தாய்நாட்டுப் பற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2024
பார்வையிட்டோர்: 893 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறந்துவளர்ந்த நாட்டின்மீது பற்றுடைமை மக்கட்கு இயற்கைப் பண்பாக அமைந்துளது. தம் நாடு, பிறர்க்கு உதவியற்றதும், நாகரிகமற்ற மக்களையுடையது மாகக் காணப்படினும், அந்நாட்டு மக்களும் நாட்டுப்பற்று உடையவர்களாக இருப்பது உலக இயற்கை. நாட்டுப்பற்று ஒரு நாட்டு மக்களைத் தந்நாட்டு நலத்தில் அக்கறை யெடுத் துக்கொள்ளும்படி செய்கிறது;

பகைவர் தாக்குதலினின் றும் காத்துக்கொள்ளச் செய்கிறது; நாட்டுப் பொதுநன் மையை உயர்த்தச்செய்கிறது; நாட்டாருக்கெல்லாம் அன்பு காட்டச் செய்கிறது; நாட்டு அரசியலை விரும்பச் செய் கிறது; நாட்டில் நிறுவப்பட்ட அறச்சாலைகளின் நலத்தைக் கோரச் செய்கிறது. நாட்டின் நல்வாழ்க்கையிற் கருத்து வைக்கச் செய்கின்றது; நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கச் செய்கின்றது; தம் நாடு வேற்றரசு நாடாக இருந்தால் இத்தகைய நற்பண்புகளெல்லாம் அந்நாட்டு மக் கட்கு மனத்திற் றோன்றாது; மேலும் அது நாட்டுத் தப்புத் தவறுகளைத் திருத்தச் செய்கின்றது. தம் நாட்டைப் போன்று பிறநாடுகளும் நன்னிலையி லிருக்கவேண்டுமென்று எண்ணச் செய்கின்றது; தக்க காரணமின்றி வேற்றுநாட் டின்மேற் படையெடுப்பதைத் தவிர்க்கச்செய்கின்றது; பிற நாட்டு நலங் கெடின் தந்நாட்டு நலமும் ஊறுபடும் என் பதை யறியச்செய்கின்றது. – இவ்வாறு மக்களின் நாட்டுப் பற்று உலக நலத்தையே விரும்பச் செய்கின்றது. 

1. உண்மையான நாட்டுப்பற்று 

தெமிஸ்ட்டரகனிஸ் என்பவன் அத்தீனியா நாட்டுச் சேனைத் தலைவன்; அவன் ஒரு பெரும் வீரனாகவு மிருந்தான். ஆனாலும் அவன் நேர்மையுடையவன் அல்லன். அவன் மட்டற்ற நாட்டுப் பற்றால் தன்னாட்டின் மீது பகைமைகொண்ட லாசிடொமென் மாகாணத்தை அடியோடு அழித்துவிட வேண்டுமென்னும் தகுதி யற்ற எண்ணங்கொண்டிருந்தான். ஒரு காலத்தில் லாசிடொமென் மாகாணத்துக் கப்பற்படைகள் உள்பட ஏனைய கிரேக் மாகாணக் கப்பற்படைகளெல்லாமும் அதீனியா நாட்டுக்கடுத்த ஒரு துறை யில் தங்கியிருந்தன. அவைகளையெல்லாம் மறைவாக எரித்துவிட வேண்டுமென்று எண்டான் தெமிஸ்டாக்ளிஸ் எண்ணினான். ஆனால் இவ்வெண்ணத்தை அவன் குடிமக்களின் உடன்பாடில்லா மல் நிறைவேற்ற அவனால் முடியாது. 

அக்காலத்தில் அதீனியாவில் அரிஸ்ட்டிடீஸ் என்னுங் குலமக னொருவனிருந்தான். அவன் அக் குடிமக்கட்கு மிகவும் வேண்டியவன.  அவனிடம் அவர்கட்கு மிக்க நம்பிக்கையுண்டு. தெமிஸ்ட் டாக்ளிஸ் அவனை யழைத்து அவனிடம் தன் எண்ணத்தை வெளி யிட்டுக் குடிமக்களின் உடன்பாடு பெறுதற்குக் கேட்டுக்கொண் டான். அவன் அவ்வாறே அவர்களிடம் தெமிஸ்ட்டாக்ளிஸ் எண் ணத்தைத் தெரிவித்து, “அச்செய்தி அதீனாவை உயரச்செய்வதா யிருந்தாலும் நேர்மையுடையதன்று,” என்றான். அதனைக் கேட்ட வுடனே குடிமக்களெல்லோரும் ஒரே மன தாய், ”சேனைத்தலைவர் தமது கருத்தை அடியோடொழித்துவிடவேண்டும்”, என்று சொல்லி விட்டார்கள். 

நாட்டுக்கு எவ்வளவுதான் நலந்தருவதா யிருந்தாலும், உண் மையும் நேர்மையும் அற்ற செயல்களில் முயல்வது சீரிய நாட்டுப். பற்றாகாது. 

2. ஓர் உண்மைவரலாறு 

இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்ட் அரசாண்ட காலத்தில் அந் நாட்டுக்கும் பிரான்சுக்கும் பகை விஞ்சியிருந்தது. அப்போது எட் வர்ட் பிரான்சியக் கலே நகரை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஓராண்டுக்குமேல் நீடித்திருந்தும் முடிவொன்றுங் காணப்பட வில்லை. ஏனெனில் பிரான்சியர் நாட்டுப் பற்றுக்கொண்டு, கோட் டையைத் தறுகணாண்மையோடு காத்துவந்தனர். எட்வர்டும் முற்றுகையை விட்டானில்லை. கலே கோட்டையில் வரவர உண வுப் பொருள்கள் குறைந்துபோய்ப் போர்வீரர் பட்டினிகிடக்க நேரிட்டுவிட்டது. பசிவந்திடப் பத்தும் பறந்து போய்விடுமல்லவா? 

அதுகாலை என்செய்வர் பிரான்சியர்! எட்வர்ட் அரசருக்கு ணங்கிவிட வேண்டியது தவிர வேறொரு வழியுங் கண்டாரில்லை. அப்போது பிரான்சியக் குலமகனொருவன் எட்வர்டிடம் வந்து வணக்கத்துடன் தன் நாட்டு இரக்க நிலையைத் தெரிவித்து, முற்று கையைக் கலைத்துவிடக் கேட்டுக்கொண்டான். அதற்கு எட்வர்ட் பிரான்சியர் கோட்டையை விடாமல் தனக்குக் கொடுத்து வந்த துன்பங்களை யெண்ணி மீளாச் சினங்கொண்டு சொல்கின்றான்:- உங்களில் மேட்டிக்குடிகள் அறுவர் தலைமூடி கால்மூடியின்றி ஒவ் வொருவரும் தம் கழுத்தில் தூக்குக் கயிறுகளைத் தொங்கவிட்டுக் கொண்டு, எம்மிடம் வந்து எம் கால்களிற் பணிந்து வணங்கி நகர்க்கோட்டைச் சாவிகளை எம்மிடம் ஒப்புவித்துவிடவேண்டும்; மற்றப்படி அவர்களுக்கு யாம் கொடுக்கும் தண்டனை எவ்வளவு கடுமையான தாக இருந்தபோதிலும்- தலையை வாங்குவதாக இருந் தாலுங்கூட-அவர்கள் அதற்கு உட்பட்டு எம்மிடம் வரவேண்டும். இவ்வாறு நடைபெறுவதானால் கலே நகரின் கோட்டைச் சேனை -யும் ஏனைய குடிமக்களும் நம் தயையைப் பெறுவர்” என்றான். 

இவ்விரக்கச் செய்தி பிரான்சு நாடெல்லாம் பரவலாயிற்று. உயிரென்றால் எவர்க்கும் இனிப்புத்தானே! தான் பெற்ற பிள்ளைக் காகவும் ஒருவன் உயிர்விடுதல் என்பது உலகத்தில் அருமை யன்றோ? அப்போது அந்நாட்டில் யூஸ்டஸ் என்னும் தன்னலங் கருதாத் தன்மையன் ஒருவன் முதன்முதல் அவ்வாறே எட்வர்டி டம் போக முன்வந்தான். அவன் புகழ் அந்த நாட்டில் எப்போதும் நிலைநிற்குமல்லவா? அவனைப் பின்பற்றி வேறோர் ஐந்து நாட்டுப் பற்றுள்ள மக்களும் அவனைப்போல் உயிரிழக்கவும் முன்வந்துவிட் டார்கள்! என்னே பிரான்சியர்களின் நாட்டுப்பற்று! எட்வர்ட் நூறு மக்களை அவ்வாறு வரும்படி கேட்டிருந்தாலும் அந்நாடு தயங் காதுபோலும் இவ்வறுவரும் எட்வர்டின்மானக்கேடான திட்டங் களுக்குட்பட்டு அவன்முன் சென்று நின்றனர். எட்வர்ட் அவர் களைக் கண்டவுடன் வெகுளிமேலிட்டு, “முற்றுகையை நீளச் செய்து எமக்குப் பற்பல தொந்தரைகளைக்கொடுத்தீர்களல்லவா?”” என்று சினமொழிகூறி, பிரான்சு மேட்டிக்குடிகள் அறுவர்களின் தலைகளை வாங்கிவிடக் கட்டளை பிறப்பித்தான். 

இச்செய்தி அத்தறுவாயில் இங்கிலாந்திலிருந்த அரசப்பெருந் தேவியார்க்கு எட்டிற்று. அவ்வம்மணி மனமிரங்கி வந்து கலேயில் தம் கணவனாரைக்கண்டு வணங்கி,- “என்னருமைக் காதலரே! பிரான்சு மேட்டிக்குடிகள் அறுவரின் உயிர்ப்பிச்சை கேட்க அடியேன் கடல்கடந்து ஓடிவந்திருக்கின்றேன்; கருணைகூர்ந் தருளும் ” என்றாள். 

எட்வர்ட் தன் மனைவியாரை ஏற இறங்கப் பார்த்து, 4 பெண்ணரசே! இத்தறுவாயில் நீ இங்கிலாந்திலேயே இருந்திருக் கப்படாதா! என் மனப்போக்குக்கு மாறுபட்ட ஒன்றைக் கொண்டு வந்துவிட்டாயே!” என்று எண்ணினபடியே இருந்து, “உயர் மனங் கொண்ட உயிர்த்துணையே! இஃதோ இம் மேட்டிக்குடிகளை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் ! உன் மனம்போற் செய்து கொள்வாயாக!” என்று வாக்குக்கொடுத்துவிட்டான். 

அறுவர்தம் நாட்டுப்பற்றும், அம்மையாரின் இரக்கச் செயலும் பொன்னெழுத்துக்களாற் பொறித்துவைக்கத் தக்கனவன்றோ! 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *