தவப்புதல்வன்




மொபைல் ஒலித்தது, யார் இந்த நடு இரவில் போன் செய்கிறார்கள் என எண்ணியபடி போன் -ஐ எடுத்தான் நரேன். எதிர்முனையில்இந்தியாவிலிருந்து அப்பா பரமேஸ்வரன், என்னப்பா இந்த நேரத்தில் போன் செய்யுறீங்க? என கேட்டான்
அப்பா பரமேஸ்வரன், பதட்டத்துடன், அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக், ஆஸ்பத்திரியில் சேத்துருக்கேன், நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு, 72 hours தாண்டனுமுன்னு டாக்டர்சொல்லிட்டார்,உனக்கு விஷயம் சொல்லணுமேனு போன் பண்ணினேன் என்றார்.
அதிர்ச்சியடைந்த நரேன், அம்மாக்கு இப்போ எப்படி இருக்குப்பா? என கேட்டான், icu -லதான் வச்சிருக்காங்க, என்றார்.
அப்பா ஏதாவது பணம் அனுப்பட்டுமா?
வேண்டாம் நரேன், பணமெல்லாம் வேண்டாம், நீ கவலைபடாதே என்றார். ஆஸ்பத்திரியில நானும் அலமு அத்தையும்தான் இருக்கோம் என்றார்.
சரிப்பா, நான் அப்புறமா போன் பண்ணி நிலைமை என்னனு கேட்டுக்கிறேன் என சொல்லி போன் -ஐ வைத்தான் நரேன். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது, அடுத்த நாளே மீண்டும் ஒரு அட்டாக் வந்ததால், சாரதா இறந்து போனாள்.
அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்த பரமேஸ்வரன் உடனே கலிபோர்னியாவில் உள்ள மகன் நரேனுக்கு போன் செய்தார்,
அம்மா இறந்த செய்தியை கேட்ட நரேன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான்,
தொடர்ந்து பேசிய பரமேஸ்வரன் உடனே கிளம்பி வா என்றார்,
மறு முனையில் நரேன் அவசரமாக “அப்பா என்ன மன்னிச்சிருங்க “நான் இப்போ ஒரு இன்டர்நேஷனல் conference -ல பிரான்ஸ்க்கு வந்து இருக்கேன், என்னால பாதியில விட்டுட்டு கிளம்பி வர முடியாது, அதனால எனக்காக காத்திருக்க வேண்டாம், அம்மாவின் காரியத்தை நடத்திடுங்கோப்பா என்றான்,
அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரன் என்னடா சொல்ற? அம்மாவோட இறுதி காரியத்திற்கு கூட வர முடியாம என்னடா பெரிய conference என்றார்?
அப்பா புரிஞ்சிக்கோங்கோ, இது ஆறு மாசம் முன்னாடியே fix ஆனது, இடையில கேன்சல் பன்ன முடியாது,
மூன்று நாளில் முடிந்துவிடும், முடிந்தவுடன் நான் உடனே புறப்பட்டு இந்தியா வந்துவிடுகிறேன் என்றான்.
உன் மனசாட்சிபடி நடந்துக்கோ என கோபமாக கூறிவிட்டு போன் தொடர்பை துண்டித்தார் பரமேஸ்வரன்.
சாரதாவின் காரியங்கள் முடிந்து வாசல் பக்கம் ஈஸிசேரில் அயற்சியுடன் படுத்துக்கொண்டிருந்த பரமேஸ்வரன் திடிரென சாரதா என குரல்,கொடுத்தார், அதை கேட்டு பக்கத்து, அறையில் இருந்து வெளீயே வந்த அலமு,, கண்கலங்கியபடி ஏண்டா அவதான் நாம கூப்பிட்டாலும் வரமுடியாத இடத்திற்கு போய்விட்டாளே என்றாள், மறந்து போச்சா என கேட்டாள்.
ஆமாக்கா, அவள் இறந்து போலவே இல்லை, அவள் உயிருடன் இருப்பது போலவே தோன்றுகிறது என்ற அவர் மனைவியை பற்றிய நினைவுகளில் மூழ்கினார்.
சாரதா ஒரே மகன் நரேன் மீது மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருந்தாள்.
அவன் ஆசைப்பட்ட எதையும் இல்லை என்று சொன்னதில்லை, நரேன் B.E. முடித்தவுடன், அமெரிக்கா சென்று மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று கேட்ட போதும், தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவந்த நான், நமக்கு வெளிநாடு அனுப்பி படிக்கவைக்க வசதி இல்லை, எனவே அவன் வேலைக்கு செல்லட்டும் என மறுத்த போதும்,
குழந்தை ஆசைப்படுகிறான், பேங்க் லோன் போட்டு படிக்க வைங்க என என்னை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தாள்.
அதேபோல், எனது அக்கா அலமேலு, அவளது கணவர் திடீரென்று இறந்தபின், எனது வீட்டில் வந்து அடைக்கலமானாள்,,என் அக்காவிற்கு குழந்தைகள் கிடையாது, என்றாலும் அலமு அக்காவை எங்களுடன் வைத்துக்கொள்ள சம்மதித்து, தன் கூட பிறந்த சகோதரி போல நடத்தினாள்.
அக்கா அலமேலுவும் சாரதாவுடன் பாசமாக நடந்துகொண்டதுடன், மகன் நரேன் -ஐ வளர்ப்பதில் மிகவும் உதவியாக இருந்ததுடன், நரேனை தன் மகனாக பாவித்து அன்புடன் நடந்து கொண்டாள்.
நரேன் -ஐ காலையில் எழுப்பி குளிக்க செய்து, பள்ளிக்கு அனுப்பும் வரைதானே பார்த்துக்கொள்ளுவாள்.
மீண்டும் மாலையில் நரேன் பள்ளியிலிருந்து வந்தவுடன் அவனை முகம், கை கால்களை சுத்தம் செய்ய சொல்லி, சாப்பிட ஏதாவது கொடுத்து பள்ளியில் கொடுத்த வீட்டு பாடங்களை செய்ய வைப்பாள்.
சமையல்கட்டு வேலைகளை சாரதா கவனித்துக்கொள்வாள்.
குழந்தை நரேனுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அலமு மிகவும் துடித்து போவாள், அவனுக்கு உடல் நிலை சரியாகும்வரை கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டு இருப்பாள்.
சமீபகாலமாக சாரதா அடிக்கடி நெஞ்சுவலி என கூறி வந்தாள், டாக்டரிடம் கூப்பிட்டால் தனக்கு ஒன்றும் இல்லை, காஸ்ட்ரிக் trouble தான் எனக்கூறி வர மறுத்துவிடுவாள். ஆனால், அலமு என்னிடம், சாரதாவை டாக்டரிடம் கூட்டிப்போய் காண்பித்து விட்டு வா, விளையாட்டாக கருத்தாதே என கூறி வந்தாள். சாரதா தனது உடம்பை சரிவர கவனித்து கொள்ளாமல் இருந்ததே அவளுடைய திடீர் மரணத்திற்கு காரணம்.
தற்போது சாரதாவின் மறைவு அத்தையை மிகவும் மனமுடைய செய்து விட்டது. இனி யாரிடம் சாரதா காட்டிய அன்பைப்போல எதிர் பார்க்கமுடியும் என மிகவும் கவலை கொண்டாள்.
பரமேஸ்வரனின் பழைய நினைவுகளுக்கு பிரேக் போடுவது போல வீட்டு வாசலில் டாக்ஸி ஒன்று வந்து நின்றது, அதிலிருந்து, நரேன் பெரிய பெட்டியுடன் இறங்கினான்.
வாசலில் அப்பாவை பார்த்தவுடன் கதறி அழுதான்,
அப்பா அவனுக்கு ஆறுதல் கூறுவதுபோல, முதுகில் தட்டிக்கொடுத்து வீட்டினுள் செல்லும்படி கூறினார்.
வீட்டினுள் சென்ற நரேன், மாலை போடப்பட்டு மாட்டப்பட்டிருந்த அம்மாவின் புகைப்படத்தையும் பார்த்து அழுதான்.
சத்தம் கேட்டு வெளியே வந்த அலமு அத்தை நரேன் -ஐ பார்த்து ஏண்டா, இப்பிடி வராம இருந்திட்டே? என கேட்டாள் .
இல்ல அத்தை, நான்தான் அப்பாகிட்ட சொன்னேனே, மீட்டிங்கில் மாட்டிக் கொண்டேன்னு அதனாலேதான் வர முடியல,
ஆயிரம்தான் நீ காரணம் சொன்னாலும், ஒரே பிள்ளையா பொறந்துட்டு அம்மாவோட இறுதி காரியத்துக்குக்கூட வராம இருந்தது தப்புதான் என்றாள் அலமு.
நீ சும்மா இரு அத்தை, நீ வேற ஏதாவது சொல்லிண்டுஇருக்காதே என கோபமுடன் சொல்லிக்கொண்டே தனது அறையினுள் சென்றான் நரேன்.
பரமேஸ்வரனும், நரேனிடம் பதினாறு நாள் காரியங்களும் முடியும் வரையில் ஏதும் பேசவில்லை.
அனைத்து காரியங்களும் முடிந்துவிட்ட நிலையில் வந்திருந்த உறவினர்களும் ஊர் திரும்பி விட்டனர்.
வீட்டின் நடு ஹாலில் பரமேஸ்வரன் ஓய்வாக அமர்ந்திருந்தார். அப்பாவின் அருகில் chair -ஐ இழுத்து போட்டு அமர்ந்த நரேன்,
அப்பா இனி நீங்க என்ன பண்ணபோறீங்க? பேசாம என்கூட வந்துடுங்க, என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்த பரமேஸ்வரன் என்னடா சொல்ற என கேட்டார்?
ஆமாம்பா, நீ என்னோட கிளம்பி அமெரிக்கா வந்துடு, வீட்ட கொஞ்சநாள் கழித்து விற்று விடலாம் என்றான்,
அலமு அத்தைய என்ன பண்றது என்றார் பரமு,
அத்தைய ஏதாவது ஹோமில் சேர்த்துவிடலாம் என கூறினான்.
உடனே கோபமடைந்த அவர், ஏண்டா அலமு அத்தைய போய் ஹோம்ல சேக்கலாம்னு சொல்றியே, உனக்கே இது நல்லா இருக்கா என கேட்டார்,
அப்பா வேற வழியில்லை, நான் அமெரிக்காவிலிருந்து அடிக்கடி இங்கு வந்து உன்ன பார்த்துண்டு இருக்க முடியாது,
நீ அங்க வந்துட்டா உன் மருமகள் நல்லா பாத்துப்பா, உன் பேரன் ஈஸ்வர் -ம் உங்க கூட விளையாடிண்டு இருப்பான், உனக்கும் பொழுது போகும் என்றான்.
அதெல்லாம் வேண்டாம், நானும் அத்தையும் இங்கேயே இருக்கோம், சமையலுக்கு வேணா ஒரு மாமிய ஏற்பாடு செய்துக்கறோம் என்றார்.
நீ இரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை குடும்பத்தோட வந்து பாத்துட்டு போ என்றார் பரமேஸ்வரன்.
அப்பா உனக்கும் வயசாயிடத்து, அத்தைய உன்னால பாத்துக்க முடியாது, அதனால அத்தைய ஹோம்ல விடறதுதான் சரி, நீ என்னோட கிளம்பர வழியப்பாரு என்றான் மீண்டும் நரேன்.
நரேன், நீ கொஞ்சம் கூட நன்றி மறந்து பேசாத, உன்ன உன் சிறு வயசிலேர்ந்து மார்லயும், தோள்லையும் போட்டு வளர்த்தவ உன் அத்தை அலமேலு, உனக்காக பல நாள் பட்டினிகூட இருந்திருக்கா, உன் அம்மாவைவிட அதிக அன்பும் பாசமும் உன்மேல வைத்திருக்கும் அத்தையை யாரும் இல்லாத அனாதை போல ஹோம்ல விடணும்னு சொல்றேயேனு பரமேஸ்வரன் கோபத்துடன் கேட்டார்.
அதற்கு நரேன், அப்பா பழைய கதையெல்லாம் இப்போ பேசிண்டு இருக்காதே,
அத்தை சின்ன வயசில செய்தாள் என்பதற்காக என்னோட அமெரிக்காவிற்கெல்லாம் கூட்டிண்டு போக முடியாது, அவ செஞ்சதுக்கு பிரதிஉபகரமாகத்தான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைனு ஹோம்ல சேக்கலாம்னு சொல்றேன் என்றான்.
இனிமேல் என்னால் அமெரிக்காவிலிருந்து வந்து போக முடியாது, அதனால நீ என் கூட அமெரிக்கா வரதுனா வா, அப்புறம் உன் இஷ்டம் -னு சொல்லிட்டு உன் முடிவை இரண்டு, மூணு நாள்ல சொல்லுனுட்டு வேகமாக வெளியே கிளம்பி சென்றான்.
பரமேஸ்வரன், மிகவும் அதிர்ச்சியுடனும், வருத்தத்துடனும் நின்றார்.
இதையெல்லாம் தனது ரூம் வாசலில் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்த அத்தை அலமேலு, அண்ணன் பரமேஸ்வரனிடம், அழுதுகொண்டே பரமு நீ என்ன பத்தி கவலை படாதே, உன் பிள்ளை சொல்லுவதை கேள், நீ அவனுடன் கிளம்பி செல் என்றாள்.
நீ பேசாம இரு அலமு, இதுக்கு நான் ஒரு வழி பண்றேன் என்றார்.
என்னடா பண்ணப்போறன்னு அத்தை கேட்டதற்கு கொஞ்சம் பொறுமையா இருந்து பாரு என்றார் பரமு.
அடுத்த மூன்று நாள்களிலும் யாரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை.
பரமேஸ்வரன் மட்டும் அடிக்கடி வெளியில் சென்று வந்துகொண்டிருந்தார்.
நான்காம் நாள் காலை அனைவரும் காலை உணவுக்குபின் நடு ஹாலில் கூடினர்.
நரேன் அப்பாவை பார்த்து என்ன முடிவு செஞ்சுருக்கீங்க? என கேட்டான்.
எனது முடிவில் எந்த மாற்றமும் இல்ல, அத்தையை ஹோம்ல விடறதுல எனக்கு இஷ்டம் இல்லை, இந்த வயசுல அவளை ஹோம்ல விடறது மஹாபாவம்னு நினைக்கிறேன்.
அதனால நாங்க இரண்டு பேரும் இங்கேயே இருக்கப்போறோம்னு சொல்லி முடித்தார் பரமேஸ்வரன்.
உங்க முடிவு இதுதான்னா நான் சொன்னதுலயும் எந்த மாற்றமும் இல்லை, நான் இனிமேல் இந்தியா வருவேன்னு எதிர்பார்க்காதிங்க, என்றான் நரேன்.
வருவதும், வராததும் உன் இஷ்டம்., நீ வந்தா சந்தோஷம், வரலைனாலும் நான் வருத்தப்பட மாட்டேன் என்றார் பரமேஸ்வரன்.
சரி நான் கிளம்பறேன் என்று பெட்டிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான் நரேன்.
சில நிமிடங்கள் வருத்தத்துடன் அமர்ந்து இருந்தார் பரமேஸ்வரன்.
அடுத்த வாரத்தில் தொண்டு நிறுவனத்தை சார்ந்த நிர்வாகிகள் வந்து பரமேஸ்வரனுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின் தற்போதைய வீடு தொண்டு நிறுவனம் பெயரில் gift deed ஆக பதிவு செய்யப்பட்டது.
பரமேஸ்வரன்,அத்தை இருந்த அறைகள் புதுப்பிக்கப்பட்டு வசதிகள் செய்து தரப்பட்டது. அவர்கள் இருவரும் உயிருடன் இருக்கும் வரை தற்போது உள்ள அறைகளை பயன் படுத்திக்கொள்ளவும் இசைவு தெரிவித்தனர். வீட்டின் நடு ஹாலில் சாரதாவின் பெரிதாக்கப்பட்ட படம் ஒன்று மாட்டப்பட்டு மாலை சாத்தப்பட்டது. காப்பகத்தின் அன்றாட நிர்வாகத்தை பரமேஸ்வரனே கவனித்து கொள்ளுமாறு தொண்டு நிறுவன தலைவர் கேட்டு கொண்டார்.
வீட்டின் உள்ளேயும், வெளியிலும் சில மாற்றங்கள் செய்யபட்டு புதிய வர்ணங்கள் அடிக்கப்பட்டது.
ஒரு நல்ல நாளில் வீட்டின் முகப்பில் “சாரதா முதியோர் காப்பகம் ”
(ஆதரவற்ற முதியோர்களுக்கானது) என பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டது.
பரமேஸ்வரனின் நிர்வாகத்தில் சாரதா முதியோர் காப்பகம் இயங்க ஆரம்பித்தது.