தவம்




(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திடீரென அறுபட்ட வீணையின் தந்திபோல், வீசியடித்த காற்று அன்று விழுந்து விட்டிருந்தது. எதிரே கிடந்த கடலிலும் அந்த அமைதியின் விழுக்காடு. அங்கே ஓங்கியெழும் அலைகள், அன்று தம் ஓங்காரத்தை அடக்கித் தமக்குள் குறுகுறுக்கும் மௌன நெளிவுகள். புங்குடுதீவு மக்களின் பாஷையில் சொல்லப் போனால் கடல் ‘ஈராட்டி’ போட்டிருந்தது. மீனவர்களுக்கு வேட்டை. மீன்களுக்கோ பொல்லாத காலம். இரண்டொரு வள்ளங்களைத் தவிர எல்லாமே கடலுக்குப் போயிருந்தன. பறியெடுத்துவர். எஞ்சி கரையில் நின்ற தோணிகளோ மீனவர்களுக்குச் சொந்த மானவை அல்ல, அவை வெள்ளாளருக்கு உரியவை.

நேரம் அப்போது காலை ஒன்பதரை மணிக்கு மேலாக இருக்கலாம். காற்றின் வீழ்ச்சி வெயிலின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்தது கடலோ தனது வரம்பை விடுத்து சிறிது உள்விழுந்து வற்றிக் கிடந்தது. அதனால் அதன் கரைகிழித்த வீதியில் ஒரு விரிவும் அழகும் வளைந்தோடின. அந்தக் கரையில் இரண்டொரு நிழலூட்டும் பூவரச மரங்கள். கடற்காற்றின் பிசுபிசுப்பு அவற்றின் இலைகளிலும் ஏறி விட்டிருந்தன. அத னால் அவையூட்டிய நிழலிலும் ஏறிய ஒருவித பாரம் குளிர்ச்சியாக வழிந்தது.
நின்ற மரங்களுள் சடைத்த ஒன்றின் கீழ் சிலர் குந்திக் கொண்டிருந்தார்கள். நான்கு பெண்கள். ஐந்தாறு ஆண்கள் எல்லோர் முகங்களும் கடலை நோக்கித்தான் இருந்தன. நெய்தல் நிலத்தவர்களின் இரங்கல் அவர்களிடம் இல்லாவிட்டாலும் ‘இருத்தல்’ அவர்களிடம் குடி கொண்டிருந்தது. ஆமாம், காத்திருந்தார்கள். கடலில் போயிருக்கும் தோணிகள் கரைக்குத் திரும்பவேண்டும்.
அப்போதுதான் அன்றையச் சோற்றுக்கு அவர்களுக்கு மீனுண்டு. அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அப்போதைய உடமையாக ஐம்பது சதமோ ஒரு ரூபாவோ இருந்தது. பெண்கள் அவற்றைச் சேலைத் தலைப்பில் முடிந்திருந்தார்கள். ஆண்களோ ஐம்பது சதக் குத்திகளை வெகு அலட்சியமாக தங்கள் செவிகளின் உட்புறத்தில் சொருகி விட்டிருந்தனர். தோணிகள் கரைக்கு வந்ததும் அதே அலட்சியத்தோடு காசை வீசிவிட்டு ஒவ்வொரு மீன் கோர்வையை தூக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவற்றுக்கெல்லாம் தோணி கரைக்கு வர வேண்டும். அதுவரை அவர்கள் காத்திருந்தார்கள்.
தூரத்தே தோணிகள் கடலட்டைகள் போல் மிதந்தன. குந்தியிருந்தவர்களின் கற்பனைக்கேற்றவாறு அவை வருவதும் போவதுமாக மிக அற்பமாக நெளிந்து கொண்டிருந்தன. வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் அவை சிதறலாகக் கிடந்தன. சில பாயிழுத்துப் போய்க் கொண்டிருந்தன. குனித்த புருவம் போன்ற அடிவானம். அதைக் குடைவன போன்று தோணிகளின் ஏகாந்த சஞ்சாரம்.
பூவரசின் கீழ் குந்தியிருந்தவர்களில் சில ஆண்கள், கைகளை நெற்றியின் மேல் வைத்து கடல் வெளியை நோக்கினர். நீரில் ஏற்பட்ட வெயிலின் எதிரொளி கண்களைக் கூச வைத்ததோடு எரிய வைத்தது. கடலுக்குமேல் இன்னொரு கடல், கானல் வரிகள். நோட்டம் விட்டவர்களில் ஒருவர், “இந்தா நேர கிழக்க கிடக்கிற தோணி முருகன்ர எண்டு நினைக்கிறன்” என்றார்.
“அப்படித்தான் நானும் நினைக்கிறன்” என்றார் தலைப்பாகை கட்டியிருந்த ஒருத்தர்.
‘அப்படியெண்டா நாகேசன்ர தோணி இஞ்சால தாழையடியில் கிடக்கிறதா?” என்றார் ஒரு வெள்ளை வேட்டிக்காரர்.
“ஓமாக்கும் அவன்தான் தாழையடியில் பறி எடுக்கிறவன்” என்று ஆமோதித்தார் முன்பு முருகனைப் பற்றிப் பிரஸ்தாபித்தவர்.
‘அப்ப ஐயன்ர தோணி எங்கே?’ என்று கேட்டு அவர்கள் பேச்சில் தானும் கலந்து கொண்டாள் பச்சை சேலையணிந்த ஓர் நடுத்தர வயது அம்மாள். “அவன்ர தோணி தெற்கால போயிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்’ அருகிலிருந்த பல்மிதந்த கிழவி அவளுக்குப் பதில் கொடுத்தாள்.
முருகன், நாகேசன், ஐயன். அவர்கள் அந்தப் பகுதியின் முக்கியமான மீனவர்கள். பூவரசின் கீழ்க் குந்தியிருந்தவர்கள் அவர்களிடந்தான் வழமையாக மீன்வாங்குவது. முன்னவர்கள் பின்னவர்களின் இஷ்ட தெய்வங்கள். சிலர் ஏற்கனவே பணங்கட்டிக் “கட்டு மீன்’ வாங்குகிறார்கள். சிலர் அப்போதைக் கப்போது காசை வீசியோ கடன் சொல்லியோ மீன் கோர்வைகளைத் தூக்குபவர்கள். ஒருத்தருக்கு முருகன். இன்னொருத்தருக்கு நாகேசன், அடுத்தவருக்கு ஐயன். இவர்களுக்கு அவர்கள் இஷ்ட தெய்வங்கள். ஆனால் அந்த இஷ்ட தெய்வங்களிடம் அங்கிருந்தவர்களுக்கு பக்தியோ அன்போ இருக்கவில்லை. அதிகாரந்தான் இருந்தது. சில நேரங்களில் எதுவுமே இல்லாத வெறும் பல்லிளிப்பும் காட்ட வேண்டி வருவதுண்டு.
“டேய் தம்பி” திடீரென அங்கிருந்த தலைப்பாகைக்காரர் தனக்கு முன்னாலிருந்த இளைஞனைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அவன் திரும்பிப் பார்த்தான். தோற்றத்தில் படித்தவன் போல் தெரிந்தது. திரும்பிப் பார்த்த அவன் வாய் திறவாமலேயே “என்ன?” என்பதைப் பார்வையில் ஏற்றினான்.
“ஆரட்ட நீ மீன் வேண்டிறனீ நாகேசனட்டையா? என்ன, கட்டுமீனா?” மூன்று கேள்விகளை அவர் ஒரேயடியில் கேட்டு வைத்தார்.
“ஆரெண்டில்ல. ஆரு மீன் கொண்டுவாறாங்களோ அவங்களட்ட வாங்கிறதுதானே?’ என்ற அவனது பதிலில் அவரது இரண்டு கேள்விகள் பதில் தேவையின்றியே விழுந்தன.
“ஓ, அதுவும் சரிதான். அப்பிடித்தான் நானும்” என்று ஆமோதித்த அவர் அத்துடன் தனது விசாரணையை நிறுத்திக் கொண்டார்.
அந்த இளைஞன் மீண்டும் கடலின் பக்கம் திரும்பிக் கொண்டான். அவன் பார்வை திரும்பவும் முன்பு விட்ட இடத்தில் ஒட்டிக் கொண்டது. அவன் கண்ணெதிரே, கடலுக்குள் முழங்காலளவு நீரில் ஓர் கட்டை நட்டுக் கொண்டு நின்றது. தோணியைத் தொடுத்து விடும் கட்டை. அதன் மேல் ஓர் நரை விழுந்த கொக்கின் மோனத்தவம். அதன் இஷ்ட தெய்வம் எது? திருவனா? அரியலா? முரலா? எல்லா மீன்களுமே அதற்கு ஒன்றுதான். அவன் விழித்த கண் இமைக்காது கொக்கிலேயே பார்வையைக் குவித்துக் கொண்டிருந்தான். அந்தக் கொக்கு வெறும் புள்ளியாகி, பொட்டுத் துளியாகி அடிவானை நோக்கி ஓடியது. பின்னர் திடீரென அவன் மூக்கின் மேல் ஒட்டிக் கொள்வது போல் வந்தது. அவன் கண்களை இமைத்து வெட்டினான். கண்களில் கசிவு. மீண்டும் மங்கலாக கொக்கு, கட்டையின் மேல் குந்திக் கொண்டிருந்தது. திரும்பவும் அவன் பார்வை அடிவானை நோக்கி ஓடியது. பார்வையின் இறுதி அடுத்த கரையைத் தொட்டது. அடுத்தகரை மண்டதீவின் ஆரம்பம். அதன் கரையில் பனைமரங்களின் நிரை புகைமண்டலமாகத் தெரிந்தது. அவன் பார்வை வடக்கை நோக்கி வளைந்தது. அங்கே வேலணைக்கரை. அதன் கரையோரம் சுவரெழுப்பிய சில வெளிறிய கட்டிடங்களின் தோற்றம். அவற்றோடு கடலின் குறுக்கே விழுந்தோடும் வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் தார் ரோட்டு. அதன்மேல் திடீரென ஓர் பஸ் வண்டு மாதிரி ஓடி வந்தது. நயினாதீவை நோக்கிப் போகும் சிங்கள யாத்திரிகரின் பஸ்ஸாக இருக்க வேண்டும். அதன் தோற்றம் அப்படிச் சொல்லியது. இப்போது அவன் பார்வை நேருக்கு வந்தது. அது கிழக்கு. பின்னர் வலப்பக்கமாகச் சென்றது. அது தெற்கு. கீற்றுக்களாகத் தெரிந்த தோணிகள் கூட இப்போ அங்கு காணப்படவில்லை. எல்லாம் எங்கே போய் விட்டன? எங்கும் ஒரே சூன்யம்.
இருந்தாற்போல் கரையில் கட்டிக் கிடந்த தோணியொன்றின் பக்கம் இருந்து சத்தம் எழுந்தது. அவன் பார்வை அங்கு தாவியது. அங்கே இருவர் தோணியொன்றின் அருகே நின்று அதற்குள் ஊறிவிட்டிருந்த நீரை பட்டையால் கோலி கடலுக்குள் இறைத்துக் கொண்டிருந்தனர்.
“ஆரு அதில நிக்கிறது, கந்தரும் சுப்பையருமோ?” பல் மிதந்த கிழவி வெள்ளை வேட்டிக்காரரைப் பார்த்துக் கேட்டாள்.
“ஓ, கந்தரும் சுப்பருந்தான். இவைதான் நம்ம வெள்ளாளத்திமிலர்” வெள்ளை வேட்டிக் காரரின் பதிலில் நையாண்டி கலந்து நின்றது.
“ரெண்டு பேருமாச் சேர்ந்து இந்த நேரத்தில எங்க போகப் போயினம்?’ இது பச்சைச் சேலைக்காரியின் கேள்வி,
“ஏன் இப்பதானே கடல் வத்தித்தெளிஞ்சு போய் கிடக்கே. அதுதான் அவை வத்துக் கடலுக்கு வலைபோடப் போயினமாக்கும். இண்டைக்கு அவைக்கு நல்ல உழைப்பெண்டு நினைக்கிறன்” பல் மிதந்த கிழவிதான் பதில் கொடுத்தாள்.
“தூ. வெக்கங்கெட்ட நாயள், அவையின்ர உழைப்பும் பிழைப்பும்.’ தலைப்பாகைக் காரர் ஒருமுறை காறித் துப்பினார். அவர் முகம் பல கோணங்களைக் காட்டி ஓய்ந்தது. அவர் தொடர்ந்தார். “இவங்களேன் வெள்ளாளர் எண்டு சொல்லி திரியிறாங்கள்? இவங்களும் திமிலரோட போய் இருக்கிறதுதானே?… தூ. நாயள். வெக்கமில்லாமல் வேட்டி கட்டிக் கொண்டு திரியுதுகள். அதுக்குள்ள விபூதிப் பூச்சு வேற…” என்று கூறிவிட்டு அவர் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தார்.
“ஓ, பொடியன் சொல்றது உண்மைதான்’ என்று ஆமோதித்தனர் அங்கிருந்த பெண்கள்.
“உண்மையில்லாமல் பொய்யா?” தலைப்பாகைக்காரர் சொன்னதை வேறு ஒரு தினுசில் ஆமோதித்தவராய் ஆரம்பித்தார் வெள்ளை வேட்டிக்காரர். “இந்த வெள்ளாள திமிலரால் இந்தப் பக்கத்தில் எங்களுக்கும் மரியாதையா இருக்கேலாமல் இருக்கு. திமிலங்கள்கூட எங்களை மதிக்கிறாங்கள் இல்லை. ஏன்மதிக்கப் போறாங்க? இந்த வெள்ளாள திமிலர் அவங்களோட சேர்ந்து சாப்பிட்டு குடிச்சு கொண்டாடினா அவங்கள் எங்களை ஏன் மதிக்கிறாங்க? வெக்கங் கெட்ட நாயள்” என்று அவர் முடித்தபோது அங்கிருந்த பெண்களும் ஆண்களும் சிரித்தனர்.
“அது மட்டுமா, செய்யிறதையெல்லாம் செய்து போட்டு அவைதானே சாதிக்காறர் எண்டு எல்லாத்துக்கும் முன்னிக்கினம். தாங்க செய்யிற நாத்தங்களைப் பற்றி நினைக்கினமா?” இன்னொரு அம்மாள் தனது கருத்தைத் தெரிவித்தாள்.
“ஓமண அவையின்ர சாதியும் குலமும். அந்த நாயளின்ர பேச்சைவிடு” என்று அந்தப் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைப்பதுபோல் வெளிக்கிட்ட ஒரு கொண்டைக்காரர், “என்ன இண்டைக்கு கந்தரும் சுப்பையருந்தானே நிக்கினம், பசுபதியரும் மகனும் இண்டைக்கு எங்க போயிற்றினம்?” என்று பேச்சை வேறு திசையில் கிளறிவிட்டார்.
“அவை நேரத்தோடயே (கடலுக்குப்) போயிற்றினமாக்கும்’ என்று பதிலளித்த தலைப்பாகைக்காரர் அந்தப் பேச்சில் அலுப்புத்தட்டியவராய், நெற்றியில் கையை வைத்து கடலைநோட்டம் விட்டார். பிறகு “தம்பி டேய். ஏதாவது தோணி வருதாவெண்டு பார், என்ர கண்ணுக்கெண்டா ஒண்டும் தெரியேல்ல” என்றார் முன்னால் இருந்த இளைஞனைப் பார்த்து.
இத்தனை நேரமும் அவர்கள் பேச்சில் பங்கெடுக்காது வெறும் புன்னகையை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்த அவன், அவர் கட்டளையை வாங்கிக் கொண்டு கையை நெற்றிமேல் வைத்துப் பார்த்தான். பிறகு, “அப்படி ஒரு அறிகுறியும் இல்ல”” என்றான் வெகு சுருக்கமாக.
அவன் மனம் சற்றுமுன் அங்குநடந்த உரையாடலைப் பற்றி எண்ணிப் பார்த்தது,. அவன் பார்வை சிறிது தூரத்தில் கடல் பிரயாணத்துக்கு தோணியை தயார்படுத்திக் கொண்டு நின்ற கந்தரையும் சுப்பையரையும் நோக்கி ஓடியது. அவர்கள் வெள்ளாளத் திமிலர். அவனுக்குச் சிரிப்புவந்தது.கந்தரும் சுப்பையரும் அவன் சொந்தக்காரர். அங்கிருந்தவர்களுக்குந்தான்.
ஏன் வெள்ளாளர் மீன் பிடிக்கக் கூடாதா? அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
கந்தரும் சுப்பையரும் தோணியைத் தாங்கத் தொடங்கினர். தோணி நீரை ஊடுருவிக் கொண்டு பாயத் தொடங்கிற்று. அப்போது அவர்கள் பார்வை பூவரசின் கீழ் குந்தியிருந்தவர்களின் மேல் விழுந்தது. ஓர் அலட்சியப் பார்வை. கூடியிருந்தவரை தூசத்தனை அளவு கூட மதிக்காத பார்வை. பூவரசின் கீழ் இருந்த அவனுக்கு அந்தத் தோணியில் தானும் போய்த் தாவவேண்டும் போல் ஆவல் உந்தியது. கந்தரும் சுப்பரும் போகும் அந்த ஆழக் கடலுக்கு, அந்தக் குனிந்த புருவ அடிவானுக்கு தானும்போய் அங்கு தாவியெழும் மீன்களாய் துள்ளிவிழ அவனுக்கு ஆவல் பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் அவனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பக்குவமில்லாத பயல் என்று தள்ளிவிட மாட்டார்களா? இல்லை, அவர்கள் இவனது பக்குவமின்மையைப் பொருட்படுத்தாது தோணியில் கைதூக்கி விட்டாலும் இவனுக்கு அவர்களோடு போகத் துணிவிருக்கிறதா? ஊரார் தரும் பட்டத்தையும் பரிகாசத்தையும் தாங்கிக் கொண்டு இவனுக்கும் மீன் பிடிக்கப் போகத் திராணி இருக்கிறதா? அவனுக்கு தன்மேலேயே ஒரு வகையறியாத ஆத்திரமும் வருத்தமும் ஓடி வந்தன. அதன் பிரதிபலிப்பாய் அவனின் கையில் அகப்பட்ட சிறுசங்கொன்றை எடுத்து கடலுக்குள் வீசினான். விழுந்த சங்கு நீரில் வட்டங்களை விளைவித்தது. வட்டங்கள், வளையங்கள், முடிவும் தொடக்கமும் அற்ற வட்டங்கள், சக்கரம், திருமாலின் சக்கரம்… அவன் அவற்றையே இமைக்காது நோக்கிய போது பின்னாலிருந்த வெள்ளை வேட்டிக்காரரின் குரல் ஒலித்தது.
“இந்தா வெள்ளாளத் திமிலர் புறப்பட்டினமாக்கும்’
போய்க் கொண்டிருந்த கந்தரையும் சுப்பையரையும் நோக்கி எய்யப்பட்ட நையாண்டிச் சொற்கள் அவை. எழுந்து போய் சொன்னவரின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது இளைஞனுக்கு. இவர்களின் வாழ்க்கை கரையில் வந்து குந்தியிருந்து காற்றைக் குடிப்பதோடு முடிந்து விடுகிறது. ஆழக் கடலைப் பற்றி அறியாத வெறும் மோலோட்ட பேர்வழிகள். அவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். இல்லை, அறிந்தாலும் ரகசியமாய் முயன்று பார்த்து தோல்வி கண்டவர்கள். அதனால் அதன்மேல், அதில் வெற்றி கண்டவர் மேல் அத்தனை வெறுப்பு. அதனால் வெள்ளைவேட்டி வேஷம். அதனால் கரையில் நின்று மீன் பிடிக்கும் ஜாதிக்காரர்கள். அவனது உதட்டை சிரிப்பொன்று கிழித்தது.
“இதுக்குக் கீழ் இருந்து எத்தின மட்டுக்குத் தவம் செய்யிறது, போய் ஒரு போத்திலாவது வயித்துக்க இறக்காட்டி சரிவராது’.
அத்தனை நேரம் அங்கு காத்திருந்த தலைப்பாகைக் காரருக்கு அப்போதுதான் வேறொரு ஞானோதயம் வெளிச்சது. ஞானம் வேண்டித் தவஞ் செய்த ஆதிகாலத்து ரிஷிகள் மனத்தை ஒருநிலைப்படுத்த சோமா என்னும் பானத்தை அருந்துவார்களாம். இப்போ பூவரசின் கீழ் இருந்த இவருக்கும் “தவத்திலிருந்து தப்புவதற்கு இரண்டு போத்தல் கள்ளுத் தேவைப்பட்டது. அவன் மீண்டும் முறுவலித்தான்.
“தம்பி, மீன் வந்தா எனக்கும் ஒரு கோர்வை வாங்கி வை, நான் இப்ப வாறன்’ என்று முன்னாலிருந்த அந்த இளைஞனுக்கு கூறிவிட்டு தலைப்பாகைக்காரர் எங்கோ அருகில் இருந்த கள்ளுத்தவறணைக்கு எழுந்து போனார்.
மேற்குப் பக்கமாக நீண்டிருந்த பூவரசின் நிழலும் வரவர தன்னைச் சுருக்கி தன் காலுக்கு கீழேயே தன்னைக் கொணர்ந்தது. நிழல் குறுகக் குறுக பரவியிருந்த கூட்டமும் பூவரசின் அடியை நோக்கிக் குறுகியது.
‘ஊஹு, என்ன வெயில்’ என்றவராய் கள்ளுத்தவறணைக்குப் போயிருந்த தலைப்பாகைக்காரர் அரை மணித்தியாலத்துக்குப் பிறகு அங்கு திரும்பி வந்தார். வந்தவர் நின்ற நிலையிலேயே கையை நெற்றியில் ஏற்றி கடலை ஒரு நோட்டம் விட்டார். பிறகு முகம் மலர்ந்தவராய், “இந்தா முருகன்ர தோணி வருகுது போல இருக்கு” என்றார். எல்லோர் பார்வையும் ஆவலோடு அப்பக்கம் மிதந்தது. இளைஞனும் அந்தப் பக்கம் தனது பார்வையைச் செலுத்தினான். ஒரு தோணி கரையை நோக்கி வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அவனுக்கு அதில் அக்கறை அதிகம் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, முன்னால் முழங்காலளவு நீரில் நண்டு பிடித்து விளையாடிய வெள்ளாளச் சிறுவர்களையும் அவர்கள் பிரதிபிம்பம் தெளிந்த நீரில் விழுந்து நெளிந்ததையும், நெளிந்து அது கரையை நோக்கிப் படர்ந்ததையும் அவன் அதிக அக்கறையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில் தோணி அக்கரையை அண்மித்துக் கொண்டிருந்தது. வெயிலின் வேகத்தில் தோணியில் நின்றவர்கள் புகைப் பிண்டங்களாய் தெரிந்தனர். அதனால் யூகிக்க முடியவில்லை. ”ஆற்ற தோணி அது? முருகனரயா நாகேசன்ரயா?” கொண்டைக்காரர் தனது ஐயத்தைக் கிளப்பினார்.
“நாகேசன்ர போலத்தான் இருக்கு” தலைப்பாக்காரர் பதில் கொடுத்தார். ஆனால் அதிக நேரம் இந்தப் பிரச்சினை அவர்களிடம் இருக்கவில்லை. ‘தோணி கரைக்கு வந்தது. அது வந்ததுமே “இது நம்ம வெள்ளாளத் திமிலற்ற. பசுபதியரும் மகனும்” என்றார் வெள்ளை வேட்டிக்காரர். எழுந்த ஆவல் ஓடிவற்ற, ஆத்திரத்தோடு. தோணியை விட்டிறங்கி மீனும் பறியும் மரக்கோலுமாகப் போய்க் கொண்டிருந்த பசுபதியரையும் மகனையும் பார்த்தனர் கூடியிருந்தவர். அவர்கள் கூடியிருந்தவரை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்தனர். பிறகு அந்தப் பக்கம் முகத்தை திருப்பவே இல்லை. கூடியிருந்தவரின் கையாலாகாத்தனத்தை தலையில் குட்டிக் காட்டுவதுபோல் அவர்கள் மீன் பறிகளைக் காவிக் கொண்டு சென்றார்கள். அந்த இளைஞன் முகத்திலே மீண்டும் பழைய சிரிப்பு. அந்தச் சிரிப்பின் சுவடு மறையமுன் அங்கேயிருந்த தலைப்பாகைக்காரர் திடீர் என ஏதோ நினைத்துக் கொண்டவராய், பசுபதியரையும் மகனையும் நோக்கி எட்டி மிதித்து நடந்தார். என்னதான் சொன்னாலும் இந்தச் சுத்த வெள்ளாளருக்கு அந்த வெள்ளாளத் திமிலரான பசுபதியரைச் சந்திக்கும் திராணி இருக்கவில்லை. அதனால் அவர், பசுபதியரின் பின்னால் போய்க் கொண்டிருந்த மகனைத்தான் அணுகினார். போனவர் பல்லிளிப்பது தூரத்தில் சாடையாகத் தெரிந்தது. சிறிது தாமதம். அதன்பின், “பகைவனுக்கருள்வாய்” என்ற காட்சியில் பசுபதியரின் மகன் இரண்டொரு மீனைப் பறிக்குள் இருந்து வெகு அலட்சியமாக வெளியில் தூக்கிப் போடுவது தெரிந்தது. வெளியில் விழுந்த மீனை நாய்க்குட்டி கௌவுவது போல் தூக்கி வைத்து பனையோலைக்குள் சுற்றிக் கொண்டு தலைப்பாகைக்காரர் திரும்பவும் பூவரசடிக்கு வந்தார்.
“வாய்ச்சிற்று போல இருக்கு” வெள்ளை வேட்டிக்காரர் அவரைப் பார்த்து கூறினார்.
“ஓ, ஒருமாதிரிப் பல்லிளிச்சுச் சரிப்பண்ணிப் போட்ட போலிருக்கு’ கொண்டைக்காரர் குத்தலாகக் கதைத்தார்.
தலைப்பாகைக்காரருக்கு அது எரிச்சலையே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதைப் பூசி மெழுகியவராய், “என்ன அப்படி இளக்கமாகக் கதைக்கிற? எனக்கு மீன் குடுக்காமல் இந்த வெள்ளாளத் திமிலர் இந்தப் பக்கத்தால போவாங்களோ?’ என்று வீராப்பை விட்டெறிந்த போது ”ஓ, அல்லாட்டி விடமாட்ட” என்று மீண்டும் தலையில் குட்டினார் கொண்டைக்காரர்.
முகத்தில் அசடுவழிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட | தலைப்பாகைக்காரர் “இனி நானேன் உங்களோட நிண்டு காயிறன்? அவங்கள் எப்பவாறாங்களோ, நான் போறன்” என்றவராய் அங்கிருந்து நடையைக் கட்டினார். பின்னாலிருந்தவர்களின் சிரிப்பை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
மீண்டும் கூட்டம் கடலை நோக்கித் திரும்பியது. இப்போ பூவரசின் நிழல் கிழக்கை நோக்கித் திரும்பியது. கூட்டம் அந்தப் பக்கமாக அரையத் தொடங்கிற்று.இருந்தாற்போல் அங்கிருந்தவர்களில் ஒருத்தி “கடவுளே. பொழுதுபட்டுப் போச்சு. முருகனையுங் காணேல்ல, நாகேசனையுங் காணேல்ல. நான் போகப் போறன்” என்றவளாய் எழுந்து நடக்கத் தொடங்கினாள். மற்றவர்களுக்கும் அதே சபலம். நம்பிக்கையின்மையின் விழுக்காடு. “எல்லாம் பொய். முருகனும் நாகேசனும் கடலுக்குப் போகேல்லியாக்கும். போனால் இவ்வளவு நேரத்துக்கும் வராமலா இருக்கிறாங்கள்?” அங்கிருந்த கூட்டத்தின் முக்கால்வாசி எழுந்து நடந்தது, எஞ்சியிருந்தவர்கள் அந்த இளைஞன், வெள்ளை வேட்டிக்காரர், கொண்டைக்காரர்.
“டேய் தம்பி, எல்லாம் பொய்யடா” வெள்ளைவேட்டிக்காரர் முன்னாலிருந்த இளைஞனுக்கு குரல் கொடுத்தார். “அவங்கள் கடலுக்குப் போயிருந்தால் இத்தறிக்கு வந்திருப்பாங்கள். அவங்கள் போகேல்ல, நான் வீட்ட போகப் போறன்’ என்று கூறிய அவரும் எழுந்து நடந்தார்.
எல்லாம் பொய்யா? என்ன எல்லாம் பொய்? இளைஞன் சிரித்தான். அவர்கள் எல்லோரும் கடலுக்குப் போகாவிட்டால் அவர்களின் தோணிகள் எங்கே? அது ஒன்றே போதாதா அவர்கள் கடலுக்குப் போயிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல? ஆனால் பாவம் நேரத்தால் கட்டுண்ட இவர்களுக்குப் பச்சை உண்மையே பொய்யாகத் தெரிகிறது. இளைஞன் மீண்டும் சிரித்தான். அவனைப் பொறுத்தவரையில் இப்போ தோணிக்காரர்களுக்காகக் காத்திருப்பதை விட அந்தக் கடலைப் பார்த்திருப்பதே பெரிதாகப் பட்டது. நாகேசன் வராமலா போகப் போகிறான்? அல்லது வந்தால்தான் என்ன வராவிட்டால் தான் என்ன?
வெள்ளை வேட்டிக் காரரைப் பின்பற்றிக் கொண்டைக்காரரும் எழுந்து நடந்தார். போகும்போது அவரும், “தம்பி நீ வரேல்லியா?” என்றார்.
கடலைப் பார்த்த பார்வையை எடுக்காமலேயே அவன் பதிலளித்தான்.
“நான் வரேல்ல”
– 1968, யுகம்.
– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.