தாரா மை டியர்!





‘றெக்க கட்டிப் பறக்குதடி அய்யாவோட ரிக் ஷா! ஆசையோட, எறிக்கடி அய்யாகூட சவாரி!-ன்னு, ‘தலைவர்’ பாணியிலே பாடி கிட்டே, ரொம்ப நாளைக்கப்புறம் ரிக் ஷாவ சுத்தமா கழுவித் தொடச்சேன்!
இன்னிலேர்ந்து ஒரு வாரத்துக்கு, ‘தாரா’-வுக்கு, நம்ம ‘ஜெட்’டுல சவாரி!
எப்பேர்ப்பட்ட சான்ஸ்?
மொதப் பிரைஸ் விழுந்த மாதிரி!
மப்பும் மந்தாரமுமா, கொப்பும் கொலையுமா தாரா, ஸ்டாண்ட் வழியா போய் வரும்போதெல்லாம், அதுங்கழுத்து செயின்ல தொங்கற டாலரையே உத்து உத்துப் பார்த்துகிட்டிருப்பேன்!
தாரா பேரு, அவுங்கப்பன் நேத்து சொன்னப்பறம் தான் தெரியும்!
ஸ்டாண்ட்ல அதுக்கு வெச்சப் பேரு: “வெள்ள புறா!”
எளவட்டங்களுக்கெல்லாம், புறா மேல ஒரு கண்ணு தான்!
அப்பேர்ப்பட்ட பொண்ண, ஒரு வாரத்துக்கு காலேஜுகிட்ட கொண்டு போய் விட, அநியாயக் கூலி, நூறு ரூபாய் வேற அவுங்கப்பன் வற்புறுத்திக் குடுத்துட்டாரு!
நேத்துக் காலையில சவாரி கெடைக்காம, காத்துக்கிட்டிருந்தோம்.
ரிக் ஷாகார மாரி, “அப்புறம் தாமு! என்னா, ஒரு கால் கிலோ கறிய புடுங்கி இருக்குமா?”
“அது கவ்வுனாலே கால் கிலோ கறிடா! நல்ல சா … தி நாயி!” என்றான் தாமு.
மாரி சத்தமாக, “அப்ப தொப்புள சுத்தி, அம்பது ஊசி போடனும்!”
என்னைய வெறுப்பேத்தறதுக்குத் தான் பேசிக்கிட்டிருந்தானுங்க!
அது என்னவோ, எந்த மிருகத்த வேணா காட்டுங்க, தில்லா நிப்பேன்! ஆனா, நாய்ங்களைப் பார்த்தாலே ஒடம்பு பூரா நடுங்கிடுது!
ரெண்டாங்கிளாஸ் படிக்கும் போது, என்னைய ஒரு புடுங்குப் புடுங்குச்சுப் பாருங்க, தெரு நாயி ஒன்னு!
நாயி பயத்தையெல்லாம் காட்டிக்கிட்டா, இந்த தொழில் பண்ண முடியுமா?
தெரியாத்தனமா ஒரு நாளு சொல்லப் போவ… அப்பப்ப வெறியேத்தறானுங்க!
ஆளுக்கொரு சவாரி கெடைச்சி போய்த் தொலைஞ்சாலும், நான் மட்டும், ரிக்ஷா ஸ்டாண்ட்ல சவாரிக்குக் காத்துக்கிட்டு, கதைபுக்கு எழுத்துக் கூட்டிப் படிச்சுக்கிட்டிருந்தேன்.
காரு டிரைவரு, மொதலாளி பொண்ண கல்யாணம் கட்ற கதை!
அப்பதான், தாரா அப்பா கார்ல வந்து, ஒரு வாரத்துக்கு காரு சர்வீஸுக்கு போகுதுன்னும், வூட்டு அட்ரஸை சொல்லி, ‘அதனால தாராவை காலை எட்டு மணிக்கு ரிக் ஷாவுல கூட்டிட்டுப்போய் காலேஜ் கிரவுண்ட்லே ப்ராக்டிஸுக்கு விட்டுட்டா போதும்! கோச்சர் இருப்பாங்க! ரெண்டவர் கழிச்சி கூட்டியாந்து வீட்டுல விட்டுடு!’-ன்னும் சொன்னாரு! நூறு ரூவா குடுத்தாரு!
“தாராவை பாத்திருக்கயில்ல?”
“பாத்திருக்கேங்க!”
“கவனமா போய் வரணும்! தாரா கொஞ்சம் குறும்பு!”
“ஒரு வாரம் போதுமா சார்? நானே ரெகுலரா வேணுமின்னாலும் கூட்டிட்டுப் போறேன்!”
“வேணாம். ஒரு வாரம் போதும்! காரு வந்துரும்! கரெக்ட் டைம் வந்துரணும்! டிசிப்ளின் முக்கியம்!”
“நா ரொம்ப டிஜிப்பிளின்ங்க! ஏழாவது வரைக்கும் படிச்சிருக்கேன்!-னு சொன்னதைக் காதுல வாங்காம போயிட்டாரு.
ராத்திரி கனாப்பூரா, தாரா என் செல்லக்குட்டி தான்!
விழிச்சதும், மொத வேலையா, கண்ணாடியிலே மொகம் பார்த்தேன்!. ம்… பரவாயில்லை, ப்ரெஷ்ஷாத்தான் இருக்கு!
ரிக் ஷாவுக்கு மல்லிகை மாலை வாங்கிப் போட்டுகிட்டு, சீட்டியடிச்சிகிட்டு, ஏழே முக்காலுக்கு, தாரா பங்களா வாசலாண்ட போயிட்டேன்.
தாரா அப்பன், “ரிக்ஷா வந்தாச்சு! தாரா ரெடியா?”-ன்னு குரல் கொடுத்தாரு.
“இதோ!”-ன்னான் ஒருத்தன்.
‘வரட்டும்! புறா வரட்டும்!-’ன்னு மனசுல நினைச்சுகிட்டு, நான் தெருப்பக்கம் பார்த்துகிட்டு, தேவையில்லாம, ரிக் ஷாவை துணியால தொடச்சுக்கிட்டிருந்தேன்.
நிமிஷத்துல ஒரு மாதிரி வாடை வரவே, திரும்பிப் பார்த்தேன்!அவ்வளவுதாங்க! தூக்கி வாரிப் போட்டுச்சு! என்னைய அறியாம, “ஐயோ! யம்மாடி! ஐயையோ!-ன்னு அலறினேன். ஒடம்பு வெடவெடன்னு நடுங்குது!
நாக்க மொழம் நீளம் தொங்கவுட்டுக்கிட்டு, புஸ்ஸுபுஸ்ஸுன்னு மூச்செரைக்கிட்டு, சீமை கன்னு குட்டி கணக்கா, என் காலுகிட்ட கருப்பு நாய்! ரிக் ஷா மேல ஏற ஜம்ப் பண்ணுது.
“ஏம்பா? ஏம்பா? அது ஒண்ணும் பண்ணாது! கம்முனு ரிக் ஷாவுல உக்காந்துக்கும்!”-ன்றாங்க, அந்த பேமானிங்க
ஓடுறா, மவனே! இல்ல, உயிர் உன்னுது இல்ல!
நாய் கவ்வறதுக்குள்ள, ஒரு ஓட்டம் புடிச்சேன், பாருங்க! என் வாழ்க்கையிலே இப்படி ஒரு ஓட்டம் ஓடினதில்ல! இனி ஓடப்போறதுமில்ல! அப்புடி ஓடியாந்தேன்!
தாரான்னா உங்க வூட்டு நாயா? அப்ப, உம் பொண்ணு பேர் இல்லியா அது?
ஏண்டா கசமாலங்களா!
ஜிம்மி, ஜானி, டைகர்!-ன்னு பேர் வெக்கறதை விட்டுட்டு, நாய்க்கெல்லாம் கூடவா, தாரா, மல்லிகா, ரம்பா!-ன்னு பேர் வைப்பீங்க? அடப் பாவி! நீ நல்லாயிருப்பியா? ஒன்ன பாம்பு புடுங்க! ஒன் பொண்டாட்டிய தேளு கடிக்க!
ஒரே மூச்சுல ரிக் ஷா ஸ்டாண்ட் வந்து தான் நின்னேன்!
ஸ்டாண்ட்ல வந்து நின்ன கொஞ்சம் நிமிஷத்துல, ஓங்கி மாரியை ஒரு குத்து விட்டேங்க! ‘குய்யோ முறையோ’ன்னு கத்திக்கிட்டிருக்கான், சோமாறி!
பின்னே?
“எங்கயிருந்துடா, இந்த ஓட்டம் ஓடியாற? நாய்க்கு எரைக்கிற மாதிரி எரைக்குது! இன்னிக்கு எந்த நாய் மொகத்துல முளிச்ச? -ன்னு கேட்டா, குத்துவனா? மாட்டனா?
நீங்களே சொல்லுங்க!
– 16.03.1997