனா…?! அது வேறு சங்கடமாக இருந்தது.
சுரேந்தருக்கும் துணிச்சல் வர கண்களைச் சுழலவிட்டு இரையைக் கண்டான்.
கணவனைவிட அழகில் உசத்தியாய் கட்டிலில் அவள் இருந்தாள். இவர்களைக் கண்டதும் புன்னகையுடன் எழுந்து வந்தாள்.
“இவ என் மனைவி ரோசி!” அவன் அறிமுகப்படுத்தினான்.
“ஹாய்..!” அவள் கூச்சமில்லாமல் சுரேந்தருக்குக் கை நீட்டினாள்.
சுரேந்தருக்கு ஆரம்பமே அசத்தலாய் இருந்தது, மகிழ்ச்சியாய் கை நீட்டினான். குலுக்கினான். அவள் உள்ளங்கை வெப்பமாய் இருந்தது. கை சுட்டது.
“நான் ராசேந்திரன்!” – அவன் பிரவீணாவை நோக்கி கை நீட்டினான்.
இவள் போர்த்திய புடவை விலக்கவில்லை. கை நீட்டவில்லை. குனிந்த தலையையும் நிமிர்த்தவில்லை. அடிமையாய் இருந்தாள்.
சுரேந்தருக்குத் தர்ம சங்கடமாய் இருந்தது
“கை கொடேன் பிரவீணா“ – தழைந்தான்.
அவள் அசையாதிருக்கக் கண்டு “கூ…கூச்ச சுபாவம்!” தானே சமாளித்தான்.
“பரவாயில்லே. இருக்கட்டும்!” – ராசேந்திரனுக்கு இரை எங்கே போய்விடும் நினைப்பு.
“உட்காருங்க” – அருகிலிருந்த சோபாவைக் காட்டி அமர்ந்தான். ரோசி கணவன் அருகிலமர்ந்தாள். இவர்கள் எதிரிலமர்ந்தார்கள்.
‘எதிரி மனிதரை மதிக்கத் தெரிந்தவன்‘
பிரவீணாவிற்குள் மனம் கொஞ்சம் பயம் விலகியது.
“நாங்க காதல் திருமணம்” – ரோசி ஆல்பத்தை எடுத்து சுரேந்தரிடம் நீட்டினாள்.
“நாங்க பெத்தவங்க முடிச்சது.” – ஆல்பத்தை வாங்கிய சுரேந்தர் உடனே தங்களுடைய சூட்கேசைத் திறந்து இவர்கள் ஆல்பத்தை அவளிடம் கொடுத்தான். அவள் புரட்டினாள். இவனும் புரட்டினான்.
போர்த்திய புடவை விலக்காமல் இன்னும் குனிந்த தலை நிமிராமல் அடக்க ஒடுக்கமாய் வாய் வார்த்தை உதிர்க்காமல் பிரவீணா மேல் ராசேந்திரனுக்குக் கண். கிறக்கம் வந்தது.
“உங்க மனைவி ரொம்ப கூச்சம் போலிருக்கு.?” – பேச்சு கொடுத்தான்.
“ஆமாம். நீங்க?” – சுரேந்தர் புரட்டிக்கொண்டே கேட்டான்.
எதிரி குழப்பமாகப் பார்த்தான்.
“இதுதான் முதல் தடவையா?”
“இல்லே ரெண்டாவது. பக்கத்துப் பக்கத்து வீடு பரிமாறிக்கிட்டோம்.”
‘பாவி! – கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொன்ன ரோசியை பிரவீணா திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளோ இவள் கணவன் சுரேந்தரையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘தேவடியா. என் புருசனை என்கிட்ட விடுடி.’ – பிரவீணாவிற்குக் கத்தவேண்டும்போல் தோன்றியது.
“குழந்தைங்க?”
“ஒண்ணு” – ராசேந்திரன் கேள்விக்கு சுரேந்தர் பதில் சொன்னான்.
“ஆணா பொண்ணா?“
“ஆண். உங்களுக்கு?”
“அதுக்குத்தான் அலையறோம்.” – ரோசி சட்டென்று போட்டு உடைத்தாள்.
பிரவீணாவும் சுரேந்தருமே அவர்களைத் திடுக்கிட்டுப் பார்த்தார்கள்.
ராசேந்திரன் தொடர்ந்தான். “எங்களுக்குத் திருமணம் முடிஞ்சி அஞ்சு வருசமாகுது. எந்த குறையும் இல்லே. ஆனா குழந்தை கெடையாது. தத்தெடுக்க ஆசை இல்லே. சோதனைக் குழாய்க் குழந்தை விருப்பம் இல்லே. இவ சுயமா பெத்துக்க ஆசைப் படுறா. யார் மூலமாவது வேணும்ங்குறா. சுகத்துக்குச் சுகம் பலனுக்குப் பலன். போன மாசம்தான் ஆரம்பிச்சோம். இந்த மாத பீரியட் வந்துடுச்சி. இப்போ நீங்க.” – நிறுத்தினான்.
‘அட ! குழந்தை பெத்துக்க இப்படி ஒரு கசமாலமா?!’ – பிரவீணாவிற்குள் குமட்டியது. உண்மையா பொய்யா சந்தேகமும் எழுந்தது,
“சுரேந்தர்! உங்க மனைவி பேசவே மாட்டாங்களா?” ராசேந்திரன் இவளிடம் தாவினான். அவன் இரையிடம் தாவினான்.
“பேசேன் பிரவீணா!” சுரேந்தர் இரண்டாவது முறையும் மனைவியை உசுப்பினான்.
“செயல்மட்டும்தான் போலிருக்கு” – ரோசி ஜோக்கடித்தாள். அவளே விழுந்து விழுந்து சிரித்தாள்.
“என்ன பண்றீங்க ராசேந்திரன்?”
அவன் சுரேந்தர் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.
“உங்க மனைவி இன்னும் நம்ம உலகத்துக்கு வரலை. விருப்பமில்லேன்னா விட்டுடலாம்.“ – என்றான்.
இவனுக்குத் தர்மசங்கடமாய் இருந்தது. எங்கே கைக்கு எட்டியது வாய்க்கு வராமல் போய்விடுமோ?! கலக்கம் வந்தது.
“பெண்ணுக்குப் பெண் பேசினா தயக்கம் கூச்சம் விடும்ன்னு நெனைக்கிறேன். நீ பேசு ரோசி. நாங்க வெளியில சிகரெட் பிடிக்கிறோம். வாங்க சுரேந்தர்” ராசேந்திரன் எழுந்தான். இருவரும் வெளியில் வந்தார்கள்.
ரோசி எழுந்து பிரவீணா பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
அத்தியாயம் – 9
“ரொம்ப பயமா இருக்கா?” – ரோசி மெல்ல கேட்டாள்.
‘பயமில்லே. மனசுல வலி கஷ்டம். எனக்கு ஒப்புதலில்லே. வற்புருத்தலுக்காக வந்தேன். ஐயா சாமி என்னை விட்டுடு. ஓடிடுறேன்’ – சொன்னால் என்ன நடக்கும்?
வீட்டில் நுழைந்ததுமே ஓட்டல் ‘செலவு என்ன தெரியுமாடீ!?‘- அவ்வளவு துாரம் போய் ஆசை நிறைவேறாத தாக்கம். சுரேந்தர் கோபப்படலாம். அவமானப்பட்ட ஆத்திரம் விலகிப் போகலாம்! – பிரவீணா நடுங்கினாள்.
“இவ ஒண்ணும் சரி படமாட்டா. கையைக் காலைப் புடிங்க.” ஆசை, மோகம், எவரை என்ன செய்கிறோம் என்று தெரியா வேகம் இங்கே முரட்டுத்தனம் செய்யத் துணியவும் வாய்ப்பு உண்டு. நினைக்க குப்பென்று வியர்த்தது,
“ரொம்ப பயப்படுறே. போர்த்தியிருக்கிற புடவையை சாதாரணமா விடு”, இவள் அனுமதி இல்லாமலேயே ரோசி எடுத்துவிட்டாள்.
“இதுல பயப்படுறதுக்கு ஒன்னுமில்லே பிரவீணா. தப்புன்னு நெனைச்சா தப்பு. இல்லேன்னு நெனைச்சா இல்லே. எனக்கும் ஆரம்பத்துல இந்த பயம் அடுத்தவன் தொட்டா உயிர் போயிடனும்ங்குற வேண்டுதல். புருசனே பொண்டாட்டி கற்பாய் இருக்கனும் யோக்கியமாய் இருக்கனும்ன்னு கவலைப்படலை என்கிறபோது நமக்கு எதுக்கு வீண் பயம் கவலைன்னு துணிஞ்சேன்.” – சொன்னாள்.
பிரவீணாவிற்குத் திகைப்பாய் இருந்தது,
“ஆமா. இப்படி குழந்தை பெத்துக்கிட்டா என்னன்னு கேட்டார். தப்பில்லையான்னு கேட்டேன் தப்புன்னா தப்பு இல்லேன்னா இல்லேன்னார்.ரொம்ப சமாதானப் படுத்தினார். ஆண்களுக்கு எப்போதுமே சபலப் புத்தி. நாம மறுத்து அவர் எங்கேயாவது போய் குற்ற உணர்வோட திரும்புறது பாவம். எய்ட்ஸ் வாங்கி வந்து செத்து நாம் விதவையாகிறது கொடுமை. இதெல்லாம் நெனைச்சிதான் மனசு மாறினேன். போகும் போது என்ன வாரிக்கிட்டுப் போகப் போறோம் நாம யோக்கியமா இருந்து புருசன் கெட்டுப் போறதுல என்ன பலன். அவுங்க விரும்பறபோது நாம ஏன் மறுக்கனும். இன்னைக்கிருப்பாரை நாளைக்குக் காணோம். விட்டுப் கொடுத்து எல்லோரும் சந்தோசமாய் இருக்கிறதுல என்ன தப்பு.”
“கற்பு எது? புருசனோட இருக்கிறவதான் கற்புன்னா புருசனைக் காப்பாத்த விபச்சாரம் செய்யுற பொண்டாட்டி கற்பில்லாதவளா. அந்த காலத்து ஆண்கள் தான் மட்டும்தான் அனுவிக்கனும் பெண்கள் அனுபவிக்கக் கூடாதுன்னு இருந்தாங்க. பெண்களை அடக்கி ஒடுக்கி கட்டுக்குள் வைச்சாங்க. இயற்கை அவர்களுக்குச் சாதகமாய் நம்மை மாதிரி வயித்துல வந்து காட்டிக் கொடுக்க வழி இல்லாம போச்சு. ஆடினாங்க. அதையே பழக்க வழக்கமா கொண்டு வந்தாங்க. பெண் இதையும் தாண்டி மீறிடக் கூடாதுன்னு யோக்கியமா இருக்கிறவள் கற்புக்கரசின்னு புகழ் சூ ட்டி உச்சாணிக் கொம்புல ஏத்தி கீழே இறக்கி விடாம விட்டாங்க. நாம மயங்கிட்டோம். அவுங்க சொல்றதுதான் சரின்னு நாமும் கெட்டியாய்ப் புடிச்சிக்கிட்டோம். இதுதான் கற்பு கலாச்சாரம் பண்பாடு.”
“பாரதிதான் மக்களை சரியா புரிஞ்ச மனுசன். கற்புன்னா அது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொது ஒண்ணுன்னான். அதுல காலச்சக்கரம் மாறிப் போச்சு. நீயும் ஒழுங்கா இருன்னு பெண் ஆணைப் புடிச்சா பயந்து போன ஆண் இப்போ நீயும் வா தப்பு செய்வோம்ன்னு பொண்டாட்டியையும் துணைக்கழைக்கிறான். நீயும் தப்பு நானும் தப்பு. ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிக்க முடியாதுன்னு தப்புலேர்ந்து தப்பிக்கிறான். இதை பயன்படுத்திக்கிறதுல என்ன குறை?“
“நாம தப்பு செய்யாதவங்க அதிலும் பொம்பளை. மனசு திடீர்ன்னு மாறாது. கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாறும். நீ இவ்வளவு துாரம் வந்ததே பெரிசு. புடிக்கலைன்னா இதோட நிறுத்திக்கோ. குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டியா?”
“இல்லே.”
“ஏன்?”
“பொண்ணு பெத்துக்க ஆசை.”
“வேணாம் ஒண்ணு போதும் நாம மலடி இல்லேங்குற பேர் இருந்தா போதும். உன் புருசனுக்கு இன்னொன்னு பெத்துக்க ஆசையா?”
“அவரும் ஒண்ணு போதும்ங்குறாரு.”
“இன்னும் நீ தெளியலை. பயம் இருக்கு. பீர் சாப்பிடுவீயா?”
பிரவீணா பதில் சொல்லவில்லை.
“பீர் போதை வஸ்து இல்லே. பார்லி தண்ணி கொஞ்சம் தலையைச் சுத்தும். கொஞ்சம் துவர்ப்பாய் இருக்கும் வாந்தி வராது. ஐஸ் பீர் குடி. பிரிட்ஜ் தண்ணி குடிச்ச மாதிரி இருக்கும்.”
ரோசி பிரவீணாவைக் குடிக்கவேத் தெரியாத குழந்தையாய் நினைத்து எழுந்து பிரிட்ஜிலிருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்து உடைத்தாள். குப்பென்று பொங்கி நுரையடித்தது. திரவம் பாட்டிலைவிட்டு வெளியேறாமல் நின்றது. இரண்டு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றினாள். அவள் உடைத்தவிதமும் ஊற்றிய விதமும் நிறைய பழக்கப்பட்டவள் குடிகாரி போல் இருந்தது.
“கொஞ்சமா குடி தப்பு மறந்து போகும்.” – நீட்டினாள்.
‘தப்பு மேல் தப்பா?’ – பிரவீணரிவிற்குள் மனசு நடுங்கியது.
“அதுவே பெரிய தப்பு. அதுல இது சின்ன தப்பு!” இவள் மனதை படம் பிடித்தவள் போல் அவள் சொன்னாள்.
பிரவீணா அசையவில்லை.
“ரொம்ப பிடிவாதம் வேணாம் பிரவீணா. முடியாதுன்னு மறுத்து வீட்டிலேயே இருந்தா பிரச்சனை இல்லே. புருசன் வற்புருத்தல் அறைவரை வந்து முரண்டினால் வெறி கொண்ட மனுசங்க உன் காலைக் கையைக் கட்டிப் போட்டு தான் நினைச்சதை நிறைவேத்தமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?”- குண்டைப் போட்டாள்.
பிரவீணா இப்போது உண்மையிலேயே அரண்டாள். அவர்கள் செய்யாவிட்டாலும் இவள் செய்வாள்! தப்ப வழி இல்லாததை உணர்ந்தாள். மிரட்சியாகப் பார்த்தாள். எத்தனைக் குடும்பப் பெண்களை இப்படி கெடுத்தார்களோ?!
“இதுதான் நிசம். குடி” – ரோசியும் அதை உறுதி படுத்துவது போல் சொல்லி தானும் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொண்டு இவளுக்கு நீட்டினாள்.
பிரவீணா நடுக்கத்துடன் கிளாசை வாங்கி உதட்டில் வைத்து மிடறு விழுங்கினாள்.
‘மவனே! உன் அம்மா தவறு செய்கிறாள்.’ மனசு அலறியது. புரை ஏறியது.
“மெல்ல பொறுமையா குடி உன் புருசன் குடிப்பாரா?”
“கெ……கொஞ்சம்.” – தொண்டை காந்தியது.
“குணம்?”
“தங்கம்.”
“கட்டில்ல?“
“சிங்கம்!” – பிரவீணா போதை வேலை செய்ய சிரித்தாள். காலி டம்ளரை கீழே வைத்தாள்.
“இன்னொன்னு ஊத்தறேன்” – ரோசி ஊற்றினாள்.
“தலையைச் சுத்துதா ?”- பார்த்தாள்.
“இலேசா.”
“அப்போ குடிக்கலாம் குடி” – நகர்த்தினாள்
“நாளைக்குத்தான் நம்ம தேதி. நாம இன்னைக்கும் சேர்த்து கொண்டாடலாம். எனக்கு சுரேந்தரை ரொம்ப புடிச்சிருக்கு.” ரோசி குழறினாள்.
ராசேந்திரன் சுரேந்தர் உள்ளே வந்தார்கள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
