தாய்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘….இருட் சிறையிலிருந்து நமக்கு மீட்சி கிட்டப் போகின்றது. நீல வானிலே மீண்டும் சுதந்திர மாகப் பறக்க நாம் இயற்றியதவம் பலித்தது!’

அருணன் வருகை தரப்போகின்றான். உலகைக் கவிந்திருக்கும் இருள் அகலப் போகின்றது. இருள் மாயை யிற் கட்டுண்டு துயில் பயிலும் உயிரினங்களே! அவனை எதிர் கொண்டழைக்க எழுமின்!’ எனச் சேவல் கூவிற்று.
‘இருட் சிறையிலிருந்து நமக்கு மீட்சி கிட்டப்போகின் றது. நீலவானிலே மீண்டும் சுதந்திரமாகப் பறக்க நாம் இயற்றிய தவம் பலித்தது! ஆதவன் நாமம் வாழ்க!’ எனப் புள்ளினங்கள் பரவசத்துடன் பாடல்கள் இசைத்தன.
இனிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் சங்கமம்.
கீழ்த்திசையில் ஆதவன் முகம் தெரிந்தது. தங்க நிறத்தில் பிஞ்சுக் கரங்கள் பரம்பத் தொடங்கின. அந்த ஒளிப்பிரவாகத் திலே சராசரம் முழுவதும் புதிய உயிர்ப்புப் பெற்றன போன்று குதித்தன.
‘ஆகா! என் காதலன் வந்தானா ? அவன் பிரிவு தாங்காது நான் எப்படியெல்லாம் தவித்தேன்’ என்று பங்கயம் நாணச் சிவப்பு அப்பிய தன் இதழ்களை விரித்து ஊமைச் சிரிப்பு உகுத்தது.
இதனைப் பார்த்த கவிஞன், *அருணன் உதித்தனன் அம்புஜம் விண்டது பாராய்….!’ எனக் கவி புனையத் தொடங்கினான்.
எல்லாவற்றையும் பொறுமையுடன் தாங்கும் பூமித் தாய்க்குப் பிள்ளைகளின் பித்தப் போக்குப் பிடிக்கவில்லை.
‘அருணனை என் மடிமீதிருந்து பார்த்து மகிழலாம். சூரியன் மீது அவ்வளவு பித்து இருக்குமேயானால், அவை சூரியனிலேயே குடியேறி வாழட்டுமே…. இவற்றின் மீதுள்ள அன்பினாலா ஆதவன் தரிசனம் தருகின்றான்? தன்னி லிருந்து ஒளி பிறக்கின்றது என்ற மமதையில் அவன் ஒரே இடத்தில் நிற்கின்றான்! தாய் மனம் பித்து. குழந்தைகள் அவனைப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காக நானல்லா தினமும் நிதமும் சுழன்றுகொண்டிருக்கிறேன்…. இந்தச் செய்ந்நன்றி கொன்ற குழந்தைகளை… ‘எனப் பூமாதேவி நா உன்னினாள்.
மறுகணம் அவ்வெண்ணத்தை மாற்றி, பொறுமையுடன் கோயில் வீதியில் அடியளித்து வலம் வரும் பக்தையின் கோலத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் வலம் வரும் நித்திய கடமையில் ஒன்றலானான்.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.